எழுத்தாளர் சுஜாதா எனும் ரங்கராஜன் அவர்களைப் பற்றி அவரது மனைவி சுஜாதா அவர்கள், தனது கணவர் மறைந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தினகரன் நாளிதழுடன் வெளிவரும் வசந்தம் இதழுக்குப் பேட்டி கொடுத்து உள்ளார். Image Credit
“சுஜாதா” ஆதங்கம்
எழுத்தாளர் சுஜாதா பற்றி ஒரு பிம்பம் உருவாக்கி வைத்து இருந்தவர்களுக்கு இதைப் படிக்கும் போது வருத்தமாகவும் அதை ஜீரணிக்க முடியாமலும் இருக்கிறது.
சுஜாதா என்றில்லை எந்தப் பிரபலத்தின் ரசிகர்களுக்கும் இது பொருந்தும்.
இதன் காரணமாகவே அந்தப் பிரபலம் தவறு செய்து இருந்தாலும், அதை நியாயப்படுத்திப் பேச வேண்டியதாகி விடுகிறது.
கொஞ்சம் பக்குவப்பட்டவர்கள் என்றால் அது அவர் தனிப்பட்ட விஷயம் என்பதை புரிந்து கொண்டு அதிகம் அது பற்றிக் கவலைப்படாமல் இருந்து விடுவார்கள்.
நானும் ஒரு கணவன், இரு குழந்தைகளுக்குத் தந்தை என்கின்ற வகையில் சில விசயங்களைப் பகிர விரும்புகிறேன்.
காரணம், சுஜாதா அவர்கள் தனது கணவர் பற்றிக் கூறியதை அவருக்கு மட்டும் கூறியதாக நினைக்க வேண்டியதில்லை.
ஒவ்வொரு கணவருக்கும் / மனைவிக்கும் கூறிய ஒரு அனுபவப்பாடமாக எடுத்துக்கொள்ளலாம்.
இதில் அவர் கூறியதைப் பற்றி விமர்சிக்க எனக்கு உரிமையில்லை ஆனால், அவர் கூறிய கருத்துகளில் உள்ள சில விசயங்களைப் பற்றி பகிர விரும்புகிறேன்.
முதல் சுஜாதா என்ன கூறினார் என்பதை படித்து விடுங்கள் [நன்றி தினகரன்]
சுஜாதா
“பொதுவா கலை உலகைச் சேர்ந்தவர்கள் வேற உலகத்துல வாழ்வாங்கன்னு சொல்வாங்க. அதை என் கணவர் விஷயத்துல கண்கூடாப் பார்த்தேன்.
அவரோட மனநிலை எப்ப, எப்படி மாறும்னு யாருக்கும் தெரியாது.
தன்னோட அந்தரங்கத்துக்குள்ள அவர் யாரையும் அனுமதித்ததில்லை. எப்பவும் எழுதறது, படிக்கறது, ஸ்டோரி டிஸ்கஷன் என்று ஒரு வட்டத்துக்குள்ளேயே இருப்பார்.
மனைவி, குழந்தைங்க பத்தின சிந்தனை அவருக்குக் கிடையாது.
சுருக்கமாச் சொல்லணும்னா பசங்க என்ன படிச்சாங்க, எப்படிப் படிச்சாங்கன்னு கூட அவருக்குத் தெரியாது.
பசங்களாப் படிச்சாங்க…. அவங்களா வேலையைத் தேடிகிட்டாங்க… அவங்களா பிடிச்ச பெண்ணைத் திருமணம் செய்துகிட்டாங்க.
மத்தபடி அப்பாவா அவர் எந்த ஸ்டெப்பும் எடுத்ததில்லை.
மனநிலை
இந்த மனநிலையை மனைவியான என்னிடமும் செலுத்தினார். நான் சாப்பிட்டனா….தூங்கினேனா… எனக்கு என்ன வேணும்… எதையும் அவர் கேட்டதில்ல… செஞ்சதில்ல.
அவர் எழுதினதை நான் படிச்சா அவருக்குப் பிடிக்காது.
குடும்பத்தைத் தாண்டிப் பெண்கள் வெளில வரக்கூடாதுனு நினைப்பார். இதுக்குக் காரணம், அவர் வளர்ந்த விதம்.
அவரோட உலகம் ரொம்பச் சின்னது. ஸ்ரீரங்கத்துல பாட்டி வீட்லதான் வளர்ந்தார். அந்த அஹ்ரகாரம்தான் அவருக்கு எல்லாம்.
அதைத் தாண்டி அவர் சின்ன வயசுல வந்ததில்லை. வளர்ந்தபிறகு கூட மனதளவுல அந்த அஹ்ரகாரப் பையனாத்தான் இருந்தார்.
சுதந்திரம்
ஆனா எங்க வீட்ல அப்படிக் கிடையாது. பெண்களுக்கு எல்லா உலக விஷயமும் தெரியணும், அவங்களும் படிக்கணும்னு நினைச்சாங்க.
அப்படித்தான் என்னை வளர்த்தாங்க. எங்க தாத்தா ஆங்கிலேயர் கிட்ட வேலை பார்த்தவர்.
அதனால எங்கம்மாவுக்கு ஆங்கிலத்தையும், அறிவியலையும் தாத்தா ஸ்பெஷலா ஒரு ஆங்கிலோ இந்திய டீச்சரைப் ப்ரைவேட்டா நியமிச்சு படிக்க வச்சார்.
என் தங்கை டாக்டருக்குப் படிச்சுட்டு அமெரிக்காவுல இருக்கா. ஒரு தம்பியும் அமெரிக்கால செட்டிலாயிட்டான்.
இன்னொரு தம்பி சென்னைல நல்ல வேலைல இருந்து ரிடையர் ஆகியிருக்கான்.
இப்படிப்பட்ட குடும்பத்துலதான் 20 வருஷங்கள் வளர்ந்தேன். திடீர்னு கல்யாணமாகி வேறொரு சூழல் அமைந்ததும் முதல்ல ஒண்ணும் புரியலை.
10 வருடங்கள்
கிட்டத்தட்ட பத்து வருஷங்கள் ரொம்பச் சிரமப் பட்டேன். அப்புறம் என் கணவரோட உலகம் எனக்குப் பழகிடுச்சு.
அவரோட உலகத்துக்குத் தகுந்த உயிரினமா வாழ ஆரம்பிச்சேன்.
பல நாட்கள் அம்மா மடில படுத்து அழுதிருக்கேன். திரும்பி வந்துடறேன்னு கதறியிருக்கேன்.
ஆனா, குழந்தைகளோட ஒரு பொண்ணு தனியா வாழ முடியாது அட்ஜஸ் பண்ணிக்கன்னு சொன்னாங்க. அந்தக் காலகட்டம் அப்படி.
அதுவே இன்றைய சூழ்நிலையா இருந்திருந்தா எங்கம்மா கிட்ட யோசனை கேட்டிருக்க மாட்டேன். குழந்தைகளோட தனியா வந்திருப்பேன்…
வெளிப்படுத்தத் தெரியாது
அவருக்கு மனைவி குழந்தைகள் மேல அன்பு இல்லைன்னு சொல்ல முடியாது. ஆனா, அதை வெளிப்படுத்தத் தெரியாது.
வெளிப்படுத்தாத அன்பால யாருக்கு என்ன பயன்! உறவுங்கிற சக்கரம் சுழல அன்புதானே அவசியம்.
அவரை முழுசாப் புரிஞ்சிக்க எனக்குப் பத்து வருஷங்களாச்சு.
அதுக்குப் பிறகு, என்னோட சுயத்தை விட்டுட்டு, அவருக்காகவும், பிள்ளைகளுக்காகவும் வாழ ஆரம்பித்தேன். அவருக்கு ரெண்டு பைபாஸ் சர்ஜரி நடந்தது.
அதனால அவரால எங்கயும் போக முடியாது. துணையா நான் இருந்தேன்.
எங்களுக்கு ரெண்டு பசங்க. ரெண்டு பேருமே அமெரிக்காவுல வேலை பார்த்துகிட்டு இருந்தாங்க. அவர் காலமானதும் பெரியவன் சென்னைக்கு வந்துட்டான்.
சின்னவன் அமெரிக்காவுலதான் இருக்கான். எனக்கு வர்ற மருமகள் தமிழ்ப்பெண்ணா இருக்கணும்னு ஆசைப் பட்டேன்.
அது நடக்கலை. பெரியவன் பஞ்சாபிப் பெண்ணையும், சின்னவன் ஜப்பானியப் பெண்ணையும் விரும்பிக் கல்யாணம் செஞ்சுகிட்டாங்க.
ஆனா ரெண்டு மருமகள்களுமே தங்கமானவங்க.. என்னைக் கைல வச்சுத் தாங்கறாங்க.
எனக்காக வாழ ஆரம்பிச்சுருக்கேன்
இதுவரைக்கும் கணவன், மாமனார், மாமியார், அம்மா, அப்பா, பிள்ளைகள்னு மத்தவங்களுக்காகவே வாழ்ந்துட்டேன்.
இப்பதான் எனக்காக வாழ ஆரம்பிச்சுருக்கேன். கோயில், யாத்திரைகள்னு பொழுது போகுது.
அமெரிக்காவுல இருக்கற சின்னவன் வீட்டுக்கும், தம்பி, தங்கைகள் வீட்டுக்கும் போய் வர்றேன், விருப்பப்பட்ட புத்தகங்களைப் படிக்கிறேன்.
என்னோட நேரங்கள் எனக்கானதா செலவாகுது. பெரிய எதிர்பார்ப்புகள் எனக்குக் கிடையாது. அதனாலேயே சந்தோஷமா இருக்கேன்.
ஏன்னா, எதிர்பார்ப்பு இருந்தாதான் ஏமாற்றம் ஏற்படும். என் வாழ்க்கை எனக்குக் கத்துக் குடுத்த பாடம் இது.”
விமர்சனங்கள்
இதில் சுஜாதா அவர்கள் மனதில் இருந்ததை கூறியதால் அவருக்கு மனசு லேசாகி இருக்கலாம் அல்லது மற்றவர்கள் “இப்படி உங்கள் கணவரைப் பற்றிக் கூறி அவரை அசிங்கப்படுத்தி விட்டீர்களே!” என்று தொடர்ந்து கூறி அவரை விமர்சித்து அவருக்கு மன உளைச்சலை கொடுத்து இருக்கலாம்.
இதை எல்லாம் எதிர்பார்த்தே அவர் கூறி இருப்பார் என்றே நம்புகிறேன்.
இணையத்தில் பலரும் எழுத்தாளர் சுஜாதா பற்றி விமர்சிக்கிறார்கள்.
இதில் எத்தனை பேர் தாமே அந்த தவறை செய்து கொண்டு இருக்கிறோம் என்பதை இப்பேட்டியின் மூலம் உணர்ந்தார்கள்?
மனித இயல்பு
தவறு செய்வது என்பது மனித இயல்பு.
ஆனால், செய்த தவறை யாராவது சுட்டிக்காட்டும் போது அல்லது மற்றவர் அனுபவத்தில் உணரத்தவறியவர்கள் மிகப்பெரிய தவறை செய்து கொண்டு இருப்பதாகத் தான் அர்த்தம்.
நமக்காகவே இருப்பவர்களைவிட திடீர் நண்பர்களுக்கு அதிக நேரம் ஒதுக்குகிறோம்.
சுஜாதா போன்ற மிகப்பெரிய எழுத்தாளர் குடும்பத்திற்காக நேரம் ஒதுக்கவில்லை என்பதில் எனக்கு எந்த வியப்புமில்லை.
நானும் பல காலம் வீட்டிற்கு வந்தால், லேப்டாப்பே கதி என்று இருப்பேன். மனைவி இது பற்றிக் கூறிக்கொண்டே இருப்பார்.
சரி என்று ஒரு வாரம் குறைவான பயன்பாட்டில் இருப்பேன், பின்னர் வழக்கம்போல ஆகி விடும்.
இனி இந்தத் தவறை செய்யக் கூடாது என்று முடிவு செய்து கொண்டேன். தற்போது சுஜாதா அவர்கள் பேட்டியைப் படித்ததும் இன்னும் தெளிவாகி விட்டேன்.
அனைவரும் அப்படியல்ல
சுஜாதா அவர்கள் தங்களின் தனிப்பட்ட விசயங்களைப் பகிர்ந்ததால், உடனே கணவர்கள் அனைவரையும் இதே போல நினைக்க வேண்டிய அவசியமில்லை.
எத்தனையோ வீட்டில் மனைவியின் டார்ச்சர் தாங்காமல் புலம்புவர்களை சந்தித்துள்ளேன்.
வீட்டில் இருந்தால் நிம்மதி இல்லை என்பதாலையே வேறு விசயத்தில் தங்களை திருப்பிக்கொண்டவர்கள் நிறைய உள்ளனர்.
கணவர் மனைவி இருவருமே கலந்து பேசினால் மட்டுமே இதற்குத் தீர்வு காண முடியும்.
யார் முதலில் பேசுவது என்ற ஈகோ இருக்குமானால், அங்குப் பிரச்சனை விரைவில் தீராது. யாரோ ஒருவர் விட்டுக்கொடுத்துத்தான் ஆக வேண்டும்.
எப்போது பிரச்சனை வெடிக்கிறது என்றால், யாரோ ஒருவர் விட்டுக் கொடுப்பது என்றாலும், அந்த ஒருவரே எத்தனை காலத்திற்கு விட்டுக் கொடுப்பார்!
அவரின் பொறுமை எல்லை மீறும் போது பிரச்சனையாக உருவெடுக்கிறது.
விட்டுக் கொடுப்பது என்றால் அவ்வப்போது தான், எப்போதுமே அல்ல. இதை இருவருமே புரிந்து கொண்டால் பிரச்சனை இல்லை.
அவரவர்க்கு அவரவர் நியாயம்
அனைவரது வீட்டிலும் இது போல நடப்பதில்லை. அவரவர்க்கு அவரவர் நியாயம் என்பது போல நடந்து கொள்வதால், பிரச்சனைகள் கூடுகிறது.
ஒரு சிலர் / பலர் என்னதான் வயது கூடினாலும் தாங்கள் செய்யும் தவறுகளை உணரவே மாட்டார்கள்.
மற்றவரிடமே குறை கண்டு கொண்டே இருப்பார்கள். என் அனுபவத்தில் நிறையப் பேரைச் சந்தித்து இருக்கிறேன்.
நம் வாழ்க்கைத் துணை, நம்மை ஒரு விசயத்தில் குறை கூறும் போது, தன்மான இழுக்காக நினைத்து அப்போது நாம் செய்வதை நியாயப்படுத்திப் பேசினாலும், நமக்குத் தவறு என்று தெரியலாம்.
இது போலச் சமயங்களில் அப்போது வீராப்பை காட்டினாலும், பின் பொறுமையாக யோசித்து, நாம் செய்தது தவறு என்று புரிந்தால், அடுத்த முறை நம் தவறை திருத்திக்கொள்ள முயற்சி எடுக்க வேண்டும்.
நாம் (ஆண் / பெண்) அனைவருமே, நாம் செய்வது தான் சரி என்று நினைப்போம். நம் விருப்பங்களைத் திணிப்பதில் தான் அதிக அக்கறை காட்டுவோம்.
இது மனித இயல்பு ஆனால், இது வரம்பு மீறும் போது அங்குப் பிரச்சனை எழுகிறது. அடுத்தவருக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.
அனைவருக்குமான அனுபவம்
சுஜாதா அவர்கள் கூறியதை, எழுத்தாளர் சுஜாதாக்கு மட்டும் கூறியதாக நினைக்காமல், நம் (ஆண் / பெண்) அனைவருக்குமே கொடுக்கப்பட்ட அனுபவமாகத் தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நமக்குப் பிடித்ததை முற்றிலும் ஒதுக்கி விட்டுக் குடும்பத்தினருக்காக வாழுங்கள் என்று கூறவில்லை, குடும்பத்தினருக்கும் நேரம் ஒதுக்குங்கள் என்று கூறுகிறேன்.
நமக்காகவும் வாழ்ந்தால் தான் குடும்பத்தினருக்காக வாழவும் நமக்கு விருப்பமாக இருக்கும். இல்லை என்றால் ஒரு இயந்திர வாழ்க்கையாகி விடும்.
என்ன தான் குடும்பத்தினருக்கு நேரம் ஒதுக்கினாலும், ஒரு சில வீட்டில் போதாது. தொடர்ந்து புலம்பல்கள் / திட்டுகள் வரும். அதை எதுவுமே செய்ய முடியாது.
பொறுமையாக விளக்குவதன் மூலம் மட்டுமே சரி செய்ய முடியும்.
சிலர் புரிந்து கொள்வார்கள், சிலர் எந்தக் காலத்திலும் புரிந்து கொள்ள மாட்டார்கள். இது போன்றவர்களிடம் மாட்டிக் கொண்டவர்கள் நிலை பரிதாபமானது தான்.
எழுத்தாளர் சுஜாதா பிரபலம் என்பதால் இது குறித்து விவாதிக்கப்படுகிறது, அவ்வளோ தான். இது பெரும்பாலனவர்கள் வீட்டில் நடைபெறுவது தான்.
நம்மை யோக்கியர்கள் போல நினைத்து, பெருமைப் பட்டு நமக்கு நாமே சான்றிதழ் வழங்குவதில் அர்த்தமில்லை.
நாம் எப்படி என்று நம் துணையைக் கேட்டால் தான் தெரியும்.
சுஜாதா அவர்கள் தற்போது இதைக் கூறி பலரின் வெறுப்பை சம்பாதித்து இருக்கலாம்.
இதை நேர்மறையாக எடுத்துக்கொண்டால், பலருக்கு மறைமுகமாகத் தவறுகளைச் சுட்டிக்காட்டி இருக்கிறார் என்பதை உணர முடியும்.
புரிந்து கொண்டவர்கள் அவரைத் தவறாக நினைக்கமாட்டார்கள்.
அதே போல எழுத்தாளர் சுஜாதாவின் திறமை / புகழ் இதன் மூலம் எந்த விதத்திலும் குறையப்போவதில்லை.
இந்த ஒரு பேட்டியின் மூலம் அவரது புகழ் மங்கி விடும் என்று நினைத்தால், அதை விட முட்டாள்த்தனம் எதுவுமில்லை.
தொடர்புடைய கட்டுரைகள்
அடிமையா? நேர்மையா? சுஜாதா பதில்
எழுத்தாளர் சுஜாதா தரும் எழுத்து ஆலோசனைகள்
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
//வெளிப்படுத்தாத அன்பால யாருக்கு என்ன பயன்!//
அந்த கட்டுரைய பத்தி விமர்சனம் எழுதுனவங்க “வெளிப்படுத்தாத அன்பால யாருக்கு என்ன பயன்!” ங்கற வார்த்தைய புரிஞ்சாலே நல்லாருக்கும்.
“பின்னர் எங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர்கள் எங்கள் ஊரில் இருக்க வேண்டிய நிலை. இதன் பிறகு எனக்கு கிடைத்த அனுபவங்கள் என் தவறை உணரச் செய்தது. குடும்பத்துடன் நேரம் செலவழிக்க நினைக்கும் போது, மனைவி குழந்தைகள் என்னுடன் இல்லை”
– சில சமயங்களில் பிரிவுமும் பெரிய மாற்றத்தை கொடுக்கும். வேலை முடிந்து வீடிற்கு வரும்போது, வீட்டில் யாரும் இல்லாத போது, ஒரு வெருமை வரும். அந்த வெருமையே நம் குடும்பத்தின் மேல் ஒரு பாசத்தை உண்டுபண்ணிவிடும். நாம் செய்யும் பல தவறுகளை உணர செய்யும்.
“இது போல சமயங்களில் அப்போது வீராப்பை காட்டினாலும், பின் பொறுமையாக யோசித்து நாம் செய்தது தவறு என்று புரிந்தால், அடுத்த முறை நம் தவறை திருத்திக்கொள்ள முயற்சி எடுக்க வேண்டும்.”
– நாம் செய்த தவறை உணர்ந்தபின், நம் துணையுடன் பகிர்ந்துகொண்டீர்கலனால், உங்கள் துணை உங்களை புரிந்துகொள்ள மிக நல்ல சந்தர்ப்பமாக அது இருக்கும்.
கிரி. திருமதி சுஜாதா அவர்களின் பேட்டியில் எந்த தவறும் இருப்பதாக நான் கருதவில்லை. அவர்களின் இத்தனை ஆண்டுகால மனக்குமுறல்கள் இன்று வார்த்தையாக வெளிவந்துள்ளது அவ்வளவுதான்.. சமுகத்தில் பெரிய அந்தஸ்தில் உள்ளவராக இருந்தாலும் சரி, சாதாரண நிலையில் இருந்தாலும் சரி மனிதன் என்ற நிலையிலிருந்து மாற போவதில்லை.. தனிப்பட்ட மனிதனின் வாழ்கையை விமர்சிப்பது தவறு. ஆனால் அதன் மூலம் கிடைக்கும் படிப்பினைகளை நாம் எடுத்து கொள்ளலாம்..
==========================================
பெண்மையை பற்றி எங்கோ படித்தது (ஏமாற்றங்களுக்கு பழக்கப்பட்டவள் பெண். ஆனால் அவர்களால் தான் எல்லோருக்குமான சந்தோசங்களை சமைக்க முடியும். இருப்பதை வைத்து சிறப்பாக இருப்பது பெண்களுக்கு மட்டும் தெரிந்த ரகசியம். கிட்டிக்கு மரம் ஒடிக்கிற ஆண்கள் மத்தியில், உலகத்தில் மரபாச்சி பொம்மைகளுக்கும் சோறுட்டுவது பெண் மனம்…)
============================================
என்னை பொறுத்தவரை ஒரு மனிதனின் வெற்றி, தோல்வி, சந்தோஷம், மன மகிழ்ச்சிகள், இவைகளை தீர்மானிப்பது பெண்களே.. குறிப்பாக மனைவிகள்.. புரிதல் என்ற ஒன்று மிகவும் அவசியமான ஒன்று..
வெறும் பணத்தை மட்டும் சம்பாரித்து தன் கடமை முடிந்து விட்டது என கருதும் ஆண்களே இங்கு அதிகம். பெண்மையை புரிந்து கொண்ட,பெண்மையை மதிக்கிற மனிதர்கள் எத்தனை பேர் நம்மில்????
===========================================
ஜெயமோகனின் தளத்தில் நான் படித்த ஒரு கட்டுரை.. http://www.jeyamohan.in/?p=597
ராமகிருஷ்ணனின் தளத்தில் நான் சமீபத்தில் படித்த ஒரு சிறுகதை http://www.sramakrishnan.com/?p=3392
===========================================
மேற்குறிய இரண்டுமே இந்த பதிவுக்கு தொடர்பு இருப்பதால் நான் இதை பதிகிறேன். நேரம் இருப்பின் படிக்கவும். பின்னூட்டம் பெரியதாக உள்ளதற்கு மன்னிக்கவும்… பகிர்வுக்கு நன்றி கிரி…
//ஒரு Blog வைத்துட்டே இவ்வளவு நேரம் இதில் செலவழிக்கும் போது, சுஜாதா போன்ற மிகப்பெரிய எழுத்தாளர் குடும்பத்திற்காக நேரம் ஒதுக்கவில்லை என்பதில் எனக்கு எந்த ஆச்சர்யமுமில்லை.//
-முற்றிலும் உண்மை. சுஜாதா அவர்கள் தனது குடும்பத்தினருடன் நடந்துகொண்டதும் , அதை அவரது துணைவியார் இப்போது கூறியதும் இயல்பான நிகழ்வுகளே.
நீங்கள் ஆய்ந்து தெளிவாக நேர்நிலையுடன் எழுதியுள்ளதை போல, இதில் யாரையும் குறை கூறவோ வருத்தப்படவோ வேண்டியதில்லை. இதனால் சுஜாதா அவர்களின் புகழ் மங்கவும் போவதில்லை. ஆனால் நமக்கு கிடைத்த பாடம் குடும்பத்தை மதிக்க வேண்டும், அன்பை வெளிப்படையாக காட்ட வேண்டும் என்பதுதான்.அழகான தெளிவான பதிவு.
\\சமுகத்தில் பெரிய அந்தஸ்தில் உள்ளவராக இருந்தாலும் சரி, சாதாரண நிலையில் இருந்தாலும் சரி மனிதன் என்ற நிலையிலிருந்து மாற போவதில்லை.. தனிப்பட்ட மனிதனின் வாழ்கையை விமர்சிப்பது தவறு. ஆனால் அதன் மூலம் கிடைக்கும் படிப்பினைகளை நாம் எடுத்து கொள்ளலாம்//
//ஒரு Blog வைத்துட்டே இவ்வளவு நேரம் இதில் செலவழிக்கும் போது, சுஜாதா போன்ற மிகப்பெரிய எழுத்தாளர் குடும்பத்திற்காக நேரம் ஒதுக்கவில்லை என்பதில் எனக்கு எந்த ஆச்சர்யமுமில்லை.//
\\முற்றிலும் உண்மை. சுஜாதா அவர்கள் தனது குடும்பத்தினருடன் நடந்துகொண்டதும் , அதை அவரது துணைவியார் இப்போது கூறியதும் இயல்பான நிகழ்வுகளே.//
எனது கருத்தும் இதுதான் கிரி.
உங்கள் பதிவு மிக அழகாக ஒரு கலைஞனையும் விட்டுக் கொடுக்காமால் அதே சமயம் குடும்ப உறவுகளின் நிதர்சனத்தையும் உணர்த்தியிருக்கிறது. நன்றி கிரி.
உங்களுக்கு வாழ்க்கை மேல உள்ள புரிதல் நல்லாவே இந்த பதிவு ல தெரியுது
நாம எவ்வளவு அழகா வாழ்கையும் அதோட எதார்த்தத்தையும் புரிஞ்சுகுரோமோ அவ்வளவு லைப் நல்லா இருக்கும்
– அருண்
ஒரு Blog வைத்துட்டு அதில் 10 பேர் பாராட்டுவதால் அதற்கு போதையாகி அதிலேயே கிடந்து, குடும்பத்துடன் நேரம் செலவழிக்காமல் இருப்பது எவ்வளவு பெரிய தவறு? நமக்காகவே இருப்பவர்களை விட திடீர் நண்பர்களுக்கு அதிக நேரம் ஒதுக்குகிறோம்.
yenakku ரொம்ப பிடித்த வரிகள்……..
இன்றைக்கு சுஜாதாவுடன் வாழ்ந்த சுஜாதாவின் எழுத்துக்களை துரோகம் எனும் அளவு விமர்சிப்பவர்கள் பிம்பம் பார்த்து ஏமாறுபவர்களே. முதல் அமைச்சராகவே இருந்தாலும் அவன் ஒரு குடும்பத்தின் சாதாரண அங்கம் என்பதை மறந்து விட்டு “னான் யாரு? இதையெல்லாம் கவனிக்க எனக்கு ஏது நேரம் எனப் பேசுபவர்கள் தோற்றுப்போன மனிதர்களே. நபிகள் நாயகம் சொன்னார்கள்” யார் தன் குடும்பத்தில் நல்லவனாக இருக்கிறானோ அவந்தான் சமுதாயத்தில் நல்லவனாக இருக்க முடியும். நான் என் குடும்பத்தில் நல்ல பெயர் எடுத்திருக்கிறேன்” இதுதான் சமூகம் குடும்பம் இரண்டையௌம் பிரித்துப்பார்க்கும் கோமாளிகளுக்கு பதில்.
Hi,
SUJATHA veli ulagil vetri petru irukalam, Kudumba vazkai il thotru vitar. “VEALI PADUTHA MUDIYATHA PASAM” miga kodumaiyanathu, Intha katturai palar vazhaiyil thirupathai year paduthum ena nambuvom….. ennai yum searthu…..
ஒரு எழுத்தாளனின் தனிப்பட்ட வாழ்கையை ,அவனின் குண நலன்களை அவன் எழுத்தோடு சேர்த்து பார்ப்பது சரியானது இல்லை
ஒருவருடைய எழுத்தை வாசிக்கும்போது அங்கே அந்த எழுத்தாளன் மறைந்து அவன் எழுத்தில் நாம் லயித்தால் தான் அவன் உண்மையான எழுத்தாளன்
நல்லா சொன்னிங்க.. இந்த விஷயத்த மிக practicalla சொல்லிருக்கீங்க ..
காந்தியும் (ஜி அப்படின்னு மரியாதை கொடுக்குற அளவுக்கு அவர் ஒன்றும் செய்து விடவில்லை) அப்படித்தானாமே… தேசத்திற்கு தான் தந்தை (அப்படின்னு சொல்லிக்கிறோம் ஆதாரங்கள் எதுவுமில்லை) ஆனால் வீட்டிற்கு அவர் சிறந்த தந்தையாக இருந்ததில்லை என்று கச்தூரிபாயே கவலை பட்டதாக கேள்வி.
என்ன பாஸ் ஒரு வாரம் ஆச்சு, புது பதிவு….?
ரொம்ப வேலையோ?
கௌரிஷங்கர் வேலையும் ஒரு காரணம் அதோடு ரொம்ப எழுத வேண்டாம் என்பதும் ஒரு காரணம். நாளை ஒரு பதிவு வெளியிடுவேன்.
நன்றி
சுஜாதா அவர்கள் சிறந்த படைப்பாளி. மனிதன் அனைவரிடமும் நல்லவன் என்ற
பெயர் எடுக்க முடியாது இது நிர்தசன உண்மை. வாழக அவர் புகழ்