போறாளே பொன்னுத்தாயி | ஸ்வர்ணலதா

4
போறாளே பொன்னுத்தாயி Swarnalatha singer

க்காலத் தலைமுறைக்குப் பாடகி ஸ்வர்ணலதா அறிமுகம் இல்லாமல் இருக்கலாம் ஆனால், இவர் பாடிக்கொண்டு இருந்த சமயத்தில் அனைவராலும் எப்படிப் பாராட்டப்பட்டார் என்பது பலரும் அறிந்தது. Image Credit

மிகச்சிறு வயதிலே (37) நுரையீரல் பிரச்சனை காரணமாகக் காலமானார்.

ஸ்வர்ணலதா

எம் எஸ் விஸ்வநாதன் அவர்களால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டு இளையராஜா, ரகுமானால் மிகப்பிரபலம் ஆனவர். இவருடைய பல பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

அதில் எனக்குப் பிடித்த சில பாடல்கள் (குரல்) ராக்கம்மா, குயில் பாட்டு ஓ வந்ததென்ன, ஆட்டமா தேரோட்டமா, போவோமா ஊர்கோலம், அக்கடானு நாங்க, முக்காலா முக்காபுலா, எவனோ ஒருவன் வாசிக்கிறான்.

குயில் பாட்டு ஓ வந்ததென்ன, முக்காலா முக்காபுலா இரண்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை ஆனால், இரண்டிலுமே பட்டாசாகப் பாடி இருப்பார்.

ஒரு பாடல் மனதை உருக்கும் பாடல், இன்னொன்று துள்ளலான பாடல். இரண்டுமே மிகப்பெரிய வெற்றி. இசை தான் பாடலின் வெற்றியைத் தீர்மானிக்கிறது என்றாலும், அந்த இசைக்கு மேலும் சிறப்புச் சேர்ப்பது பொருத்தமான குரல் தான்.

போறாளே பொன்னுத்தாயி

மேற்கூறிய பாடல்கள் மிகச் சிறப்பு என்றால், இவையெல்லாவற்றையும் விடத் தேசிய விருது பெற்று தந்த கருத்தம்மாவின் ‘போறாளே பொன்னுத்தாயி’ வேற லெவல்.

ரகுமான் பாடல்கள் பொதுவாக இரைச்சல், என்ன பாடுகிறார்கள் என்றே புரியவில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு ஆனால், அனைத்துப் பாடல்களுக்கும் அவை பொருந்தாது. இருப்பினும் சிலர் குற்றச்சாட்டாகக் கூறுகிறார்கள்.

இப்பாடலில் பாடல் வரிகளை இசையால் சிதைக்காமல், பாடுபவருக்கு முக்கியத்துவம் கொடுத்து இசையமைத்து இருப்பார். பாடல் முழுக்க ஒரே ஒரு இசை

வைரமுத்து பாடல் வரிகளும் மிகச்சிறப்பு.

ஸ்வர்ணலதா இப்பாடலை மிக மிகச்சிறப்பாகப் பாடியிருப்பார். தேசிய விருதுக்கு முழுக்கத் தகுதியான பாடல்.

SPB அவர்களின் ‘மண்ணில் இந்தக் காதலன்றி’ பாடல் போல மூச்சை இழுத்து பாட வேண்டிய பாடல், இப்பாடல் போல நீண்டதாக இல்லையென்றாலும், ராகத்தோடு பாடுவதால் இதுவும் பாடுவது மிகக்கடினம்.

பல முறை பாடலுடன் சேர்ந்து பாடி தோல்வியடைந்தது தான் மிச்சம் 🙂 .

எளிமையான இசை

அமைதியான சூழ்நிலையில் இப்பாடலை கேட்டுப்பாருங்கள், அப்படியே உருகி விடுவீர்கள். அட்டகாசம்!

பாடல் வரிகளை, குரலைக் கெடுக்காத அசத்தலான எளிமையான இசை. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது.

இசையின் சிறப்புத் தெரியாதவர்கள், ‘என்னய்யா! ஒரே ஒரு இசையையே பாடல் முழுக்கப் போட்டுவிட்டு அதற்குத் தேசிய விருதா?‘ என்று கேட்கவும் வாய்ப்பு 🙂 .

SPB தேசிய விருது பெற்ற ‘தங்கத்தாமரை மகளே!’ பாடலில் கூடக் கிட்டத்தட்ட இதே மாதிரியான பல இசைகள் இல்லாமல் ஒரே ஒரு இசை மட்டுமே அதிகம் வரும்.

ஆனால், போறாளே பொன்னுத்தாயி பாடலில் முழுக்கவே ஒரே ஒரு இசை தான்.

எங்கேயோ கொண்டு செல்லும் பாடல்

மனது வருத்தமாக இருக்கும் போது இப்பாடலைக் கேட்டால், கண்ணீர் விட்டாலும் வியப்பில்லை. பாடல் நம்மை அப்படியே எங்கேயோ கொண்டு செல்லும்.

இப்பாடல் எடுக்கப்பட்ட விதம் திருப்தியளிக்கவில்லை. இன்னும் சிறப்பாக எடுத்து இருக்கலாம் என்று தோன்றியது. ராஜ்ஸ்ரீ க்கு ஒப்பனையும் ரொம்ப அதிகம்.

ஸ்வர்ணலதா மறைந்தாலும் அவர் குரல் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

இக்கட்டுரை எழுத எந்தச் சிறப்புக்காரணமும் இல்லை, ஸ்வர்ணலதாவின் ‘போறாளே பொன்னுத்தாயி’ கேட்டேன் எழுதத்தோன்றியது அவ்வளவே! 🙂 .

தொடர்புடைய கட்டுரை

என்ன விட்டு எங்கடி நீ போன | Magic Man SPB

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. காலத்தால் அழியாத அருமையான பாடல்களைத் தந்தவர். சிறு வயதில் காலமானது திரையுலகுக்குப் பெரும் இழப்பே.

  2. முதல்ல அந்த யூடூப் லிங்க் பார்த்துட்டு, ராஜா இந்த படத்தில எப்போ சுடிதார் போட்டிருந்தாருனு யோசிச்சேன். அப்புறம் தான் தெரியுது அது மகேஸ்வரின்னு…

  3. கிரி, ஒரு திறமையான பாடகியாக இருந்தாலும் கூட ஏனோ பல காரணங்களுக்காக இடையில் பல வாய்ப்புகள் மறுக்க பட்டதாக படித்து இருக்கிறேன் .. ஸ்வர்ணலதா பாடல்களில் என்னுடைய எல்லா நேர விருப்ப பாடல் : என்னை தொட்டு அள்ளிக்கொண்ட (உன்ன நினைச்சேன் பாட்டு படித்தேன்). பல பாடல்கள் பிடித்து இருந்தாலும் இந்த பாடல் என்னை வேறு உலகிற்கு கொண்டு செல்லும் ..

    AR ரகுமானின் கிராமத்திய இசையில் எவ்வளவு துல்லியம் இருந்தாலும் , மனது ராஜாவை நோக்கியே பயணிக்கிறது .. குறிப்பாக பாடல்களில் பின்னால் (ஒலிக்கும் வாத்தியமும் , பின்பாட்டு குரலும்).. வேறு யாராவது இசையில் அவ்வளவு துல்லியம் இருக்குமா என்று தெரியவில்லை .. செவ்வரளி தோட்டத்திலே (படம் : பகவதிபுரம் ரயில்வே கேட் ) இந்த பாட்டும் , தாலாட்டுதே வானம் (படம் : கடல் மீன்கள் ) என்னை பைத்தியமாகிவிடும் ..

    இன்னும் சொல்லி கொண்டே போகலாம் .. இதில் சோகமான நிகழ்வு என்ன வென்றால் என் மனைவிக்கு ரெண்டு பாட்டும் சுத்தமாக பிடிக்காது .. பகிர்வுக்கு நன்றி ..

  4. @ராமலக்ஷ்மி உண்மை தான். மெலடி பாடல்களில் இவர் குரல் மிக சிறப்பாக இருக்கும்.

    @Kani 🙂 ஏங்க இது உங்களுக்கே அதிகமா இல்லையா?

    @யாசின் கிராமத்து இசையில் ரகுமானை இளையராஜாவுடன் ஒப்பிடவே முடியாது. கிராம இசையைக் கொஞ்சம் மாற்றிக் கொடுத்ததால், கிழக்கு சீமையிலே பாடல்கள் மாபெரும் வெற்றி பெற்றது.

    கருத்தம்மா பாடலும் கிராமத்து இசை என்று கூற முடியாது. இருப்பினும் நன்றாக இருக்கும்.

    உங்கள் மனைவி 🙂 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!