இலங்கை போர்க்குற்றங்கள்

12
இலங்கை போர்க்குற்றங்கள்

ந்தியாவைத்தவிர உலகநாடுகள் எல்லாம் குறிப்பாக ஐரோப்பா நாடுகள் இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். மத்திய காங்கிரஸ் அரசு இதைத் தடுத்து வருகிறது. Image Credit

Channel 4 என்ற செய்தி நிறுவனம் ஏற்கனவே பல போர்க்குற்றக் காணொளிகளை வெளியிட்டு வந்தாலும் தற்போது வெளியிட்டுள்ள காணொளிகள் பல ஹாரர் படங்களை நினைவுப்படுத்துகிறது.

ஈழப்போர்

ஈழப்போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது பொதுமக்கள் பலர் குறிப்பாக பெண்கள் பலர் இலங்கை இராணுவத்தாரால் சீரழிவுக்கு ஆளானார்கள்.

இதை எல்லாம் சிறு சிறு காணொளிகளில் பார்க்கவே மிகக் கொடூரமாக இருக்கிறது இதை நேரில் அனுபவித்தவர்கள் நிலையை யோசித்துப்பார்த்தால் குலை நடுங்குகிறது.

பொதுவாக போர் நடைபெறுகிறது என்றாலே அங்கே இது போல சில சம்பவங்கள் கண்டிப்பாக நடைபெறும் அது இலங்கை என்றில்லை எந்த நாடாக இருந்தாலும் இது போலவே நடந்து கொள்வார்கள்.

எடுத்துக்காட்டாக ஈராக்கி ல் அமெரிக்க இங்கிலாந்து படைகள் செய்ததையும் சமீபத்தில் லிபியாவில் கடாபி படைகள் பெண்களிடம் நடந்து கொண்ட விததத்தையும் கூறலாம்.

குறிப்பாக லிபியாவில் பெண்களை வன்புணர்வு செய்ய கடாபி தனது வீரர்களுக்கு வயாகரா மருந்துகளை வாங்கினார் என்ற குற்றச்சாட்டு தற்போது உலவிக்கொண்டுள்ளது.

இலங்கை இராணுவ வீரர்கள்

மேற்கூறியவற்றை எல்லாம் தூக்கிச்சாப்பிடும் விதமாக ஈழப்போரில் இலங்கை இராணுவ வீரர்கள் விடுதலைப் புலிகள் இல்லாமல் பொதுமக்களையும் சூறையாடி இருக்கிறார்கள்.

அதாவது அங்கே அவர்கள் வைத்தது தான் சட்டம்….. யாரும் எதுவும் கேட்க முடியாது.

இவர்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அதைச் செய்யக்கூடிய அதிகாரத்தை ராஜபக்சே கொடுத்து இருந்தார்.

ஹாஸ்டல் என்ற ஒரு படத்தில் வருவதைப் போலவே இருந்தது இவர்கள் செய்து இருந்த நிகழ்வுகள்.

ஆண்களை கத்தியால் வெட்டி அறுத்து கொஞ்சம் கொஞ்சமாக கொன்று இருகிறார்கள். பெண்களை என்ன செய்து இருப்பார்கள் என்பதைக் கூறினால் கல் மனமும் உடைந்து விடும்.

இப்படிப்பட்ட இரக்கமற்றவர்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று தான் ஐரோப்பா நாடுகள் போராடி வருகின்றன.

காங்கிரஸ் அரசு

நியாயமாக இதை இந்தியா தான் செய்து இருக்க வேண்டும்.

ஆனால், அத்தனை மக்கள் எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சியும் கண்டுகொள்ளாத காங்கிரஸ் அரசு இலங்கைக்கு நவீன ஆயுதங்களை வழங்கி அவர்களை மேலும் ஊக்குவித்தது.

மத்திய அரசு தான் அவ்வாறு செய்து விட்டது என்றால் அப்போது ஆட்சியில் இருந்த கலைஞர் அரசு தந்தி அனுப்பியும் கடிதம் அனுப்பியும் தங்கள் “எதிர்ப்பை” தெரிவித்துக்கொண்டு இருந்தார்கள்.

கலைஞரை குண்டுகட்டாக தூக்கி கைது செய்து கொண்டு போன போது “ஐயோ அம்மா கொல்றாங்களே” என்று கதறியதைக்கேட்டு மனம் உடைந்த தமிழர்கள் அடுத்து நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஒரு இடம் கூட ஜெ க்கு தராமல் 40 இடத்தையும் திமுக விற்கே வாரி வழங்கினார்கள்.

ஆனால், மக்கள் கொடுத்த பலத்தை மக்களுக்காக ஒரு விசயத்திற்குக் கூட மத்திய அரசை மிரட்ட தவறிவிட்டது காரணம் எதிர்ப்பை காட்டினால் காங்கிரஸ் கூட்டணி பாதிக்கப்படும் என்று.

தமிழினத்தலைவர்

இந்தவார்த்தையையே அசிங்கப்படுத்தி விட்டார் கலைஞர். ஈழத்தில் இருந்து எத்தனை கூக்குரல்கள் வேண்டுகோள்கள்… அனைத்திற்கும் அமைதி மட்டுமே பதிலாக இருந்தது.

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல எல்லாம் முடிந்த பிறகு மூன்று மணிநேர உலகதிசய உண்ணாவிரதம் இருந்து போர் நின்று விட்டது என்று எஸ்கேப் ஆன மரியாதைக்குரியவர் இந்த தமிழினத்தலைவர்.

தமிழக மக்கள் கொடுத்த 40 MP க்களைப் பெற்ற பிறகு IT துறையைக் கொடுக்கவில்லை என்றால் கூட்டணியிலிருந்து விலகுவோம் என்று கூறினார்.

மகன் மற்றும் மகளுக்குப் பதவியைப் பெற சக்கர நாற்காலியில் டெல்லி சென்று சண்டையிட்டுப் பெற்று வந்தார்.

சட்டமன்றத் தேர்தலின் போது காங் கூட்டணி தொகுதி உடன்படிக்கையில் பிரச்சனை ஏற்பட்ட போது கூட்டணியிலிருந்து விலகுவதாக பயம் காட்டினார்.

அதன் பிறகு கனிமொழியை கைது செய்த போது மறுபடியும் டெல்லி சென்று பார்த்து வந்தார்.

நெஞ்சுக்கு நீதி

இதைப்படித்துக்கொண்டு இருக்கும் அனைவரையும் கேட்கிறேன்.

உங்கள் மனசாட்சியைத் தொட்டுச்சொல்லுங்கள் இவர் செய்ததில் ஒன்றாவது மக்கள் பிரச்னைக்கு என்று இருந்து இருக்கிறதா?

அனைத்துமே தன்னுடைய கட்சி பதவி மற்றும் தன்னுடைய குடும்பம் மட்டுமே சார்ந்துள்ளது. ஒன்றே ஒன்று கூட மக்கள் பிரச்சனைக்காக இல்லை.

ஈழத் தமிழர்கள் பிரச்சனைக்காக கடிதம் அனுப்புகிறார் கட்சி குடும்ப நலனுக்காக டெல்லிக்கு நேரில் செல்கிறார்.

இப்படி நடந்து கொண்ட இவருக்கு எதற்கு தமிழினத் தலைவர் பட்டம்? யார் இதைக் கொடுத்தார்களோ!

சிறையில் இருக்கும் கனிமொழியைப் பற்றிக்குறிப்பிடும் போது “மலர் சிறையில் வாடுகிறது” என்று கண்கலங்குகிறார்.

என்னால் சத்தியமாக இதை எல்லாம் சகிக்கவே முடியவில்லை.

40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்து இருக்கிறார்கள், பல நூறு மக்கள் கை கால்களை இழந்து இருக்கிறார்கள் இதில் குழந்தைகளும் அடக்கம்.

அப்போதெல்லாம் வராத இரக்கம் கவலை தனது பெண்ணைச் சிறையில் அடைத்து விட்டார்கள் என்றவுடன் பாசம் பொங்கி டெல்லி செல்கிறாரே! அது எப்படி!

எத்தனை மக்கள் காப்பாற்றக்கூறி கதறினார்கள் கல் நெஞ்சமும் கரைந்து விடுமே கலைஞர் நெஞ்சம் அதைவிடக் கடினமானதா!

இது தான் அவருடைய நெஞ்சுக்கு நீதியோ!

பணம் பதவி

தமிழக அரசு சார்பில் இலங்கை சென்று அங்கே எல்லாமே சூப்பர்! ஒரு பிரச்சனையும் இல்லை என்று வாய்க்கூசாம கூறினீர்களே! நீங்கள் எல்லாம் மனிதர்கள் தானா!

பணம் பணம் என்று எல்லோரும் அலையறீங்களே அப்படி இவ்வளவு பணத்தை வைத்து என்ன தான்யா பண்ணுவீங்க?

ஒருநாளைக்கு ஒரு கோடி என்று வாழ்க்கை முழுவதும் நீங்கள் அனைவரும் செலவழித்தால் கூடபணம் தீராதே அப்புறமும் என்னையா பணம் பதவி!

தற்போது பணம் இருக்கிறது என்று சந்தோசமாக இருந்தாலும் பின்னர் நிச்சயம் எங்களுக்கெல்லாம் தெரியாத வகையில் நீங்கள் துன்பப்படத்தான் போகிறீர்கள். ஈழத் தமிழர்களின் சாபம் கண்ணீர் உங்களை நிச்சயம் சும்மா விடாது.

நீங்கள் இல்லை என்றாலும் உங்கள் தலைமுறையை கண்டிப்பாக பாதிக்காமல் விடாது.

சோனியா அரசு

ராஜபக்சே நிச்சயம் ஒரு மனிதப்பிறவியாகவே இருக்க முடியாது.

என்னதான் கோபம் ஆத்திரம் இருந்தாலும் ஒரு வரைமுறையே இல்லாத அளவிற்கு வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு இருப்பது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இடி அமீனுக்கு சற்றும் குறைவில்லாத குற்றங்களை இவரும் செய்துள்ளார் அதுவும் பெண்களுக்கு எதிராக இவரது வீரர்கள் செய்ததை நினைத்தால் ஜீரணிக்கவே முடியவில்லை.

இதற்கு துணை போய் இருப்பது சோனியா அரசு.

என்ன தான் விடுதலைப்புலிகள் ராஜீவை கொன்று விட்டார்கள் என்ற கோபம் இருந்தாலும் அதற்காக இத்தனை ஆயிரம் பொது மக்களைக் கொல்ல துணை புரிய எப்படி மனது வந்தது?

சோனியாவும் ஒரு பெண் தானே அங்கே பாதிக்கபடுவதும் பெண் தானே என்ற உணர்வு கருணை கொஞ்சம் கூடவா இல்லை.

பெண்ணின் மனது பெண்ணிற்குத் தான் புரியும் என்பார்கள். இவரை என்னவென்று கூறுவது?

இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும்

இவர்களுக்கிடையே மாட்டிக்கொண்டு பொதுமக்கள் பட்ட பாடு இருக்கிறதே! கொடுமை.

ஐநா அறிக்கையில் விடுதலைப்புலிகள் பொதுமக்களை கேடயமாக பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை தெளிவாகக் கூறி விட்டார்கள்.

ஐநா அறிக்கை இல்லை என்றாலும் விவரம் அறிந்தவர்கள் நிச்சயம் இதை ஏற்றுக்கொள்வார்கள்.

பொதுமக்கள் இழப்பிற்கு இரு தரப்பினருமே காரணம் என்று உலகம் முழுக்க தெரிந்து விட்டது இதில் சதவீதத்திலும் பாதிக்கப்பட்ட விதத்திலும் மட்டுமே வேறுபாடு.

விடுதலைப்புலிகள் தமிழர்களுக்கு பாதுகாப்பு என்று கூறப்பட்டாலும் அவர்களால் போரில் பாதிக்கப்பட்ட பொது மக்கள் பலர்.

எங்கு சென்றாலும் அடி வாங்கும் நிலையிலே ஈழத் தமிழர்கள் இருந்தனர்.

ஜெ ஆதரவு

தற்போது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஜெ அறிக்கை விட்டு வருகிறார் அதோடு தீவிரமாக நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.

பலரும் வரிசை கட்டி பாராட்டி வருகிறார்கள்.

ஜெ செய்வது நிச்சயம் பாராட்டுக்குரியது தான் ஆனால் இவர் கலைஞர் இடத்தில் இருந்து இருந்தால் கலைஞர் முன்பு செய்ததையே தான் இவரும் செய்து இருப்பார் என்றே கருதுகிறேன்.

ஒருவேளை பின்னர் காங் அதிமுக கூட்டணி வந்தால் தற்போது முழங்கிக்கொண்டு இருப்பது போல இல்லாமல் அமைதியாகி விட ஏராளமான வாய்ப்புகள் உண்டு.

அந்த சமயத்தில் தற்போது ஜெ வை அளவுக்கதிகமாக பாராட்டிக்கொண்டு இருப்பவர்கள் நிலை மிகப்பரிதாபமாக அமையப்போகிறது.

காணொளிகள்

பல காணொளிகள் மிகவும் மோசமாக உள்ளது Channel 4 நிறுவனமே இளகிய மனம் கொண்டவர்களையும் கர்ப்பிணி பெண்களையும் இதைப் பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

குற்றங்களைத் தான் தடுக்க உதவவில்லை குறைந்த பட்சம் இந்த ராஜபக்சேக்கு உலக நீதி மன்றத்தில் தண்டனை வாங்கிக்கொடுத்தாலாவது சிலரின் ஆத்மா சாந்தியடையும்.

உலகிற்கு இந்தக் கொடுமைகளை எடுத்துக்கூறி நியாயம் கேட்க வேண்டியவர்கள் அமைதியாக இருக்கும் நிலையில் இதை உலகிற்கு வெளிப்படுத்தக் கடும் முயற்சி எடுத்த எடுத்துக்கொண்டு இருக்கும் Channel 4 நிறுவனத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

கொசுறு

கடந்த ஏப்ரல் மாதம் சிங்கப்பூர் ரயில் நிலையத்தில் தாய்லாந்தை சேர்ந்த 14 வயதுப்பெண் தவறி ரயிலில் விழுந்து தனது இரு கால்களையும் இழந்து விட்டார்.

இதைப்போல பலர் தவறி விழுவதால் தற்போது தடுப்பு அமைக்கும் பணியை பெரும்பாலான ரயில் நிலையங்களில் முடித்து விட்டார்கள்.

இந்தச் சிறுமிக்கு மருத்துவச் செலவுகள் கிட்டத்தட்ட 50,000 சிங்கப்பூர் டாலர் ஆகி இருக்கிறது. இதற்கு ரயில் நிறுவனமான SMRT இழப்பீட்டுத் தொகையாக 5000 சிங்கப்பூர் டாலர் கொடுத்தது அதை அந்தப் சிறுமியின் தந்தை வாங்க மறுத்து விட்டார்.

இது எந்த விதத்திலும் உதவாது என்று கூறி விட்டார். இரு நாட்களுக்கு முன் சிகிச்சை முடிந்து தனது சொந்த ஊருக்கு கிளம்பிச் சென்ற அவரை விமானநிலையத்தில் கண்ட பொதுமக்கள் அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர். சிலர் பணத்தையும் அவரிடம் கொடுத்தனர்.

தற்போது சிங்கப்பூர் ரெட்கிராஸ் மூலமாக பொதுமக்கள் பலர் நிதி சேர்த்து மொத்தமாக 2,50,000 சிங்கப்பூர் டாலர் கொடுத்து தாய்லாந்து ரெட்கிராஸ் மூலமாக சிகிச்சை, செயற்கைக் கால் மற்றும் மற்ற விசயங்களுக்கு உதவி இருக்கிறார்கள்.

இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ஒரு கோடிக்கு பத்து லட்சம் குறைவு. இவ்வளவு தொகையை மக்கள் கொடுத்ததற்குக் காரணம் அந்த சிறுமியின் தைரியம் மற்றும் இதை நினைத்து மனம் தளராமல் சிரித்த முகத்துடன் எப்போதும் இருந்தது.

இவையே இங்குள்ள மக்களை பெரிதும் கவர்ந்தது, உடன் வயதும் ஒரு முக்கியமான விசயமாகும்.

இதனோடு சிங்கப்பூர் மருத்துவ செலவான 50,000 சிங்கப்பூர் டாலரை ஹாங்காங்கில் உள்ள சிங்கப்பூர் நபர் ஒருவர் தன்னுடைய பெயரை வெளிப்படுத்திக்கொள்ளாமல் இந்தக் கட்டணத்தை ஏற்றுக்கொள்வதாக கூறி இருக்கிறார்.

இரு கால்களும் இல்லை என்பது எவ்வளவு பெரிய சோகம் அதுவும் இவ்வளவு சிறிய வயதில். நேற்று அவருக்கு பிறந்த நாள் ஆகும்.

இந்த இரு சம்பவங்களையும் எதற்க்குக் கூறினேன் என்றால் இலங்கையில் நடந்தது அப்பட்டமான மனித உரிமை மீறல்கள், மனித உணர்வுகளுக்கு கொஞ்சம் கூட மதிப்பு கொடுக்கவில்லை.

இதனால் உலகில் மனிதமே இல்லை என்று கருதி விட வேண்டாம்.

தவறுக்கு சரியான தண்டனை கொடுப்பவர்களும் கஷ்டப்படும் உயிர்களுக்கு தங்கள் பெயரைக்கூட வெளிப்படுத்திக்கொள்ளாமல் மனப்பூர்வமாக தேடி வந்து உதவும் மக்களும் இன்னும் உலகிலிருந்து கொண்டு தான் உள்ளார்கள் என்பதைக் கூறவே!

தவறு செய்பவர்கள் தண்டனையில் இருந்து தப்பவே முடியாது தண்டனை என்பது எப்படி வேண்டும் என்றாலும் எப்போது வேண்டும் என்றாலும் இருக்கலாம்.

ஒருவேளை அவர்கள் அனுபவிக்கும் தண்டனைகளை நம்மால் உணரமுடியாமல் அல்லது தெரியாமல் இருக்கலாம் ஆனால், தண்டனை நிச்சயம்.

தவறு செய்தவர்கள் மகிழ்ச்சியாக இருக்காங்க என்று நினைக்காதீங்க… உங்களுக்கு தெரியாமல் அவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் வேதனைகள் அதிகம்.

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

12 COMMENTS

  1. உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழரே!-சே குவேரா… நம்மால் இலங்கைத் தமிழருக்கு இழைக்கப்படும் கொடுமைகளை நினைத்து வருத்தம் மட்டுமே பட முடிகிறது.. வேறென்ன செய்ய முடியும்?

  2. கனிமொழி அவர் மகள். தவிக்கின்றார். ஈழத்தமிழர்கள் அப்படியா? மேலும் மாநில அரசாங்கத்தால் நெருக்கடி கொடுக்க முடியுமே தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது என்ற பழைய தேய்ந்த வார்த்தைகளைக் கொண்டு சிலம்பம் ஆடுவார். ஆனால் இவருக்கு கிடைத்த (மத்திய அரசாங்கத்தில்) இனி எந்த தலைவர்களுக்கு கிடைக்காது. கெடுத்துக் கொண்டு விட்டார்.

    ஒரு நண்பர் எழுதியது தான் இப்போது நினைவுக்கு வருகின்றது. மொழியை வைத்தே பிழைத்த ஒரே அரசியல்வியாதி இவர் தான்.

    ரொம்ப நல்லா வந்துருக்கு இந்த கட்டுரை.

  3. Hi Giri, I can understand your thoughts and feelings what you said is 200% true.. One day the Judgment day will come nobody can’t escape from tht.. God want to save our brothers and sisters in srilanka. i am working here with many srilankanks i know very well about their mentality, they are always opposite to Tamil peoples, they never like our peoples. Today is very special day in my life but once i read the article in the morning my mind is totally upset, most of the bad things is happening in politics, war, corruption but i could not able to do any thing against that. Why like this?
    என்னால் இதைப்போல எழுதி என் ஆதங்கத்தை வெளிப்படுத்த முடிகிறதே தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. அதிகாரமுள்ளவர்களே அமைதியாக இருக்கும் போது சாதாரண பொது சனத்தால் இதில் என்ன செய்து விட முடியும். I am really cried to read the above lines………………… Thanks for posting….

  4. கிரி தல,
    ரொம்ப ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க
    வர வர அரசியல், நாட்டு நடப்பு நு பட்டய கிளப்புங்க

    பதிவு உலகின் “சின்ன குத்தூசி” கிரி வாழ்க
    – அருண்

  5. ஒருநாளைக்கு ஒரு கோடி என்று வாழ்க்கை முழுவதும் நீங்கள் அனைவரும் செலவழித்தால் கூடபணம் தீராதே அப்புறமும் என்னையா பணம் பதவி! தற்போது பணம் இருக்கிறது என்று சந்தோசமாக இருந்தாலும் பின்னர் நிச்சயம் எங்களுக்கெல்லாம் தெரியாத வகையில் நீங்கள் துன்பப்படத்தான் போகிறீர்கள். ஈழத் தமிழர்களின் சாபம் கண்ணீர் உங்களை நிச்சயம் சும்மா விடாது. நீங்கள் இல்லை என்றாலும் உங்கள் பின்வரும் தலைமுறையை கண்டிப்பாக பாதிக்காமல் விடாது.

    கண்டிப்பாக பாதிக்கும் ….

  6. அந்த வீடியோவை பார்த்த போது மனசு கனத்து போச்சு கிரி. பாவிங்க, மனுஷங்களா அவனுங்க. அதை விட வெறுப்பு வந்தது கருணாநிதி மேலயும், மத்திய அரசு மேலேயும். இவங்க செஞ்சது ராஜபக்சேவுக்கு நிகரான கொடூரம். இப்ப கூட பாருங்க அந்த வீடியோவை பத்தி ஒரு வார்த்தை கூட கருணாநிதி பேசலை. ச்சே! என்ன மனுஷன் அவரு. கனிமொழி என்ன மொழி போராட்டம் செய்தோ, அறப்போராட்டம் செஞ்சா சிறைக்கு போனாங்க. மக்கள் பணத்தை கொள்ளை அடிச்ச குற்றச்சாட்டுல தானே உள்ளே இருக்காங்க. இதுல என்ன மலர் வாடுது, மயிர் வாடுதுன்னு உருக்கம் வேற.

    குற்றுயிரா இருக்கற பெண்களை அரை நிர்வாண கோலத்துல இழுத்துக்கிட்டு போறதும், குண்டு போடறாங்கன்னு பதுங்கு குழியில மரண பயத்தோட மக்கள் அரற்றுவதும்…… மனசு ஆறவே இல்லை கிரி.

  7. நல்ல கட்டுரை கிரி, பார்கவே மனம் வலித்தாலும் அதை அனுபவித்தவர்கள் அவர்கள்.

    “சில நேரங்களில் சில மனிதர்கள்” அருமை, சிறந்த கோர்வை.

  8. கிரி உணர்வு பூர்வமான கட்டுரை.
    கலைஞர் சொன்னால் இந்திய அரசு கேட்கும் என்று யார் சொன்னது ??? சொந்த மகளையே ஜாமீன் எடுக்க வக்கில்லாத நிலை தான் நிதர்சனம்.
    இரண்டு முறை இலங்கை பிரச்சனையை முன்னிட்டு பதவி இழந்தவர் கலைஞர். அதற்காக நியாமான முறையில் அவர் நடந்தார் என்று சொல்ல வில்லை .
    சில விஷயங்களை பொதுவில் பேச முடியாது. இலங்கை பிரச்னையில் நேரடி நடப்புகளை விட திரைமறைவு நடப்புகலே அதிகம். கலைஞர் திரைமறைவு நடவடிக்கைகளில் தன்னால் இயன்ற வரை முயான்றார் என்றே சொல்ல வேண்டும்.

    கொஞ்சம் பொறுமையாக புத்திசாலித்தனமாக சீனா பக்கம் சாயாமல் இந்தியாவை நம்பியதற்கு தமிழர்கள் கொடுக்கும் விலை.

    உண்மையில் குறை சொல்ல வேண்டும் என்றால் காங்கிரசை தான் சொல்லவேண்டும். உங்கள் கட்டுரையில் அதை பற்றி சொல்லவே இல்லை. பழைய காங்கிரஸ் பாசமா ??? இந்தியாவின் வெளியுறவு கொள்கைகள் தான் தமிழன் அழியும் போது வேடிக்கை பார்க்க வைத்தது கலைஞரின் கையாலாகாத தனம் மற்றும் சுயநலம் அல்ல.

    ஜெயலலிதாவின் தற்போதைய இலங்கை தமிழர் பாசம் அங்கு உள்ள இந்திய முதலாளிகளின் லஞ்ச பணம் பெற மட்டுமே . டாடா, ஐ சி ஐ சி ஐ, லேய்லாந்து மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் கொடுக்க போகும் லஞ்சதிர்காக மட்டுமே. செட்டில் மன்ட் ஆனா பிறகு “தமிழக அரசு சார்பில் இலங்கை சென்று அங்கே எல்லாமே சூப்பர்! ஒரு பிரச்சனையும் இல்லை என்று வாய்க்கூசாம ” கூறுவார்கள்

  9. என்னை, உங்களை போன்ற உண்மையான உணர்வு உள்ளவர்கள் இரத்த கண்ணீர் மட்டுமே விட முடிகின்றது …………. இதை வைத்தும் அரசியல் செய்ய துடிக்கும் மக்கள்( மாக்கள் ) இருக்கத்தான் செய்கின்றனர் . என்னுடைய ப்ளோக்ல பல முறை மன குமுறல்களை எழுதி இருக்கேன் . பச்சை பச்சைய வில வருது தயவு செய்து யாரும் அந்த —————– தமிழின தலைவருன்னு உங்க கால தெட்டு கேட்டுகிறேன் சொல்லாதீங்க நா கூசுது , வாய்(வார்த்தை ) தடிக்குது , ஒரு விஷயம் மறந்துடீங்க கிரி இதோட தமிழ் மிடியாக்களையும் சேர்த்து எழுதினா தான் முழுமை பெறும் அவர்கள் (கொன்றதில் அவர்கள் பங்கும் உண்டு ) . எல்லாமே பணம் (பிணம் )தின்னிங்க கிரி . ஜெயாலலிதாவ பற்றி குறிப்பிட்டிருக்கிறதுல ஒரு 40 % நானும் ஒத்து போகின்றேன். ஆனால் கருணாநிதி அளவுக்கு மோசம் ஆகி இருக்காது …….. அதுவும் உண்மை . இப்போது இயற்றி இருக்கும் தீர்மானம் அதை தொடர்ந்து செயல் பாடு பாராட்டுதலுக்குரியது தான் . ஆனால் இது தொடர்ச்சியாக இருக்கவேண்டுமே என்ற எண்ணமும் எழுகின்றது . இப்ப கப்பலு வேற விட்டிருக்கானுங்க இந்த காங்கிரஸ்காரனுங்களா என்ன செஞ்சா தகும் கிரி . முதல்ல சோனியாவ நாட்ட விட்டே துரத்தனும் காரணம் பெருசா ஒண்ணுமில்ல , இந்தியா உறுப்படும் , கொஞ்சம் காங்கிரசும் , நாட்டு பற்று இருக்கனும் முதல்ல தன்னால இன பற்று மக்கள் பற்று எல்லாம் வரும் அவங்க கிட்ட அத எதிர் பாக்கறது தப்புதான் , வெக்கமே இல்லாத காங்கிரஸ் காரனுங்க வேற எவனுக்கும் தகுதியே இல்லையா அந்த கட்சில தருதல கட்சி பா அது . நாடு எங்க இருந்து விளங்கும் . உங்கள் பதிவு ஆதங்கத்தின் வெளிபாடு ஆதங்கம் நல்ல இருந்தது என்று சொல்ல கூடாது அது தவறு . என்ன பண்றது நாம எல்லாம் கொஞ்சம் மனசாட்சியோட பிறந்து தொலைச்சிட்டோம் கிரி அது மட்டுமே என்னால சொல்ல முடிகின்றது …

  10. உலக அளவுல பல நாடுகளும் செய்தி நிறுவனங்களும் இப்பிடி உண்மைய வெளிக்கொணர கடுமையா போராடறாங்க-ன்னு நெனைக்கும்போது ஒரு பக்கம் சந்தோஷமா இருக்கு. ஆனா நம்ம நாட்டுல இப்பிடி நமக்குள்ள மாத்தி மாத்தி புழுங்கிக்க வேண்டியதுதான். 🙁

  11. ரொம்ப ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க… உண்மையில் குறை சொல்ல வேண்டும் என்றால் பிஜேபி தான் சொல்லவேண்டும்… காங்கிரஸ் என்ன பண்ணினாலும் சும்மா இருக்கும் தேசிய எதிர் கச்சி …. நாடு எங்க இருந்து விளங்கும் ?

    அதுபோல தமிழ் சன்னல், மான் ஆட மையல் ஆட போடா தான் டைம் இருக்கிறது,
    40 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்டவர்கள் இறந்து இருக்கிறார்கள் ஒரு நியூஸ் இல்ல… ஜெயா , ராஜ், காப்டன் டிவி கூட ஒண்ணும் பண்ல

    அது போல தமிழ் நாள் ஏடுகள் கனிமொழி ஜெயில் லைப் பத்தி பக்கம் பக்கம் நியூஸ் வருது, ஆனா இந்த கொடுமைகளை பற்றி சொல்லவே இல்லை..

    ஈழத் தமிழர்களின் சாபம் கண்ணீர் நிச்சயம் சும்மா விடாது.

  12. ஈழத் தமிழர்களின் சாபம் கண்ணீர் நிச்சயம் சும்மா விடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!