ஹாலிவுட்டில் மெகா வெற்றிகளில் ஒன்றான TITANIC 3D யில் வெளியிடப்பட்டு சக்கைப் போடு போடுகிறது. Image Credit
3D யில் ஆர்வம் இல்லை என்றாலும் டைட்டானிக் என்பதால் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் முன்பு இருந்தே இருந்ததால் சென்று இருந்தேன்.
புதுப்படத்தைப் போல பொலிவுடன் இல்லை என்றாலும் படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகியும் இந்த அளவிற்கு மாற்றிக் கொடுத்து இருப்பது பெரிய விசயமே.
இத்தனை வருடங்கள் ஆகியும் இந்தப்படத்திற்கு வரும் கூட்டம் உண்மையில் ஆச்சர்யம் அளிக்கிறது.
TITANIC 3D
டைட்டானிக் கதை நம் அனைவருக்கும் தெரிந்தது தான் என்பதால் இதில் உள்ள காட்சிகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்தியாவில் அதிகம் வசூல் செய்யப்பட்ட ஹாலிவுட் படம் என்ற பெருமை டைட்டானிக்கிற்கு உண்டு அவதார் இதை மிஞ்சி விட்டதா என்று தெரியவில்லை.
- சென்னை தேவி திரையரங்கில் தமிழ்ப் படத்தை விட வெற்றிகரமாக ஓடியது.
- ஜப்பானிலும் டைட்டானிக் வசூல் சாதனை புரிந்த படமாக உள்ளது.
- இந்தப்படம் எடுக்கப்பட்ட விதத்தைப் பார்த்தால் மிக ஆச்சர்யமாக இருக்கிறது. எந்த இடம் கிராபிக்ஸ் என்றே இன்றும் கூட என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை.
- 15 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட படம் என்றாலும் இன்றைய படத் தொழில்நுட்பத்திற்கு சவால் விடும் வகையிலே இதன் காட்சி அமைப்புகள் உள்ளன.
இதை நான் ஏன் கூறுகிறேன் என்றால் நாம் முன்பு பழைய படங்களின் கிராபிக்ஸை பெரிதாக எண்ணி இருப்போம் பின் காலமாற்றத்தில் பல தொழில்நுட்ப விஷயங்கள் தெரிந்த பிறகு படத்தைப் பார்த்தால் நம்மால் எளிதாக கண்டு பிடித்து விட முடியும்.
ஆனால், இதில் அது போல எந்த வித்யாசமும் தெரியவில்லை.
உண்மையாகவே இது எப்படி சாத்தியம்? எப்படி இத்தனை தத்ரூபமாக செய்து இருப்பார்கள் என்று ஒவ்வொரு காட்சியிலும் எண்ணம் வந்ததை தவிர்க்க முடியவில்லை.
காட்சிக்குக் காட்சி பிரம்மாண்டம்.
தன் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்தால் இவ்வளவு செலவு செய்தாலும் அதை எடுத்து விட முடியும் என்ற நம்பிக்கை இருக்க முடியும்.
Water World என்ற படம் அந்தச் சமயத்தில் 600 கோடி செலவு செய்து வந்து தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
கேப்டன் ஸ்மித்
கேப்டன் ஸ்மித் கப்பல் புறப்பட்டவுடன் கப்பலின் மேடைக்கு வந்து விளிம்பின் மீது கையை வைத்து இவ்வளவு பெரிய கப்பலை நாம் தான் நடத்தப்போகிறோம் என்கிற பெருமையில் ஒரு கர்வமாக கடலைப் பார்ப்பது மிக மிக சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும்.
அவரைப்பார்த்தால் நிஜமாலுமே கப்பல் கேப்டனைப் போல இருப்பார். முகத்தில் தைரியம், பெருமை, உறுதி, அதிகாரம் என்று அனைத்துமே அவரிடம் குடி கொண்டு இருக்கும்.
பணக்காரர்கள்
இந்தப்படத்தில் ரோஸ் ஆக நடித்து இருக்கும் கேட்டின் குடும்பம் மிகப்பெரிய பணக்கார குடும்பம்.
அந்தக்கால பணக்கார குடும்பம் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை அப்படியே நம் கண் முன் நிறுத்தி இருப்பார்கள்.
அவர்கள் நடை, அமர்ந்து இருக்கும் முறை, பேசுவது, ஒப்பனை என்று அனைத்திலும் கலக்கி இருப்பார்கள்.
சிரிப்பது கூட அளவாகத்தான் அவுன்ஸ் கணக்கில் சிரிப்பார்கள். சுருக்கமாக தனக்காக வாழாமல் சமூக கவுரவத்திற்க்காகவே வாழ்பவர்கள்.
கேட்டின் ஒப்பனை மிக அதிகமாக இருக்கும்.
ஒப்பனை அதிகமாக போட்டு விட்டாங்க போல இருக்கு என்று நீங்கள் நினைத்து இருக்கலாம் நான் கூட முன்பு அப்படித்தான் நினைத்து இருந்தேன்.
அப்போதைய பணக்காரப் பெண்கள் அதிகளவில் ஒப்பனை செய்து கொள்வது மற்றவர்களுக்குப் பார்க்க அதிகமாகத் தெரியும் ஆனால் அது தான் அவர்கள் இயல்பு.
எழுதப்படாத முறை. இதை எதோ புத்தகத்தில் படித்தேன்.
டிகாப்ரியோ
கேட்டிற்கு பணக்காரர்களுடனே பேசிப் பழகி ஒரு சாமானியனான ஜேக் (டிகாப்ரியோ) பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கும்.
என்ன இவன் கொஞ்சம் கூட நாகரீகம் தெரியாமல் பேசுகிறானே என்று நினைத்தாலும் ஜேக் அப்படி பேசுவது ரோஸ்க்கு பிடிக்கும்.
இதை அழகாக காட்சிப் படுத்தி இருப்பார்.
தன்னைக் காப்பாற்றியதிற்காக விருந்து கொடுக்க எண்ணி அங்கே வரக்கூறி ஜேக் அங்கே எப்படி நடந்து கொள்வது என்று தெரியாமல் திணறுவது சமாளிப்பது நன்றாக இருக்கும்.
இதெல்லாம் ஒரு விருந்தா! என்னோட விருந்து எப்படி உள்ளது என்று பார் என்று அழைத்துச் சென்று ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று உண்மையான சந்தோசத்தை அனுபவிக்க.
எந்த ஒரு போலித்தனமும் இல்லாமல் மனம் விட்டுப் பேசி சிரித்து மகிழ சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்ததை கேட் ரொம்பவே ரசிப்பார்.
ஒரு இயந்திரம் போலவே வாழ்க்கை வாழ்ந்த ஒருவருக்கு இதுபோலத் தடையில்லா சந்தோசம் கிடைத்தால் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதை அந்தக் காட்சி நமக்கு விளக்கும்.
போலித்தனமான வாழ்க்கையைத் தான் பெரும்பாலும் பணக்காரர்கள் வாழ்வார்கள். இந்தப்படத்தில் அது எளிமையாக புரியும்படி காட்டப்பட்டு இருக்கும்.
பிரம்மிப்பு
கப்பல் பாறையில் மோதப்போகிறது என்று தெரிந்து கப்பலைத் திருப்ப உத்தரவு வந்தவுடன் ஒவ்வொருவரும் பரபரப்பாக தங்கள் பணியைச் செய்வதைப் பார்க்கும் போது பிரம்மிப்பாக இருக்கும்.
அதில் உள்ள பெரிய இயந்திரங்கள் வேக வேகமாக சுற்றும் போது நிலக்கரியோ எதையோ போடுவது என்று உச்சகட்ட பரபரப்பாக இருக்கும்.
அதோடு அங்குப் பணியில் இருக்கும் மேற்பார்வையாளர்கள் இடும் கட்டளைகள் அதை உடனடியாக செயல்படுத்தும் ஊழியர்கள் என்று ஒரு நிஜ கப்பல் எஞ்சின் அறையை நம் முன் கொண்டு வந்து நிறுத்தி இருப்பார்கள்.
எஞ்சின் அறையே எதோ பெரிய தொழிற்சாலை போல இருக்கும்.
கப்பல் மூழ்கப்போகிறது என்று தெரிந்தவுடன், கப்பலின் எஞ்சினியரிடம் இன்னும் எவ்வளவு நேரம் (கப்பல் முழுவதும் மூழ்க) என்று சுருக்கமாக கேட்பதாகட்டும், கடவுளாலே கூட எதுவும் செய்ய முடியாது என்று கூறப்பட்ட கப்பல் இப்படியொரு நிலைக்கு வந்து விட்டதை நினைத்து அவர் எதுவுமே சொல்லாமல் அதிர்ச்சியாவதை வைத்து நமக்கு உணர்த்துவார்கள்.
எஞ்சினியர்
பார்த்துப் பார்த்துக் கட்டப்பட்ட கப்பல் மூழ்கப்போகிறது என்பதை நம்ப முடியாமல் தனிமையில் இருக்கும் எஞ்சினியர் என்று ஒவ்வொருவரின் கதாப்பாத்திரமும் செதுக்கப்பட்டு இருக்கும்.
பணக்காரர்களை எல்லாம் ஒரு படகில் ஏற்றும் போது கேட்டின் அம்மா இதில் சிறப்பு வகுப்பு இல்லையா! என்று கேட்பது, மற்ற பயணிகளைப் பற்றி எதுவும் கவலைப்படாமல் அப்போதும் அவர்கள் சொகுசையே முக்கியமாக கருதுவது.
நான் பணக்காரன் எனக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்கப்பட வேண்டும் என்று நினைக்கும் மனோபாவம் என்று அவர்கள் கதாப்பத்திரத்தை கடைசி வரை அருமையாக கொண்டு சென்று இருப்பார்கள்.
60 பேர் மேலே அமரும் படகில் 17 பேர் மட்டுமே அமர்ந்து இருப்பார்கள் அந்த இக்கட்டிலும்.
பல்வேறு மனநிலைகள்
கப்பலில் அனைவரும் தப்பிக்க முயற்சி செய்து கொண்டு இருக்க வயலின் வாசிப்பவர்கள் அப்போதும் விடாமல் வாசிப்பார்கள்.
ஒருவர் மட்டும் இனி நான் பார்த்துக்கொள்கிறேன் நீங்கள் தப்பித்துச் செல்லுங்கள் என்று கூறியவுடன், கிளம்பி பின் அவரைத் தனியே விட மனம் இல்லாமல் அனைவரும் திரும்ப வந்து வயலின் வாசிப்பது பார்க்கும் நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கும்.
ஒரு வயதானவர் இனி எப்படியும் தப்பிக்க முடியாது என்று தெரிந்தவுடன் சரக்கடித்துக்கொண்டே தண்ணீர் வேகமாக வருவதைப் பார்ப்பது, இன்னொரு வயதான ஜோடி கட்டிலில் கட்டிப்பிடித்தபடி சாவை எதிர் கொள்வது.
இன்னொரு அறையில் தன் இரு குழந்தைகளுக்கு கதை கூறிக்கொண்டே தண்ணீரை எதிர் கொள்வது என்று பல்வேறு மனநிலைகளை காட்டி இருப்பார்கள்.
படகில் யார் ஏறுவது என்கிற சண்டையைச் சமாளிக்க முடியாமல் கப்பல் ஊழியர் துப்பாக்கி வைத்து மிரட்டும் போது ஏற்பட்ட நெரிசலில் ஒருவர் எதிர்பாராத விதமாக இறந்து விடத் தன் தவறு என்று உணர்ந்து அதைத் தாங்க முடியாமல் அந்த ஊழியர் தன்னையே சுட்டுக்கொள்வார்.
அதிலும் சுடும் முன்பு மேலதிகாரிக்கு ஒரு சல்யுட் போட்ட பிறகே சுடுவார்.
ஒவ்வொருவரும் தான் தப்பிக்க வேண்டும் என்று படகை இழுப்பதும் யாரும் யார் கூறுவதையும் கேட்கும் மனநிலையில் இல்லாமல் இருப்பதையும் இயல்பாக காட்டி இருப்பார்கள்.
கேப்டன்
கப்பலில் பல மொழி பேசுபவர்களும் இருப்பார்கள்.
அதில் ஒரு பெண் “கேப்டன் நான் எங்கே செல்வது? என்று கேட்கும் போது என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் தனது இயலாமையை நினைத்துத் தன்னை நம்பி வந்தவர்களை இப்படியொரு நிலைக்கு ஆளாக்கி விட்டோமே என்கிற குற்ற உணர்வில் எதுவும் பேசாமல் அறைக்குள் சென்று தாளிட்டுக் கொள்வது.
அழுத்தத்தில் தண்ணீர் அனைத்தையும் உடைத்துக்கொண்டே வரும் போது அதை அமைதியாக எதிர்கொண்டு இறப்பது என்று அட்டகாசமாக நடித்து இருப்பார்.
கப்பல் உடைவதை அதிலும் தண்ணீர் ஆவேசமாக வருவதை எப்படி படம் பிடித்தார்கள் என்று என்னால் கற்பனையே செய்ய முடியவில்லை.
கப்பல் கவிழ்ந்தவுடன் மேலே இருந்து விழுபவர்களில் ஒருவர் கப்பல் பிளேடு (propeller) மேல் நங்கென்று விழுவது, புகைக்கூண்டு விழுவது கப்பல் இரண்டாக உடைவது அனைவரும் வழுக்கிக்கொண்டே சென்று விழுவது என்று கடைசிக் கட்ட காட்சிகள் ஒவ்வொரு இடமும் நிஜம் போலவே இருக்கும்.
எப்படி இது போல எடுத்து இருப்பார்கள் என்று படம் முழுவதும் யோசனை வந்து கொண்டே இருந்தது.
கப்பல் கவிழ்வது, மேலே இருந்து பயணிகள் விழுவது, எந்திரங்கள் சுழல்வது போன்றவை 3D யில் பார்க்க நன்றாகவே இருந்தது.
11 ஆஸ்கார் விருதுகள்
11 ஆஸ்கார் விருதுகளை இப்படம் பெற்றது ஆனால், சிறந்த நடிகர் நடிகை விருது கிடைக்கவில்லை.
இதன் பிறகு 10 வருடம் கழித்து கேட் வின்ஸ்லெட்டிற்கு The Reader படத்திற்காக ஆஸ்கார் விருது கிடைத்தது.
டிகாப்ரியோ ஆஸ்கார் விருது இன்று வரை பெறவில்லை என்றாலும் Blood Diamond Inception போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
காலத்தால் அழியாத காவியங்களின் வரிசையில் டைட்டானிக் படத்திற்கு எப்போதும் இடம் உண்டு. படம் முடிந்த பிறகு இன்றும் பலர் கை தட்டியதே இதன் இயக்கத்திற்கு சாட்சி.
திரைப்படம் இருக்கும் வரை டைட்டானிக் சாதனைகளும் நிலைத்து இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பிரம்மாண்டம் என்பதன் மறுபெயர் “டைட்டானிக்”
குறிப்பு: உண்மையில் வெறும் திரைவிமர்சனமாக இல்லாமல் டைட்டானிக் கப்பல் பற்றிய செய்திகளையும் கூற நினைத்தேன்.
அப்போது தான் பொருத்தமாக இருக்கும் என்று ஆனால், தகவல்கள் அதிக அளவில் இருப்பதால் தனிப்பதிவாகக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்.
அடுத்த பதிவில் அது பற்றிய முழுத் தகவல்களைத் தர முயற்சிக்கிறேன்.
அனைவரையும் போல வெறுமனே படத்தை மட்டும் விவரிப்பதில் என்ன சிறப்பு இருந்து விடப்போகிறது!
இப்படம் வரக்காரணமான கப்பல் பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியம் என்று நினைக்கிறேன்.
கொசுறு
டைட்டானிக் கேப்டன் ஸ்மித் இப்படி என்றால் ஒரு டுபாக்கூர் கேப்டன் பற்றியும் கூற வேண்டியது அவசியமாகிறது.
சமீபத்தில் இத்தாலியில் கவிழ்ந்த சொகுசு கப்பல் பற்றி கேள்வி பட்டு இருப்பீர்கள். அதில் இருந்த கேப்டன் மக்கள் தப்பிக்கும் முன்பே இவர் தப்பி கரைக்கு வந்து விட்டார்.
கேப்டன் என்பவர் கடைசிப் பயணி தப்பிக்கும் வரை கப்பலை விட்டு எங்கேயும் செல்லக்கூடாது ஆனால் இவரோ கேப்டன்களுக்கே அவமரியாதையைத் தேடித் தந்து விட்டார்.
இதில் தேனிலவு வந்த ஒரு ஜோடியும் மாட்டிக்கொண்டது.
மூன்று நாட்கள் கழித்து மீட்கப்பட்டார்கள். அவர்களுடைய தேனிலவு கசப்பு நிலவாகி விட்டது 🙂 திரும்பவும் ஒரு தேனிலவு போகப்போவதாக அறிவித்து இருந்தார்கள்.
Read: Get back on board, damn it!
பிற்சேர்க்கை – டைட்டானிக் பற்றி அரிய தகவல்கள்
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
இந்த பதிவை படிக்கும் போது titanic மீண்டும் பார்த்த ஒரு அனுபவம் மிகவும் அருமையாய் எழுதி உள்ளீர்.நான் முதன் முதலாய் titanic பார்த்த போது இருந்த அனுபவம் அப்படியே உங்கள் பதிவின் முலம் கிடைத்தது.அதை போல் டிகாப்ரியோ நடித்ததில் inception எனக்கு மிகவும் பிடித்தது.அடுத்த பதிவிற்கு waiting நண்பா சிக்கிரம்…
இப்போது 3D-ல் வந்த டைட்டானிக் படத்தை நான் பார்க்க வில்லை. ஆனால் 1998ஆம் ஆண்டு வந்த டைட்டானிக் திரைப்படத்தை நான் பலமுறை பார்த்தேன். அப்போது திருவாரூரில் பழமையான ‘செங்கம்’ தியேட்டரில் திரையிடப்பட்டிருந்தது. நிச்சயமாக 50 முதல் 75 நாட்கள் ஓடியிருக்க வேண்டிய படம். சில நிர்வாக காரணங்களால் வலுக்கட்டாயமாக 22 நாட்களில் படம் தூக்கப்பட்டு விட்டது. நான் அப்போது படிப்பை இடையில் நிறுத்திவிட்டிருந்த சமயம். தியேட்டரில் ஆப்ரேட்டர் உதவியாளராக (பெயருக்குதான் உதவியாளர்- பல நேரங்களில் முழு படத்தையும் திரையிட்டிருக்கிறேன்.) இருந்த போது டைட்டானிக் திரையிடப்பட்டது. 1960களின் மத்தியில் திருவாரூரில் மிகவும் கலை நயமான கட்டுமானத்துடன் உருவான திரையரங்கம் அது. முதன்முதலில் துல்லியமான சினிமாஸ்கோப் லென்ஸ் மூலம் படம் திரையிடல், தரமான ஒலி அமைப்பு என்று திருவாரூரில் அந்தக்கால ஆட்கள் எல்லோரிடமும் பாராட்டு பெற்ற தியேட்டர். ஆனால் இது 2000வது ஆண்டுக்குப்பிறகு இடிக்கப்பட்டுவிட்டது. டைட்டானிக் படம் போலவே தியேட்டரும் அழிந்து விட்டது என்று நான் வருத்தப்பட்ட திரையரங்கம் அது.
நிச்சயம் டைட்டானிக் ஒரு காலத்தால் அழிய காதல் காவியம்…. குறிப்பாக ஜாக் ன் ஹேர் ஸ்டைல் இன்றும் இளைஞர்கள் மத்தியில் பிரபலம்…. குறிப்பாக என்னை போன்று படியாத தலைமுடி உள்ளவர்களுக்கு வாழ்க்கை கொடுத்தது ஜாக் தான்……பிரம்மாண்டம் என்பதன் மறுபெயர் “டைட்டானிக்”… கண்டிப்பாக!!!!! இந்த படம் முதலில் பார்க்கும் போது எனக்கு வயது 17 (காதலிக்கும் போது) அன்று ஒரு பெண்ணுக்காக உயிரை விடுவது பைத்தியகாரதனமாக தெரிந்தது… ஆனால் இன்று வயது 30 (திருமணமான பின்பு )அந்த தியாகம் உண்மையில் சரி ,அதிலும் ஒரு ஆன்ம திருப்தி உள்ளது என்று மனம் நினைக்கிறது!!!! அது உண்மையும் கூட…பகிர்வுக்கு நன்றி கிரி…
Excellent write up….
பதிவை படிக்கும் பொது அப்புடியே புல்லரிச்சி போச்சு… உண்மையிலையே…
மிகவும் அருமையாக அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள், கிரி. ‘God is in the detail’ என்று கூறுவார் சுஜாதா ஒரு நாவலில். அதுதான் நினைவுக்கு வந்தது.
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது; ஒவ்வொரு காட்சியையும் உங்கள் எழுத்து கண்முன்னே கொண்டு வந்தது…..
highwaysla bike ottuna madhiri irukku unga padhivu.
vanam padathula panakaranga pathi santhanam oru dialogue arumaiya solliyiruppar.
rajesh.v
விமர்சனம் மிகவும் அருமை படம் பார்த்திருந்தும் மறந்த பல சின்ன சின்ன விஷயங்களை நியாபகப்படுத்தியிருக்கிரீர்கள். உலகத்தின் டிரண்டில் ஒரு விஷயம் கவனித்திருக்கிறீர்களா – அதாவது காதலை மிகவும் உன்னதமாக எடுத்துரைக்கும் படங்கள் வெளியாகையில் பெண்களிடம் (கல்யாணம் ஆகாததர்க்கு முன்னாடி) நம்ம லவ்வை சொன்னோம்ன்னு வச்சுக்கோங்க அது சக்சஸ் ஆயிடும். உதாரணத்திற்கு முரளி நாகார்ஜுனனின் தமிழ் படம் மற்றும் மறக்கப்பட்ட காதல் மன்னர்கள் இவையெல்லாம் சக்சஸ் ஆனபோது பல காதல்கள் சக்சஸ் ஆயின. (ஆனால் வாழத்தான் தயாரில்லை) – இதில் மோகன் படம் விதிவிலக்கு ஏனெனில் முக்காவாசி படத்தில் ரெண்டு பொண்டாட்டி, திரு திருவென விழிப்பது.
அனைவரின் வருகைக்கும் நன்றி
@சின்ன மலை இன்செப்சன் படம் பார்த்து தலை சுற்றி விட்டது 🙂
@திருவாரூர் சரவணன் நன்றாக ஓடிக்கொண்டு இருந்த படம் தூக்கப்பட்டது வருத்தம் தான். உங்கள் திரையரங்க அனுபவத்தை கூறிய போது எனக்கு வெயில் பட பசுபதி நினைவு வந்தது.
@யாசின் உங்களது காதல் திருமணமா? 🙂
@ஸ்ரீனிவாசன் ரொம்ப நன்றி
@ராஜ்குமார் உங்களுடையது செம ஆராய்ச்சி! 🙂 நீங்க மோகன் பற்றிக் கூறியதைப் படித்து சிரிப்பாகி விட்டது 🙂 இரண்டு மனைவி படம் நிறைய இருப்பது போல தெரியவில்லை ஆனால் திருதிரு வென முழிப்பது 🙂 🙂 🙂
கிரி… என்னுடையது காதல் திருமணம் அல்ல!!!! Arrange Marriage only !!!!
தல படம் இன்னும் பாக்கல
ஒரு மாளவிகா ரசிகரா இருந்துட்டு அந்த “வரையற சீன்” 3d effect ல எப்படின்னு சொல்லாததுக்கு இன்னும் ஒரு மாளவிகா ரசிகரா என் எதிர்ப்ப பதிவு செய்யுறேன்
-அருண்
பிரம்மாண்டமான படம் டைடானிக். காலம் உள்ளவரை பேசப்படும்.
பிரம்மாண்டமான படம் டைடானிக். காலம் உள்ளவரை பேசப்படும். இதற்கு முன் என் கருத்து பதிவு செய்யப்படவில்லை.
கடலின் ஆழத்தை கண்டுபிடித்து விடலாம். பெண்ணின் மனதில் உள்ள ஆழத்தை கண்டுபிடிக்க முடியாது. டைட்டானிக் பேசப்படுகிறது.