பாராளுமன்ற கட்டிட சர்ச்சைகள்

7
பாராளுமன்ற கட்டிட சர்ச்சைகள்

பாராளுமன்றத்தின் புதிய கட்டிடம் திறக்கப்பட்டதில் எதிர்க்கட்சிகள் பல்வேறு எதிர்ப்புகளைத் தெரிவித்தது சர்ச்சையாக இருந்தது. Image Credit

பாராளுமன்ற புதிய கட்டிடம்

பாஜக மத்திய அரசு பாராளுமன்ற புதிய கட்டிடத்தை நவீன வசதிகளுடன், கூடுதல் எண்ணிக்கையில் உறுப்பினர்கள் அமரும் வகையில் கட்டியது.

மக்கள் தொகை உயர்வால் எதிர்காலத்தில் கூடுதல் பாராளுமன்ற தொகுதிகள் உருவாக்கப்படும் என்பதால், உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு திட்டமிட்டுக் கட்டப்பட்டது.

₹862 கோடிக்குத் திட்டமிட்டுப் பின்னர் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தியதால், ₹1250 கோடியில் முடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

துவக்கத்தில் பாராளுமன்ற கட்டிடம் 1927 ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திறக்கப்பட்டது, புதிய பாராளுமன்றம் 2023 ல் திறக்கப்பட்டது.

எதிர்கட்சிகள் வழக்கம் போல எதிர்ப்புத் தெரிவித்தன.

ஜனாதிபதி முர்மு

பிரதமரே திறந்து வைக்கப்படுவதாக முடிவானதும், பாராளுமன்றத்தை ஜனாதிபதி முர்மு தான் திறந்து வைக்க வேண்டும் என்றார்கள்.

பழங்குடியின பெண் என்பதால், புறக்கணிக்கப்படுகிறார் என்ற விமர்சனம் முன் வைக்கப்பட்டது.

ஆனால், ஜனாதிபதி தேர்தலில் முர்முவை முன்னிறுத்தியது பாஜக தான், இவற்றோடு ஏற்கனவே ஆளுநர் பதவி உட்பட பல பதவிகளை முர்மு அவர்களுக்குக் கொடுத்துள்ளது.

முர்முவுக்காகத் தற்போது பரிந்து பேசியவர்கள் அவருக்கு வாக்களிக்காமல் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட, யஷ்வந்த் சின்ஹாவுக்கு வாக்களித்தார்கள்.

அப்போது பழங்குடியின பெண்ணான முர்மு கண்களுக்குத் தெரியவில்லை. இது தொடர்பான கேள்விகளால் இக்கோஷம் நீர்த்துப்போனது.

இவர்களுக்கு முர்மு மீது அக்கறையில்லை, மோடி மீது காண்டு.

பின்னர், ஜனாதிபதி திறந்து வைக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டு, அவ்வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வீர சாவர்க்கர்

திறப்பு விழா வீர சாவர்க்கர் பிறந்தநாள் அன்று வருவதால், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். காரணம், வீர் சாவர்க்கர் ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்டார் என்பதற்காக.

ஆனால், அந்தமான் சிறையில் மிகக்கொடுமையான முறையில் தண்டிக்கப்பட்டவர். நேரு சிறையில் இருந்தார் ஆனால், சாவர்க்கர் போல மன்னிப்பு கேட்கவில்லை என்று விமர்சனம் எழுந்தது.

நேரு சிறையில் இருந்தாலும், அவருக்கு முதல் வகுப்புச் சிறை வழங்கப்பட்டது, கடுமையான கட்டுப்பாடுகள் எதுவும் அவருக்கு விதிக்கப்படவில்லை, மரியாதையுடனே நடத்தப்பட்டார்.

இந்நிலை சாவர்க்கருக்கு இல்லை, கொடுமையான முறையில் அவருக்குத் தண்டனைகள் கொடுக்கப்பட்டன, தினமும் நரக வேதனையை அந்தமான் சிறையில் அனுபவித்தார்.

சாவர்க்கர் போல ஒரு மாதம் சிறையில் கொடுமையை அனுபவித்தாலே சாவர்க்கரை கிண்டலடித்த ராகுல் தாக்குப் பிடிப்பாரா என்பது சந்தேகம்.

விரைவில் சாவர்க்கர் பற்றிய திரைப்படம் வெளிவர இருக்கிறது, அதில் என்ன நடந்தது என்று விரிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.

மேற்கூறிய குற்றச்சாட்டுகளால், சாவர்க்கர் பிறந்தநாளில் திறப்பு விழா செய்ய எதிர்க்கப்பட்டது ஆனால், மத்திய அரசு முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

செங்கோல்

இதன் பிறகு பிரிட்டிஷ் ஆட்சி மாற்றத்தின் போது வழங்கப்பட்ட செங்கோலை பாராளுமன்றத்தில் வைக்கப்போவதாக அமித்ஷா கூறியதும் திரும்பப் பரபரப்பானது.

இந்தியாக்கு விடுதலையைக் கொடுக்கப் பிரிட்டிஷ் தீர்மானித்தவுடன் அதை எப்படிச் செய்வது என்ற கேள்வி முன் வந்தது. ஆட்சி மாற்றத்தைச் செங்கோலை வைத்துச் செய்யலாம் என்று ராஜாஜி நேருக்கு ஆலோசனை வழங்கினார்.

அதாவது மவுண்ட் பேட்டனிடமிருந்து செங்கோலை நேரு பெற்று ஆட்சி மாற்றத்தை உறுதி செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

இதன் பிறகு திருவாவடுதுறை ஆதீனத்திடம் தெரிவிக்கப்பட்டு அவர் ஆலோசனையில் மெட்ராஸ் உம்மிடி பங்காரு நகைக் கடையில் இந்தச் செங்கோல் உருவாக்கப்பட்டது.

சோழர்களின் ஆட்சி காலத்தில் இருந்த செங்கோலின் மாதிரியில் உருவாக்கப்பட்டது. சோழர்கள் என்றில்லை அன்றைய மன்னர்கள் பெரும்பாலானவர்கள் ஆட்சியில் செங்கோல் இருந்தது.

இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்கவே இந்நடைமுறை உள்ளது. செங்கோல் என்பது மன்னராட்சியைக் குறிப்பதல்ல மாறாக, நேர்மையான, நடுநிலையான ஆட்சியைக் குறிப்பது.

இவ்வாறு சிறப்பு வாய்ந்த செங்கோலை மவுண்ட் பேட்டனிடமிருந்து பெற்று இந்திய ஆட்சி மாற்றத்தை, சுதந்திரத்தை உலகுக்கு அறிவித்தார்கள்.

ஆனால், இதன் பிறகு செங்கோல் என்ன ஆனது என்பது பற்றி யாரும் கேட்கவில்லை, அது பற்றிச் செய்தியும் இல்லை.

பாராளுமன்றம் திறக்கப்படப்போவதால், முந்தைய நடைமுறையில் பெறப்பட்ட செங்கோலை பாராளுமன்றத்தில் வைக்கத் தேடினார்கள்.

ஆனால், சிறப்பு வாய்ந்த செங்கோல் Golden Walking Stick (Gifted to Jawaharlal Nehru) என்ற பெயரில் அருங்காட்சியகத்தில் அதன் பெருமை உணராமல் வைக்கப்பட்டு இருந்தது.

மதிப்புமிக்க அந்தச் செங்கோல் சரியான இடத்தில் வைக்கப்பட வேண்டும் என்றே பாராளுமன்ற புதிய கட்டிடத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

மன்னராட்சியா?

தற்போது பாராளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் இந்தச் செங்கோலை வைக்கப்போவதாக அறிவிக்கப்பட்டதும் அடுத்தச் சர்ச்சை கிளம்பியது.

எதிர்ப்பு கிளம்பியது தமிழகத்தில் என்பது தான் வியப்பு.

மன்னர்கள் தான் செங்கோல் வைப்பார்கள் என்ற திராவிட மாடல், சென்னை மேயருக்கும் செங்கோல் கொடுத்ததை வசதியாக மறந்து (மறைத்து) விட்டது.

கட்சியில் பலரும் செங்கோல் கொடுத்த போது மகிழ்ச்சியாக வாங்கியவர்கள், இது மன்னராட்சியைக் குறிக்கும் என்று அப்போது மறுத்து இருக்கலாமே!

சோழ செங்கோலில் நந்தி உருவம் உள்ளது, இந்து மதத்தை முன்னிறுத்துகிறது என்று இங்குள்ள திராவிட மாடல் ஆட்சியாளர்கள், திருமா போன்றோர் கொந்தளித்தார்கள்.

இதே திராவிட மாடலார்கள் தான் சோழன் இந்து இல்லை, தமிழன் என்றார்கள். தற்போது எப்படிச் சோழன் இந்து மன்னன் ஆனார் என்று புரியாத புதிராக உள்ளது.

தமிழன் எப்படி இந்து ஆனார்?

அதாவது வாய் இருக்குதுனு இஷ்டத்துக்கு எதையாவது உளறினால் இப்படித்தான் எக்குத்தப்பாக மாட்டிக்கொண்டு விழிக்க வேண்டும்.

சைவம் வைணவம்

அப்போது சைவம் வைணவம் இரண்டு சமயங்கள் மட்டுமே இருந்தது. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இரண்டுமே பிரிக்க முடியாதவை, ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை.

இந்தியாவில் சைவம் வைணவம் மட்டுமே இருந்து, வேறு மதங்கள் இல்லாததால் இதற்கு மதத்தின் பெயர் அவசியமாக இருக்கவில்லை.

அதோடு இரு சமயங்களும் ஒரே வழிபாட்டு முறையைக் கொண்டவை.

தீவிர சைவ, வைணவர்களைத் தவிர அனைவருமே அனைத்து கடவுள்களையும் வணங்குவர். கோவில்களிலும் பெரும்பாலும் அனைத்து கடவுள்களுக்குமே வெல்வேறு அவதாரத்தில் சிலை இருக்கும்.

இஸ்லாத்தில் சன்னி, ஷியா இருப்பது போல இரு பிரிவுகள். ஒரே வித்யாசம் முஸ்லிம்களுக்கு ஒரே கடவுள் ஆனால், இந்து மதத்தில் பல கடவுள்கள் காரணம், இதுவே இந்து மதத்தின் சிறப்பு.

இதே போலக் கிறித்துவத்திலும் ஏராளமான பிரிவுகள் உள்ளது. இவர்களைப் பிரித்துப் பார்க்க முடியுமா?

சமயத்தில் சைவத்தை சோழன் பின்பற்றியதால், சிவனை, நந்தியை கடவுளாக வணங்கினான். அவன் செங்கோலில் நந்தி இடம்பெற்றது.

முகலாயர்கள், பிரிட்டிஷார் இந்தியாவில் நுழைந்த பிறகு இஸ்லாம், கிறித்துவம் வந்தது. எனவே, சைவம், வைணவத்தை இணைத்து புரிதலுக்காக ஆங்கிலேயன் இந்து மதம் என்று அழைத்தான்.

எனவே, இந்து மதம் பல ஆயிரம் காலம் முன்பிருந்தே உள்ளது ஆனால், ஆங்கிலேயன் இந்து மதம் என்று அழைத்ததாலே சோழன் இந்து இல்லை என்று ஆகிவிடுவானா?!

இந்தியப் பண்பாடு (கலாச்சாரம்)

என்ன தான் கதறினாலும் இந்தியப் பண்பாட்டை முன்னிறுத்துவது இந்து மதம் தான். இந்தியாவின் அடையாளம் இந்து மதமே.

இந்தியாவின் ஆரம்பம் இந்து மதம், மற்ற மதங்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவை அல்லது இந்து மதத்திலிருந்து பிரிந்தவை.

இதை நான் கூறவில்லை, சட்ட மாமேதை திரு அம்பேத்கர் அவர்களே இதனாலே இஸ்லாம், கிறித்துவத்துக்கு மாறாமல் பௌத்தம் தழுவியதாக கூறியுள்ளார்.

எனவே தான் அனைத்து வழக்கங்களும் இந்து மதத்தைச் சார்ந்து அல்லது அதனடிப்படையில் அமைந்துள்ளன.

பிடித்தாலும் பிடிக்கவில்லெயென்றாலும், பண்டை காலத்திலிருந்து இந்து மதத்தின் வழக்கங்களே ஒவ்வொரு செயலிலும், வழக்கங்களிலும், நடவடிக்கையிலும் பின்னிப் பிணைந்துள்ளது.

இந்து மதம் என்பது தமிழர், இந்திய பண்பாட்டில் இரண்டற கலந்துள்ளது. இந்து மதத்தைப் பிரித்து எந்தவொரு இந்திய பண்பாட்டையும் முதன்மை படுத்த முடியாது.

செக்குலர் என்ற பெயரில் இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை, பண்பாடு, வழக்கம் ஆகியவை அரசியலுக்காக எதிர்க்கப்படுகிறது.

இந்து மதத்தின் சிறப்புகளை, வழிமுறைகளை, பண்பாடுகளை அழிக்க மட்டுமே செக்குலர் என்ற வார்த்தை உதவுகிறது. இதை மோடி சரி செய்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் விமர்சனங்களைச் சாதியில் (முர்முவில்) ஆரம்பித்து மதத்தில் (செங்கோல்) முடித்துள்ளனர்.

தமிழர் பெருமை

தமிழகத்தின் செங்கோல் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டு, இங்குள்ள ஆதீனங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுப் பெருமைப்படுத்தப்பட்டுள்ளது.

இது போன்ற ஒரு பெருமை மற்ற 28 மாநிலங்களுக்குக் கிடைக்காத ஒன்று. செங்கோலில் தமிழ் வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளது. தமிழில் ஆதீனங்கள் மந்திரங்கள் கூற செங்கோல் வைக்கப்பட்டது.

தேவாரம் பாடப்பட்டு தமிழுக்கு சிறப்பு சேர்க்கப்பட்டுள்ளது.

செங்கோல் என்ற தூய தமிழ் வார்த்தை இந்தியாவில் உள்ள அனைத்து மொழியினராலும் மொழிக்கேற்றபடி மாற்றாமல் அப்படியே உச்சரிக்கப்படும் வார்த்தையாகியுள்ளது.

இந்நிகழ்வு தமிழர்களுக்கெல்லாம் பெருமை சேர்க்க கூடிய நிகழ்வு ஆனால், திராவிட மாடல் ஆட்சியாளர்களால் தமிழகம் இதைக்கொண்டாடவில்லை.

இதே செங்கோல் வேறு மொழியிலேயோ அல்லது வேறு மாநிலத்தை முன் நிறுத்தியோ நடைபெற்று இருந்தால், இதே திராவிட மாடல் ஆதரவாளர்கள் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாகக் கொந்தளித்து இருப்பார்கள்.

ஆனால், மற்ற மாநிலங்களிலிருந்து ஒரு விமர்சனம் கூட இது குறித்து வரவில்லை. யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஏன் தமிழுக்கு மட்டும் முக்கியத்துவம்? என்று கேட்கவில்லை.

இதையொரு இந்தியப் பண்பாட்டு நிகழ்வாகத் தான் அனைத்து மாநிலத்தினரும் கருதினர். இதுவொரு நல்ல மாற்றத்தை என்னில் கொடுத்துள்ளது.

மொழியை வைத்து, தமிழை வைத்துத் தமிழகத்தில் எப்படியொரு வியாபாரம் நடைபெறுகிறது என்பதைத் தமிழகத்துக்கு மற்ற மாநிலங்கள் உணர்த்தியுள்ளன.

வரலாற்று நிகழ்வு

பாராளுமன்ற புதிய கட்டிடம் நிகழ்வு அடிக்கடி நடப்பதல்ல, இனி இது போலக் கட்டிடம் கட்டப்பட 100 வருடங்களுக்கு மேல் ஆகலாம்.

ஆனால், எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளனர். இதில் செங்கோல் உட்பட தமிழுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் நிலையில் பெருமைகொள்ள வேண்டிய தமிழக MP க்கள் தவிர்த்துள்ளனர்.

மற்றவர்கள் தவிர்க்கலாம் ஆனால், தமிழர்கள் தவிர்க்கலாமா?! இந்தியளவில் தமிழக பண்பாடு கொண்டாடப்படும் வேளையில் அதில் பங்கு பெறுவது எவ்வளவு பெருமை.

பிரதமர் மோடி செங்கோலின் முன்னே தரையில் படுத்து வணங்கியதை அமைச்சர் மனோ தங்கராஜ் மிகக்கேவலமாக விமர்சனம் செய்துள்ளார்.

பலர் விமர்சித்ததால் ட்விட்டை நீக்கி விட்டார்.

பொறுப்பான பதவியில் இருப்பவரே மோசமாகக் குறிப்பிடும் போது மற்றவர்களிடம் அவற்றை எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை. கொத்தடிமையாக உள்ளவர்கள் மானம், ரோஷம் பற்றிப் பேசுவது தான் வியப்பாக உள்ளது.

செங்கோலை பாராளுமன்றத்தில் வைத்ததுக்கு, தமிழர்களைப் பெருமைப்படுத்தியத்துக்குத் தமிழகமே விழாக்கோலம் பூண்டு இருக்க வேண்டும்.

ஆனால், திராவிட ஆட்சியில் இவற்றை எதிர்பார்க்க முடியாது என்பதால், தமிழருக்குக் கிடைக்கும் பெருமைகளைக் கொண்டாட முடியாமல் ஏக்கமாகக் கடந்து செல்ல வேண்டியதாக உள்ளது.

இதே பெருமை வேறு மாநிலத்துக்கு, மொழிக்குக் கிடைத்து இருந்தால் நிலைமையே வேறாக மாறி இருக்கும்.

திராவிடம் ஒழிந்தாலே தமிழகம் இழந்த பெருமையைப் பெறும்!

தொடர்புடைய கட்டுரை

திராவிட மாடல் உருட்டல்கள்

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

7 COMMENTS

  1. “இதையொரு இந்தியப் பண்பாட்டு நிகழ்வாகத் தான் அனைத்து மாநிலத்தினரும் கருதினர். இதுவொரு நல்ல மாற்றத்தை என்னில் கொடுத்துள்ளது. “

    👍 ஒரு விதமான நேர்மறை எண்ணத்தை உருவாக்கியுள்ளது.

    “ பிரதமர் மோடி செங்கோலின் முன்னே தரையில் படுத்து வணங்கியதை அமைச்சர் தங்கம் தென்னரசு மிகக்கேவலமாக விமர்சனம் செய்துள்ளார்.”

    விமர்சித்தது மனோ தங்கராஜ். கிருத்துவ மதம் சார்ந்தவர். தன் மதத்தை தூக்கி பிடிக்கும் போது மட்டும் திராவிட கொள்கையை மறந்துவிடுவார்

  2. @பாலா சுட்டியமைக்கு நன்றி. இவர்கள் இருவர் பெயரிலும் எனக்கு அவ்வப்போது குழப்பம்.

  3. என்னுடைய எண்ணத்தை நீங்கள் அழகாக வடித்துள்ளீர்கள்.மிக்க நன்றி.

  4. Hi கிரி ,
    சிந்தனையை தூண்டும் பதிவு வாழ்த்துக்கள் !!!
    சில உங்களின் கருத்துக்களில் எனது பார்வை கீழே
    1) இந்நிலை சாவர்க்கருக்கு இல்லை, கொடுமையான முறையில் அவருக்குத் தண்டனைகள் கொடுக்கப்பட்டன, தினமும் நரக வேதனையை அந்தமான் சிறையில் அனுபவித்தார்.
    [அந்தமான் சிறை அதற்க்கு பேர் போனது . சாவர்க்கர் மட்டும் இல்லை ,அங்கு இருந்த அனைவருக்கும் இது நடந்தது .மேலும் சாவர்க்கர் இரண்டு முறை மன்னிப்பு கேட்டதாக ஞாபகம் . கூடுதல் தகவல் : பகத் சிங் மற்றும் அவருடன் இருந்தவர்கள் மன்னிப்பு கேட்க மறுத்து மரணம் எய்தினர் . ஆகையால் சாவர்க்கர் கேலி பொருள் ஆகிவிட்டார் !!!]
    2)இந்தியாக்கு விடுதலையைக் கொடுக்கப் பிரிட்டிஷ் தீர்மானித்தவுடன் அதை எப்படிச் செய்வது என்ற கேள்வி முன் வந்தது. ஆட்சி மாற்றத்தைச் செங்கோலை வைத்துச் செய்யலாம் என்று ராஜாஜி நேருக்கு ஆலோசனை வழங்கினார்.
    அதாவது மவுண்ட் பேட்டனிடமிருந்து செங்கோலை நேரு பெற்று ஆட்சி மாற்றத்தை உறுதி செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
    [இவை எதற்கும் துளி கூட ஆதாரம் இல்லை !!! செங்கோல் நேரு வுக்கு கொடுத்த நினைவு பரிசு என்று சொல்ல படுகிறது .]
    3)இந்தியாவில் சைவம் வைணவம் மட்டுமே இருந்து, வேறு மதங்கள் இல்லாததால் இதற்கு மதத்தின் பெயர் அவசியமாக இருக்கவில்லை.
    [சைவமும் வைணவமும் இரு மதங்கள் தமிழ்நாட்டில் தோன்றியவை (மேலும் 4 வழிபாட்டு முறைகளும் இங்கு இருந்தன. 5ஆம் நூற்றாண்டில் சங்கரர் இந்த 6 மதங்களையும் இணைத்து ஷண்மதம் என்றார். இதுவே பின்னாளில் ஹிந்து மதம் என்று ஆங்கிலேயரால் பெயர் பெற்றது . மேலும் வைதீக மதம் /வைதீகம் (வேதத்தை மூலமாக கொண்டு உருவான வேத மதம் . ஹிந்து மதத்தின் முன்னோடி ) ,பௌத்தம் மற்றும் சமணம் வடநாட்டில் தோன்றியவை.]
    4)இந்தியாவின் ஆரம்பம் இந்து மதம், மற்ற மதங்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவை அல்லது இந்து மதத்திலிருந்து பிரிந்தவை.இதை நான் கூறவில்லை, சட்ட மாமேதை திரு அம்பேத்கர் அவர்களே இதனாலே இஸ்லாம், கிறித்துவத்துக்கு மாறாமல் பௌத்தம் தழுவியதாக கூறியுள்ளார்.
    [பௌத்தம் ,ஹிந்து மதத்தை எதிர்த்து உருவான மதம். நான் ஹிந்துவாக பிறந்தேன் ஆனால் ஹிந்துவாக சாக மாட்டேன் – அண்ணல் அம்பேத்கர் . அவரது உறுதி மொழிகள்
    1) “நான் பிரம்மா ,விஷ்ணு ,சிவன் ஆகியோரை கடவுளாக ஏற்க மாட்டேன். அவர்களைக் கடவுளாக வணங்க மாட்டேன்.

    2) இராமனையோ ,கிருஷ்ணனையோ கடவுளாக நான் மதிக்க மாட்டேன். அவர்களைக் கடவுளாக வழிபடவும் மாட்டேன்.

    3) கவுரியையோ, கணபதியையோ கடவுளாக நான் மதிக்க மாட்டேன். அவர்களைக் கடவுளாக வழிபடவும் மாட்டேன்.

    4). கடவுள்களின் அவதாரத் தத்துவத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை.

    5) புத்தரை, விஷ்ணுவின் அவதாரம் என்பது பொய் மற்றும் விஷமத்தனமான பிரச்சாரம்.

    6) சிரார்த்தம் (இறந்து போன உறவினரின் பாதுகாப்புக்காகச் செய்யப்படும் சடங்கு ) கொடுப்பது, கடவுளுக்குக் காணிக்கை கொடுப்பது ஆகிய செயல்களில் எப்போதும் ஈடுபடவே மாட்டேன்.

    7) பௌத்தத்திற்குக் கேடு விளைவிக்கும் எச்செயலிலும் ஈடுபட மாட்டேன்.

    8) பிராமணர்கள் செய்ய வேண்டிய எந்த சடங்குகளையும் நான் செய்ய மாட்டேன்.

    9) எல்லா மனிதர்களும் சமமானவர்கள் என்று நான் நம்புகிறேன்.

    10) நான் சமத்துவத்தை நிலைநாட்ட அயராது உழைப்பேன்

    11) புத்தர் வகுத்து கொடுத்த எண்வழி மார்க்கப் பாதையில் பயணிப்பேன்.

    12)புத்தர் கூறியப்படி முழு நிறைவாக்கும் பத்து நல்லொழுக்கங்களை தவறாது கடைபிடிப்பேன்.

    13) எல்லா உயிர்களிடத்தும் இரக்கத்தோடும், அன்போடும் இருப்பேன்.

    14) நான் திருட மாட்டேன்.

    15) நான் பொய் சொல்ல மாட்டேன்

    16) நான் பாலியல் தொடர்புடைய தவறுகளில் ஈடுபட மாட்டேன்.

    17) நான் மது அருந்த மாட்டேன்.

    18) பௌத்தத்தின் அடிப்படை கொள்கைகளான மெய்யறிவு , அறநெறி ,கருணை ஆகியவற்றை பின்பற்றி வாழ்வேன்.

    19)சமத்துவமின்மையையே அடிப்படையாக கொண்டு மானுடத்திற்கு தீங்கு விளைவிப்பதாகவும் மானுட முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு தடையாகவும் உள்ள இந்து மதத்தை விடுத்து நான் பௌத்தத்தை ஏற்கிறேன்.

    20) பௌத்தமே சரியான நன்னெறி என நான் முழுமையாக நம்புகிறேன்.

    21) பௌத்தத்தை உளமார ஏற்றதால் நான் புதுப் பிறப்பெடுக்கிறேன்.

    22) இன்று முதல் புத்தருடைய கருத்துக்கள் வழி வாழ்வேன் என்று சூளுரைக்கிறேன். ]

  5. கிரி, நானும் இந்த செய்தியை அறிந்ததும் ஒரு இந்தியனாக, இந்துவாக பெருமையாக உணர்ந்தேன். ஆனால் சில விடயங்களை வாசிக்கையில் ஒரு வகையான தெளிவடைந்தேன்.

    புதிய பாராளுமன்றம் கட்டியதற்கு மோடி அவர்களுக்கு பாராட்டுகள் ! 2 வருடத்தில் 6000 பேர்களின் கடின உழைப்பில் உருவாகி இருக்கிறது. இதன் Architect Bimal Patel க்கும், சிறப்பாக கட்டிக் கொடுத்த Tata குழுமத்திற்கும் நன்றிகள். இந்தியா ஆங்கிலேயர்களின் அடிமைதனத்திலிருந்து வெளியே வந்து கொண்டுஇருக்கிறது என்பதற்கு இது அடையாளம். இந்திய சுய சார்ப்புக்கு ஒரு பெருமை.

    பாஜக சிறந்த அரசியல் கட்சி என்று மறுபடியும் நிருபித்து உள்ளது. புதிய பாராளமன்றத்தில் ஒரு அடையாள சின்னம் வைக்க வேண்டும் அதை மத அடையாளம் இல்லை என நிரூபிக்க வேண்டும் என்பதற்கு இவர்கள் எடுத்தது தான் செங்கோல். இது ஏற்கனவே நேரு அவர்களிடம் கொடுக்கப்பட்டு, மியூசியத்தில் அவரின் walking stick என்று அடையாள படுத்தபட்டதால், இதன் மூலம் காங்கிரஸ் கட்சியையும் சாடி, நாங்கள் பாரம்பரியத்தை மீட்கிறோம். நாங்கள் நடத்தும் ஆட்சி கடவுளின் முழு ஆசியுடன் நடைபெறுகிறது என்று நிறுவதற்க்கான ஒரு முயற்சி. இதில் பெருமளவு வெற்றியும் கண்டு இருக்கிறது.

    1.செங்கோல் ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக நேரு அவர்களிடம் Aug 14, 1947 நள்ளிரவில் கொடுக்கப்பட வில்லை. அதற்க்கான ஆதாரங்களும் இல்லை. ஆதீனங்கள், புதிதாக அமையவுள்ள இந்திய அரசுக்கு வாழ்த்து சொல்லி, செங்கோலை அவருக்கு பரிசாக கொடுத்திருக்கலாம். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிருந்து சமய குருமார்கள் நேரு அவர்களை சந்தித்தார்கள்.அவர்களும் பரிசு பொருட்களை கொடுத்தார்கள்.

    2.இது சோழ செங்கோல் இல்லை. திருவாவடுதுறை ஆதீனம் 14 ம் நூற்றாண்டில் நமசிவாய மூர்த்திகள் அவர்களால் தோற்றுவிக்கப்பெற்றது.சோழ பேரரசு 12 ம் நூற்றாண்டிலே அதன் வலிமையை இழந்து சிற்றரசாக இருந்தது. சோழ மரபை சார்ந்து இதன் வடிவமைப்பு இருக்கலாம் . செங்கோல், வட இந்திய மன்னர்களாலும் உபயோக படுத்தப்பட்டுள்ளது.

    3.சைவம் , வைணவம் பெரும் மாதங்களாக மாறுவதற்கு முன்பு, இந்திய மண்ணில் 6 மதங்கள் இருந்தன – சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்யம், சௌரம். ஆதி சங்கரர் 8 ம் நூற்றாண்டில் இதை அனைத்தையும் இணைத்து இந்து மதம் என்ற கட்டமைப்புக்குள் கொண்டு வந்தார். இதற்க்கு முன்பு பௌத்தமும் , சமணமும் இந்தியாவில் மேலோங்கி இருந்தது. சாக்தம், கௌமாரம், காணாபத்யம் மதங்களை உள்வாங்கி சைவமும், சௌரத்தை இணைத்து கொண்டு வைணவமும் பெரும் மதங்களாக உரு பெற்றது.

    4. மோடி அவர்கள் பௌத்த , சமண மற்றும் வைணவ குருமார்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும். அவர்களை சந்தித்து இருக்க வேண்டும். இந்து மதத்தில் பௌத்த மற்றும் சமண மதத்தின் கோட்பாடு, விழுமியங்களின் தாக்கம் பெருமளவில் உள்ளது.

    5. இந்திய அரசு ஆதீனங்களுக்கு உரிய மரியாதையை கொடுத்தார்கள். ஆனால் மரபு படி, மன்னன் தான் அவர்களை தேடிச் செல்ல வேண்டும். ஆதீனங்கள் ஆட்சியாளர்களின் முன்பு இப்படி நிற்க தேவை இல்லை. அவர்களுக்கு நாடோ அரசோ ஒரு பொருட்டே இல்லை.அவர்கள் அனைத்தையும் கடந்தவர்கள், ஆன்மீகத்தை பரப்புவதும், சேவை மட்டுமே அவர்களின் வாழ்கை இலக்கு.

    6.பண்பாட்டை மீட்கிறேன் என்று இவர்கள் முழுவதுமாக இந்து மதத்தின் உட் பிரிவுகளில் தலையிடுகிறார்கள். பன்முக தன்மை கொண்ட இந்து மதத்தை ஒற்றைபடையாக்கி அரசியல் யுக்தியாக பயன் படுத்துகிறார்கள்.
    இதை நாம் விமர்ச்சித்து தான் ஆக வேண்டும்.

    எப்பவும் போல, இதில் எதிர் கட்சிகள் அவர்களின் வாதத்தை ஒழுங்காக எடுத்து வைத்து அரசியல் செய்யவில்லை. ஊடக வாதிகளும் சரியான கேள்விகளை அரசியல் வாதிகளிடம் கேட்கவும் இல்லை.

  6. @மணிகண்டன்

    “புதிதாக அமையவுள்ள இந்திய அரசுக்கு வாழ்த்து சொல்லி, செங்கோலை அவருக்கு பரிசாக கொடுத்திருக்கலாம்.”

    நீங்க கூறுவது லாஜிக்காக சரியாக இருந்தாலும், இது போன்ற பரிசுப் பொருளுக்கு ஆதீனம் இவ்வளவு மெனக்கெட மாட்டார்கள்.

    ஆதீனங்கள் ஆன்மீக ரீதியான பரிசுப்பொருளை கொடுத்து இருப்பார்களே தவிர செங்கோலை கொடுத்து இருக்க மாட்டார்கள், அதற்கான அவசியமும் இல்லை.

    அதோடு செங்கோல் முழுவதும் தங்கத்திலானது இவ்வளவு செலவு செய்து ஆதீனம் பரிசு கொடுப்பார்களா? அரசு பொறுப்பில் உள்ளவர்கள் முயற்சித்தாலே இவை நடக்கும்.

    “இது சோழ செங்கோல் இல்லை”

    இதைக்கட்டுரையிலேயே கூறி உள்ளேனே. இது ‘மாதிரி’ செங்கோல் தான், சோழ செங்கோல் கிடையாது. ஒரிஜினல் எங்கே சென்றது என்று யாருக்கும் தெரியாது.

    “மோடி அவர்கள் பௌத்த, சமண மற்றும் வைணவ குருமார்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும். ”

    சர்வமத பிரார்த்தனை நடைபெற்றது. அனைவரையும் மோடி சந்தித்தார் (முஸ்லீம் கிறித்துவர்கள் உட்பட). இது பற்றி ஊடகங்களில் அதிகம் வரவில்லை.

    வரவில்லையா அல்லது வேண்டும் என்றே புறக்கணிக்கப்பட்டதா என்று தெரியவில்லை.

    இதுவே தெரியாமல் தந்தி அசோக வர்த்தினியிடம் திருமா பேசினார்.

    “மரபு படி, மன்னன் தான் அவர்களை தேடிச் செல்ல வேண்டும். ஆதீனங்கள் ஆட்சியாளர்களின் முன்பு இப்படி நிற்க தேவை இல்லை. அவர்களுக்கு நாடோ அரசோ ஒரு பொருட்டே இல்லை.அவர்கள் அனைத்தையும் கடந்தவர்கள், ஆன்மீகத்தை பரப்புவதும், சேவை மட்டுமே அவர்களின் வாழ்கை இலக்கு.”

    மோடி இதை செய்ததற்கே பல பக்கங்களிலிருந்து எதிர்ப்பு, அங்கேயே சென்று இது நடைபெற்று இருந்தால், ஏகப்பட்ட பஞ்சாயத்து ஆகி இருக்கும்.

    கால மாற்றத்தில் சில மாற்றங்களும் தவிர்க்க முடியாதது. இது மதம் என்றாலே கால மாற்றத்துக்கு ஏற்பத் தன்னை தகவமைத்துக்கொள்வது தான்.

    “பண்பாட்டை மீட்கிறேன் என்று இவர்கள் முழுவதுமாக இந்து மதத்தின் உட் பிரிவுகளில் தலையிடுகிறார்கள். பன்முக தன்மை கொண்ட இந்து மதத்தை ஒற்றைபடையாக்கி அரசியல் யுக்தியாக பயன் படுத்துகிறார்கள். இதை நாம் விமர்ச்சித்து தான் ஆக வேண்டும்.”

    மணிகண்டன் நீங்கள் விருப்பத்தை, நடைமுறையைக் கூறுகிறீர்கள், மோடி எதார்த்தத்தை பின்பற்றுகிறார். இருப்பதற்குள் சாத்தியம் என்னவென்று முயற்சிப்பதே சரியானது.

    அனைவரையும் திருப்தி செய்ய யாராலும் முடியாது.

    என்னைப்பொறுத்தவரை இந்து மத வழிமுறையில் நடைபெறுகிறது, அது எந்த உட்பிரிவை முன்னிறுத்தி நடந்தாலும் அது பற்றிக் கவலையில்லை.

    எந்தப் பிரிவை முன்னிறுத்தி நடைபெற்றாலும், அதை ஒரு இந்து வழிமுறையாக தான் பெரும்பாலான இந்துக்கள் கருதுவார்களே தவிர, பிரித்துப் பார்க்கிறார்கள் என்று நினைக்கப்போவதில்லை.

    சிலர் நினைக்கலாம், அவர்களைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. காரணம், முன்னரே கூறியபடி அனைவரையும் யாராலும் திருப்தி செய்ய முடியாது.

    இவ்வளவு நாட்களில் இது போலப் பேசியதை உங்களிடமிருந்து மட்டுமே கேட்டுள்ளேன்.

    நீங்கள் கூறுவது போல இந்து மதத்தின் அனைத்து உட்பிரிவுகளையும் முன்னிறுத்த வேண்டும் என்றால், அதற்கு இந்தியா இந்து நாடாக இருக்க வேண்டும்.

    மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மதத்தின் வழிமுறைகளை, இந்தியாவின் பண்பாட்டை, அடையாளத்தை தொடர்ந்து அழித்து வருகிறார்கள்.

    தமிழகமே இதற்கு சிறந்த உதாரணம்! திராவிட கட்சிகளால் இந்து மதத்தின் சிறப்புகள் அனைத்தும் அழிக்கப்பட்டு வருகிறது. இந்து மதத்தின் சிறப்புகள் மங்கி வருகிறது.

    அதை மோடி முடிந்தவரை தனது அதிகாரத்துக்குட்பட்ட இடங்களில் மீட்டெடுத்து வருகிறார். இதற்கு அவரை பாராட்ட வேண்டும்.

    இதிலும் அதை ஏன் செய்யவில்லை, இதை ஏன் கேட்கவில்லை என்று முரண்படுவது சரியல்ல.

    இவ்வளவு காலமாக யாருமே எதையும் முன்னெடுக்காத நிலையில், அதை மோடி முன்னெடுத்து செயல்படுத்தியுள்ளார். எனவே, நியாயமாக இதற்கு இந்துக்கள் கடமைப்பட்டுள்ளோம்.

    இந்து மதத்தை ஒற்றைப்படை ஆக்கவில்லை, யாராலும் ஆக்கவும் முடியாது. அதுவே இந்துமதத்தின் சிறப்பு.

    இருப்பதற்குள் இந்து மதத்தைப் பெருமைப்படுத்த உள்ள வழிமுறைகளில் ஒன்றை மோடி செயல்படுத்தியுள்ளார், அவ்வளவே!

    இதை நாம் Personal ஆக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

    இதுவரை யாருமே செய்யாததை மோடி செய்துள்ளார் எனும் போது செய்த அவரையும் இது போல விமர்சிப்பது நியாயமற்றது என்பது என் தனிப்பட்ட கருத்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!