டைட்டானிக் பற்றி அரிய தகவல்கள்

21
டைட்டானிக்

டைட்டானிக் படம் பற்றித் தான் அனைவரும் பேசுகிறோமே தவிர நிஜ டைட்டானிக் கப்பல் பற்றிப் பலருக்குத் தெரியாது. இக்கட்டுரை எழுதும் வரை எனக்கும் தெரியாது.

டைட்டானிக்

  • உலகின் முதல் சொகுசுக் கப்பலான டைட்டானிக்கின் பெயர் RMS TITANIC.
  • இங்கிலாந்தின் மிகப்பெரிய கப்பல் நிறுவனமான White Star Line நிறுவனம் இதைக் கட்டியது.
  • கப்பல் கட்டும் பணி 1909 மார்ச் மாதம் 31 ம் தேதி துவங்கி 1911 மே மாதம் 31 ம் தேதி கட்டி முடிக்கப்பட்டது.
  • கிட்டத்தட்ட இரண்டு வருடம் கட்டப்பட்ட இந்தக்கப்பலின் எடை 46,328 டன் ஆகும்.
  • Southampton நகரில் (இங்கிலாந்து) இருந்து கிளம்பி Cherbourg, France & Queenstown, Ireland வழியாக நியூயார்க் சென்றடைவதாகத் திட்டமிடப்பட்டது.
  • டைட்டானிக் கப்பல் பெண் பாலில் தான் (She) அழைக்கப்படுகிறது அதாவது இந்தக்கப்பலை பெண்ணாகக் கருதுகிறார்கள்.
  • கப்பல் A முதல் G வரை பல அடுக்குகளாகக் கட்டப்பட்டது.
  • மேல் (A) அடுக்கில் முதல் வகுப்பு பயணிகளான செல்வந்தர்களுக்கும் அதன் கீழே வரும் அடுக்குகள் அதற்குக் கீழ் வகுப்புகளான இரண்டு, மூன்று வகுப்பு பயணிகளுக்குமானது.
  • மூன்றாம் வகுப்புப் பயணிகள் அறை டார்மிட்டரி என்று அழைக்கப்படும் பல அடுக்குகளைக் கொண்ட படுக்கைகளால் ஆனது. (டைட்டானிக் படத்தில் ஜேக் ன் அறை)
  • சொகுசுக் கப்பல் முக்கியமாகப் பணக்காரர்களுக்காகவே கட்டப்பட்டது.
  • ஒரு அடுக்கின் பெயரான Promenade Deck (A Deck) ல் நீச்சல்க் குளம், சொகுசான உணவருந்தும் இடம், படிக்கும் எழுதும் இடம், உடற்பயிற்சிக் கூடம், விளையாட்டு இடம் மற்றும் புகைபிடிக்கும் இடம் என்று பார்த்துப் பார்த்துக் கட்டப்பட்டது.
  • இதில் பயன்படுத்தப் பட்ட பொருட்கள் சாமானியர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்தது.
  • புரியும் படி கூற வேண்டும் என்றால் சாதா விடுதியில் தங்கி இருந்தவர் ஐந்து நட்சத்திர விடுதிக்குச் சென்றால் எப்படி மலைத்துப் போவாரோ அது போல இருக்கும்.
  • முதல் வகுப்புப் பயணிகள் தங்களுடன் செவிலியர் உதவியாளர்களைத் துணைக்கு அழைத்து வர அனுமதிக்கப்பட்டனர்.

பணக்காரர்கள்

இங்கிலாந்து அமெரிக்க நாடுகளின் மிகப்பெரிய பணக்காரர்கள் பெரும்பாலும் இக்கப்பலில் சென்றனர்.

அமெரிக்க மில்லியனர் John Jacob Astor IV மற்றும் இவரது 18 வயது கர்ப்பமான மனைவி பிரசவத்திற்காக நியூயார்க் சென்றார்கள்.

John Jacob Astor IV தான் இக்கப்பலில் மிகப்பெரிய பணக்காரர். இவர் ஆண் என்பதால் படகில் ஏற அனுமதிக்கப்படவில்லை.

பின் 1912 ஏப்ரல் 22 ம் தேதி இவருடைய இறந்த உடலுடன் இருந்த பல ஆயிரம் டாலர்கள் பணமும் கண்டு எடுக்கப்பட்டது.

RMS Carpathia கப்பலால் காப்பற்றப்பட்ட இவரது மனைவி இதன் பிறகு 1916 ல் மறுமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு அவரை விவாகரத்து செய்து விட்டு இன்னொருவரை 1933 ம் ஆண்டுத் திருமணம் செய்து கொண்டார்.

மூன்றாம் வகுப்புப் பயணிகள்

அதிக பயணிகள் மூன்றாம் வகுப்பில் தான் இருந்தார்கள் இவர்கள் பெரும்பாலும் குடியேறிகள், அமெரிக்கா சென்று வேலை தேடி தங்கள் வாழ்க்கையைத் தொடங்க திட்டமிட்டு இதில் வந்தவர்கள்.

பல நாட்டைச் சேர்ந்தவர்களும் இதில் இருந்தனர்.

மூன்றாம் வகுப்பில் இருந்த இரண்டு மாதக் குழந்தையான Millvina Dean தான் இருந்ததிலேயே வயது குறைந்த பயணி!!

இவர் தன்னுடைய 97 ம் வயதில் 2009 ஆண்டு காலமானார்.

டைட்டானிக் விபத்தில் பிழைத்தவர்களில் இவர் தான் கடைசி நபர்.

ஒவ்வொரு அடுக்கிற்கும் கதவு இருக்கும் இதனால் ஒரு வகுப்புப் பயணிகள் மற்ற வகுப்பு பயணிகளுடன் கலக்காமல் இருக்க முடியும்.

விபத்து ஏற்பட்ட போது கதவு மூடி இருந்ததால் சிலர் வெளியே வர முடியாமல் மாட்டிக்கொண்டனர்.

கப்பலில் செல்லக் கட்டணம் தோராயமாக மூன்றாம் வகுப்பிற்கு $36 இரண்டாம் வகுப்பிற்கு $66 முதல் வகுப்பிற்கு $125 மற்றும் டீலக்ஸ் வகுப்பிற்கு $4500 ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

நூறு வருடம் முன்பு $4500 என்றால் தற்போது கணக்குப் போட்டுப் பார்த்தால் தலை சுற்றுகிறது.

அந்தக்காலத்தில் ஒரு வீட்டையே $1000 க்கு வாங்க முடியுமாம்!

Life boats

விபத்து ஏற்ப்பட்டால் தப்பிக்க 20 படகுகள் (Life boats) மட்டுமே இருந்தன இதில் 16 படகுகள் 65 பேரையும் 4 படகுகள் 47 பேரையும் கொள்ளும் அளவு கொண்டது.

1100 1200 பேர் தப்பித்து இருக்க முடியும் ஆனால் இதில் 710 பேர் மட்டுமே தப்பிக்க முடிந்தது.

முதல் வகுப்புப் பயணிகள் படகில் மிகக் குறைவானவர்களே இருந்தனர் அதோடு தனது படகில் ஏறி படகைக் கவிழ்த்து விட்டால் என்ன செய்வது என்று பலரை படகில் ஏற இருந்தவர்கள் அனுமதிக்கவில்லை.

இந்த விபத்திற்குப் பிறகே பாதுகாப்பு விசயத்தில் அனைவரும் அதிக கவனம் செலுத்தினார்கள். உயிர்காக்கும் படகுகளின் முக்கியத்துவம் அதிகரிக்கப்பட்டது.

கடுங்குளிர்

படகில் ஏற முடியாதவர்கள் அனைவரும் தண்ணீரில் விழுந்து குளிரில் சில நிமிடங்களில் விரைத்து இறந்து விட்டார்கள்.

கடுமையான பனி (−2°C) அப்போது நிலவியது.

டைட்டானிக் படத்தில் நீங்கள் கவனித்து இருக்கலாம் ஜேக் தண்ணீரில் விழுந்தவுடனே அவரது தலை முடியில் இருந்த நீர் பனிக்கட்டியாக மாறி இருக்கும்.

நம்மால் பனிக்கட்டியையே சில நொடிகள் கூடக் கையில் வைத்து இருக்க முடியாது அப்படி இருக்கும் போது நம் உடல் முழுவதும் இதைப் போலக் குளிர்ச்சியில் இருந்தால்!…

தப்பித்துச் செல்லக் குழந்தைகளுக்கும் பெண்களுக்குமே முன்னுரிமை வழங்கப்பட்டது. எனவே,  பெரும்பான்மையான ஆண்கள் இறந்து விட்டார்கள்.

தப்பித்த ஆண்கள் நாட்டில் உள்ளவர்களால் கடும் விமர்சனத்திற்கு ஆளாகினர் காரணம் பல குழந்தைகள் பெண்கள் படகு கிடைக்காமல் இறந்து விட்டனர்.

அப்படி இருக்கும் போது அவர்களைக் காப்பாற்றாமல் கோழை போல இவர்கள் நடந்து கொண்டதால் பலரால் அதன் பிறகு சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டு இகழப்பட்டனர்.

கப்பல் தகவல்கள்

மூன்று என்ஜின்களைக் கொண்ட இதில் இரண்டு எஞ்சின்கள் இணைந்து 30,000 குதிரை சக்தியை (Horse Power) தரவல்லது.

நிலக்கரி மூலம் வேலை செய்யும் Turbine மேலும் 16,000 குதிரை சக்தி வேகத்தைத் தரவல்லது மொத்தம் 46,000 குதிரை சக்தி.

இரண்டு எஞ்சின்கள் 720 டன் எடை கொண்டதாகும். இதை இயக்குவதில் 176 பணியாளர்கள் பகுதி நேர வேலையில் (24/7) பயன்படுத்தப்பட்டார்கள்.

அழுக்கு, வெப்பம் அதிகம் உள்ள இடம் என்பதால் இங்குப் பணி புரிவது மிகச் சிரமமானது. இதில் தினமும் வரும் 100 டன் சாம்பல் கடலில் கொட்டப்பட்டது.

கப்பலின் வேகம் மணிக்கு 39 கிலோ மீட்டர்

முதல்வகுப்பில் 739 பயணிகளும், இரண்டாம் வகுப்பில் 674 பயணிகளும், மூன்றாம் வகுப்பில் 1026 பயணிகளும், இவர்களோடு 900 பணியாளர்களும் பயணம் செய்ய முடியும், ஆக மொத்தம் 3, 339 பேர் பயணம் செய்யலாம்.

ஆனால், இதில் 2,224 நபர்கள் மட்டுமே (900 ஊழியர்களும் சேர்த்து) பயணம் செய்தார்கள். முன்பே குறிப்பிட்டபடி இந்தக்கப்பலில் மூன்றாம் வகுப்பு பயணிகளே அதிகம் இருந்தனர்.

அப்போது ஒவ்வொரு குடும்பமும் மிகப்பெரியதாக இருக்கும் 7 குழந்தைகள் எல்லாம் சகஜமாகப் பெற்றுக்கொள்வார்கள்.

இவ்வாறு வந்தவர்கள் பலர் குடும்பத்தோடு இறந்து போனார்கள்.

கார்கோ

டைட்டானிக் பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்லப் பயன்படாமல் கார்கோ என்று அழைக்கப்படும் சரக்குப் பொருட்களையும் ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்பட்டது.

பல டன் பொருட்கள் சரக்குகளாகக் கொண்டு செல்லப்பட்டன. கடிதங்கள் கொண்டு செல்லவும் பயன்படுத்தப்பட்டது.

இதில் பயன்படுத்தப்பட்ட தந்தி முறை சாதனங்கள் 1000 மைல் வரை தகவல்களை அனுப்ப வல்லது.

ஏப்ரல் 14 இரவு 11 : 40 மணிக்கு டைட்டானிக் 220 அடி நீளப் பனிப்பாறையில் மோதி மூழ்கத் தொடங்கி, ஏப்ரல் 15 விடியற்காலை 2 : 20 மணிக்கு முற்றிலுமாக 12,415 அடி ஆழத்தில் (3,784 மீட்டர்) மூழ்கியது.

விபத்து நடந்தவுடன் உதவி கோரிய போது அருகில் இருந்தது கப்பல் RMS Carpathia ஆகும், தூரம் சுமார் 93 கிலோ மீட்டர்.

இது வர 4 மணி நேரம் ஆகும் என்று கணக்கிடப்பட்டது. RMS Carpathia சரியாக 4 : 10 மணிக்கு டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்திற்கு வந்து படகில் பிழைத்தவர்களை காப்பாற்றியது.

படகில் இருந்தவர்கள் சிலர் குளிர் தாங்காமல் இறந்து விட்டார்கள்.

இந்த விபத்தில் மொத்தமாக 1,514 பேர் இறந்து விட்டார்கள் பணியாளர்களுடன் சேர்த்து 710 பேர் உயிர் பிழைத்தார்கள்.

கேப்டன் Edward John Smith

கேப்டன் Edward John Smith இருப்பதிலேயே மிகுந்த அனுபவம் பெற்றவராக விளங்கி இருந்தார்.

கப்பல் மூழ்கும் போது கடைசியாக இவர் என்ன செய்து கொண்டு இருந்தார் என்று பல்வேறு ஊகங்கள் கூறப்படுகின்றன.

செய்தி அறையில் பரபரப்பாக இருந்தார் என்றும், அறையினுள் அமைதியாகச் சென்று விட்டார் என்றும், தண்ணீரில் குதித்து ஒரு குழந்தையைக் காப்பாற்ற முயற்சித்தார் என்றும் பல்வேறு செய்திகள் உலவுகின்றன.

இவருக்கு இங்கிலாந்தில் சிலை வைக்கப்பட்டு கவுரப்படுத்தப்பட்டுள்ளது.

மூழ்க வாய்ப்பே இல்லை கடவுளாலும் எதுவும் செய்ய முடியாது என்று கருதப்பட்ட டைட்டானிக்கின் முதல்ப் பயணமே கடைசிப்பயணமாக ஆகிப் போனது மிகவும் சோகமான விசயமாகும்.

நான்கு நாட்கள் மட்டுமே

10 ஏப்ரல் 1912 அன்று புறப்பட்டு 15 ஏப்ரல் 1912 மூழ்கிய டைட்டானிக் மொத்தமாகப் பயணம் செய்தது நான்கு நாட்கள் மட்டுமே!

தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எதை உருவாக்கினாலும், இயற்கை முன்பு நாம் ஒன்றுமில்லை என்று அனைவருக்கும் இயற்கை உணர்த்திக்கொண்டே வருகிறது.

அதில் விலை உயர்ந்த பாடமாக மனித குலத்திற்கு இந்த விபத்து அமைந்து விட்டது.

ஏப்ரல் 15 2012 உடன் டைட்டானிக் மூழ்கி 100 ஆண்டுகள் ஆகிறது.

உண்மையில் டைட்டானிக் பற்றிய தகவல்களைத் திரட்டி மிரண்டு விட்டேன். எடுக்க எடுக்கப் பல பல புதிய சுவாரசியமான தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

எத்தனை எத்தனை விதமான தகவல்கள்.. மலைத்து விட்டேன்!

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து விட்டேன்.  முற்றும் போட முடியாத அளவிற்கு சங்கலித்தொடராகத் தகவல்கள் வந்து கொண்டே இருக்கிறது.

இனியும் முடியாது! என்று இதோடு நிறுத்திக்கொண்டேன் ஆனால், நிச்சயம் இது சுவாரசியமான அனுபவமாக இருந்தது என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை.

இக்கட்டுரை “டைட்டானிக்” பற்றி ஓரளவு தெரிந்து கொள்ள உதவியிருக்கும் என்று நம்புகிறேன்.

Image and details creditwww.wikipedia.com

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

21 COMMENTS

  1. உங்களின் முயற்சி உண்மையிலே மிகவும் பாராட்ட பட வேண்டிய விஷயம் . I HAVE VISITED UR BLOG UMPTEEN Number OF TIME . BUT THIS IS MY FIRST COMMENT REALLY USEFUL KEEP IT UP . THE CONNECTION BETWEEN UR BLOG & ME IS BECAUSE OF A THREE LETTER MAGICAL WORD

  2. அண்ணே ! கேட்(டைட்டானிக் ஹீரோயின்) ட விட சூப்பரா இருக்கு 🙂

  3. விமர்சனமும் தகவல்களும் சூப்பர் கிரி. கலக்கிட்டிங்க.

  4. மிகவும் ஆச்சர்யமான விஷயங்கள். பகிர்ந்ததற்கு நன்றி. நானும் எட்டு முறை மெட்ராஸ் முதல் அந்தமான் வரை கப்பலில் சென்று வந்திருக்கிறேன்

  5. ” இயற்கை முன்பு நாம் ஒன்றுமில்லை”

    அறியாத பல தகவல்கள் ! பகிர்வுக்கு நன்றி நண்பரே !

  6. அறிந்த ஏனைய தகவல்களையும் பதிவாக தந்தால் நல்லது; சுவாரசியம் நிறைந்த ஏக்கமாக உள்ளது!!!!!

  7. //மனிதன் என்னதான் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எதை உருவாக்கினாலும் இயற்கை முன்பு நாம் ஒன்றுமில்லை என்று நம் அனைவருக்கும் இயற்கை உணர்த்திக்கொண்டே வருகிறது.//

    உண்மையை கூறிநீங்க ஆனால் இதை மனிதன் இன்னும் முழுமையாய் உணராமல் இயற்கைக்கு எதிராய் செயல்படுகின்றான்…

  8. //அப்போது ஒவ்வொரு குடும்பமும் மிகப்பெரியதாக இருக்கும் 7 குழந்தைகள் எல்லாம் சகஜமாக பெற்றுக்கொள்வார்கள். //

    மிக நுணுக்கமான பார்வை, பதிவு கிரி. ஆனால் 50 களிலேயே மேலை நாடுகள் சிறிய குடும்ப முறைக்கு மாற ஆரம்பித்துவிட்டன. இந்தியா போன்ற நாடுகள் இப்பொழுது தான் சிறிய குடும்ப முறைக்கு மாறிக் கொண்டு இருக்கின்றன. அதாவது தொலைநோக்கு பார்வையில் நாம் 50 ஆண்டுகள் பின் தங்கி இருக்கிறோம் என்பதற்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு.

  9. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @அருண் (facebook) நன்றி

    @ரோஷன் அது ரஜினி யா? 😉

    @ராஜ்குமார் சூப்பர்! என்னுடைய நண்பர்களுடன் அந்தமான் கப்பலில் செல்ல திட்டுமிட்டு இருக்கிறோம் ஆனால் நேரம் தான் சரியாக அமையவில்லை. இருந்தாலும் கடல் என்றால் பயம் தான் 🙂 பல சுவாரசியமான மேட்டர் வைத்து இருப்பீங்க போல 🙂

    @ஜீவதர்ஷன் சுவாரசியமாக படிப்பவற்றை கூறி விட்டேன் இனி மற்றதைக் கூறினால் படிக்க ஆள் இருக்குமா என்று தெரியவில்லை. பின்னொரு நாளில் முயற்சித்துப் பார்க்கிறேன். நன்றி

    @பாமரன் நீங்க கூறுவது ரொம்ப சரி. நாம இன்னும் 50 வருடம் பின் தங்கி இருக்கிறோம் 🙁 இதை கூறினால் தாய்நாடு அது இதுன்னு சண்டைக்கு வந்துடுவாங்க. நம்ம ஆளுங்க உண்மையச் சொன்னா உடனே தத்துவம் பேசுவாங்க. US போல ஒரு கட்டமைப்பு இந்தியாவில் சாத்தியமா என்பதே எனக்கு சந்தேகமாக உள்ளது இதில் 50 வருடம் எல்லாம் குறைவு தான். வெறும் மால்கள் மட்டுமே முன்னேற்றம் அல்ல முன்னேற்றம் என்பது அந்த நாட்டில் கட்டமைப்பு தான் அதாவது அடிப்படை வசதிகள். இது பற்றி எழுத நினைத்துள்ளேன்… பொறுமையா எழுதுவோம். நல்ல சப்ஜெக்ட். நம்ம ஆளுங்க நாம் வாங்குற சம்பளத்தையும் மால்களையும் பெரிய MNC நிறுவனங்களையும் பார்த்துட்டு இந்தியா US க்கு சவால் விடுகிறது என்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

  10. மிஸ்டர் கிரி மிகவும் சுவராஸ்யமான பயணமாக இருக்கும்.. (போட்டுல போறதுமாதிரி இருக்காது) பயணம் முதன் முதலாக இருந்தால் கொஞ்சம் சிரமமாக இருக்கும். மிகவும் அளவாக சாப்பிடவும் கப்பல் இப்படி அப்படி ஆடுவதால் (21 – 25 செகேண்டுக்கு ஒருமுறை இப்படி அப்படி சாயும்) வாந்தி வரும். இதை தடுக்க முடிந்தவரை ஓரிடத்தில் படுக்காமல் சுற்றி என்ஜாய் செய்வது நல்லது. கப்பல் கடலில் செல்லும்போது சுற்றி ஒருமுறை பாருங்கள் எங்கும் கடல் நீர்தான் தெரியும் அது ஒரு புதுவித பயம் கலந்த உணர்வை கொடுக்கும். கொஞ்சம் கிரீஸ் வாடை டிஸ்டர்ப் செய்யும். உடம்பு முழுக்க உப்பு பிசுபிசுப்பதால் லேசான உடை அணிவது நல்லது. முக்கியமாக இரவில் ஹெலிகாப்டர் தளம் இல்லை வெளியில் சமதளத்தில் படுத்து விண்மீன்கள் நிறைந்த வானத்தை பாருங்கள் – மல்லாக்க படுத்து விட்டத்தை பாக்குற சுகம் அப்போது தெரியும். (இன்னும் எவ்ளவோ இருக்கு)

  11. கிரி எனக்கும் ஒரு நாட்டின் நிஜ வளர்ச்சி என்றால் என்னன்னு அலசனும்னு ரொம்ப நாளா விருப்பம். நீங்க எழுதுங்க, அலசுவோம். IT, Shopping Maals, High rise Buildings, Volvo Bus, Metro ரயில், Apartments, சம்பள உயர்வு இதெல்லாம் தான் வளர்ச்சின்னு ரொம்ப பேரு தவறா நினைச்சுக்கிட்டு இருக்காங்க. ஆனால் மேல் நாட்டில் எல்லாம், இதையும் தாண்டி, விவசாயத்தில் உற்பத்தி பெருக்கம், சின்ன கிராமங்களுக்கு கூட சாலை, குடிநீர், drainage system, மின்சார வசதி அப்படீன்னு அடிப்படை விஷயங்களை எல்லாம் சீராக்கிட்டாங்க.

    வளர்ச்சி என்பது ஏற்றத் தாழ்வு இல்லாத அடிப்படை வசதிகள் முன்னேற்றம், மற்றும் generation of adequacy in Resources என்பது இன்னும் நிறைய பேருக்கு புரியவில்லை.

  12. Giri,

    Nice info about Titanic. Really Interesting. Coming to sea travel I have gone from Kanyakumari Shore to Vivekananda Rock thats it. For that itself I have vomitting and all those non-sense. Namakku aavathu..Thanninale alarge.. naan solrathu sea waterungo.

  13. அருமையான பதிவு இந்தப் பதிவ எப்படி தவற விட்டேன்னு தெரியல இந்தப் பதிவில் உங்கள் உழைப்பு தெரிகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here