அக்னிச் சிறகுகள் | அப்துல் கலாம் வரலாறு

18
அக்னிச் சிறகுகள்

ந்தியாவின் பெருமை அப்துல் கலாம் அவர்கள் தனக்குக் கிடைத்த அனுபவங்கள் அனைத்தையும் வாழ்க்கை வரலாறாக சக ஊழியர் அருண் திவாரி உதவியுடன் “அக்னிச் சிறகுகள்” என்ற புத்தகமாக எழுதி உள்ளார்.

இளமைக் காலம் 

ராமேஸ்வரத்தில் ஜெயனுல்லாபுதீன், ஆஷியம்மா தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் கலாம்.

நடுத்தர வசதிக் குடும்பத்தில் இருந்த கலாமுக்கு படிக்க பணம் சிரமமாகவே இருந்து இருக்கிறது.

மேற்படிப்பு படிக்க இவரின் சகோதரி தன் நகையை வைத்துக் கொடுத்த பணத்தில் தான் படிப்பையே தொடர்ந்து இருக்கிறார்.

இந்து முஸ்லிம் 

கலாமும் சரி அவரது அப்பாவும் சரி மற்ற சமுதாயத்தினருடன் ரொம்ப இணக்கமாக இருந்து இருக்கிறார்கள்.

ராமேஸ்வரத்தில் இந்து முஸ்லிம் சமுதாயத்தினர் ஒற்றுமையாக இருந்ததைப் போல இவர் மேற்படிப்பு படிக்கப் போன இடத்தில் இல்லை என்பதைக் குறிப்பிடுகிறார்.

கலாமின் தந்தையும் ராமேஸ்வரம் கோவிலின் தலைமை குருக்கள் பஷி லட்சுமண சாஸ்திரியும் நெருங்கிய நண்பர்கள்.

இவர்களின் மகன்கள் கலாமும் சாஸ்த்ரி மகனும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள்.

சகோதரி கொடுத்த நகை

கலாம் வளர்ச்சியில் அவருடைய ஒன்றுவிட்ட சகோதரர் சம்சுதீன் மற்றும் அவரது சகோதரியின் கணவர் ஜலாலுதீனும் முக்கியப் பங்கு ஆற்றி இருக்கிறார்கள்.

தனது வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியத் தருணத்திலும் இவர்களை நினைவு கூறுகிறார்.

இவர் படிப்பிற்கு இவரது சகோதரி தன் நகையை வைத்து கொடுத்த பணத்தில் படித்து பின் அரசு உதவித் தொகை மூலம் தொடர்ந்து இருக்கிறார்.

தான் வேலைக்கு சேர்ந்த பிறகு நகையை மீட்டுக்கொடுத்து விட வேண்டும் என்று கூறினார் ஆனால், மீட்டாரா என்பது பற்றி குறிப்பிடவில்லை.

விமானப் படை / பாதுகாப்பு அமைச்சகத்தின் தொழில்நுட்ப பிரிவு

படிப்பு முடிந்ததும் இரு இடத்தில் கலாமிற்கு நேர்முகத் தேர்வு வாய்ப்புக் கிடைக்கிறது.

ஒன்று விமானப் படை இன்னொன்று பாதுகாப்பு அமைச்சகத்தின் தொழில்நுட்ப பிரிவு. இதற்காக டெல்லி பயணம் செய்கிறார்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் நேர்முகத்தேர்வில் அவரின் திறமைக்கு சவால் விடும் வகையில் கேள்விகள் இல்லை ஆனாலும், நேர்முகத்தேர்வை சிறப்பாகச் செய்கிறார்.

இதை முடித்து டேராடூன் விமானப்படை நேர்முகத் தேர்வு செல்லும் கலாம் களைப்பு, பதட்டத்தால் தேர்வாக முடியவில்லை.

ஏமாற்றத்தால் உடைந்து போன கலாம் இனி என்ன செய்யப்போகிறோம் என்ற குழப்பத்தில் ஆழ்ந்து விடுகிறார்.

எம்மதமும் சம்மதம்

கங்கையில் குளித்து மன நிம்மதி தேடி ரிஷிகேஷ் செல்லும் கலாம், அங்கே சந்திக்கும் ஒரு ரிஷியின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனையால் மனத் தெளிவு பெறுகிறார்.

தான் அங்கே உள்ளே நுழைந்ததுமே உடலில் ஒரு அதிர்வு ஏற்பட்டதாகக் கூறுகிறார்.

இதன் பிறகு தனக்கு கிடைத்த வழியான பாதுகாப்பு அமைச்சகத்தில் சேர்கிறார்.

கலாம் முஸ்லிமாக இருந்தாலும் பெரும்பாலான இடங்களில் இந்து மதக் குறிப்புகளையும் மேற்கோள் காட்டியிருக்கிறார்.

தன்னை எந்த மதத்தின் நபராகவும் முன்னிறுத்தாமல் புத்தகம் முழுக்க சம்பவங்களை கூறி வருவது உண்மையில் மிகப் பெரிய விஷயம்.

சம்பளம் 250 ரூபாய்

கலாமுக்கு விமானம் ஓட்ட முடியாமல் போய் விட்டதே என்ற ஏமாற்றம் இருந்தும், இங்கு விமானத்தை உருவாக்கும் பணி கிடைப்பதால் ஆறுதலடைகிறார்.

இவருடைய சம்பளம் 250 ரூபாய்.

கலாம் பின்னாளில் குடியரசுத் தலைவர் ஆனதும் போர் ஜெட் விமானத்தில் பயணித்தார்… நினைவு இருக்கிறதா?

இவ்வாறு பயணித்த முதல் இந்தியக் குடியரசுத் தலைவரும் இவரே!

தன் சிறு வயது விமான ஆசையை இதன் மூலம் ஓரளவு நிறைவேற்றிக் கொள்ள முடிந்தது என்று நினைக்கிறேன். இது புத்தகத்தில் இருந்தது அல்ல… நான் கூறுவது 🙂 .

வெற்றி பெற வேண்டும் என்ற பதட்டம் இல்லாமல் இருப்பது தான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி” என்பதை நினைவுபடுத்திக் கொண்டதாக கூறுகிறார்.

படிக்கும் நீங்களும் இந்த வாசகத்தை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். அருமை!

டாக்டர் விக்ரம் சாராபாய்

டாக்டர் விக்ரம் சாராபாய் (இவரை உதாரணமாக பல இடங்களில் குறிப்பிட்டு இருக்கிறார்), பேராசிரியர் எம் ஜி கே மேனன், அணு சக்தி கமிசன் துணைத் செயலாளர் சரஃப் ஆகிய மூவரும் தான் நேர்காணல் செய்து இருக்கிறார்கள்.

அக்னிச் சிறகுகள் புத்தகத்தில் படிக்க மிகவும் கடினமான பகுதி இவர் விஞ்ஞானி ஆனதுக்குப் பிறகு தான்.

இவர் கூறும் பெரும்பாலான பகுதிகள் எனக்கு பின்தொடர்வது சிரமமாக இருந்தது. பல விஷயங்கள் புரியவில்லை.

சில பக்கங்கள் இந்தப் பகுதியில் நான் படிக்கவே இல்லை, தூக்கம் வந்து விட்டது.

ஆனால், இந்தத் துறையில் உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த பகுதியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

முதல் சுதேசி செயற்கைக்கோள் எஸ் எல் வி

“எஸ் எல் வி” செயற்கைக்கோள் தயாரிப்பில் அனைவரும் கடுமையாக பணி புரிகிறார்கள்.

செயற்கைக்கோள் தயாராகி (10 ஆகஸ்ட் 1979) மேலெழுந்து நான்காவது கட்டத்தில் செல்லும் போது தொழில்நுட்பக் கோளாறால் கடலில் விழுந்து விடுகிறது.

இதனால், விரக்தியின் எல்லைக்கே சென்ற கலாம், தன் கால்கள் மரத்து விட்டன, உடல் பலம் முழுமையும் இழந்து விட்டதாகக் கூறுகிறார்.

பின் மறுபடியும் போராட்டம், மன உளைச்சல்கள், மற்றவர்களின் பரிகாசம், நெருக்கடி தொடர்கிறது.

பல முயற்சிகளுக்குப் பிறகு 1980 ஜூலை 18 இந்தியாவின் முதல் சுதேசி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்கிறது.

இருபது வருடப் போராட்டம் முடிவிற்கு வந்தது. இதில் கலாம் அடையும் சந்தோசம், நாமே அடைவது போல இருக்கிறது.

நீண்ட பாரா

அக்னிச் சிறகுகள் புத்தகத்தில் ஒரு பகுதியைப் பற்றி கூறிக்கொண்டு இருக்கும் போதே தொடர்ந்து அடுத்த விசயம் பற்றிய பாரா துவங்கி விடுகிறது.

இதில் சில வரிகளைப் படித்த பிறகே நாம் அடுத்த விசயம் பற்றி படித்துக்கொண்டு இருக்கிறோம் என்று புரிகிறது.

எழுத்து, சந்திப் பிழை இல்லாமல் இருப்பது நன்று. ஒரு சில இடங்களில் நீண்ட பாராவாக இருக்கிறது. இதை பிரித்துப் இருந்தால், படிக்க எளிதாக இருந்து இருக்கும்.

சக ஊழியர்களின் வெறுப்பு 

இதன் பிறகு 1981 ல் ஒரு செயற்கைக்கோள் ஏவுகிறார்கள்.

இதில் கலாமின் பங்கு பாதி இருந்தாலும் ஊடகங்கள் இவரையே முன்னிறுத்தியதால் இதில் சம்பந்தப்பட்ட மற்ற சக ஊழியர்களின் வெறுப்பிற்கு ஆளாகிறார்.

அவருக்குக் கொடுக்கப்பட்ட “பத்மபூஷன்” விருதிலும் பலருக்கு அதிருப்தி. கலாமிற்கு அவசியமில்லாமல் முக்கியத்துவம் கொடுப்பதாக கூறுகிறார்கள்.

இதனால் கலாம் மன உளைச்சல் அடைகிறார்.

இது போன்ற “அரசியல்” பிரச்சனைகள் இல்லாமல் இருந்து இருந்தால், கலாம் இன்னும் விரைவாகவும், சிறப்பாகவும், மேலும் பல புதிய கண்டுபிடிப்புகளையும் செய்து இருப்பார் என்று முழுமையாக நம்புகிறேன்.

DRDO

இந்த நிலையில் DRDO [Defence Research and Development Organisation] என்ற அமைப்பில் சேரக் கூறி கலாமுக்கு அழைப்பு வருகிறது.

இஸ்ரோவில் [ISRO – Indian Space Research Organisation] நடந்த “அரசியல்” சம்பவங்களால் என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்து பின் இவர்கள் அழைப்பை ஏற்று DRDO செல்வதாக முடிவு செய்கிறார்.

இஸ்ரோவில் கலாமை விடுவிக்க தாமதம் ஆனாலும், பின்னர் இங்கு இணைந்து விடுகிறார்.

கலாம் இஸ்ரோவில் மட்டுமே பணி புரிந்து இருந்தார், செயற்கைக்கோள் உருவாக்கத்தில் மட்டுமே இவரின் பங்கு இருந்ததாகக் கருதி இருந்தேன்.

ஏவுகணை தயாரிப்பில் இவர் இருந்தது பற்றி இதில் படித்த பிறகே தெரிந்து கொண்டேன்.

DRDO வில் இணைந்த பிறகு இங்கு உள்ளவர்களை புரிந்து கொண்டு அவர்களின் பிரச்சனைகளை அறிந்து கொள்கிறார். இதற்கு சில காலம் எடுக்கிறது.

அடுத்த பணியாக “பிருத்வி” ஏவுகணை தயாரிப்பது ஆரம்பமாகிறது.

இளைஞர்களின் முக்கியத்துவம்

இதற்கு இளைஞர்கள் தேவை என்பதை உணர்ந்து அவர்களை இதில் பங்கு பெற வைத்து அனுபவம் பெற்றவர்களின் தலைமையில் துடிப்பான இளமையும் இணைந்து உற்சாகமாகப் பணியாற்றுகிறார்கள்.

இங்கும் மூத்த அதிகாரிகளிடம் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டி வருகிறது.

பிருத்வியின் வெற்றி

பிருத்வியின் வெற்றியில் உலக நாடுகள் அதிர்ந்து விடுகின்றன.

சுதேசி ஏவுகணை பிருத்வியின் வெற்றி பல நாடுகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்துகின்றன. இத்தகவல்கள் இந்தியனாக மிகவும் பெருமை அளிக்கிறது.

இடையில் பிரதமர் இந்திராகாந்தி ஆய்வுக் கூடத்திற்கு வந்தது, அவர் கொலையான சம்பவத்தில் ஊரடங்கு நிலை பற்றி எல்லாம் குறிப்பிட்டு இருக்கிறார்.

ராஜீவ் காந்தியின் ஊக்கம்

இவருக்குப் பின் வந்த ராஜீவ் காந்தியும் தங்களுக்கு பெருமளவில் ஊக்கம் கொடுத்ததாகவும் பல விசயங்களில் தமக்கு உறுதுணையாக இருந்தது பற்றியும் கூறுகிறார்.

எஸ் எல் வி 3 வெற்றியால் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை பார்க்கச் செல்ல வேண்டும் என்று இவரது உயர் அதிகாரி (தவான்) கூறியதும் தான் கவனிக்கிறார், தான் சுமாரான உடையும் செருப்பும் அணிந்து இருப்பதை 🙂 .

பிரதமரை பார்க்கச் செல்லும் போது இப்படியே எப்படி செல்வது என்ற தன் சங்கடத்தை வெளிப்படுத்துகிறார்.

இதற்கு அவரது உயரதிகாரி நீங்கள் “வெற்றி” என்னும் அழகிய உடையை அணிந்து இருக்கிறார்கள் அதனால் கவலை வேண்டாம் என்று கூறுகிறார்.

இதன் பிறகு சந்திப்பு பற்றி விவரிக்கிறார்.

அக்னி தயாரிப்பும் பிரம்மாண்டமும் 

இதன் பிறகு பெரிய பணியான “அக்னி” ஏவுகணை தயாரிப்பில் இவரது குழு ஈடுபடுகிறது. 500 விஞ்ஞானிகள் இதில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

இதற்கான திட்டமிடல் படிக்கும் போது ஷங்கர் படம் போல பிரம்மாண்டமாக உள்ளது.

படிக்கும் போதே நமக்கு எப்படி இதெல்லாம் செய்து இருப்பார்கள்! அனைத்தையும் ஒருங்கிணைத்து இருப்பார்கள்!! என்ற வியப்பு வராமல் போகாது.

கே ஆர் நாராயணன்

பாதுகாப்பு அமைச்சர் கே ஆர் நாராயணன் கலாமுக்கு மிகவும் ஆதரவாகவும் அவரது செயல்களுக்கு உற்சாகம் கொடுப்பவராகவும் இருந்து இருக்கிறார்.

குறிப்பாக நாராயணன் மிகவும் தொலைநோக்குப் பார்வை கொண்டவர் என்பது கலாம் கூறுவதில் இருந்து நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

பணியைக் காதலித்த கலாம்

கலாம் தனது பணியை மிகவும் காதலித்து இருக்கிறார்.

குடும்பம் என்று வந்தால் தனிப்பட்ட பணிகளின் காரணமாக, பணியில் முழுமையாக / நேர்மையாக நடந்து கொள்ள முடியாது போகும் என்று கருதி இருக்கிறார்.

இதன் காரணமாகவே திருமணம் செய்து கொள்ளவில்லை போல இருக்கிறது.

பணியை காதலித்து உங்கள் முழு உழைப்பையும் செலவிட்டு இருந்தால் மட்டுமே தோல்வி அடையும் போது அதில் ஏற்படும் வலியை உண்மையாக உணர முடியும்.

இது கலாமுக்கு 100% பொருந்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

உண்மையாக உழைப்பவர்களின் நேர்மையை யாராவது சந்தேகப்பட்டால் அவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது.

கலாம் ஒவ்வொரு முறை வெற்றி பெறும் போதும் தன் குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகள் உடனில்லையே என்ற வருத்தத்தை பதிவு செய்து இருக்கிறார்.

இது புத்தகம் முழுக்க சீராக வருகிறது.

வெற்றி பெற்றாலும் பகிர்ந்து கொள்ள அவருடன் எவருமில்லாத இல்லாத சோகம் நமக்கும் வருத்தத்தை அளிக்கிறது.

இடையில் சகோதரி கணவர், தாய், தந்தை, உயர் அதிகாரி இழப்புகள் கலாமை மிகுந்த துயரத்தில் ஆழ்த்துகின்றன.

ஊடகங்களின் கேலி

“அக்னி” ஏவுகணை 1989 ஏப்ரல் 20 ல் சோதனை செய்து பார்க்க நாள் குறிக்கப்படுகிறது.

இதற்காக சோதனைப் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றுகிறார்கள். இதற்கு ஊடகங்கள் சர்ச்சையை கிளப்புகின்றன.

நாடே எதிர்பார்க்கும் 20 ம் தேதி! ஏவுகணை கிளம்ப சில நிமிடங்கள் இருக்க, படபடப்புடன் அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்கும் போது தொழில்நுட்ப பிரச்சனையால் திட்டம் ரத்து செய்யப்படுகிறது.

இதை ஊடகங்கள் கிண்டல் செய்கின்றன.

இதைப் படிக்கும் போது மற்றும் அவர்கள் வரைந்த கேலி சித்திரங்களை பார்க்கும் போது மிகவும் மன வருத்தமாக உள்ளது.

இது குறித்த நிழல் படங்களை இணைத்து உள்ளார்கள்.

என் சிறு வயதில், “இது எங்க கிளம்பப் போகிறது!” கிண்டல் அடித்து உள்ளேன்.

தற்போது இதில் உள்ள பிரச்சனைகளையும் அவர்களின் உழைப்பையும் மன அழுத்தங்களையும் போராட்டங்களையும் படித்த பிறகு வெட்கமாக உள்ளது.

எப்படி கேவலமாக நடந்து கொண்டுள்ளோம் என்று அசிங்கமாக உள்ளது. அறியாமல் செய்த தவறுக்கு மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தத் தோல்வியால் அனைவரும் துவண்டு விடுகிறார்கள். அதற்கு கலாம்

எஸ் எல் வி முயற்சியில் நாங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய செயற்கைக்கோள் கடலில் விழுந்து விட்டது ஆனால், உங்களுக்கு அது போல நடக்காமல் உங்கள் கண் முன்னே முழுதாக இருக்கிறது. 

எனவே துவண்டு விடாமல் திரும்பக் கடுமையாக முயற்சியுங்கள்

என்று தன் அனுபவத்தை வெளிப்படுத்துகிறார்.

கடுமையான போராட்டம்

 

திரும்ப அனைவரும் தூக்கம் இல்லாமல் கடுமையாக உழைக்கிறார்கள். யாருக்கும் இதைத் தவிர வேறு எந்தச் சிந்தனையும் இல்லை.

திரும்ப 1989 மே 1 நாள் (பத்து நாட்களில்) குறிக்கப்படுகிறது. கிளம்ப 10 நொடி இருக்கும் போது திரும்பப் பிரச்சனை. திட்டம் ரத்து செய்யப்படுகிறது.

வெளிநாடுகளில் இது சகஜம் ஆனால், ஆர்வமாக உள்ள தேசம் எங்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்ளவில்லை” என்று வருத்தமாகக் குறிப்பிடுகிறார்.

இந்தச் சோதனையின் போது மக்களை வெளியேற்றுவதால், அதற்கு மக்களுக்கு இழப்பீடு போல பணம் கொடுத்து இருக்கிறார்கள்.

இதை ஊடகங்கள் “இப்படியே அடிக்கடி செய்தால் ஒரு புதிய வீடு கட்டி விடலாம்” என்பதைப் போல கேலி சித்திரம் வரைந்து இருக்கிறார்கள்.

இது அல்லாமல் பலரும் வாசகர்களுக்கு தீனி போட கிண்டல் கேலி என்று இவர்களை மிகவும் புண்படுத்தி இருக்கிறார்கள்.

பிறகு பல கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு தவறுகள் களையப்பட்டு அடுத்த முயற்சியாக 1989 மே 22 ல் அக்னி கிளம்ப (20 நாட்களில்) திட்டமிடப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சர் கே சி பந்த் “கலாம்! நாளை அக்னி வெற்றியை கொண்டாட நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?” என்று கேட்க..

மரக்கன்றுகள்

அதற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல், பின் யோசித்து RCI ல் [Research Centre Imarat] நட ஒரு லட்சம் மரக்கன்றுகள் வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்.

கலாம் அப்போது இருந்தே இயற்கையில் ஆர்வம் கொண்டு இருந்ததை அறிந்து கொள்ளலாம்.

இது போல ஆராய்ச்சி நிலையம் அமைக்கும் இடத்தில் பறவைகளுக்கு தொந்தரவு இல்லாமல் அமைக்கும் படியும் ஒரு இடத்தில் கூறி இருக்கிறார்.

பாய்ந்த அக்னி

அன்று தட்ப வெட்ப நிலை சரியில்லை, புயல் அபாயம் என்று வானிலை பயமுறுத்தியது ஆனால், இந்த முறை வெற்றிகரமாக “அக்னி” பாய்ந்து விடுகிறது.

எங்களுடைய ஐந்து வார மன உளைச்சலை 600 நொடியில் சடாரென்று துடைத்து விட்டதாக குறிப்பிடுகிறார்.

அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, குடியரசுத் தலைவர் ஆர் வெங்கட்ராமன் ஆகியோர் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கிறார்கள்.

நம்பாத உலகம்

மேற்கு ஜெர்மனியின் உதவியுடன் இந்த ஏவுகணையை தயாரித்து இருப்பதாக மற்ற நாடுகள் குற்றம் சாட்டுகின்றன.

இது சுதேசி ஏவுகணை என்பதை யாரும் நம்பத் தயாராக இல்லை.

கலாம் வேலப்ஸ் தீவில் நான்கு மாதம் இருந்த போது இந்த தொழில்நுட்பத் தகவல்களைத் திருடி விட்டதாக அமெரிக்க செனட் சபை, மேற்கத்திய ஊடகங்கள் கூறுகின்றன.

இதற்கு கலாம் “நான் அங்கு சென்ற போது இந்த தொழில்நுட்பமே வரவில்லை” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

கலாம் சோதனையில் ஈடுபட்டு இருந்த போது திரைப்படங்களில் வருவது போல உடன் பணி புரிவரின் வியர்வைத் துளி அமிலத்தில் விழுந்ததால், வெடி விபத்து ஏற்பட்டு உயிர் தப்பியதைக் கூறுகிறார்.

இதில் தீக்காயம் ஏற்பட்டவருக்கு மருத்துவமனையில் சேர்க்க படுக்கை வசதி கூட இல்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

பொக்ரான் பற்றிய தகவல்கள் இல்லை

இதன் பிறகு பொது வாழ்க்கைக்கு வருவது பற்றி கூறுகிறார்.

“பொக்ரான் அணுகுண்டு சோதனை” பற்றி அக்னிச் சிறகுகள் புத்தகத்தில் இருக்கும் என்று எதிர்பார்த்தேன் அது பற்றி எதுவுமில்லாதது ஏமாற்றம்.

காரணம், உலக போலிஸ் அமெரிக்கா கண்ணில் மண்ணைத் தூவி அவர்கள் செயற்கைக்கோள் கண்காணிக்கும் நேரத்தை கணித்து யாருக்குமே தெரியாமல் இந்த சோதனை நடத்தப்பட்டது.

பின் இதை பிரதமர் “வாஜ்பாய்” அறிவித்த பிறகு தான் அனைவருக்கும் தெரிந்து உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது.

இந்தியனாக ஒவ்வொருவரும் பெருமைப்பட்ட தருணம் அவை.

அணு ஆயுத சோதனைக்காக அமெரிக்கா, இந்தியாவிற்கு பொருளாதாரத் தடை கூட விதித்தது.

அக்னிச் சிறகுகள் புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு 1999, பொக்ரான் அணுகுண்டு சோதனை நடந்த வருடம் 1998.

அதோடு 1991 ம் ஆண்டு தன்னுடைய 60 வது வயதில் அவரது பணிக்காலம் முடிந்து மூன்று வருடம் நீட்டிப்பு பெற்றது ஆக, இவருடைய அதிகாரப்பூர்வ அரசுப் பணிக்காலம் 1994 உடன் முடிந்து விட்டது.

எனவே, இது குறித்து குறிப்பிடப்படாமல் போய் இருக்கலாம் என்று நினைக்கிறேன். பொக்ரான் சாதனையை இன்று வரை பெருமையாக நினைக்கிறேன்.

அப்துல் கலாம் ஐயா! தங்களால் இந்தியா பெருமையடைந்தது, தமிழர்கள் பெருமையடைந்தோம்.

தங்களின் உழைப்பை, நாட்டிற்கு தாங்கள் ஆற்றிய நற்பணியை இந்த உலகம் உள்ளவரை நினைவு கூறும்.

அக்னிச் சிறகுகள் விலை 120 ரூபாய். அனைத்து புத்தகக் கடைகளிலும் கிடைக்கும்.

1999 ல் முதல் பதிப்பு வெளியாகி “2013 மார்ச்” வரை 49 பதிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் புத்தகத்தை படிக்கக் கொடுத்த நண்பன் பாபுவிற்கு நன்றி.

அக்னிச் சிறகுகள் வாங்க –> Link

18 COMMENTS

  1. கிரி.. மிகவும் நேர்த்தியான ஒரு பதிவாக நான் கருதுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகம், காமிக்ஸ், செய்திதாள்கள் வாசிக்கும் பழக்கம் இருந்தாலும் என்னுடைய சொந்த உழைப்பில் 2005 ல் நான் வாங்கிய முதல் புத்தகம் அக்னிச் சிறகுகள் தான்.

    இந்த புத்தகம் அப்துல் கலாம் அவர்களின் சொந்த வாழ்கையை மட்டும், குறிப்பிடாமல் சுதந்திரத்திற்கு பின் செயற்கைகோள் தொழில் நுட்பத்தில் இந்திய தேசத்தின் நிலை எவ்வாறு இருந்தது? அவைகள் சந்தித்த பிரச்சனைகள் என்ன? வெற்றி & தோல்விகள் என்ன? என்பதையும் தெளிவாக கூறியிருப்பது, நம் தேசத்தின் கடந்த கால வரலாற்றை நாம் அறிய முடிகிறது.

    அப்துல் கலாமுக்கு நான் என்னை என்றும் ஒரு சிறு துளியாகவே கருதுகிறேன். பகிர்தமைக்கு மகிழ்ச்சி கிரி.

  2. தவறுக்கு மன்னிக்கவும்: அப்துல் கலாமுக்கு முன் நான் என்னை என்றும் ஒரு சிறு துளியாகவே கருதுகிறேன். பகிர்தமைக்கு மகிழ்ச்சி கிரி.

  3. ஒரு விஞ்ஞானியாக வாழ்க்கை முடித்து, ஜனாதிபதியாக மாறி ஓய்வு பெற்ற பின்பு பேசாமல் கல்லூரியில் பேசிக் கொண்டு இருந்து இருக்கலாம். கூடங்குளம் விவகாரத்தில் இவர் தலையிடாமல் இருந்து இருந்தால் இன்னமும் இவர் பெயர் பெரிதாக பேசப்பட்டு இருக்கும்.

  4. நான் கல்லூரியில் படித்துகொண்டிருந்த போது வாங்கிய நூல் இது.

    பலமுறை வாசித்திருந்தாலும், இத்தனை நாள்களுக்கு அப்புறமும் இந்த நூலை பற்றி படிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

  5. மிகவும் சந்தோசம் கிரி, நீங்கள் இந்த புத்தகத்தை பற்றி எழுதியதற்கு. எப்படி இவ்வளவு காலம் இதை படிக்காமல் விட்டீர்கள் என்று தெரியவில்லை.
    நீங்கள் கூறியது போல் சில பகுதிகள் படிப்பதற்கு சிரமமாக இருந்தாலும், இந்தியர்கள் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம். நாம் பெருமை பட கூடிய பல விஷயங்கள் இந்த புத்தகத்தில் உள்ளது.

  6. காந்திஜி பற்றி பேசுபவர்களில் பெரும்பாலோர் அங்கே இங்கே உதிரி தகவல் படித்தவர்கள். அப்துல் கலாம் பற்றி பேசுபவர்களுக்கும் இது பொருந்தும்.

    இந்த நூல் குறித்து விரிவாக எழுதியமைக்கு நன்றி.

    // 1980 ஜூலை 18 இந்தியாவின் முதல் சுதேசி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்கிறது.

    நம் முதல் செயற்கைக்கோள் 1975 வருடம் பறந்தது.
    refer
    en.wikipedia.org/wiki/List_of_Indian_satellites

    “எஸ் எல் வி” செயற்கைக்கோள் அல்ல, விண்கலம்.
    இது பறந்தது 1980
    refer
    http://en.wikipedia.org/wiki/Satellite_Launch_Vehicle

  7. Hi Giri,

    Again one of the best blog of yours. In my whole life that’s the only book I red entirely expect some magazines.

    The Rishi you mention he is Swamy Sivanandha from Tamil nadu.
    Cheers

  8. எப்பவோ வந்து என்னை மாதிரி தற்குறி கூட படிச்ச புத்தகத்துக்கு, நேத்து ரிலீஸ் ஆன மாதிரி கதைச்சுருக்கம் எழுதுறீங்களே சார்?!

  9. after successful launch of SLV-3, He met Shri Indira Gandhi. If my memory is correct, Shrimati Indira was no more while Prithivi Launch.

  10. அருமையான கட்டுரை கிரி. உரைநடை விறுவிறுப்பு, புத்தகத்தை அப்படியே சுருக்கி் (abstract மாதிரி) கொடுத்து இருக்கிரீர்கள். நன்றி

  11. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @யாசின் “இந்த புத்தகம் அப்துல் கலாம் அவர்களின் சொந்த வாழ்கையை மட்டும், குறிப்பிடாமல் சுதந்திரத்திற்கு பின் செயற்கைகோள் தொழில் நுட்பத்தில் இந்திய தேசத்தின் நிலை எவ்வாறு இருந்தது? அவைகள் சந்தித்த பிரச்சனைகள் என்ன? வெற்றி & தோல்விகள் என்ன? என்பதையும் தெளிவாக கூறியிருப்பது, நம் தேசத்தின் கடந்த கால வரலாற்றை நாம் அறிய முடிகிறது.”

    சரியா சொன்னீங்க. நியாயமாக நானே இதைக் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

    @ஜோதிஜி கலாம் கூறியது சரியோ தவறோ அவர் நினைப்பதைக் கூற வேண்டும். எல்லோருக்கும் நல்லவனாக இருக்க நினைப்பவர்கள் தான் மாற்றுக் கருத்து இருந்தும் எதுவும் கூறாமல் அமைதியாக இருப்பார்கள்.

    இவர் கூறியது சிலருக்கு வருத்தம் சிலருக்கு சந்தோசம். எதுவுமே கூறாமல் இருந்தால் எந்த நிலையும் யாருக்கும் இல்லை. இவர் மத்திய அரசு கட்டாயத்தால் கூறி இருந்தால் அது தவறு இவர் சொந்தக் கருத்தாக கூறி இருந்தால் கருத்து தவறாக இருப்பதாக பலர் நினைத்தாலும் அவர் எண்ணத்தை தைரியமாக வெளிப்படுத்தினார் என்ற அளவில் எனக்குப் பிடித்தது.

    @விஜய் கல்லூரி காலத்தில் பலருக்கு இந்தப் புத்தகத்தின் மீது ஆர்வம் அதிகமாக இருந்து இருக்கும் போல 🙂

    @கௌரிஷங்கர் & abarajithan

    எனக்கு புத்தகங்கள் படிப்பதில் முன்பு ஆர்வம் இல்லை. தற்போது தான் புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று நினைத்து படித்துக்கொண்டு இருக்கிறேன். எப்போது படித்தால் என்ன? இது போன்ற புத்தகத்தின் மதிப்பு என்றும் குறையப் போவதில்லை.

    @சங்கர் வெங்கட்

    “காந்திஜி பற்றி பேசுபவர்களில் பெரும்பாலோர் அங்கே இங்கே உதிரி தகவல் படித்தவர்கள். அப்துல் கலாம் பற்றி பேசுபவர்களுக்கும் இது பொருந்தும்”

    புரியவில்லை.

    “நம் முதல் செயற்கைக்கோள் 1975 வருடம் பறந்தது.”

    நீங்கள் கூறுவது சரி தான் ஆனால் இது முழுமையான சுதேசி செயற்கைக் கோள் என்று கூற முடியாது. அப்போதைய சோவியத் யூனியனில் இருந்து ஏவப்பட்டது, இந்தியாவில் இருந்து அல்ல. நானும் விக்கிபீடியா பார்த்தேன்.

    அதோட ஒவ்வொன்றையும் விரிவாகக் குறிப்பிட்டால் மிகப் பெரியதாக வருகிறது. எனவே முடிந்த வரை சுருக்கமாக கூறி இருக்கிறேன்.

    @சதீஷ் கேசவன் நீங்கள் கூறும் ரிஷி பற்றி நான் படித்தது இல்லை.

    @ஹரி நீங்கள் கூறுவது சரி தான். சுட்டியமைக்கு நன்றி.

    @சதா நன்றி 🙂

  12. அண்ணா
    இந்த புத்தகத்தை நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே கல்லூரியில் படித்துகொண்டு இருந்த போதே படித்துவிட்டு புத்த க அலமாரியில் அதன் பிறகு படிக்காமல் புத்தகத்தை கூட தொடாமல் வைத்து உள்ளேன் ..

    உங்களின் இந்த பதிவு என்னை மீண்டும் உசுப்பி விட்டுள்ளது .. நாளை காலை நேரம் கிடைக்கும் போதெல்லாம் இணையத்துக்கு பதில் இந்த புத்தகம் என்னை ஆக்கிரமிக்க போகிறது

    உசுபேற்றியதற்கு நன்றி அண்ணா

  13. @பிரகாஷ் ரைட்டு

    @கார்த்திக் தலைக்கு வைத்து தூங்காம படிக்கணும் 🙂

    @ராஜேஷ் எதுன்னு தெளிவா சொல்லுங்க.. 😉

  14. ஹலோ கிரி, வெப்சைட் டிசைன் சுபெர்ப். கீப் இட் அப்ப்.

  15. நன்றி கிரி. கலாம் அவர்கள் ஒரு சரித்திரம் படைத்தவர் அவரைப் பற்றி எழுதியதற்கு நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here