தமிழ்ப் பற்று இருக்க வேண்டியது தான் மறுக்கவில்லை அதற்காகச் சில நேரங்களில் அநியாயத்துக்குப் பற்றாக இருப்பதை நினைத்தால் தான் கலக்கமாக இருக்கிறது.
தமிழை வளர்க்க வேண்டும் தமிழிலே பேச வேண்டும் தமிழிலே எழுத வேண்டும் என்று பலர் தற்போது கூறி வருகிறார்கள்.
சந்தேகம் இல்லாமல் முழு மனதோடு வரவேற்கிறேன். இதோடு சேர்ந்து சில கருத்துகளையும் கூற விரும்புகிறேன்.
பெயர்ச்சொல்
ஆங்கிலச் சொற்களைத் தமிழ்ப்படுத்துவது மிக நல்ல விஷயம். அதற்காக பெயர்ச்சொல் உட்பட தமிழ்ப்படுத்துவது எந்த வகையில் சரி!
ரொம்ப நாளாக ஒரு விசயம் உறுத்திக்கொண்டேஉள்ளது. தமிழ்ப் “படுத்துகிறேன்” என்று நிறுவனங்களின் பெயர்களை எல்லாம் தமிழ்ப்படுத்தி வருகிறார்கள்.
தமிழ்ப்படுத்த வேண்டும் என்றால், அது என்ன சேவையோ அதைத் தான் தமிழ்ப் படுத்த வேண்டுமே தவிர அந்தச் சேவையைத் தரும் நிறுவனத்தின் பெயரை அல்ல.
எடுத்துக்காட்டாக IE (Internet Explorer), Firefox, Chrome என்பது Brand Name. அவர்கள் தரும் அந்தப் பொருளின் அல்லது சேவையின் பெயர் ஆங்கிலத்தில் Browser.
இதில் சேவையின் பெயரைத் தான் நாம் தமிழில் “உலவி” என்று மாற்ற வேண்டுமே தவிர, அந்த நிறுவனங்களின் பெயரை அல்ல “நெருப்பு நரி” போல.
சமூகத்தளங்கள்
இதே போல தான் facebook Twitter போன்ற நிறுவனங்களின் பெயர்களும். இவர்கள் தரும் சேவைகளுக்கு ஆங்கிலத்தில் Social Networks என்று பெயர். இதைத் தமிழில் “சமூகத்தளங்கள்” என்று மொழி மாற்றம் செய்து உள்ளார்கள்.
இதில் “சமூகத்தளங்கள்” என்பது தான் சரியே தவிர முகப்புத்தம், மூஞ்சிப்புத்தகம், முகநூல் என்று ஃபேஸ்புக்கை அழைப்பது தவறு.
இதில் பெரிய நகைச்சுவை என்னவென்றால், ஆங்கிலப் பெயரைத் தமிழ்ப் “படுத்த” முடிந்தால் மட்டுமே மாற்றுகிறார்கள் அதற்குச் சரியான தமிழ் வார்த்தை கிடைக்கவில்லை என்றால், அதையே பயன்படுத்துகிறார்கள்.
பெயர்ச்சொல்லுக்கு அர்த்தம் எப்படி அனைத்திற்கும் கிடைக்கும்? face முகம் book நூல் (புத்தகம்) இதை எளிதாக மாற்றி விட்டீர்கள்.
Chrome இதை எப்படி மாற்றுவீர்கள்? மாற்ற முடியவில்லை அதனால், அனைவரும் க்ரோம் என்றே அழைத்து வருகிறார்கள்.
மைக்ரோசாஃப்ட் “நுண்மென்” என்று மாற்றம் பெறாமல் தப்பித்துக்கொண்டு இருக்கிறது 😉 ஆமா! இதை மட்டும் எப்படிப்பா விட்டு வைத்தீங்க!
பெயர்ச்சொல்லை நம்மால் அனைத்து நேரங்களிலும் மாற்றம் செய்ய முடியாது Chrome Safari போல ஆனால், சேவைகளை நம்மால் மாற்றம் செய்ய முடியும்.
உலவி (Browser), இயங்கு தளம் (OS), பின்னூட்டம் (Comment), சமூகத்தளங்கள் (Social Networks), வழங்கி (server) இவைகளுக்கு அர்த்தம் இருக்கிறது.
Windows, Linux என்பது Brand Name, Operating System என்பது பொதுவான வார்த்தை. எனவே Windows ஐ ஜன்னல்கள் என்று மாற்றம் செய்யக் கூடாது ஆனால், Operating System என்பதை இயங்கு தளம் என்று மாற்றம் செய்யலாம்.
சிலருக்கு இவ்வாறு கூற விருப்பம் இல்லை என்றாலும் அனைவரும் இதே போல கூறும் போது நாம் மாற்றிக்கூறினால் நன்றாக இருக்குமா! என்பதற்காகவே வேறு வழி இல்லாமல் இது போலக் கூறுபவர்களும் இருக்கிறார்கள்.
Lady Gaga
பிரபல பாப் பாடகி Lady Gaga வை இனி என்ன “பெண் காகா” என்று மாற்றுவீர்களா?
நடிகர் செந்தில் ஒரு படத்தில் தனது கண்ணாயிரம் என்கிற பெயரை Eye Thousand என்று கூறித் திரிவது போல உள்ளது, பெயர்ச்சொற்களை தமிழ்ப் படுத்த நினைப்பது.
என் பெயர் கிரி இதற்கு விளக்கம் “மலை” அதனால் என்னை ஒரு வெளிநாட்டுக்காரர் Hill என்று அழைத்தால் எப்படி இருக்குமோ அப்படி உள்ளது இவர்கள் செய்வது.
என் துறை சார்ந்த பணியை கணிப் பொறியாளர் அல்லது வல்லுநர் என்று மொழி மாற்றம் செய்யலாம் என் பெயரை அல்ல.
தமிழ் மீது பற்றாக இருங்கள் பாராட்டப்பட வேண்டிய ஒன்று அதற்காக அனைத்தையும் “படுத்த” நினைத்தால்… ஒன்றும் சொல்வதற்கில்லை.
மொழி மாற்றி பெயர் வழங்குவது எல்லா மொழிகளிலும் உள்ள வழக்கமே, இதில் தவறு கொலைக் குற்றம் இருப்பதான நான் அறிந்ததில்லை, பிடித்தவங்கப் பயன்படுத்தட்டும் பிடிக்காதவங்க பயன்படுத்த வேண்டாம்.
🙂
பெயர்ச்சொல்லை மாற்றி அதனை வாயில் போட்டு குதப்பி மேலும் பலரும் பலவிதமாக பதிவுகளில் குறிப்பிடுவதாலும் பலருக்கும் புரிவதில்லை. மொழியாக்கத்திற்கான விதிகளைத் தெரியாமலே மாற்றியமைத்து நான் புதிய தமிழாக்கத்தைக் கண்டறிந்தேன் என்று சிலர் கூவுகின்றார்கள். நல்ல பதிவு.
கோவி அண்ணே ! அப்போ பிடிச்சிருந்தா தப்பா இருந்தாலும் அப்படியேவா பயன்படுத்துவீங்க ?
உங்க பேர எந்த மொழொயில சொன்னாலும் அதே தான் அதுக்காக மொழிக்கு மொழி மாத்திட்டு இருக்க முடியுமா 🙂
நச்சுனு ஒரு கேள்வி 🙂
நன்றிங்க பாரதி !
நல்ல பதிவு :)))! ஒரு சிலவற்றுக்கு மட்டுமே மொழி மாற்றம் சரி வரும். மற்றதை அப்படியே உபயோகிப்பதே சரி.
🙂 ரொம்ப நியாயமான கேள்விதான்.
கொசுறு 1க்கு மிக்க நன்றி கிரி. நான் பாஸ்போர்ட் புதுப்பிக்க வேண்டும்.
நியாயமான கேள்விண்ணே…இந்த மொழிமாற்றத்தை படிக்கையில் சிரிப்புதான் வருகிறது.
@அருண் (facebook) நன்றி
@கோவி கண்ணன் நான் எது சரி எது தவறு என்பதைப் பற்றி கூறிக்கொண்டு இருக்கிறேன். நீங்க விருப்பத்தைப் பற்றி பேசிட்டு இருக்கீங்க.
சூப்பர் மலை (Giri – Thamizhlango)
Super
நீங்க சொன்னது சரி தான் கிரி. என்னுடைய பார்வை கண்ணன் சொன்னது போல விருப்பம் சார்ந்தது. இதில் மற்றொரு விசயம் உண்டு.
நம்மவர்களுக்கு மொழியைப் பற்றியே தெரிவதில்லை? அப்புறம் எங்கே பெயர்ச்சொல் வினைச்சொல் போன்றவைகள் புரியும். மேலும் நம்மவர்கள் மற்றொன்றை கற்றுக் கொள்ள விரும்பும் ஆர்வத்தினைப் போல அவரவர் தாய்மொழியில் உள்ள ஆர்வம் பூஜ்யம் தான்.
அங்காடித்தெரு என்ற வார்த்தையே படத்தில் வந்த பிறகு தான் தமிழ் கூறும் நல்லுலகமே தெரிந்து கொண்டது கிரி. கூகுள் ப்ளஸ் (இதைக்கூட கூகுள் கூட்டல் என்று இப்போது அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்) ல் கூட ஒருவர் சீன மொழி (அத்திவெட்டி ஜோதிபாரதி என்று நினைக்கின்றேன்) வார்த்தைகள் பற்றி எழுதியிருந்தார்.
ஜோதிஜி அங்காடித்தெரு என்பது மிகச்சரியான மொழி பெயர்ப்பு காரணம் அது பெயர்ச் சொல் அல்ல. எனவே இது போன்ற வார்த்தைகள் வருவதில் எனக்கு மிகுந்த சந்தோசமே! அங்காடித்தெரு என்று மொழி பெயர்க்கலாம் ஆனால் அதில் உள்ள கடைகளின் பெயரை அல்ல என்பதே என் கருத்து.
நாம் பொதுவாக ஜுவல்லரி வாங்க போகலையா என்று தான் கேட்போம். சிராங்கூன் சாலையில் சில கடைகளில் பார்த்திருப்பீங்க தானே? பிரபாகரன் ஆட்சி காலத்தில் அவர் பகுதிகளில் உள்ள கடைகளில் உள்ள பெயர்ப்பலகைகள் அத்தனை இயல்பான ஆச்சரியமூட்டும் தமிழிலில். கனடா நாட்டில் உள்ள ஈழத்தமிழர்களின், ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களின் கடை விளம்பரங்களை பல வலைதளங்களில் பார்க்கும் போது என்னால் நம்மவே முடியல. ஒரு குற்ற உணர்ச்சி உள்ளே நெருடுகின்றது.
வீட்டில் பேசும் போது நாம் பாதிக்குப் பாதி மொழிகலப்போடு தான் உரையாடுகின்றோம். ஆனால் என்னுடன் இன்று வரையிலும் உரையாடும் ஈழத்தமிழர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கு.
நம் எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக் கொள்கின்றோம் என்பது மட்டும் உண்மை கிரி.
நன்றி.
உண்மை தான் ஜோதிஜி. நான் இது போல பெயர்களில் மட்டும் தான் தவறாக சொல்வதில்லையே தவிர, மொழி கலப்பு என்பதை நான் செய்து கொண்டே இருக்கிறேன். குறைக்க / தவிர்க்க வேண்டும் என்று நினைப்பேன் ஆனால், அதை சில நாட்களே பின்பற்ற முடிகிறது. உண்மையாகக் கூறினால் வெட்கமாகத் தான் இருக்கிறது. என்னையே நினைத்து சில நேரங்களில் எரிச்சலாகவும் வருகிறது. எழுதும் போது கூடுமானவரை ஆங்கில கலப்பு இல்லாமல் எழுத முயற்சிக்கிறேன் ஆனால், ஒரு விஷயம் தமிழில் கூறினால் கூற வரும் விசயத்திற்கு அழுத்தம் இல்லாமல் போகும் சமயங்களில் ஆங்கில வார்த்தையையே பயன்படுத்த வேண்டி வருகிறது.
பிரிக்க முடியாத அளவிற்கு தமிழில் ஆங்கிலம் கலந்து விட்டது என்பது கசப்பான உண்மை.
நன்றி அண்ணா இனி இந்த மாதிரி தவறுகளை தமிழில் செய்வதை தடுக்க என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் சொல்லிகொள்கிறேன்
நன்றி,9442680761இதுஎன்னுடைஎண்,இதில் கணக்குத்தொடரமுடியுமா நான்செவ்வாய்க்கோளில்வாழ்வதற்குஉலகீளவில் யோக நியமப் பயிச்சி கொடுதது வருகிறேன்,ு
உதவி செய்க★
நன்றி,9442680761இதுஎன்னுடைஎண்,இதில் கணக்குத்தொடரமுடியுமா நான்செவ்வாய்க்கோளில்வாழ்வதற்குஉலகீளவில் யோக நியமப் பயிச்சி கொடுதது வருகிறேன்,ு
உதவி செய்க★
* நெருப்பு நரி, பெண் காகா* செம நகைச்சுவை போங்க……
மற்றொரு சந்தேகம் கிரி அவர்களே, கொங்கு தமிழ், இலங்கை தமிழ், நெல்லை தமிழ், மலையாளம் இவற்றிற்கெல்லாம் ஒரு வித slang இருக்கிறது, இப்படி slang வைத்து பேசுபவர்கள் அதிகம் பிறமொழிச்சொற்களை கலப்பதில்லை என்று தோன்றுகிறது இது சரியா? கேட்பதற்கு நன்றாக உள்ளதல்லவா.