உப்பு வேலி – இந்தியாவில் அறியப்படாத முள் சுவர்

6
உப்பு வேலி Uppuveli

சீனப் பெருஞ்சுவர் போல இந்தியாவிலும் நீளமான மிகப்பெரிய முள்வேலி / உப்பு வேலி இருந்துள்ளது ஆனால், அது பற்றி யாருக்குமே தெரியவில்லை என்பது வியப்பு.

Roy Moxham என்ற ஆங்கிலேயர் தற்செயலாக வாங்கிய ஒரு புத்தகத்தில் இந்தியாவில் சீனப் பெருஞ்சுவருக்கு இணையாக மிகப்பெரிய புதர்வேலி அமைக்கப்பட்டு இருந்ததையும் தற்போது அது மாயமாகி அது பற்றி யாருக்குமே தெரியாததையும் அறிகிறார்.

இந்த வேலியின் மிச்சம் எங்காவது இருக்க வேண்டும் என்று இதற்காக இந்தியாவில் தனது பயணத்தைத் துவங்கி அதைப் பல போராட்டங்களுக்குப் பிறகு கண்டு பிடிப்பதே இப்புத்தகம்.

தற்போது மக்கள் அறியாத வரலாற்று உண்மையைக் கண்டறிவது பெரிய சவால் அதோடு அதை இன்னொரு நாட்டில் தேடுவது மிக மிகப் பெரிய சவால்.

அதை எப்படித் தேடி கண்டறிகிறார், இதில் ஏற்படும் இன்னல்கள், போராட்டங்கள், கிண்டல்கள் என்ன என்பதை இப்புத்தகம் கூறுகிறது.

உப்புக்காக ஒரு பிரம்மாண்ட வேலி 

இவ்வளவு பெரிய வேலி அமைக்கப்பட்டது உப்புக்காக என்றால், படிக்கும் உங்களாலே நம்பச் சிரமமாக இருக்கும்.

உப்புக்காக இவ்வளவோ பெரிய வேலியா? என்னய்யா நக்கல் அடிக்கிறீங்களா! என்று தான் நினைக்கத் தோன்றும் ஆனால், அது தான் உண்மை.

ஒரு மர்ம நாவலுக்கு இணையாக மற்றும் உப்பு / பஞ்சம் / வரிகள் / இது தொடர்பான நம்ப முடியாத செய்திகளைத் தனது பயணத்தில் / ஆய்வில் திரட்டி இப்புத்தகத்தைக் கொடுத்து இருக்கிறார்.

இதைத் தமிழில் “சிறில் அலெக்ஸ்” மொழி பெயர்த்து இருக்கிறார்.

பஞ்சத்திலும் உப்பு வரி வசூல்

பண்டைய காலத்தில் உப்புக்கு மக்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை “கிழக்கிந்திய நிறுவனம்” அறிந்து அதற்கு வரி விதித்தது.

இந்த வரியின் சுமையைத் தாங்க முடியாத பல ஏழை மக்கள் இன்னல்களுக்கு ஆளாகி லட்சக்கணக்கானோர் உயிரிழந்து இருக்கிறார்கள்.

உப்பை யாரும் எடுத்துச் சென்று விடக் கூடாது என்பதற்காக இலந்தை முள் உட்படப் பல மரங்களால் நெருக்கமாக உருவாக்கப்பட்டுப் பல ஆயிரம் வீரர்களைக் காவலுக்கு வைத்து இந்த வேலி பாதுகாக்கப்பட்டுள்ளது.

உப்புக்கு வரியால் இருந்த பற்றாக்குறை காரணமாகக் கொள்ளை / கடத்தல் போன்றவைகள் நடந்துள்ளன.

மிரட்டும் உப்புவேலித் தகவல்கள்

14 அடி அகலத்தில் இருந்த 1877-78 ஆண்டுச் சுங்கவேலி குறித்த பின்வரும் தகவல்களைப் படித்தால், உங்களால் நம்பச் சிரமமாக இருக்கும்.

முழுமையான நல்ல

– உயிருள்ள பச்சை புதர்வேலி – 411.50 மைல்கள்

– உயிருள்ளதும் காய்ந்ததும் கலந்த வேலி 298.15 மைல்கள்

– காய்ந்த வேலி – 471.75 மைல்கள்

– கல் அரண் – 6.35 மைல்கள் (முள் வேலி அமைக்க முடியாத இடங்களில் கல் அரண் அமைக்கப்பட்டுள்ளது)

முழுமையற்ற குறைபாடுள்ள வேலி 33.25 மைல்கள்

மொத்தம் 1,521.00 மைல்கள்.

இந்தச் சுங்கப் புதர்வேலியை 1869 ம் ஆண்டு 136 மேலதிகாரிகளும் 2,499 அதிகாரிகளும் 11,288 காவலாளிகளும் மொத்தம் 13,923 பேர் பராமரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இது மேலும் பெரிதாகிக் கொண்டே இருந்தது.

சின்னதாகக் கற்பனை செய்து பாருங்கள். 14 அடி அகலத்தில் நெருக்கமான முற்புதர்களைக் கொண்டு 100 மைல்களுக்கு அமைப்பது என்பதே மிகச் சிரமம்.

இதற்கு இவ்வளவு மனிதவளம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்றால், இதனால் எத்தனை மக்கள் பாதிப்படைந்து இருப்பார்கள்?!

உப்புப் பற்றாக்குறையால் இறந்த லட்சக்கணக்கான மக்கள்

உப்புச் சத்துக் குறைவால் பல லட்சம் மக்கள் இறந்து இருக்கிறார்கள், விவசாயமே பொய்த்த நிலையிலும் கூடக் கருணையே இல்லாமல் உப்பு வரி செலுத்த கட்டாயபடுத்தப்பட்டுள்ளனர்.

தங்கம் போல இதற்காகக் கடத்தல்களும் கொள்ளைகளும் நடைபெற்றன. உயிர்ப் பலிகள் ஏற்பட்டன.

இந்த வேலி தென்னிந்தியப் பகுதியில் இல்லை.

உப்புக்குக் கிராமங்களில் இருக்கும் மதிப்பு

இன்றும் கிராமங்களில் உப்பு மிகவும் மதிப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இன்று வரை காகிதமும் உப்பும் காலில் படக் கூடாது என்றே கூறுவார்கள். காகிதமும் உப்பும் எனக்குக் கடவுள் போலவே போதிக்கப்பட்டு இருக்கிறது. தெரியாமல் பட்டால் மன்னிப்புக் கேட்கும் நிலை உள்ளது.

இது குறித்து இன்றைய தலைமுறைக்கு அதிகம் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.

நகர மக்கள் காகிதத்தையும் உப்பையும் மிதிக்க நேரிட்டால் அதனால் அவர்கள் மனதில் எந்தச் சலனமும் ஏற்படாது ஏனென்றால், அது சாதாரணப் பொருள் ஆனால், கிராமங்களில் அப்படியல்ல.

இந்தியப் பயண அனுபவங்கள்

ஆசிரியர் இந்த வேலியைக் காண்பதற்காக இந்தியாவில் பல தேடல்களை நடத்தியுள்ளார். இவரின் பயண அனுபவங்களும், இந்தியா குறித்த இவரின் எண்ணங்களும் கருத்துகளும் சுவாரசியமாக இருந்தன.

பயணம் எனக்குப் பிடிக்கும் என்பதால், எனக்கு இந்தப் பகுதி ரொம்பப் பிடித்தது.

இவரின் ரயில் பயணங்களும் விமானத்தில் இறங்கிய பிறகு ஆட்டோ ஓட்டுநர்கள் இவரிடம் “பேருந்து வேலை நிறுத்தம்” என்று பொய் கூறி ஆட்டோவில் அழைத்துச் சென்றதையும், இவருக்குத் தேடலில் உதவியாக இருந்த சந்தோஷ் என்ற இளைஞன் பற்றியும் விவரித்து இருக்கிறார்.

இந்தியர் செய்ய வேண்டிய பணியைச் செய்த ஆங்கிலேயர்

இவரால் இரண்டு முறை இந்தியா வந்து தேடியும் வேலியைக் கண்டுபிடிக்க முடியாததால், பலரின் கேலிக்கு ஆளாகி மன உளைச்சல் அடைந்து இருக்கிறார் ஆனாலும், நம்பிக்கை இழக்கவில்லை.

பலர் இல்லாத ஒன்றைத் தேடிக்கொண்டு இருப்பதாகக் கூறி அவரின் மன உறுதியைக் குலைக்கிறார்கள்.

இவையல்லாமல் பல வரலாற்றுத் தகவல்கள், பொது மக்கள் ஆங்கிலேயர்களால் பட்ட துன்பங்கள், இந்த வேலி குறித்த தகவல்கள் என்று நமக்குப் பிரம்மிப்பாக இருக்கிறது. இந்தியர்கள் செய்ய வேண்டிய வேலையை ஒரு ஆங்கிலேயர் செய்து இருக்கிறார்.

இந்த வேலி கைவிடப்பட்ட பிறகு மக்கள் விவசாயத்திற்காகவும், விறகுக்காகவும், சாலை விரிவாக்கப்பணிக்காகவும் இந்த வேலியை அழித்து இருக்கிறார்கள்.

இதனால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து இது பற்றியே யாருக்கும் தெரியாமல் சென்று இருக்கிறது.

உப்பு வேலிப் பகுதியில் இருந்த 80 வயதிற்கு (*1997 ல்) மேற்பட்ட ஒன்றிரண்டு பேருக்கு மட்டுமே இது குறித்துத் தெரிந்து இருக்கிறது.

இப்புத்தகம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் கூறி இருப்பதாவது

“உப்புவேலி” எனும் இந்தப் புத்தகம் அசாத்தியமானது. ஒரு பயணப் புத்தகத்தையும் ஒரு வரலாற்று துப்பறியும் கதையையும் கலந்திருக்கிறது.

சாவி துவாரம் ஒன்றின் வழியே பார்ப்பதைப் போலப் பிரித்தானிய அரசாங்கத்தின் உள் நோக்கங்களையும் ஆட்சிமுறைகளையும் ஒரு மனிதனின் வெறித்தனமான தேடல் வழியே சொல்லிச் செல்கிறது.

அதையெல்லாம் விட மன உறுதியும் தேடலும் உள்ள ஒருவன், ஒரு தூசி மண்டிய புத்தகத்தை ஒரு பழைய புத்தகக் கடையில் வாங்கவில்லை என்றால், ஒரு வரலாற்று அதிசயம் மறக்கப்பட்டிருக்கும் என்பதை நமக்குக் காண்பிக்கிறது.

தமிழுக்கு மிக முக்கியமான கொடை இந்நூல். எளிய பயண நூல் வடிவில் எழுதப்பட்டுள்ளது இது. ஆனால், நமக்குள் ஒரு முற்றிலும் புதிய சிந்தனைப் போக்கைத் தொடங்கி வைக்கக்கூடும் என்று கூறி இருக்கிறார்.

புத்தகம் படிக்க எப்படி இருக்கிறது?

இப்புத்தகத்தின் அனைத்துப் பகுதியையும் அனைவராலும் சுவாரசியமாகப் படித்து விட முடியாது. அதிகப்படியான தகவல்கள் சலிப்பை ஏற்படுத்துகிறது அதோடு குழப்பத்தையும் கொடுக்கிறது.

வரலாற்றுச் சம்பவங்களைத் தகவல்களை ஆர்வமாகப் படிப்பவர்களுக்குப் பொருத்தமானது. மற்றவர்களுக்கு இப்படியும் நடந்துள்ளதா?! என்று தெரிந்து கொள்ள உதவும் வரலாற்றுப் புத்தகம்.

இதுவரை எங்குமே படித்திராத வரலாற்றுச் செய்திகளை இதில் படிக்கலாம்.

அதோடு இனி உப்பு என்றால் எனக்கு இந்தப் புத்தகம் தான் நினைவுக்கு வரும் என்ற அளவிற்கு இதில் உப்பு பற்றிக் கூறப்பட்டுள்ளது.

உப்பு வேலி புத்தகத்தைப் படிக்கக் கொடுத்த நண்பர் சூர்யாக்கு நன்றி.

அமேசானில் உப்பு வேலி வாங்க –> Link

Read : லாக்கப்

6 COMMENTS

  1. உப்பு வேலிய இவரு புத்தகம் எழுதறதுக்கு முன்னாடியே நம் தமிழ் எழுத்தாளர் திரு. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் “எனது இந்தியா ” என்ற புத்தகத்தில் இதைப் பற்றி தெளிவாக புரியும் படி எழுதி இருக்கிறார்.

    இதில் அவர் எழுதியை தை படித்ததும் செம ஆர்வமாக உப்பு வேலிய பற்றி தெரிந்து கொள்ள நான் இந்த புத்தகத்தை தேடிக்கொண்டு இருக்கிறேன். நான் வழக்கமாக இணையதளத்தில் புத்தகம் வாங்கும் chennaishopping இல் இன்னும் இந்த புத்தகம் வரவில்லை .. வந்ததும் படித்துவிடுவேன்…

    இந்த தம்பி உங்களுக்கு திரு எஸ். ராமகிருஷ்ணனின் “எனது இந்தியா ” புத்தகத்தை பரிந்துரைக்கிறேன். அண்ணா உப்பு வேலிக்காக்க அல்ல. அதில் கூறப்பட்டுள்ள இந்தியா வை பற்றிய மற்ற தகல்வல்களுக்காக அண்ணா

  2. இதுவரை அறியப்படாத புதிய செய்திகளை தெரிந்து கொள்ளும் போது மிகவும் சுவாரசியமாகவும், (ஆங்கில ஆட்சி முறையை கண்டு)வருத்தமாகவும்) இருக்கிறது.. நடந்த நிகழ்வுகளை பார்க்கும் போது உப்பு என்பது தங்கத்தை விட மேலாக பார்க்க பட்டதாக தெரிகிறது..

    பாகுபலி படம் வசூலில் சக்கை போடு போட்டு கொண்டு இருக்கிறது, நீங்கள் பார்த்து ரசித்து இருந்தால், நேரம் இருப்பின் விமர்சனம் எழுதலாமே??? பகிர்வுக்கு நன்றி கிரி…

  3. சூப்பர் தல
    கேள்வி பட்டதே இல்லை இந்த புக் பத்தி

    உங்க படிக்குற ஆர்வம் சூப்பர் தல.. யாசின் சொன்னது போல பாகுபலி விமர்சனம் ப்ளீஸ்

    – அருண் கோவிந்தன்

  4. @கார்த்தி புத்தக அறிமுகத்திற்கு நன்றி

    @யாசின் & அருண் பாகுபலி படம் முதல் நாளே பார்த்து விட்டேன். எனக்கு படத்தின் மேக்கிங் என்ற வகையில் ரொம்பப் பிடித்து இருந்தது ஆனால், திரைக்கதை மற்றும் சில காட்சிகள் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதாவது இவ்வளவு பிரம்மாண்டமான படத்தில் சில காட்சிகள் வழக்கமான தெலுங்கு படக் காட்சிகள் போல வந்தது ஏமாற்றம்.

    மற்றபடி படத்தின் அரண்மனை செட்டிங்ஸ் மற்றும் போர்க்களக் காட்சிகள் ஹாலிவுட் போல இருந்ததைக் கண்டு ரொம்ப ஆச்சர்யப்பட்டேன். இவற்றை திரையரங்கில் பார்த்தால் தான் முழுமையாக ரசிக்க முடியும்.

    இந்தப் படத்தின் சில காட்சிகள் எனக்கு பிடிக்கவில்லை விமர்சனம் எழுதினால் அவற்றையும் கூற வேண்டும். இதைக் கூறினால் நம் புத்திசாலித்தனத்தை காட்டுவது போல தோன்றும். எனவே எழுதாமல் தவிர்த்து விட்டேன்.

    ராஜமௌலி “நான் ஈ” “மகதீரா” படங்கள் நான் திரைக்கதைக்காக ரொம்ப ரசித்தப் படங்கள். பாகுபலி அதனுடைய மேக்கிங்க்காக ரசித்த படம்.

  5. நல்ல புத்தகத்தை அறிமுகபடுத்தியமைக்கு நன்றிகள் அண்ணா. இந்த புத்தகத்தையும் வாசித்து பார்த்து எங்களுக்கு சொல்லுங்களேன்.

    “அறியப்படாத தமிழகம்”

    நூல் விலை : 100
    பதிப்பகம் : காலச்சுவடு
    பக்கங்கள் : 132
    ஆசிரியர் : பேராசிரியர் தொ.பரமசிவன்

  6. படிக்க முயற்சிக்கிறேன். ஏற்கனவே இரண்டு புத்தகங்கள் வரிசையில் உள்ளது 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here