பயணக் குறிப்புகள் [ஜனவரி 2018]

2
Pariyur

ந்த வாரம் ஊருக்கு செல்ல இருந்தது அப்பா உடல் நிலை காரணமாகக் கடந்த வாரமே சென்று வரவேண்டியதாகி விட்டது.

Parkinson

முன்னரே குறிப்பிட்டபடி அப்பாக்கு Parkinson பிரச்சனை காரணமாக தலை கிறுகிறுப்பு இருந்ததால், ஈரோடு நரம்பியல் மருத்துவர் ராம்குமார், கோவை KMCH மருத்துவமனையில் Echo & EEG பரிசோதிக்கக் கூறி இருந்தார்.

நிற்கும் போதும் உட்காரும் போதும் ரத்த ஓட்டம் தலைக்குச் செல்வதில் பிரச்சனை என்பதால், மருந்தை மாற்றிக் கொடுத்து இருக்கிறார்கள்.

தற்போது பரவாயில்லை, முன்னேற்றம் அடைந்து இருக்கிறார்கள்.

KMCH மருத்துவமனை என்றதும் திக்குனு தான் இருந்தது ஆனால், பயப்படும் படி இல்லாத அளவுக்குக் கட்டணம் இருந்தது.

அங்கே உள்ள செவிலியர்கள் மிக மிகச் சிறப்பாகக் கவனித்துக் கொண்டார்கள். அனைவரும் 22 – 26 வயதுக்குள் தான் இருப்பார்கள்.

மருத்துவமனையில் நான், என்னுடன் இரண்டு அக்காக்களும் இருந்தார்கள். நான் சும்மா துணைக்கு இருந்தேன், அவர்கள் இருவருமே கவனித்துக்கொண்டார்கள்.

என்னோட பெரிய அக்கா வருகிற எல்லாச் செவிலியர்களையும் “கண்ணு, தங்கம்” ன்னு அழைத்து (கொங்கு வழக்கு) அவர்களும் ஐந்து நாட்களில் ரொம்ப நெருக்கமாகி விட்டார்கள் 🙂 .

சென்னையில் உள்ள அக்கா இரு நாட்கள் இருந்தார், பசங்க படிப்பு காரணமாக சென்னை திரும்ப வேண்டியதாகி விட்டது.

அக்காக்கு அப்பா அருகில் இருக்க முடியவில்லை என்ற வருத்தம், கிளம்பும்போது கண்கள் கலங்கி விட்டது. 

என்ன செய்வது? சில நேரங்களில் நம் விருப்பத்தை விட சூழ்நிலைக் கைதியாகவே இருக்க வேண்டியுள்ளது.

EEG பரிசோதனையின் போது உடன் இருந்த பெண் மருத்துவர்,

ஐயா! இப்பெல்லாம் அம்மா அப்பாக்கு ஏதாவது உடம்பு முடியலைன்னா ஒருத்தரும் கண்டுக்க மாட்டேங்குறாங்க, வர மாட்டேங்குறாங்க ஆனால், உங்க கூடவே இருந்து உங்க பிள்ளைக அன்பா பார்த்துக்குறாங்க, நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி” என்றார்.

அப்பாக்கு அவர் சொன்னது புரிந்ததா என்று தெரியவில்லை, மையமாகத் தலையசைத்துக்கொண்டார்.

EEG பரிசோதனை முடிந்த பிறகு இரண்டு மணி நேரம் உற்சாகமாகவும், மறதி குறைந்து அதிக நினைவுடன் இருந்தார்.

பரிசோதனைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை, எதனால் இப்படிச் சிறிது நேரம் இருந்தார் என்று புரியவில்லை, இருப்பினும் மகிழ்ச்சி.

இந்தச் சமயத்தில் கேட்ட இரு கேள்விகள் எங்களை அதிர்ச்சியடைய வைத்தன.

ஒன்று “இந்தப் பரிசோதனைக்கு எவ்வளவு செலவு ஆச்சு? உங்ககிட்ட பணம் இருக்கா?” என்பது.

இரண்டாவது அப்பாவின் நெருங்கிய நீண்ட கால நண்பர் “KSP” அவர்களைத் தொலைபேசியில் அழைக்கக் கூறினார்.

அவருக்கு உடல் நிலை சரியில்லாத நிலையிலும் மூன்று வாரங்களுக்கு முன்பு அப்பாவை வந்து பார்த்து சென்று இருந்தார், கடந்த வாரம் காலமாகி விட்டார்.

இதை நாங்கள் அப்பாவின் உடல்நிலை காரணமாக இன்னும் கூறவில்லை.

என்ன செய்வது என்று தெரியவில்லை. “இரவு ஆகி விட்டது தூங்கி இருப்பார்கள்” என்றால், “அதெல்லாம் தூங்கி இருக்க மாட்டார், அவரோட பசங்க இருப்பாங்க அழைங்க” என்றார்.

“என்னடா பண்ணுறது?” என்று திணறி.. “எங்க கிட்ட அவர் எண் இல்லை காலையில் பேசிக்கலாம்” என்றோம், “சரி” என்றார். எதிர்பார்த்த மாதிரி காலையில் மறந்து விட்டார்.

உண்மையான நட்பு என்பது அனைத்து உறவுகளையும் விட மேன்மையானது, எந்த எதிர்பார்ப்பும் இல்லாதது.

தற்போது அப்பா நலமாக இருக்கிறார், தலை கிறுகிறுப்பு இல்லை. சில நாட்கள் சென்றாலே முழுமையான நிலை தெரிய வரும்.

பாரியூர்

கோபி பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடந்தது. வினய் மற்றும் யுவன், அக்கா பசங்களுடன் அனைத்து விளையாட்டுகளையும் விளையாடினார்கள்.

வினய் ஒரு வாரம் முன்னாடி இருந்து சொல்லிட்டு இருந்தான். “அப்பா! ஊருக்கு வந்தவுடன் இங்கே கூட்டிட்டு போகணும்” என்று.

இந்த வாரம் தான் நான் விடுமுறை எடுக்க நினைத்து இருந்தேன் ஆனால், கடந்த வாரம் எடுத்து விட்டேன்.

வீட்டில் பொங்கலுக்காகச் சீரியல் விளக்குப் போடுவதாக முடிவு செய்து இருந்தேன் ஆனால், அப்பா உடல்நிலை காரணமாகத் தவிர்த்து விட்டேன்.

பூர்விகா

கோபியில் பிரபலமான அனைத்து கடைகளும் வந்து விட்டன, “Royal Enfield” Show Room கூட உள்ளது, தற்போது “பூர்விகா” மொபைல்ஸ் வந்துள்ளது.

மிகப்பெரிய கடை, கோபிக்கு இவ்வளவு பெரிய கடை ரொம்ப அதிகம்.

அக்கா பையன் இங்கே அமேசானை விட விலை குறைவாக இருந்ததால், பழைய திறன்பேசியைக் கொடுத்துப் புதியது மாற்றிக்கொண்டான்.

பசுமை

கோபியில் இந்த வருடம் மழை சரியாக இல்லை ஆனால், பவானிசாகர் அணை தண்ணீரால் கோபி பகுதி முழுக்கப் பசுமையாக உள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

வாய்க்கால்களில் தண்ணீர் நிரம்பியபடி செல்வதைக் காண மகிழ்வாக இருந்தது.

இந்திரா திரையரங்கம்

கோபியில் ஏற்கனவே “ஜெயமாருதி” திரையரங்கம் புதுப்பிக்கப்பட்டுச் சக்கைப்போடு போட்டு வருகிறது. மக்களிடையே அபரிமிதமான வரவேற்பு.

தற்போது இந்திரா திரையரங்கையும் புதுப்பிக்கப் போகிறார்கள், புதுப்பித்து விட்டார்கள் என்று சில படங்கள் வந்தன அதோடு மூன்று திரையரங்குகள் என்று இருந்தது.

கோபிக்கு இத்தனை அதிகம் தான். பார்ப்போம் எப்படிப் போகிறது என்று.

திரையரங்குகள் காத்தாடியதால் திரையரங்கு முன்பு இருந்த இடத்தை SBI வங்கிக்கு கொடுத்து பெரிய கட்டிடம் கட்டி விட்டார்கள்.

தற்போது சூழ்நிலை மாறி புதுப்பிக்கப்படுவதால், முன்னாடி உள்ள இக்கட்டிடத்தால் திரையரங்கின் முகப்பு பார்வை அடிபடுகிறது.

உதாரணத்துக்கு ஆல்பட் திரையரங்கு முகப்பை மறைத்து இன்னொரு கட்டிடம் இருந்தால் எப்படி இருக்கும்? அது போல.

எல்லோரும் இதை SBI க்கு கொடுத்து இருக்கக்கூடாது என்கிறார்கள் ஆனால், அவர்கள் கண்டார்களா இப்படி ஆகும் என்று. எனக்கும் வருத்தம் தான்.

நாய்க்குட்டி

எங்களுடைய உறவினர் வீட்டுக்கு என் மனைவியுடன் சென்று இருந்தேன்.

அங்கே நாய்க்குட்டி வாங்கி இருந்தார்கள். என்னைப் பார்த்ததும் நேராக என்னிடம் வந்தது, தடவி கொடுத்தேன், அப்படியே கால் அருகே உட்கார்ந்து விட்டது 🙂 .

எப்படி உங்க கிட்ட மட்டும் வந்துச்சு?” என்றார்கள். “நாய்க்கு என்னுடைய எண்ண அலைகள் புரியும் போல!” என்றேன், சிரித்துக்கொண்டார்கள்.

எங்கே சென்றாலும் நாயைப் பார்த்தால், எனக்கு மகிழ்ச்சி ஏற்படும் (கடி வாங்காதவரை) 🙂 .

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. கிரி, அப்பாவின் உடல்நிலை நிச்சயம் உங்கள் குடும்ப நபர்களை வருத்தம் அடைய செய்யும்.. மிகவும் கடினமான தருணம் இது. உடல் நிலை தேறி வீடு திரும்ப என் பிராத்தனைகள்.. கடினமான சூழ்நிலையிலும் அவரது நண்பரை நினைவில் வைத்திருப்பது, உண்மையான நட்பின் ஆழத்தை அறிந்து கொள்ள முடிகிறது.

    பவானிசாகர் அணை : இந்த பேர கேட்டாலே பழைய நினைவுகள் வந்து வந்து போகிறது.

    நாய்க்குட்டி : உங்களிடம் வந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை… உங்களுக்கு நாய்கள் மீது காதல், எனக்கு புறாக்கள் மீது!!! பகிர்வுக்கு நன்றி கிரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here