வட மொழிச் சொற்கள் தமிழ்ச் சொற்களிடையே கலந்து பிரிக்க முடியாத நிலைக்கு வந்து விட்டன! ஆங்கிலச் சொற்களும் தமிழ்ச் சொற்களாக! மாறிக்கொண்டு இருக்கின்றன. தமிழ் ஊடகங்களின் தமிழ் அழிப்பு என்னவென்று பார்ப்போம்.
வட மொழிச் சொற்கள்
நம்புகிறீர்களோ இல்லையோ நாம் அன்றாட வாழ்வில் தமிழ் என்று நினைத்துப் பயன்படுத்தும் பல சொற்கள் தமிழ் அல்ல, அவை யாவும் வட மொழிச் சொற்கள்.
இவை தமிழ்ச் சொற்கள் இல்லை என்று கூறினால் கூட நாம் நம்ப முடியாத அளவிற்கு வட மொழிச் சொற்கள் நம்மிடையே கொஞ்சம் கொஞ்சமாகக் கலந்து விட்டன.
இனி எவராலும் பிரிக்க முடியாது எனும் மோசமான நிலைக்கு வந்து விட்டது.
தற்போது இரண்டாம் மொழித் தாக்குதலாக ஆங்கிலமும் நம்மிடையே வேகமாக இரண்டற கலந்து வந்து கொண்டு இருக்கிறது.
இதே நிலை தொடர்ந்து இன்னும் சில தலைமுறைகள் சென்றால், தமிழ் மொழி பேசும் போது அதில் தமிழ்ச் சொற்கள் என்பது 20% தான் இருக்கும் என்ற பரிதாப நிலைக்கு வரப்போகிறது.
இதன் ஆபத்து புரியாமலே அல்லது தெரிந்தும் கண்டு கொள்ளாமலே பொறுப்பில் உள்ளவர்கள் பலரும் தங்கள் கடமையை மறந்து இருப்பதே இந்த மோசமான நிலைக்குக் காரணம்.
தொடரும் ஊடகங்கள்
காலையில் நாம் எழுந்து வானொலி கேட்பது, செய்தித்தாள் பார்ப்பதில் ஆரம்பித்து நாம் தூங்கப் போகும் முன்பு பார்க்கும் தொலைக்காட்சி, இணையம் வரை நம்முடன் தொடர்வது ஊடகங்கள் தான்.
இவர்கள் தரும் செய்திகளைப் படிப்பது வானொலி தொலைக்காட்சியில் வரும் செய்திகளைக் கேட்பது என்று நம்முடன் ஊடகங்கள் தான் பயணிக்கின்றன.
ஊடகங்கள் தினமும் என்ன வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துகிறார்களோ அதைத் தான் மக்களும் தங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்துகிறார்கள்.
இதோடு திரைப்படங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இக்கட்டுரை ஊடகங்களுக்கு இருக்கும் பொறுப்பு பற்றி மட்டுமே என்பதால், அதை மட்டும் தற்போது பார்ப்போம்.
செய்தித்தாள்களில் தற்போது எழுத்துப் பிழைகளும் சந்திப் பிழைகளும் (‘க்’, ‘ப்’, ‘ச்’, ‘த்’) மிக மிக அதிகமாகி விட்டன.
முன்பு வெகு சில எழுத்துப் பிழைகளையே காண முடியும் ஆனால், தற்போது இவை மிகச் சாதாரணமாகி விட்டன.
நம் மக்கள் எப்படி அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்களைப் பார்த்து வெறுத்துப் போய் அதற்குப் பழகி விட்டார்களோ!
அதே போல ஊடகங்கள் செய்யும் எழுத்துப் பிழைகளுக்கும் பழகி விட்டார்கள்.
இதை ஊடகங்களும் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு எழுத்துப் பிழைகளைச் சரி செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை.
இரண்டு வரியில் குறைந்தது ஒரு எழுத்து / சந்திப் பிழையைக் கண்டு பிடிக்க முடியும். சந்திப் பிழையாவது பரவாயில்லை!! என்று விடலாம் என்றாலும் எழுத்துப் பிழையைக் காணும் போது மிக வருத்தமாக உள்ளது.
பிரபல ஊடகங்களே இந்தத் தவறைச் செய்து வருவதைப் பார்க்கும் போது அடுத்த நிலையில் இருப்பவர்களைப் பற்றி என்ன கூறுவது?!
தமிழ் இணையத் தளங்கள், எழுத்துப் பிழையுடன் எழுதுவதைப் பற்றிக் கொஞ்சம் கூட அலட்டிக்கொள்வதில்லை.
பொறுப்பில் உள்ளவர்கள் தவறைச் சுட்டிக்காட்டித் திருத்தாமல், தங்கள் கடமையைப் புறக்கணிப்பது தான், இந்த நிலைக்குக் காரணம்.
செய்தியை மற்ற ஊடகங்களுக்கு முன் வேகமாகக் கொடுப்பதில் இருக்கும் ஆர்வம், எழுத்துப்பிழை இல்லாமல் கொடுக்க வேண்டும் என்பதில் இருப்பதில்லை.
ஆங்கிலக் கலப்பு!
செய்தித்தாள்களும் இணையத்தளங்களும் போட்டி போட்டுக்கொண்டு ஆங்கிலக் கலப்பை கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் செய்து வருகின்றன.
Coffee யை நான் தமிழில் “குளம்பி” என்று எழுத வேண்டும் என்று கேட்கவில்லை, Coffee (காஃபி) தமிழ் வார்த்தையாகி!! பன்னெடுங்காலம் ஆகி விட்டது.
குறைந்த பட்சம் நாம் பயன்படுத்தும் பிற வார்த்தைகளை அதாவது “குளம்பி” போல இல்லாமல் இருக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் என்ன பிரச்சனை?
Road, Queue, Office, Computer, Theater, Police, Support, TV, Driver, Award வார்த்தைகளைத் தமிழில் எழுதினால் என்ன பெரிய அசிங்கம், கூச்சம் வந்துவிடப் போகிறது?
பேசும் போதாவது இதை ஒரு கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் ஆனால், எழுதுவதில் என்ன பிரச்சனை?!
ரோடு என்பதை சாலை என்றோ, ஆபிஸ் என்பதை அலுவலகம் என்றோ, கியூ என்பதை வரிசை என்றோ எழுதுவதால் என்ன பெரிய இழுக்கு வந்து விடப்போகிறது?!
இது “குளம்பி” போலக் கூற “ஒரு மாதிரியாக” இருக்கிறதா?! அட! டிவி என்பதை தொலைக்காட்சி என்று எழுதினால் மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்களா!
அந்த அளவிற்கா மக்கள் மோசமாக “குளம்பி” இருக்கிறார்கள்! மக்களுக்கே தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழை அழிப்பது என்பது இது தான் (ஆங்கிலத்தில் Slow poison).
மேற்கூறியது மிகச் சிறு எடுத்துக்காட்டு மட்டுமே! இது போலக் கூற எனக்கு வண்டி வண்டியாக வார்த்தைகள் இருக்கிறது.
செய்தியைப் படிக்கும் போது இவர்களின் ஆங்கில வார்த்தைகளை, எழுத்து மற்றும் சந்திப் பிழைகளை மனம் தானாகத் தமிழ்ப் படுத்தி / பிழை திருத்திப் படிக்கிறது.
ஏன் ரோடு என்பதை சாலை என்று கூறக் கூடாது? இதில் என்ன பிரச்சனை என்று நினைக்காத நாளில்லை.
அதிகரிக்கும் பிழைகளும் ஆங்கிலக்கலப்பும்
ஒவ்வொரு நாளும் வருத்தம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது காரணம், எழுத்துப் பிழைகளும், ஆங்கிலக் கலப்பும் முன்பை விட மிக மோசமாக வேகமாக வளர்ந்து வருகிறது.
தமிழ் மொழியை நினைத்து உண்மையாகவே அச்சமாக இருக்கிறது.
எடுத்துக்காட்டாகச் சில வார்த்தைகள் இது போலப் பயன்படுத்தி எப்படி நம் மூளையை மாற்றி / பழக்கப்படுத்தி விட்டன என்று கூறுகிறேன்.
“சரியான காமெடியா இருக்கு..!” என்று கூறுவதற்கும் “சரியான நகைச்சுவையா இருக்கு..!” என்று கூறுவதற்கும் எவ்வளவு வேறுபாடு?!
“நகைச்சுவையா இருக்கு” என்று தமிழில் கூறும் போது அது செயற்கையாக இருக்கிறது அல்லவா!
ஒருவரைப் பார்த்து “நீங்க ரொம்ப நகைச்சுவையாகப் பேசுறீங்க!?” என்று கூறினால் அவர் நம்மை ஒரு மாதிரி தான் பார்ப்பார்.
ஏன்?!
“ஒரே டார்ச்சராக இருக்கு!” என்பதற்கும் “ஒரே சித்திரவதையாக இருக்கு” என்பதற்கும் உள்ள வித்யாசம் புரிகிறதா! “டார்ச்சரில்” நமக்கு இருக்கும் ஒரு இணைப்பு “சித்திரவதை” என்று கூறுவதில் இல்லை.
இது போல நிலை விரைவில் மற்ற தமிழ்ச் சொற்களுக்கும் வந்து விடும். பிறகு எவர் நினைத்தாலும், மாற்ற முடியாது.
இன்று “நகைச்சுவை” –> “காமெடியாக” நிரந்தர மொழி மாற்றம் ஆனது போல, மொத்தத் தமிழும் ஆகும் நாள் தொலைவில் இல்லை.
ஒருவரிடம் பேசும் போது ஆங்கிலக் கலப்பு இல்லாமல் பேச முயற்சி செய்தால், அப்போது தான் தெரியும், சர்வசாதரணமாகத் தின வாழ்க்கையில் எப்படி ஆங்கிலக் கலப்பை செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று.
எதைச் செய்யக் கூடாது என்று முடிவு செய்கிறோமோ அப்போது தான் நாம் எவ்வளவு தவறு செய்கிறோம் என்று புரியும்.
அனுபவங்கள்
கடந்த வருட கட்டுரைகளில் நிறைய ஆங்கிலக் கலப்பு இருக்கும். அதோடு எழுத்துப் பிழை, சந்திப் பிழையும் இருக்கும்.
மற்றவர்கள் சுட்டிக் காட்டிய பிறகு இதற்கென்று நேரம் செலவழித்து தவறை பெருமளவு குறைத்துள்ளேன்.
இதற்குக் காரணம், கிடைத்த அனுபவத்தில் நம் தாய் மொழியைத் தவறு இல்லாமல் எழுத வேண்டும் என்ற ஆர்வமும், தொடர்ந்து எழுதும் போது தமிழின் மீது கொண்ட காதலும் மட்டுமே!
தமிழை பிழை இல்லாமல் / ஆங்கிலக் கலப்பு இல்லாமல் எழுத வேண்டும் என்ற எந்த எண்ணமும் தளம் துவங்கிய போது எனக்குச் சுத்தமாக இல்லை.
சொல்லப்போனால் இந்தத் தளத்திற்குப் பெயர் (giri”Blog”) வைக்கும் போது கூட எனக்கு எந்த முன் யோசனையும் / தமிழ் குறித்த ஆர்வமும் இல்லை.
இது குறித்து முன்பே எழுதி இருக்கிறேன். தமிழ் ஆர்வத்தில் (ஆர்வக்கோளாரில்) எல்லாமே “தமிழ் தமிழ்” என்று வெறியனாக இருக்க வேண்டும் என்பது என் விருப்பமல்ல. அதில் எனக்கு உடன்பாடும் இல்லை.
என் தள வடிவமைப்பிலேயே இதைப் புரிந்து கொண்டு இருக்கலாம்.
ஊடகங்களின் பொறுப்புகள்
எழுத்துப் பிழையின்றி எழுத வேண்டும் என்ற பொறுப்பு நமக்கு இருக்கிறது. எழுதி முடித்தவுடன் சிறிது நேரம் ஒதுக்கினால், பல எழுத்துப் பிழைகளைச் சரி செய்ய முடியும்.
மேலும் மேலும் எழுத்துப் பிழைகளைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் / ஆர்வம் மனதில் இருந்தால் மட்டுமே இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.
இல்லையென்றால், ரயிலில் எப்படி பிரியாணி போட்டாலும் சாப்பிடப் போகிறார்கள் அதனால், எப்படி சமைத்தால் என்ன?! என்று நினைத்துப் போடுவது போல, என்ன எழுதினாலும் படிக்கப் போகிறார்கள் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கும்.
இது படிப்பவர்களை அவமதிக்கிறது என்பதைப் பலர் உணர்வதே இல்லை.
தாங்கள் எப்படி எழுதினாலும் வாசகர்கள் படிப்பார்கள் என்ற எண்ணத்தில் தான், ஊடகங்கள் தொடர்ந்து இது போன்ற தவறுகளைச் செய்து வருகிறார்கள்.
தவறு செய்வது மனித இயல்பு ஆனால், அதைத் திருத்திக் கொள்ள முயற்சிப்பது தான் சரியான ஊடகத்திற்கு அழகு.
இந்தக் கட்டுரையைப் படித்த உங்கள் அனைவரிடமும் ஒன்று கேட்க விரும்புகிறேன்.
சுட்டிக்காட்டப் பயன்படுத்தப்பட்ட ஆங்கில வார்த்தைகளைத் தவிர நான் எந்த ஆங்கில வார்த்தையும் இந்தக் கட்டுரையில் பயன்படுத்தவில்லை.
முழுக்க முழுக்க ஆங்கிலம் கலக்காத இக்கட்டுரையை வாசிக்க உங்களுக்குச் சிரமமாக இருந்ததா? கடினமான தமிழ் வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கிறேனா?!
இல்லை என்பது தான் உங்கள் பதிலாக இருக்கும் (என்று நம்புகிறேன்).
சாதாரண வலைப் பதிவரான நான் ஆங்கிலக் கலப்பு / படிப்பவர்களுக்கு உறுத்தல் இல்லாமல் புரியும்படி தமிழ் வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி ஒரு கட்டுரை எழுத முடிகிறது என்றால், இத்துறைக்கென்று தனித் திறமை பெற்று இருக்கும் ஊடகங்களால் ஏன் செய்தியைக் கொடுக்க முடியாது?!
ஆங்கிலக் கலப்பு செய்து வருங்கால தலைமுறை மக்களிடையே தமிழை அழித்து வருவது நியாயமான செயலா?
பல நூற்றாண்டு பழமை வாய்ந்த நம் தமிழ் மொழியை நாகரீகம் என்ற பெயரில் தமிழர்களே அழிப்பது, தெரிந்தும் எழுத்துப் பிழையோடு எழுதுவது நாம் நம் தாய் மொழிக்குச் செய்யும் துரோகம்.
தயவு செய்து தமிழ் ஊடகங்கள், பொறுப்பை உணர்ந்து, கடமையை சரிவர செய்து தமிழ் மொழியைக் காப்பாற்றுங்கள்.
தமிழின் பரிதாபமான நிலையை மாற்றும் சக்தி ஊடகங்களான ஊடகங்களிடம் மட்டுமே உள்ளது.
ஊடகங்கள் மனது வைத்தால் மட்டுமே இந்த இழி நிலை மாறும், தமிழ் உயர்வு பெறும்.
தொடர்புடைய கட்டுரைகள்
தொழில்நுட்பத் தமிழ் வார்த்தைகள்
facebook “முகநூல்” என்றால் Lady Gaga “பெண் காகா” வா?
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கரெக்டா சொல்லிருக்கிங்க கில்லாடி.
சாரி.
ஐயோ….
தவறு,,,
சரியாக சொல்லிருக்கிங்க கில்லாடி.
இப்படி தான் நிறைய வார்த்தைகள் தினமும் நாம் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்…
கில்லாடி – இது தமிழ் வார்த்தை இல்லை
தங்களுடைய கூற்று மிகச்சரியே தமிழ் மெல்ல அழிவதற்கு தமிழர்களே காரணம் பதிவிட்டமைக்கு நன்றி
நீங்க சொல்வது தான் சரி அண்ணா. இனிமேல் எனது பின்னூட்டமும் தமிழில் தான் இருக்கும்…எழுத்துப் பிழை இல்லாமல் எழுத முயற்சி செய்கிறேன் 🙂
மிகச் சரியே, ரெண்டுங்கெட்டானாய் உலா வரும் ஊடகங்களும், அவற்றைச் சொறிந்து விடும் வக்கில்லாத தமிழ் மக்களும் தம் மொழியை சிதைக்கின்றனர். தமிழர்களிடம் கோருவது ஒன்று தான், ஒன்று இயல்பான நல்ல தமிழில் பேசி, எழுதி, ஊடகம் உட்பட அன்றாட வாழ்வில் பயன்படுத்திப் பாருங்கள், இல்லை இங்கிலீசு தான் வேண்டும் எனில் தமிழை விட்டு விட்டு நல்ல ஆங்கிலத்திலேயே பேசி வாழுங்கள், ரெண்டையும் கலந்து நாறாசம் ஆக்காதீர். பீட்சாவை சாம்பாரில் முக்கித் தின்னாதீர்கள், பீட்சா தான் வேண்டும் எனில் தின்றுவிட்டு போங்கள், ! சாம்பாரை விட்டுவிடுங்களேன் நாங்கள் இட்லிக்குத் தொட்டுக் கொள்கிறோம். :/
எதிர்கால சந்ததிகள் அகநானுறு, புறநானுறுவை படித்து பொருள் விளங்குவார்கள் என்பது கேள்விக்குறியே??? ஆனால் நமது தாய்மொழியை படிக்கவும், தெளிவா பேசவும், எழுதவும் கற்று கொடுப்பது பெற்றோர்களின் முதல் கடமை என நான் கருதுகிறேன்..
நான் தமிழைக் காதலிக்க ஒரே காரணம்!!!!
=======================================
அல்லி விழியோரம் அஞ்சனத்தைத் தீட்டி
அந்தி வண்ணப் பின்னல் மீது தாழை மலர் சூட்டி
ஆதி முதல் அந்தம் ஆபரணம் பூட்டி
அன்னமிவள் மேடை வந்தாள் மின்னல் முகம் காட்டி……
=======================================
முதலில் திருந்த வேண்டிய நபர்கள் மக்களோடு அன்றாடம் உறவாடும் வானொலி மற்றும் தொலைகாட்சி தொடர்புள்ள நிறுவனத்தினர். அதற்க்கு அடுத்ததாக திரைப்பட இயக்குனர்கள்.
புகைப்பிடிக்கமாட்டேன் மது அருந்தமாட்டேன் (ஏனெனில் அதை பார்த்தால் விசிறிகள் வழி தவறுவார்கள்) என்றெல்லாம் சபதமேற்கும் நடிகர்கள் சுத்த தமிழில் (கொஞ்சமாவது) தான் என் வசனங்கள் இருக்கவேண்டும் ஒருமையில் விளிப்பதை தவிர்க்கவேண்டும் என்றும் சபதம் ஏற்கலாமே…
அட போங்க கிரி இரண்டு (படித்த/பெரிய பதவியில் இருக்கும்) தமிழர்களை ஹாங்காங்கில் சந்தித்தேன். நீங்க தமிழா என்று பார்த்தவுடன் கண்டுபிடித்து கேட்டாலும், அதற்க்கு பின்னர் தொடர்ந்த உரையாடல்களை அவர்கள் ஆங்கிலத்திலேயே தொடர்ந்தனர். சிலருக்கு ஒரு வித நோய், ஆங்கிலத்தில் பேசினால் என்னமோ அவர் உயரத்தில் இருக்கிற மாதிரியும் ஏனையோர் காலுக்கு கீழ் இருக்கிற மாதிரியும் ஒருவித எண்ணம். (மலையாளிகள் அப்படி இல்லை என்று நினைக்கிறேன்).
இருந்தாலும் ஒரு சிக்கல் இருக்கிறது. ஒரு வார்த்தை சுத்த தமிழில் பேசிவிட்டால் அதற்கடுத்த வார்த்தைகளையும் சுத்த தமிழில் பேசவேண்டிய கட்டாயம்.
உதாரணத்திற்கு : அப்பா ஆபீஸ் போயிட்டு வரேன்மா என்பதற்கும் அப்பா அலுவலகம் போய்விட்டு வருகின்றேன் என்பதற்கும் அர்த்தம் ஒன்றே என்றாலும் மகளின் நம்மை நோக்கிய பார்வை வேறு மாதிரி இருக்கும்.
கடினம் தான் இருந்தாலும் முதலில் சீர்திருத்தம் அவரவர் குடும்பத்திலேர்ந்து கொண்டு வரவேண்டும்.
குறிப்பு: என் தாய் மொழி தமிழ் அல்ல (என் பெயரை வைத்தே தெரிந்துகொண்டிருக்கவேண்டும்) இருந்தாலும் என் சிந்திக்கும் திறன் தமிழில் அமைவதால் என் தாய்மொழியும் தமிழ் தான்.
//அப்பா ஆபீஸ் போயிட்டு வரேன்மா என்பதற்கும் அப்பா அலுவலகம் போய்விட்டு வருகின்றேன் என்பதற்கும் அர்த்தம் ஒன்றே//
சிக்கலை தீர்க்க நாம் முயற்சிக்கவில்லை.
“வேலைக்கு போயிட்டு வரேன்மா” என்றால் உங்கள் மகளின் பார்வை எப்படியிருக்கும்?
நல்லதொரு இடுகை கிரி. நான் இக்பால் செல்வனை வழிமொழிகிறேன்..
ஒரு நாள் அது இறக்கும்,என்ன செய்ய..
இலங்கை ஊடகங்கள் எவ்வளவோ தேவலாம்.
நல்ல பதிவு.
உங்களின் சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று அண்ணா. நான் முடிந்த வரை தமிழில் கலந்துவிட்ட பல ஆங்கில வார்த்தைகளை புறகணித்துவிட்டு தமிழ் வார்த்தைகளைத்தான் பயன்படுத்துகிறேன். இருந்தாலும் பல வார்த்தைகளுக்கு சரியான தமிழ் பெயர் தெரியாமல் தான் இப்போதும் இருந்து கொண்டு இருக்கிறேன். என் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு தனியார் பள்ளிக்கூடத்திற்கு(இது சரியா அல்லது கல்விக்கூடம் சரியா என்று குழப்பத்தில் எழுதுகிறேன் ) சென்று அங்கு இருந்த தமிழ் வகுப்பு எடுக்கும் ஆசிரியையிடம் பல் விளக்கும் “brush” க்கு விளக்கம் கேட்டு விளக்குமாறால் அடிவாங்காத குறையாக நொந்து கொண்டு வந்தேன்.
என்னைப்போல பல பேருக்கும் அழகிய தமிழில் மற்ற மொழிகள் கலப்பிடம் இல்லாமல் பேச ஆசை தான் . ஆனால் இதற்கு முட்டுகட்டையாக இருப்பது பெருமளவு இந்த ஊடகங்களே. இந்த ஊடகங்கள் ஒரு குடும்பத்தில் இருக்கும் எல்லோரையும் மாற்றி விட்டன. எங்களை பார்த்து எங்கள் குடுபத்தாரே எங்கள் உடன் பழகத்தில் இருப்பவர்களே ஏளனமாய் பார்க்கும் அளவுக்கு மாற்றிவிட்டன. செய்யிறதெல்லாம் செய்துவிட்டு பிறகு இரவு ஒன்பது மணிக்கு நாட்டுக்கு பத்து பைசாவுக்கு உபயோகம் இல்லாத நாலு பேர கூட்டி வந்து வியாக்கியானம் பேசுவாங்க. அருமையான செருப்படி இந்த ஊடங்கங்களுக்கு நீங்கள் கொடுத்து இருக்கிறீர்கள் அண்ணா
நல்லதொரு பதிவு. தமிழர்கள் என்று தலை நிமிர்ந்து சொல்லும் ஒவ்வொருவரும் அவசியம் நல்ல தமிழை ( ஆங்கிலம் மற்றும் பிறமொழி சொற்கள் அல்லாத ) பேச்சு மற்றும் எழுத்து வழக்கில் பின்பற்றினால் , தமிழ் தலைமுறைகளைத் தாண்டி வாழும்.
நீங்கள் சொல்ல வந்த செய்தியை
நானும்
தமிழ் + ஆங்கிலம் = தமிங்கிலம்
என்ற பதிவினூடாகச் சொல்லியிருந்தாலும்
தாங்கள் சிறப்பாகச் சொல்லியுள்ளீர்கள்!
பாராட்டுகள்!
//சுட்டிக்காட்டப் பயன்படுத்தப்பட்ட ஆங்கில வார்த்தைகளைத் தவிர நான் எந்த ஆங்கில வார்த்தையும் இந்தக் கட்டுரையில் பயன்படுத்தவில்லை//
இல்லை.பயன் படுத்தியிருக்கிறீர்கள். கட்டுரை எழுதப்பட்டதின் நோக்கம் கருதி அந்த வார்த்தையை இங்கு நான் குறிப்பிடவில்லை.
நானும் கூடுமானவரை ஆங்கில சொற்களை தவிர்த்தே எழுதுகிறேன்.பின்னூட்டங்களிலும்.
இந்த காலகட்டத்திற்கு தேவையான அருமையான பதிவு கிரி .. தினசரி பத்திரிகைகளில் பிழை திருத்துவதற்கு என்று தனியாக பணியாளர்கள் இருந்தும் இந்த நிலமை தொடர்வது தான் கொடுமை .
அனைவரின் வருகைக்கும் நன்றி
@இக்பால் செல்வன் கலக்கல் 🙂 “பீட்சாவை சாம்பாரில் முக்கித் தின்னாதீர்கள், பீட்சா தான் வேண்டும் எனில் தின்றுவிட்டு போங்கள்”
@யாசின் ம்ஹீம்.. இந்த அளவிற்கு எனக்குத் தெரியாது 🙂
@ராஜ்குமார் நீங்கள் கூறியது போல இரு தமிழர்கள் சந்தித்துக்கொண்டாலும் தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் தான் பேசுகிறார்கள். என் நெருங்கிய நண்பர்களுடன் இது போல நேர்வதில்லை..
என்னதான் ஆங்கிலத்தில் பேசினாலும்.. தமிழில் (தாய் மொழியில்) பேசும் போது கிடைக்கும் ஒரு அன்னியோன்யம் இதில் கிடைப்பதில்லை. Buddy என்பதில் கிடைக்காத நெருக்கம்… சொல்லு மச்சி என்று கூறுவதில் இருக்கும்.
“மலையாளிகள் அப்படி இல்லை என்று நினைக்கிறேன்” ஆமாம் அவர்கள் அதிகம் ஆங்கிலம் பயன்படுத்துவதில்லை.
“அலுவலகப் பிரச்னைக்கு” நண்பர் சேக்காளி கூறியதை கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.
உங்கள் தாய் மொழி தமிழ் அல்ல என்பது நீங்கள் கூறித் தான் தெரியும். ராஜ்குமார் என்பது பொதுவான பெயர் தானே! எனக்கும் ராஜ்குமார் என்ற தமிழ் நண்பர் உண்டு. அவரும் கமல் ரசிகர் தான் 🙂
@நான் கார்த்திகேயன் வாழ்த்துகள் கார்த்தி 🙂 உன்னுடைய முயற்சிக்கு. நீ முயற்சிக்கும் அளவு நான் முயற்சிப்பதில்லை.. தற்போது கொஞ்சம் பரவாயில்லை.
@யாழ்பாவணன் நன்றி
@சேக்காளி பலவருடமாக என் தளத்தைப் படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் என்னை புரிந்து கொண்டது இவ்வளவு தானா!
தவறை சுட்டிக்காட்டுவதை நான் என்றும் வரவேற்கிறேன். இதை நிச்சயம் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டேன்.. எடுத்துக்கொள்ள இதில் எதுவுமில்லை.
நீங்கள் என்ன வார்த்தை என்பதை சுட்டிக்காட்டினால் அடுத்த முறை சரி செய்துகொள்வேன். நன்றி.
புரையோடி இருக்கும் ஒன்றை சரியாக்குவதற்கான முயற்சி இந்த பதிவு. இதில் போய் என் நக்கீரத்தனத்தை காட்ட வேண்டுமா? என்று கொஞ்சம் தயக்கமாக இருந்தது. மின்னஞ்சலில் தெரியப்படுத்தியிருக்கலாமே என்று கூட நினைத்தேன்.
“ரயிலில் எப்படி பிரியாணி போட்டாலும் சாப்பிடத்தான் போகிறார்கள் ”
என்பதில் உள்ள “ரயில்” என்பது சுட்டிக்காட்டுவதற்காக பயன்படுத்தப் பட்ட வார்த்தையல்ல என்பது என் யூகம்.
சேக்காளி நீங்க நம்புறீங்களோ இல்லையோ நீங்க இதைத் தான் குறிப்பிட்டு இருப்பீர்கள் என்று நினைத்தேன் 🙂 . வழக்கமாக திருத்தம் செய்வதை விட அதிக முறை இந்தக் கட்டுரையை திருத்தம் செய்தேன். ஏனென்றால் கட்டுரையின் மையக் கருத்து அப்படி. நாமே தவறை செய்து விட்டு எப்படி சுட்டிக் காட்டுவது என்ற பயம்.
இதில் ரயில் என்பதை நான் தெரிந்தே தான் குறிப்பிட்டேன். இதற்கு இன்னும் சரியான தமிழ் வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை. “புகை வண்டி” முன்பு நிலக்கரி வண்டியாக இருந்த போது சரியான வார்த்தையாக இருந்தது ஆனால், தற்போது டீசல் / மின்சாரம் ஆகி விட்டது. எனவே இது தற்போது சரியான வார்த்தை அல்ல.
தொடர்வண்டி குறிப்பிடலாம் ஆனால், தற்போது T service என்று கூறப்படும் இரு பேருந்துகள் வண்டியையும் தொடர் வண்டி என்றே அழைக்கிறார்கள்.
எனவே காஃபி தமிழானது போல ரயிலையும் நினைத்துக் குறிப்பிட்டேன். நடைமுறை தமிழ் வார்த்தைகளில் இருந்து முற்றிலும் என்னால் விலக முடியாது. எனவே தான் ரயில் குறிப்பிட்டேன். என்னைப் பொருத்தவரை சாத்தியமான நடைமுறை வார்த்தைகளை பயன்படுத்தலாம் என்பது மட்டுமே! ரொம்ப ஆர்வக்கோளாறாக சென்று மற்றவர்கள் வெறுக்கும் படியாகி முதலுக்கே மோசமாகி விடக் கூடாது என்பதே என் பயம்.
சுருக்கமாக ஆமாய்யா! இவன் தமிழ் தமிழ்னு “காமெடி” பண்ணிட்டு இருக்கான் என்று ஆகிடக் கூடாது என்பதே என் கருத்து / பயம்.
நக்கீரன் கட்டுரைகளை படித்துப் பாருங்க. பல முறை நொந்து போயிடுவீங்க. அந்த அளவுக்கு ஆங்கில கலப்பு.
ஜோதிஜி உங்களிடம் இருந்து விரிவான கருத்தை இந்தக் கட்டுரைக்கு எதிர்பார்த்தேன்.
நக்கீரன் நான் படித்து பல வருடங்கள் இருக்கும்.
கிரி, உங்களுடைய இந்த பதிவு என்னை மிகவும் ஈர்த்தது, இந்த பதிவை உங்களுடைய அனுமதி உடன் என்னுடைய நண்பர்களுக்கும் இந்த பக்கத்தின் முகவரியுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அனுமதி கிடைக்குமா ??
சுதர்சன் எடுத்துக்கொள்ளுங்கள்.
நன்றி கிரி 🙂
thamizh mel kaathal adangappa… giri neenga engeyo poitteenga… ithula intha tamizhla converter velai seyya villai giri.. aathalaal enthau aangila tamil a poruthukkollavum … intha padichaale nagaichuvaiyaagathaan irukkirathu… ithukku mela thaangaathu…
Giri as you said the media has forced these wording on to us.. and what we can do.. muka style la oru unnaviratham try pannalama…
Nice write up … long time enjoyed reading it.
Kamesh
அண்ணா உங்களிடம் அன்று முதல் இன்று வரை எனக்கு பிடித்ததே உங்களின் பிழை இல்லாத எளிய எழுத்து நடைதான் அதற்காக உங்களுக்கு தனியாக பாராட்டு விழாவே நடத்தலாம் சரி அது இருக்கட்டும் ……ஊடகங்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு நுகர்வோர்தான் முக்கியம் தமிழர்கள் அல்ல .தமிழ் என்று வந்தால்தான் உணர்வு வரும் ஆனால் உணவுக்காக கடை விரித்திருப்பவர்களிடம் உணர்ச்சிப்பூர்வமானவயயை எதிர்பார்ப்பது நம் தவறுதான் .அது எழுத்து ஊடகமாக இருந்தாலும் சரி காட்சி ஊடகமாக இருந்தாலும் சரி அவர்களுக்கு நாம் ஓர் முட்டாள் நுகர்வோர்கள் ..ஆங்கில தொலைக்காட்சி நிறுவனமான டிஸ்கவரி தமிழைப் பார்த்து தமிழக ஊடக வியாபாரிகள் கற்றுக் கொள்ளவேண்டும் .ஆனால் ஒரு உண்மை உண்டு தமிழ் எப்போதும் அழியாது ஏனென்றால் அது கடவுள் ….
@காமேஷ் தல வாங்க.. ரொம்ப மாசமா ஆளைக் காணோம்.
@இளவரசன் 🙂 என்ன செய்வது.. மக்களும் அனைத்திற்கும் பழகி விட்டார்கள்.
அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
நல்வணக்கம்!
திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
வலைச்சரம் ஐந்தாம் நாள் – “வேருக்கு நீர் ஊற்றுவோம்”
இன்றைய வலைச் சரத்தின்
சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
வாழ்த்துக்களுடன்,
புதுவை வேலு
கிரி அவர்களின் வலை தளத்தை எனக்கு அறிமுகம் செய்த தி இந்து நாழிதழுக்கு மிகுந்த நன்றிகள்.