மற்ற நாட்டில் எப்படியோ தெரியவில்லை ஆனால், இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் சுயமுன்னேற்ற நூல்களுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நூல்களைப் படித்துத் தன்னை மாற்றிக்கொள்கிறார்களா? என்றால், அப்படியெல்லாம் கேட்கப்படாது என்பதாகத்தான் பதிலாக இருக்கும் 🙂 . படிப்பாங்க ஆனால், அதோட சரி.
உங்களால் முடியும் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளை, வழிமுறைகளை எளிதாகப் பின்பற்ற முடியும், வழக்கம்போல ஆர்வம் வேண்டும் அவ்வளவே.
மற்றவர்களிடம் எப்படிப் பேசுவது, மற்றவர்கள் உங்களைப் பற்றி நல்லவிதமாக நினைக்க வைப்பது எப்படி? ஏன் கவலை பயம்? ஆண்களிடம் எப்படிப் பேசுவது? பெண்களிடம் எப்படிப் பேசுவது? என்று சுவாரசியமான பகுதிகள் உள்ளன.
இப்புத்தகம் பற்றி எழுத வேண்டும் என்று எனக்கு எண்ணத்தைக் கொடுத்ததே பெண்களிடம் எப்படிப் பேச வேண்டும் என்ற பகுதி தான் 🙂 .
திருமணமான ஆண்கள், ‘மனைவி’ என்று எடுத்துக்கொள்ளலாம்.
பெண்களிடம் எப்படிப் பேச வேண்டும்?
அவர்களின் உரையாடலில் பங்குபெறுங்கள், உங்கள் முறைக்காகக் காத்துக்கொண்டு இருக்காதீர்கள்.
அவர்கள் பேசும் போது முகத்தில் முகபாவனைகளைக் காட்டி உற்சாகப்படுத்துங்கள்.
சொந்தத் தகவல்களைப் பகிருங்கள்.
தீர்வுகளுக்கு அல்லது முடிவுகளுக்கு அவர்களை அவசரப்படுத்தாதீர்கள்.
நேரடியாக விசயத்திற்கு வராதீர்கள்.
இதில் கடைசி இரண்டும் மிக முக்கியம் 🙂 .
பெண்கள் பெரும்பாலும் எப்போதுமே ஒன்றை மிகவும் விரிவாக விளக்குவார்கள். அது ஆண்களுக்குப் புரிந்து இருக்கும் ஆனாலும், விளக்குவார்கள். சிலர் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு இருப்பார்கள், பெண்களுக்கு அலுக்காது.
ஆண்கள் இதற்கு அப்படியே நேர் எதிர்.
பெண்கள், நேரடியாக விசயத்திற்கு வரமாட்டார்கள் ஆனால், நேரடியாக விசயத்திற்கு வர வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்ப்பார்கள்.
மேற்கூறியது பெண்கள் ஆண்கள் அனைவருக்கும் பொருந்தாது என்றாலும், பெரும்பாலானவர்களுக்கென்று அர்த்தப்படுத்திக்கொள்ளுங்கள்.
பாராட்டுகள்
‘அனைவரையும் பாராட்டக் கற்றுக்கொள்ளுங்கள். பல குடும்பங்களில் விவாகரத்து வரை செல்வதற்குக் காரணம், கருத்து வேறுபாடுகள் அல்ல! கணவர் பாராட்டாமல் குறை கூறுவதே என்று ஆய்வு கூறுகிறது‘ என்று கூறப்பட்டுள்ளது.
எனவே, வீட்டிலும், அலுவலகத்திலும் பாராட்ட வாய்ப்புக்கிடைத்தால், மனம் விட்டுப் பாராட்டுங்கள். குறை கூறி பேச்சை ஆரம்பிக்காதீர்கள்.
கவலை பயம்
‘நீங்கள் கவலைப்படும் விஷயங்களில் பெரும்பாலானவை நடப்பதே இல்லை. எனவே, அவற்றைப் பற்றிக் கவலைப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை.
பயம் என்பது உண்மையில் நடக்காமல் போக அதிக வாய்ப்பிருக்கும் விஷயங்கள் குறித்த ஒரு மாயக் கற்பனையே தவிர வேறொன்றும் இல்லை என்ற கண்ணோட்டத்தில் அணுகுங்கள்‘.
மிகச்சரியான கூற்று. கவலை, பயம் இரண்டுமே நடந்த, நடக்கப்போவதை எண்ணி சிந்திப்பதே.
இரண்டிலும் நாம் எதுவுமே செய்ய முடியாது, நடந்ததை மாற்ற முடியாது, நடப்பதை தடுக்க முடியாது. பின் ஏன் கவலை பயம்?!
பிறரை எப்படி விமர்சிப்பது, கண்டிப்பது என்பது பற்றி விளக்கப்பட்டுள்ளது. இது போலப் பல விசயங்கள் எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.
சிறிய புத்தகம் தான் ஆனால், கூறப்பட்டுள்ள கருத்துகள் பெரும்பாலானவை நடைமுறை எதார்த்ததுடன் உள்ளது. சிலவற்றை நான் ஏற்கனவே பின்பற்றுகிறேன்.
தமிழ் மொழியாக்கம் சிறப்பாக உள்ளது. கதாப்பாத்திரங்களின் பெயரையும் நம்ம ஊர் பெயர்களாக மாற்றி இருந்தால், அந்நியத்தன்மையைத் தவிர்த்து இருக்கலாம்.
ஆசிரியர்(கள்) – ஆலன் பீஸ் & பார்பரா பீஸ்
தமிழ் மொழியாக்கம் – PSV குமாரசாமி.
Kindle E-Book –> உங்களால் முடியும் Link
கொசுறு
‘பணக்காரராவது எப்படி?‘ என்ற தலைப்பில் புத்தகம் பார்த்தால், வடிவேல் பார்த்திபன் நகைச்சுவை ‘ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆவது எப்படி?‘ தான் என் நினைவுக்கு வரும்.
‘நான் எப்படி விளம்பரம் கொடுத்து ஒவ்வொருத்தர்கிட்டையும் நூறுவா நூறுவா வாங்கி பணக்காரன் ஆனேனோ… அதே மாதிரி நீங்களும் விளம்பரம் செய்து நூறு நூறுவா வாங்கி பணக்காரன் ஆகிடுங்க‘ 😀 .
தொடர்புடைய கட்டுரை
ரத்தன் டாடா – அசரடிக்கும் மேலாண்மை
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
அருமை, நல்லதொரு புத்தகத்தை அறிமுகபடுத்தியதற்கு நன்றிகள்.
அனைவரையும் பாராட்டக் கற்றுக்கொள்ளுங்கள். பல குடும்பங்களில் விவாகரத்து வரை செல்வதற்குக் காரணம், கருத்து வேறுபாடுகள் அல்ல! கணவர் பாராட்டாமல் குறை கூறுவதே என்று ஆய்வு கூறுகிறது‘ .. புத்தகத்தில் நீங்கள் குறிப்பிட்ட இந்த வரிகள்.. உண்மையில் எனக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது.. பகிர்வுக்கு நன்றி கிரி..
@சோமேஸ்வரன் 🙂
@யாசின் பலருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன் 🙂