சாணிக்காயிதம் (2022) | ரத்தக்குளியல்

2
சாணிக்காயிதம்

து போல ரணகளமான படத்தைத் தமிழில் முதன்முறையாகக் காண்கிறேன். இதற்கு முன்னரும் பல வன்முறைப்படங்கள் வந்து இருந்தாலும் சாணிக்காயிதம் உருவாக்கம் ஒரு படி மேலே உள்ளது. Image Credit

சாணிக்காயிதம்

கீர்த்தி சுரேஷ் கணவர் அவரது முதலாளிகளான ஆதிக்க சாதியினருடன் முறைத்துக்கொள்வதால் ஆத்திரம் அடைந்தவர்கள் கீர்த்தி சுரேஷை வன்புணர்வு செய்து, அவரது கணவர் & குழந்தையை எரித்து விடுகிறார்கள்.

பாதிக்கப்பட்ட கீர்த்திசுரேஷ் தனது அண்ணன் செல்வராகவனுடன் இணைந்து அனைவரையும் பழிவாங்குகிறார். இதுவே சாணிக்காயிதம்.

கதை 1989 ம் ஆண்டு நடப்பதாகக் காண்பிக்கப்படுகிறது.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன்

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் எடுத்த இரு படங்கள் ராக்கி & சாணிக்காயிதம்.

இரண்டுமே மிகவும் வன்முறையான படங்கள். தமிழில் சாணிக்காயிதம் அளவுக்குக் கொடூரம் எது என்றால் இவருடைய முதல் படமான ராக்கியே எடுத்துக்காட்டாகக் கூறப்படுகிறது.

OTT வெளியீட்டில் பிரச்சனை என்பதால் இன்னும் ராக்கி வரவில்லை. எனவே, இதற்காக காத்துக்கொண்டுள்ளேன்.

இப்படங்கள் வன்முறை என்பதோடு முடித்துக்கொள்ள முடியாமல் அதையும் தாண்டி ஒரு கொடூரமான, சைக்கோத்தனமான கதையம்சம் காட்சியமைப்புகளைக் கொண்டுள்ளது.

இன்னமும் ராக்கி படத்தைப்பார்க்கவில்லையென்பதால் மேலும் விரிவாக இயக்குநர் பற்றி கூற முடியவில்லை.

ஆனால், எதோ ஒரு விஷயத்தில் / சமூக நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டுள்ளார் / கோபப்பட்டுள்ளார் அதைக் காட்சிகளாக வெளிப்படுத்துகிறார் என்று உணர முடிகிறது.

ரத்தக்குளியல்

கொரியன் படங்களின் தாக்கம் இப்படத்தில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் உள்ளது. குறிப்பாக வெட்டப்படும்போது தெறிக்கும் ரத்தம், அதுவும் இறுதிக்காட்சி ரணகளம்.

வன்முறை படங்கள் என்பது வேறு இது போன்ற படங்கள் வேறு. மையப்புள்ளி ஒன்றாக இருந்தாலும் காட்சிப்படுவதில் வித்யாசமுள்ளது.

சித்ரவதை செய்து கொல்லப்படும் காட்சிகள் தமிழில் இலைமறைவு காயாக எடுக்கப்பட்டு இருந்தாலும், இது போலத் தொடர்ச்சியான வெளிப்படையான காட்சிகளாக வந்ததில்லை.

குறுகிய நேரத்தில் இத்தனை பேரைக் கொலை செய்வதும் இதுவே முதல் முறையாகும்.

ஆனால், இதிலும் பழிவாங்கலை முழுவதையும் வெளிப்படையாகக் காட்டாமல் சிலவற்றை காட்சிப்படுத்தியுள்ளார்கள்.

நடிப்பு

தேர்வு செய்யப்பட்ட அனைத்து நடிகர்களுமே சிறப்பான தேர்வு. அதிலும் ஆதிக்க சாதியினராக வருபவர்கள் நடிப்பு அட்டகாசம்.

Bachelor படத்தில் வக்கீலாக வந்தவர் இதில் ஆதிக்கசாதியினரில் ஒருவராக வந்து படு பயங்கரமான வில்லன் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். செம ராவான வில்லன்.

சிலருக்கு நடிப்பையும் தாண்டி அவர்களது உடலமைப்பு, முகவெட்டு, பேச்சு வில்லத்தனத்துக்கு துணை புரியும். அது போல இயல்பாகவே அமையப்பெற்றவர் இவர்.

செல்வராகவனுக்கு நடிப்பை வெளிக்காட்ட ஓரிரு காட்சிகளைத்தவிர பெரிதாக வாய்ப்பில்லை. இறுதிக்காட்சிகளில் ரொம்ப நன்றாக நடித்து இருந்தார்.

இயக்குநர் செய்த தவறு கீர்த்தி சுரேஷை இக்கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்தது. இக்கதாப்பாத்திரத்துக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத நபர் / முகம் கீர்த்தி சுரேஷ்.

இவருக்குப் பதிலாக வேறு புதுமுகத்தையோ அல்லது ஏற்கனவே உள்ள நடிகைகளில் பொருத்தமானவரையோ தேர்வு செய்து இருக்கலாம்.

இதில் நடிக்கக் கீர்த்தி சுரேஷ் எப்படி ஒத்துக்கொண்டார் என்பதே புரியாத புதிராக வியப்பாக உள்ளது.

உருவாக்கம்

உருவாக்கம் என்ற வகையில் சாணிக்காயிதம் மிகச்சிறப்பாக உள்ளது.

காட்சியமைப்புகள், பின்னணி இசை, ஒளிப்பதிவு, அரங்க அமைப்பு என்று அனைத்துமே சிறப்பாக உள்ளது.

எதற்காக இயக்குநர் சாதியைப் புகுத்தினார் என்பது தான் புரியவில்லை. இதை அதிகாரமுள்ளவர்கள் அதிகாரமற்றவர்கள் என்ற அளவியிலேயே இப்பிரச்சனையைக்கொண்டு சென்று இருக்கலாம்.

சாதியும் துவக்கத்தில் மட்டுமே முன்னிறுத்தப்படுகிறது, அதன் பின்னர் பழிவாங்கலே தொடர்வதால் சாதி என்பது பார்வையாளர்களுக்கு முக்கியமாகப்படாது.

இந்த விஷயத்தில் டாணாக்காரன் படத்தைப்பாராட்டுகிறேன். இது போலச் சாதியைப்புகுத்த ஏகப்பட்ட வாய்ப்பிருந்ததும் இயக்குநர் தவிர்த்து இருந்தார்.

சாணிக்காயிதம் உருவாக்கத்தில் உடன்பாடில்லாதவர்கள் குப்பை படம் என்று எளிதாகக் கடந்து விடலாம் ஆனால், இதுவும் திரைப்படங்களில் ஒரு Genre என்று உணர்ந்தால் இப்படத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

யார் பார்க்கலாம்?

மேற்கூறியவற்றில் உடன்பாடுள்ளவர்கள் மட்டும் பார்க்கலாம்.

குழந்தைகள், இதயம் பலகீனமானவர்கள், கர்பிணிப்பெண்கள், இது போன்ற படங்களை விரும்பாதவர்கள் கண்டிப்பாகப்பார்க்கக் கூடாது, சும்மா பேச்சுக்காகக் கூறவில்லை.

இது அனைவருக்குமான வெகுஜன படமல்ல. அதையும் மீறிப் பார்த்துப் புலம்புவதில் அர்த்தமில்லை.

OTT வெளியீட்டுக்குப் பொருத்தமான படம். Amazon Prime ல் காணலாம்.

Directed by Arun Matheswaran
Produced by Siddharth Ravipati
Starring Keerthy Suresh, Selvaraghavan
Cinematography Yamini Yagnamurthy
Edited by Nagooran Ramachandran
Music by Sam CS
Distributed by Amazon Prime Video
Release date 6 May 2022
Running time 137 minutes
Country India
Language Tamil

தொடர்புடைய திரை விமர்சனங்கள்

கடைசீல பிரியாணி (2021) | காட்டுக்குள் ஒரு துரத்தல்

Kala (2021 மலையாளம்) | நாய்க்காக ஒரு பழிவாங்கல்

Ishq (2019 மலையாளம்) | காதலர்களுக்கு எச்சரிக்கை!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

 1. கிரி, சில மாதங்களுக்கு முன் ட்ரைலர் பார்த்தேன், பிடித்து இருந்ததால் நேற்று மதியம் இந்த படத்தை பார்த்தேன்.. படம் எப்படி என்று கூற தெரியவில்லை.. முதல் 30/40 நிமிடம் படம் எதை நோக்கி செல்லும் என்பதை யூகிக்க முடியவில்லை (புரியவில்லை).. கதையின் போக்கை கணித்த பின் படம் செல்ல செல்ல படம் பிடித்து இருந்தது.. இருந்தாலும் சில காட்சிகள் உறுத்தலாகவே இருந்தது..

  குறிப்பாக கீர்த்தி சுரேஷின் நடிப்பு!!! முடியில.. (ஐஸ்வர்யா ராஜேஷ் பொருத்தமாக இருப்பாரோ என உள்மனது கூறுகிறது..) அறம் படத்தில் நயன்தாராவின் கெட்டப்பே நம்மை கதையுடன் ஒன்ற வைத்து விடும்.. எந்த படத்திலும் கதாபாத்திரங்களை சரியாக தேர்வு செய்து விட்டாலே படம் நன்றாக வந்து விடும்.. மகாநதி படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாகவே வாழ்ந்து இருப்பார்.. சண்டக்கோழி முதல் பாகம் மீரா ஜாஸ்மின் செம்மையையா பண்ணி இருப்பாங்க!!! ஆனால் இரண்டாம் பாகத்தில் கீர்த்தி சுரேஷ், மீரா ஜாஸ்மீனை போலவே நடிக்க முயற்சித்து இருப்பாங்க!!! படத்தை பார்க்கும் போது எப்பானு இருக்கும்..

  கஜினி படத்தின் இடைவேளைக்கு முன் அசினின் நடிப்பு தனிரகம்!!! அந்த பாத்திரத்தில் வேறு நடிகையை பொறுத்தி பார்க்க முடியாது.. அது போல விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் திரிஷாவின் நடிப்பு.. மாஸ்!!! காதல் கோட்டை தேவயானி என நிறைய படங்களை உதாரணமாக சொல்லலாம்..

  பொதுவாக தமிழ் படங்களை பொறுத்தவரை நடிகைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரங்கள் கிடைப்பது அரிது.. ஆனால் இந்த நிலை தற்போது மாறி கொண்டு வருகிறது.. இது ஆரோக்கியமான ஒன்று.. பகிர்வுக்கு நன்றி கிரி..

 2. @யாசின்

  உங்களுக்கு பழிவாங்கும் படங்கள் பிடிக்காது என்று ஒருமுறை கூறினீர்கள். அதனால் நீங்கள் பார்க்க மாட்டீர்கள் என்று நினைத்தேன்.

  நீங்கள் பார்த்தது வியப்பாக உள்ளது.

  “கதாபாத்திரங்களை சரியாக தேர்வு செய்து விட்டாலே படம் நன்றாக வந்து விடும்..”

  உண்மையே. கதாப்பாத்திர தேர்வு மிக முக்கியமானது.

  நீங்கள் குறிப்பிட்ட கதாப்பாத்திர நடிகைகள் எடுத்துக்காட்டு அருமை. மிகப்பொருத்தமானவைகள்.

  மகாநதி மட்டும் முழுதாக நான் பார்க்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here