வெக்கை நாவலைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில், வாடிவாசல் நாவல் கதையில் சூர்யா நடிக்கப்போவதாகக் கூறப்படுகிறது.
வாடிவாசல்
ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு முன்பு வாடிவாசல் என்றால், எதோ கிராமத்தின் பெயர் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன் 🙂 .
காளைகளை அவிழ்த்து விடும் இடமே (வாசலே) வாடிவாசல் என்று அழைக்கப்படுகிறது.
வாடிவாசலில் துவக்கத்தில் கோவில் காளை அவிழ்த்து விடப்படும்.
அதை யாரும் பிடிக்க மாட்டார்கள். இதன் பின்னர் தான் ஆட்டம் ஆரம்பமாகும்.
ஜல்லிக்கட்டு
முந்தைய காலத்திலும், இன்றைய காலத்திலும் ஜல்லிக்கட்டு என்பது கவுரவச் சிம்பலாகப் பார்க்கப்படுகிறது.
அதாவது, அடக்க முடியாத காளையை வைத்துள்ளவரின் மதிப்பு எப்போதும் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஜமீன்தார்
அக்காலத்தில் ஜமீன்தார் போன்றவர்களுக்கு இது போன்ற காளைகளை வைத்து இருப்பது மிகப்பெரிய கவுரவச் சிம்பலாக இருந்தது.
அடக்க முடியாதது என்பதை விட, அடக்கணும் என்ற எண்ணமே வரக் கூடாது என்று நினைக்கும் அளவுக்கு முரட்டுக் காளையாக இருக்கும்.
இக்காளைகள் வந்தாலே உயிருக்குப் பயந்து பலர் ஒதுங்கி விடும் அளவுக்கு மிரட்டலாக இருக்கும்.
ஒருவேளை காளை தோற்றுவிட்டால், சிலர் அக்காளைக்குக் கொடுக்கும் தண்டனை கொடூரமாக இருக்கும்.
இக்காலத்தில் கட்டுப்பாடுகள் மற்றும் ஊடக கவனங்களால் தடுக்கப்பட்டு விட்டன.
காரி
ஊர் பெரிய தலைகளால் வளர்க்கப்படும் காளைகள், இதற்காகவே சிறப்புக் கவனம் எடுக்கப்பட்டு முரட்டுத்தனமாக இருக்கும்.
காளையைப் பார்த்தாலே பீதியாகக்கூடிய அளவில் மிரட்டலாக இருக்கும்.
இந்நாவலிலும் ஜமீன்தாரின் அப்படிப்பட்ட காளை காரி தான் கதையின் நாயகன்.
பின்வருவது தான் காரியின் ஓப்பனிங் சீன் 🙂 .
வாடிபுரம் வாடிவாசலையும் தொழுவத்தையும் பிரித்து நிற்கும் ஆள் உயர வேலி அடைப்பின் மீது உட்கார்ந்து இருந்த ஒரு பையன் கத்தினான்.
“வாடிபுரம் காளை!”
“கருப்புப் பிசாசு!”
“ராட்சசக் காரி!”
கத்திய அத்தனை குரல்களிலும் ஒரு நடுக்கம், திகில் வெடித்துப் பரவியது. வாடிவாசல் அமர்க்களப்பட்டது.
சில வினாடிகளில் முண்டியடித்து எக்கி நின்ற கூட்டம் போன இடம் தெரியவில்லை.
காரி கொம்புக்கு எட்டாதபடி எப்படியெல்லாம் பாதுகாத்துக் கொள்வதென்று தவித்து, அவனவன் அங்குமிங்கும் ஓடிப் பதுங்கப் பார்த்தான்.
மனிதனும் மிருகமும்
மனிதர்களுக்கான விளையாட்டுகளில் இருவருக்குமே விளையாட்டு என்று தெரியும் ஆனால், ஜல்லிக்கட்டில் மனிதனுக்கு தெரியும், மிருகத்துக்குத் தெரியாது.
குத்துச்சண்டையில் இருவருக்குமான மோதல் அதிகமானால், நடுவர் விலக்கி விடுவார் ஆனால், ஜல்லிக்கட்டில் அது போலச் செய்ய முடியாது.
கொஞ்சம் அசந்தாலும் காளை குடலை உருவிவிடும்.
பிச்சி & மருதன்
காளை அடக்குவதைப் பார்க்கக் கிழக்குப் பகுதியில் இருந்து வந்தவர்களாகப் பிச்சியும், மருதனும்.
ஜல்லிக்கட்டு வாடிவாசல் அருகே பேசிக்கொண்டு இருக்கும் போது வந்து கலந்து கொள்ளும் உள்ளூர் பெரியவர் இவர்களுடன் நட்பாகிறார்.
இவருடைய பேச்சு, உடல்மொழி நம்மைக் கிராமத்தில் உலாவ வைக்கிறது.
பிச்சி யார் என்பதை அறிந்து, வியந்து அவனுடன் இன்னும் நெருக்கமாகும் பெரியவர், அவனுக்கு அறிவுரை, ஆலோசனை கூறி மனதில் இடம் பிடிக்கிறார்.
Live ஜல்லிக்கட்டு
நாவலின் துவக்கத்தில் படிக்கப் புரியாத மாதிரி கடுப்பாகத் தோன்றினாலும், போகப் போக நாவலில் ஒன்றி விடுவோம்.
பெரியவரின் பேச்சு, கிராமத்து சண்டைகள், ஜல்லிக்கட்டு அட்ராசிட்டிகள், மிரட்டல் காளைகள் என்று நம்மை அலங்காநல்லூருக்கு கூட்டிட்டு போன மாதிரி இருக்கும்.
நாவலின் வர்ணனனைகள் ஜல்லிக்கட்டை நேரலையாகப் பார்ப்பது போல உள்ளது.
வெற்றிமாறன் திரைப்படம்
இந்நாவல் ஒரே ஒரு ஜல்லிக்கட்டுச் சம்பவமாக உள்ளது (சிறு நாவலும் கூட).
பிச்சி கதாப்பாத்திரத்தில் சூர்யா என்று புரிகிறது ஆனால், ஒரு படமாக எடுக்கப்பட வேண்டும் என்றால், பல கிளைக்கதைகள் உருவாக்கினாலே முடியும்.
இந்நாவலை படமாக்கினால் அதிகபட்சம் 1.30 மணி நேரமே வரும். வெற்றிமாறன் வேறு என்ன திரைக்கதை கொண்டு வரப்போகிறார் என்ற ஆவல் உள்ளது.
வெக்கை நாவலை அப்படியே எடுத்தால், ஆவணப்படமாகி இருக்கும் ஆனால், சிறப்பாக அசுரனில் மாற்றி இருந்தார்.
வாடிவாசல் திரைப்படத்தில் சர்ச்சையான காட்சிகள் வர ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. படம் வெளிவந்த பிறகு பல்வேறு கருத்துகளில் விமர்சனங்கள் எழலாம்.
ஆனால், நாவலில் சர்ச்சைக்கு வாய்ப்பு இருந்தும் அவற்றில் பெரும்பான்மையை ஆசிரியர் கதையாகக் / காட்சிகளாக இயல்பாக / திணிக்காமல் கடந்து சென்றார்.
பெருமாள் முருகன்
இந்நாவலுக்குப் பெருமாள் முருகன் முன்னுரை வழங்குகிறேன் பேர்வழி என்று முக்கியத் திருப்பங்களைக் கூறி விட்டார்.
எனவே, நாவலை படித்த பிறகு இவர் முன்னுரையை படிக்கவும்.
‘என்னடா இவர்! முக்கியச் சம்பவங்களைக் கூறி விட்டாரே!‘ என்று கடுப்பாகி விட்டது.
ஆனால், நாவலைப் படிக்கும் போது இவை நினைவுக்கு வராத அளவுக்கு ஆசிரியர் சி.சு.செல்லப்பா பரபரப்பாக எழுதியுள்ளார்.
தன் நாவல் படமாக்கப்படப் போகின்றது என்பதை அறியாமலே ஆசிரியர் சி.சு.செல்லப்பா காலமாகி (1998) விட்டார்.
அனைவரும் இந்நாவலைப் படிக்கப் பரிந்துரைக்கிறேன்.
அமேசானில் வாங்க –> வாடிவாசல் Link
தொடர்புடைய கட்டுரைகள்
வெக்கை (நாவல்) (அசுரன் திரைப்படம்)
எரியும் பனிக்காடு – உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு (பரதேசி திரைப்படம்)
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, அசுரன் படம் தனுஷ் நடிப்பு தனிரகம்.. ஆனால் படத்தோட கதை எனக்கு உடன்பாடு இல்லை.. ஏனென்றால் நாவலோட கதை ரொம்ப பழைய கதை.. ஆனால் இயக்குனர் திறமையால் படத்தை அழகாக கொண்டு வந்து விட்டார்.. பரதேசி படம் நான் ஒருத்தன் மட்டும் தனி ஆளாக தியேட்டரில் இரவு காட்சி பார்த்தேன்.. படம் எனக்கு பிடித்து இருந்தது ஒரு சில காட்சிகளை தவிர..
எல்லா நாவலிலும் படிக்கும் போது ஏற்படும் சுவாரசியம் படமாக்கும் போது ஏற்படுமா?? என்பது கேள்வி குறியே?? நாவல் ஒரு அடர்ந்த மிக பெரிய காடு போன்றது, அதன் சுவாரசியத்தை 2 1/2 மணி நேரத்தில் படமாக்குவது மிக கடினம்.. அது இயக்குனருக்கு சவாலான காரியம்.. வாடிவாசல் நாவலை படிக்க தற்போது ஆர்வம் இல்லை.. திரைப்படமாக வரும் போது கண்டிப்பாக பார்ப்பேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..
எரியும் பனிக்காடு நாவலை முதலில் படித்து இருந்தால், ஒருவேளை எனக்குத் தோன்றியது போல உங்களுக்குத் தோன்றி இருக்கலாம் 🙂 .
நாவலை அப்படியே படமாக்க நிச்சயம் முடியாது ஆனால், பாலா அடிப்படை விஷயங்களையே கோட்டை விட்டுவிட்டார்.
நாவலில் பஞ்சத்துக்கு அடிபட்டவர்கள் போல இருப்பார்கள் ஆனால், படத்தில் நெல்லு சோறு சாப்பிட்டு வளமாக இருப்பார்கள்.
அதோடு நாவலின் ஆசிரியரைக் கோமாளி போலச் சித்தரித்து அசிங்கப்படுத்தி விட்டார். இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
Super