பயணக் குறிப்புகள் [செப்டம்பர் 2017]

4
பயணக் குறிப்புகள் [செப்டம்பர் 2017]

ரு திருமணத்துக்குச் செல்லவேண்டியது, ரயில் பயணச்சீட்டு கிடைக்காததால் செல்லவில்லை. பின்னர் என் அக்கா கணவர் காரில் செல்லலாம் என்று அழைத்ததால், நான், இவர், என்னோட பையன் வினய் மூவரும் கிளம்பத் திட்டமிட்டோம்.

சனிக்கிழமை காலை கிளம்பலாம் என்று கூறினேன் ஆனால், வெள்ளி இரவே கிளம்பலாம் இரண்டு நாள் இருக்க முடியும் என்றார். இரவு பயணம் எனக்குப் பிடிக்காத ஒன்று, பாதுகாப்பற்றது என்ற காரணத்தால்.

பின்னர் திரும்ப வலியுறுத்தியதால், வேறு வழியில்லாமல் அரை மனதோடு ஒப்புக்கொண்டேன். மாலை 5.30 க்கு கிளம்ப வேண்டியது ஆனால், 7.15 ஆகி விட்டது.

ஆட்டோமொபைல்

வினய்க்கு கார், பைக் மற்றும் ஆட்டோமொபைலில் மிக ஆர்வம் என்பதால், கார் பயணத்தில் அழைத்துச் சென்றேன் அதோடு அவனை எங்கும் அழைத்துச் செல்லவில்லை என்பதால், ஒரு மாற்றமாக இருக்கும் என்பதும் ஒரு காரணம்.

என் மச்சானுக்கு (அக்கா கணவர்) ஆட்டோமொபைலில் அதீத ஆர்வம். எனக்குத் தொழில்நுட்பத்தில் எப்படி ஆர்வமோ அதை விட அவருக்கு ஆட்டோமொபைலில் ஆர்வம்.

ஆட்டோமொபைல் நிறுவனத்தில் பணிக்கு செல்ல வேண்டியது தப்பித்தவறி IT க்கு வந்து விட்டார் 🙂 . இதை இவரது சக ஊழியர்களும் அடிக்கடி கூறுவார்கள்.

கார் பற்றிய தகவல்களை விரல் நுனியில் வைத்து இருப்பார். கார் ஓட்டுவது அவருக்கு Passion எனவே, காரை ரசித்து ஓட்டுவார். 

கிலோமீட்டர் விவரங்கள் புள்ளிவிவரமாகக் கூறுவார். நாமெல்லாம் 3 கிலோமீட்டர் என்று கூறினால், இவர் 3.1 கிலோமீட்டர் என்று கூறுபவர் 🙂 .

எனவே, நான் பின்னாடி அமர்ந்து கொண்டு வினய்யை முன் பக்கம் அமரக் கூறிவிட்டேன். வண்டலூர் தாண்டினால் தூங்கி விடுவான் என்று தான் நினைத்து இருந்தேன்.

அது எதுக்கு, இது எதுக்கு என்று கேள்விமேல் கேள்வி கேட்டுக்கொண்டு வந்தான், என் மச்சானுக்குப் பதில் கூறுவதில் ஆர்வம் என்பதால், அவரும் சலிக்காமல் கூறி வந்தார்.

உளுந்தூர் பேட்டை வரை தூங்காமல் வந்தான், பின்னர் தூக்கம் வந்ததால், பின்னால் படுக்க வைத்து விட்டு, நான் முன்பக்கம் சென்று விட்டேன்.

ஸ்ரீ பாலாஜி பவன்

இடையில் மருவத்தூரில் “ஸ்ரீ பாலாஜி பவன்” என்ற உணவகத்தில் இரவு உணவு சாப்பிட்டோம். சாம்பார் உட்பட அனைத்தும் நன்றாக இருந்தது. விலையும் சென்னையை ஒப்பிடும் போது ரொம்ப அதிகமில்லை.

இந்த வழியாகச் செல்பவர்கள் முயற்சித்துப்பாருங்கள்.

சுங்கச்சாவடி

சுங்கச்சாவடிக்கு மட்டுமே 450 கட்ட வேண்டியதாக இருந்தது, அநியாயம். சாலை சிறப்பாக இருந்தது என்பதை மறுக்கவில்லை ஆனால், இதைக் கொடுப்பது தானே அரசாங்கத்தின் வேலை.

இந்தக் கட்டணக்கொள்ளை எப்போது முடியுமோ!

உளுந்தூர் பேட்டை – சேலம் சாலை

உளுந்தூர் பேட்டையில் இருந்து சேலம் வரை உள்ள சாலை பாதுகாப்பற்றதாக உள்ளது. காரணம், நான்கு வழிச்சாலை என்று நினைத்து இருந்தால், எப்போது இரு வழிச்சாலையாக மாறியது என்றே தெரியவில்லை.

நாம் நான்கு வழிச்சாலை என்று நினைத்து வலது புறம் சென்று கொண்டு இருந்தால், அதோ கதி தான். பகலில் என்றால் தெரியும், இரவில் தெரியவாய்ப்பில்லை.

வழக்கமாக வருபவர்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள்.

இங்கே இரு வழிச்சாலையாக இருக்க வேண்டும் அல்லது நான்கு வழிச்சாலையாக இருக்க வேண்டும். இது போல மாற்றி மாற்றி இருப்பது விபத்தையே ஏற்படுத்தும்.

மச்சான் அடிக்கடி வருவதால், இது குறித்து முன்பே கூறி இருந்தார். அவர் கூறிய போது புரியவில்லை, நேரில் பார்த்த பிறகே இதன் சிரமம் புரிந்தது.

இது தவிர நான்கு வழிச்சாலையில் நான் நினைத்த அளவுக்குப் பயமில்லை, பாதுகாப்பாகவே உள்ளது. நாங்களும் வேகமாகச் செல்லாமல், மித வேகத்திலேயே சென்றோம்.

கோபி

அதிகாலை மூன்று மணிக்கு கோபி வந்தடைந்தோம். நான் பேசிக்கொண்டே வந்ததால், முழுக்கத் தூங்கவில்லை. சிறப்பான பயணம்.

கோபி சாலை அகலமாக மிக அழகாக ஓரளவு சுத்தமாக இருக்கும். இரவு நேரத்தில் வாகனங்கள் இல்லாமல், பரந்து விரிந்து, விளக்கொளியில் அற்புதமாக இருந்தது.

கோபி… கலக்கல் தான் 🙂 .

என்னைக்கு இங்கேயே இருக்கப்போகிறேனோ! அந்த நாளை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கிறேன். எப்படியோ சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்து விட்டேன்.

இனி என்னுடைய அடுத்த முயற்சி எங்க ஊர் கோபிக்கே நிரந்தரமாக வருவது தான் 🙂 .

கோபியில் சனி இரவு செம்ம மழை, இரண்டு மணி நேரத்துக்குக் காற்று அடிக்காமல் தொடர்ச்சியாகப் பெய்து கொண்டு இருந்தது.

ஊர் பகுதிகளில் மழை இல்லை என்ற பெருங்குறை அனைவரிடமும் உள்ளது.

Rally for Rivers

ஜக்கி வாசுதேவ் மற்றும் பலர் இணைந்து நடத்தும் Rally for Rivers ஞாயிறு கோவையில் நடைபெற்றது. உறவினர்கள் சிலர் இவருடைய பக்தர்கள் என்பதால் சென்று இருந்தார்கள்.

காட்டை அழித்து ஆசிரமம், சிலை அமைத்து விட்டுத் தற்போது இவர் நதியை காக்க புறப்பட்டு விட்டார்! கொடுமை.

இவரைப் பற்றிப் பேசினால், கண்டபடி கடுப்பாகி விடுவேன் என்பதால், இதோடு நிறுத்திக்கொள்கிறேன்.

அம்மா அப்பா

அம்மா அப்பா உடன் கொஞ்ச நேரம் இருந்தது மகிழ்ச்சி. அப்பா எதையோ நினைத்துக்கொண்டு சோர்வாக இருந்தார்கள். நேர்மறையாகச் சிந்தியுங்கள் என்று கொஞ்சம் பேசி விட்டு வந்தேன்.

கொஞ்சம் தெளிவானது போல இருந்தார், பின்பற்றுகிறேன் என்று கூறினார்.

அம்மா எப்போதும் போல உற்சாகமாக இருந்தார்கள்.

அக்கா பசங்க, அக்கா, வினய் எல்லோருடனும் கடைக்குச் சென்று வரலாம் என்று நினைத்தேன், மழையால் செல்ல முடியவில்லை. சிறு ஏமாற்றம்.

என்னோட அம்மா ஒரு கேள்வி கேட்டாங்க.. வியப்பாக இருந்தது என்பதை விட மகிழ்ச்சியாக இருந்தது. இது குறித்துத் தனிக்கட்டுரையாக எழுதுகிறேன். அனைவரும் பின்பற்ற வேண்டியது, இது பற்றி ஏற்கனவே கூறி இருக்கிறேன்.

Eebees Bakery

Eebees Bakery என்ற கடை கோபியில் பல காலமாக உள்ளது. 1980 ல் இருந்து இருக்கலாம் என்று நினைக்கிறேன், சரியாகத் தெரியவில்லை. இ

ன்றும் அது மிகப் பிரபலமான கடை. கோபியின் மையப் பகுதியில் உள்ளது.

மச்சான் அவரது பசங்க கேட்டாங்க என்று இங்கே சில தின் பண்டங்களை வாங்கினார்.

சென்னை சென்றாலும் அங்கே பல பிரபலமான Bakery கடைகள் இருந்தாலும், இன்னும் கோபி வந்தால் தின் பண்டங்களை வாங்கி வரக்கூறுவதின் மூலம் இதன் பிரபலத்தை அறியலாம்.

மாலை 6.15 க்கு கிளம்பி சென்னையை அதிகாலை 2.30 க்கு அடைந்தோம்.

நீண்ட நேரம் என்பது போல இருந்தாலும், பேசிக்கொண்டே வந்ததால் இவ்வளவு தூரம் பயணம் செய்தோம் என்ற உணர்வே இல்லை.

இடையே சேலம் முன்பு “ஸ்ரீ சரவணப் பவன்” என்ற உணவகத்தில் இரவு உணவை சாப்பிட்டோம். சாம்பார் சுமாராக இருந்தது, உணவு மோசமில்லை.

இரு நாள் பயணம் இனிதே முடிந்தது 🙂 .

4 COMMENTS

 1. ஆட்டோமொபைல் : நான் பணிபுரிவது இந்த துறைதான். தொழில் நுட்ப விவரங்கள் குறைவாக தெரியும். வினையோட கேள்விக்கு பதில் சொல்ல முடியுமான்னு தெரியல????

  உளுந்தூர் பேட்டை – சேலம் சாலை : பண்ருட்டிக்கு பக்கத்தில் தான் எங்களது ஊர். எப்படியும் 100 முறைக்கு மேல் இந்த சாலையில் கோவைக்கு செல்லும் போது சென்று இருப்பேன். ஆனால் ஓவ்வொரு முறையும் உசுரை கையில் பிடித்து கொண்டு தான் சென்றேன்.

  கடவுள் புன்னியத்தில் ஒன்றும் நடக்க வில்லை. முதல் முறை கோவைக்கு நேர்காணலுக்கு செல்லும்போது ஓட்டுனரின் அலட்சியத்தால் பெறும் விபத்து நடக்க வேண்டியது. ஆனால் பிழைத்து விட்டோம். இப்போது நினைத்தாலும் பக் பக்னு இருக்கு.

  Rally for Rivers : நல்லது நடந்தால் எல்லோருக்கும் நல்லதே!!!

  அம்மா அப்பா : இவர்களின் சந்தோஷம் நமது சந்தோஷம். இவர்களது சோகம் நமது சோகம். வாழ்வில் கடைசி பருவத்தில் நமது மனது பல நிலைகளில் யோசிக்கும். சிறு நிகழ்வுகளுக்கு கூட பதற்றம் இருக்கும். நீங்கள் பக்கத்தில் இல்லாதது பெறும் குறையாக இருக்கலாம். நீங்கள் பக்கத்தில் இருந்தால் அதுவே பெறும் பலம். (இதை கூற எனக்கு தகுதி இல்லை) …

  என்னோட அம்மா ஒரு கேள்வி கேட்டாங்க : – கேள்வி என்னவா இருக்கும் என யோசிக்கும் முன்பே ட்விஸ்ட் (அனைவரும் பின்பற்ற வேண்டியது) வச்சிட்டீங்க!!!! உங்கள் பதிவிற்காக காத்திருக்கிறோம்…

  Eebees Bakery : பொதுவாக நொறுக்கு தீனிகளின் காதலன் நான்… நம்ம ஏரியாவுல அகர்வால் பேக்கரி சூப்பரா இருக்கும். இந்தப்பக்கம் (கடலூர்) வந்திங்கனா ஒரு முறை வாங்கி சாப்பிட்டு பாருங்க!!! பகிர்வுக்கு நன்றி கிரி.

 2. சமீபத்தில் ஊருக்கு செல்கையில் இந்த ஹோட்டலில் சாப்பிட்டேன். நன்றாக இருந்தது கிரி.

 3. தலைவர் ஜக்கியை வாழ்த்தும் விடியோவை பார்த்தீர்களா ?

  I completely lost faith in Rajini 🙁

 4. @யாசின் ” நான் பணிபுரிவது இந்த துறைதான்.”

  சூப்பர். நீங்க இருந்தீங்க.. கேள்வி கேட்டே ஒரு வழி ஆக்கிடுவான்.. 🙂

  “நம்ம ஏரியாவுல அகர்வால் பேக்கரி சூப்பரா இருக்கும்”

  வரும் போது முயற்சிக்கிறேன்.

  @சரவணன் நல்லவேளை.. சரவணன் மொக்கையா இருந்துச்சுன்னு சொல்லிடுவாரோன்னு பயந்துட்டேன் 🙂 .

  @கவிராஜ் பார்த்தேன்.. எனக்கும் செம்மமை கடுப்பு தான்.

  அவர் நதிநீர் இணைப்பு என்ற அர்த்தத்தில் அதற்கு ஆதரவு கொடுத்து இருப்பார் என்று நினைக்கிறேன்.

  ஜக்கியை பார்த்தாலே.. கடுப்பாகுது.

  தலைவர் மீதான நம்பிக்கையை இழக்காதீங்க.. விரைவில் சரியான சூழல் அமையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here