DahaaD (2023) Web Series | A Serial Killer

4
Dahaad

ந்தியில் வந்துள்ள தரமான சீரிஸ்களில் ஒன்றாக Dahaad அனைவரிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. Image Credit

Dahaad

ராஜஸ்தானில் ஏழ்மை நிலையில் உள்ள பெண்கள் காதலருடன் ஓடி விடுகிறார்கள், பின்னர் சயனைடு மூலம் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

துவக்கத்தில் காவல்துறை ஏழ்மையான குடும்பங்கள் என்பதால், கண்டுகொள்ளாமல் இருக்கிறது ஆனால், ஒரு சம்பவம் அரசியலானதால் முக்கியத்துவம் பெறுகிறது.

இதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் நேரத்தில் தான், மாநிலம் முழுக்கப் பல்வேறு இடங்களில் இதே போலச் சம்பவங்கள் நடைபெற்றது தெரியவருகிறது.

யார் செய்தார்கள்? எப்படிச் செய்தார்கள்? என்பதை கண்டறிவதே Dahaad.

காவல்துறை

காவல் அதிகாரியாகத் தேவிலால், அவரின் அடுத்த நிலையில் அஞ்சலியாகச் சோனாக்ஷி சின்ஹா, அவரோடு கைலாஷ்.

உயர் அதிகாரி தேவிலாலுக்குப் பொருத்தமான கதாப்பாத்திரம். பிரச்சனைகளைப் பக்குவமாகக் கையாள்வது, நிதர்சனத்தை உணர்ந்து நடப்பது என்று சிறப்பு.

கைலாஷ் கதாப்பாத்திரம் சுவாரசியமானது. துவக்கத்தில் அவரை வில்லனைப் போலக் காட்டி பின்னர் வேறு மாதிரி கொண்டு வருகிறார்கள்.

துவக்கத்தில் எந்தப்பக்கம் சென்றாலும் முட்டுச் சந்தாக இருக்க, பின்னர் துப்பு கிடைத்து சென்றால், குழப்பமான நிலையாகி விடுகிறது.

ஆனால், ஒவ்வொரு இடத்திலும் எப்படிச் செல்கிறார்கள்? விசாரிக்கிறார்கள்? என்பது அட்டகாசம். லாஜிக் மீறாமல் சீரிஸ் முழுக்கவே நம்பும்படி எடுத்துள்ளார்கள்.

இவர்களுக்கு இருக்கும் பெரிய குழப்பம் எப்படி பெண்களைத் தற்கொலை செய்ய வைக்கிறான் என்பது தான்.

எப்படித் தற்கொலை செய்கிறார்கள்? என்று நமக்கும் குழப்பமாக இருக்கும், கொலையென்றால் சரி ஆனால், அனைவருமே ஒரே மாதிரி சயனைடு தற்கொலை என்றால்..!

இறுதியில் எப்படிச் செய்கிறார் என்று அறிய நேரும் போது அடப்பாவி! என்று இருக்கும்.

மதம் சாதி

துவக்கத்திலேயே இந்து அமைப்பு / கட்சி ஒன்று பிரச்சனை செய்வதாகக் காட்டுகிறார்கள், இதை வழக்கமாக இந்தி சீரீஸ்களும், பாலிவுட் படங்களும் தொடர்ச்சியாகச் செய்துகொண்டுள்ளன.

முஸ்லீம் பசங்க இந்து பெண்களைக் காதலிப்பது, இறுதியில் இந்துக்களை வில்லனாக்குவது. இது தான் பாலிவுட் வழக்கம், இதனாலயே அவ்வப்போது #BoycottBollywood tag ட்ரெண்டாகும்.

அது தான் இதிலும் தொடர்கிறது ஆனால், மதரீதியான பிரச்சனைகளை ஒரேடியாகத் திணிக்கப்பட்டது என்று கூற முடியாது காரணம், இப்பிரச்சனையை வைத்துத் தான் வழக்கே பரபரப்பாகும்.

துவக்கத்தில் கடுப்பாக இருந்தாலும், பின்னர் மதத்திலிருந்து விலகிப் பயணித்துச் சாதியில் முடிகிறது. இதையொரு குறையாகக் கூற முடியாத அளவுக்கு நுணுக்கமாகத் திரைக்கதை அமைத்துள்ளார்கள்.

சோனாக்ஷி பட்டியலின வகுப்பைச் சார்ந்தவராக வருகிறார். Anjali Bhaati யில் Bhaati என்பது சாதியைக்குறிக்கும் என்பதே சீரீஸ் முடியும் போது தான் புரிந்தது.

பட்டியலின சாதியால் சோனாக்ஷிக்கு ஏற்படும் அவமரியாதை சீரீஸ் முழுக்க இடையிடையே வருகிறது. அதை எவ்வாறு அசால்ட்டாகக் கடக்கிறார் என்பது ரசிக்க வைக்கிறது.

குறிப்பாக ஒரு இடத்தில் வீட்டினுள் அனுமதிக்க மறுக்க, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது என்று கூறிக் கெத்தாகச் செல்வது சிறப்பு.

குளிர் கண்ணாடி அணிந்து கொண்டு புல்லட்டில் அதிரடியாக வலம் வருவதால், இளைஞர்களிடையே லேடி சிங்கம் என்று கிண்டலடிக்கப்பட்டுத் திட்டு வாங்குவார்கள்.

ஆனந்த்

சீரியல் கொலையாளியாக ஆனந்த்.

குடும்பத்தலைவன், அப்பா, கணவன், அண்ணன், ஆசிரியர் என்று எந்தச் சந்தேகமும் வராத நபராக இருப்பார் ஆனால், 27 கொலைகளைச் செய்து இருப்பார்.

என்னங்க! இப்படிப் பொசுக்குன்னு யார் சீரியல் கொலையாளின்னு சொல்லிட்டீங்களே! ன்னு நினைப்பது தெரிகிறது 🙂 .

முதல் எபிசோடிலேயே நமக்குச் சந்தேகம் வரும், இரண்டாவது எபிசோடிலேயே யார் என்று உறுதியாகத் தெரிந்து விடும். எனவே, சஸ்பென்ஸ் எதுவுமில்லை.

ஆனால், அவரை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதே மீதமுள்ள பரபரப்பான திரைக்கதை.

வியப்பு என்னவென்றால், இரண்டாவது எபிசோடிலேயே இவரைத் தெரிந்து, காவல்துறைக்குச் சந்தேகம் வந்து விடும் (பார்வையாளருக்கு உறுதியாகி விடும்).

ஆனால், ஆதாரம் கிடைக்காததால், தலையைப் பிய்த்துக் கொள்வார்கள்.

எவ்வளவு தான் திட்டமிட்டுத் தவறுகள் செய்தாலும், எங்காவது தவறு நடக்கும் அல்லது கவனக்குறைவாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு இடத்தில் மாட்டிக்கொண்டாலும், அதையும் திறமையாகக் கையாள்வார்.

இவர் செய்த தவறுக்கு ஆனந்த்தின் தம்பி மாட்டிக்கொள்வார்.

விசாரணையில் அவரது நடிப்பு அசத்தல். நான் தவறே செய்யவில்லை என்னை ஏன் கைது செய்தீர்கள் என்ற படபடப்பு, பயம், குழப்பம், அப்பாவித்தனம் அனைத்தையும் கொண்டு வந்துள்ளார்.

துவக்கத்தில் சாதாரண ஒரு கதாப்பாத்திரமாக வந்தாலும், இக்காட்சியில் தன் தேர்வை மிகச்சிறப்பாக நியாயப்படுத்தியுள்ளார்.

ஏமாறும் பெண்கள்

மனுசன் பேசிப்பேசியே பொண்ணுகளை மடக்கி விடுவார்.

ஆனந்த் தேர்ந்தெடுக்கும் பெண்கள் அனைவருமே ஏழ்மை நிலையிருப்பவர்கள், திருமணக் கட்டாயத்தில், வரதட்சணை பிரச்சனையில் இருப்பார்கள், அன்பாகப் பேசுவதற்காக விரும்புபவர்கள்.

பார்க்க அப்பாவி போலத் தோற்றமளித்து, அனைவரையும் நம்ப வைக்கும்படி பேசி ஏமாற்றுவது திகில் ரகம். இவர் குறி எப்போதுமே எதையும் நம்பும் பெண்கள் தான்.

எதிர்ப்பு தெரிவித்தால், மன்னிப்புக் கேட்டுக்கொண்டு விலகி விடுவார்.

அப்பாவி பெண்களை ஏன் இப்படிச் செய்தாய் என்று சோனாக்ஷி கேட்டதுக்கு, ஆனந்த் கொடுக்கும் பதில் அதிர்ச்சியாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாயம்.

27 கொலைகள் என்பதை 10 என்று குறைத்து இருக்கலாம், மிகைப்படுத்தியதாகத் தோன்றுகிறது. காரணம், தற்கொலை செய்தவர்கள் அனைவருமே சயனைடால் தற்கொலை செய்து இருப்பார்கள்.

எனவே, ஓரிருவர் என்றால் காவல்துறை கண்டுகொள்ளாமல் இருக்கலாம் ஆனால், 27 பேர் வரை சயனைடு பயன்படுத்தித் தற்கொலை எனும் போது நிச்சயம் காவல்துறையில் விவாதிக்கப்பட்டு இருக்கும்.

ராஜஸ்தான்

நமக்கு ராஜஸ்தான் மாநிலத்தையே சுற்றிக்காட்டி விட்டார்கள்.

நான் செல்ல விரும்பும் இடத்தில் ராஜஸ்தானும் இருப்பதால், மிக ஆர்வமாகப் பார்த்தேன். சீரீஸை ரசிக்க ராஜஸ்தானும் ஒரு காரணம்.

இங்கே உள்ள இடங்கள், மனிதர்கள், அவர்களிடையே உள்ள அரசியல், சாதி என்று அனைத்தையும் உறுத்தல் இல்லாமல் காட்டியுள்ளார்கள்.

இதோடு குட்டி போனஸாகக் கோவாவையும் சுற்றிக்காட்டியுள்ளார்கள், கேரளா சாயலில் இடங்கள் உள்ளன.

அனைத்து இடங்களையும் ஒளிப்பதிவு அப்படியே பதிவு செய்துள்ளது, எங்குமே செயற்கையான இடமாகத் தெரியாதது சிறப்பு. ராஜஸ்தான், கோவா சுற்றுலா போன மாதிரி இருந்தது 🙂 .

பின்னணி இசையும் விசாரணை சீரீஸ்க்கு ஏற்றார் போல அமைந்துள்ளது.

யார் பார்க்கலாம்?

விசாரணை, த்ரில்லர் படங்களில் ஆர்வமுள்ளவர்களும், ராஜஸ்தான் வாழ்க்கை முறைகளைத் தெரிந்து கொள்ள விரும்புவர்களும் பார்க்கலாம்.

குடும்பத்துடன் பார்க்க ஏற்றதில்லை. சில அடல்ட் காட்சிகள் உள்ளது.

Paatal Lok | பூலோக நரகம் சீரீஸுக்கு பிறகு கவர்ந்த சீரீஸாக Dahaad உள்ளது.

Amazon Prime ல் காணலாம். பரிந்துரைத்தது விஸ்வநாத்.

Created by Reema Kagti, Zoya Akhtar
Screenplay by Reema Kagti, Ritesh Shah, Zoya Akhtar
Directed by Reema Kagti, Ruchika Oberoi
Starring Sonakshi Sinha, Gulshan Devaiah, Vijay Varma, Sohum Shah, Kaviraj Laique
Music by Gaurav Raina, Tarana Marwah
Country of origin India
Original language Hindi
No. of episodes 8
Production Producers Ritesh Sidhwani, Zoya Akhtar, Reema Kagti, Farhan Akhtar, Kassim Jagmagia, Angad Dev Singh, Sunitha Ram
Cinematography Tanay Satam
Editor Anand Subaya
Original network Amazon Prime Video
Original release 12 May 2023

Amazon Prime ல் காணலாம். தமிழ் டப்பிங் உள்ளது. துவக்கத்தில் கடுப்பாக இருந்தது, பின்னர் பழகி விட்டது.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

 1. கிரி. எங்க பார்த்தாலும் செங்கோல் பத்தி பேசறாங்க. எனக்கு அது கொஞ்சம் புரியல. அத பத்தி கட்டுறை போடுங்க

 2. கிரி, உங்க விமர்சனத்தை படிக்கும் போதே இந்த வெப் சீரியஸ் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது.. நான் ஆரம்பத்தில் அதிக அளவில் ஹிந்தி படங்களை பார்த்து வந்தேன்.. தற்போது வெகு அரிதாக தான் பார்க்கிறேன்..

  சமீபத்திய ஹிந்தி படங்களும் பெரிய அளவில் போகவில்லை என்று தான் செய்திகளில் படித்தேன்.. ஆரம்பத்தில் ஹிந்தி படங்களை நான் பெரிதும் விரும்ப காரணம், பாடல்கள் மட்டும் ஒளிப்பதிவு.. 90ஸ் படங்களாக இருந்தாலும் ஒளிப்பதிவு தெளிவாக இருக்கும்..சில பாடல்களை தற்போதும் விரும்பி கேட்டு வருகிறேன்..

  நேரம் கிடைக்கும் போது Blackmail (2018 film) இர்பான் கான் நடித்த இந்த படத்தை பார்க்கவும்.. படம் மிக பெரிய ஹிட் ஆகவில்லையென்றாலும் படத்தை இயக்குனர் நன்றாக எடுத்து இருப்பார்.. இர்பான் கானின் நடிப்பு மிகவும் யதார்த்தமாக இருக்கும்..

 3. @ஹரிஷ் எழுதியுள்ளேன் ஆனால், என் பாணியில்.

  @யாசின்

  “சமீபத்திய ஹிந்தி படங்களும் பெரிய அளவில் போகவில்லை என்று தான் செய்திகளில் படித்தேன்”

  ஆமாம். பதான் படம் மட்டுமே சிறப்பாக ஓடியது.

  “ஆரம்பத்தில் ஹிந்தி படங்களை நான் பெரிதும் விரும்ப காரணம், பாடல்கள் மட்டும் ஒளிப்பதிவு.. 90ஸ் படங்களாக இருந்தாலும் ஒளிப்பதிவு தெளிவாக இருக்கும்..சில பாடல்களை தற்போதும் விரும்பி கேட்டு வருகிறேன்.”

  எனக்கும் பல பழைய படங்கள் பிடிக்கும் அதில் DDLJ முக்கியமானது.

  சில படங்களில் பாடல்கள் ரொம்ப ரொம்ப பிடிக்கும். Baazigar விருப்ப பாடல்கள். இதைக்கூறிய பின் திரும்ப கேட்கத்தோன்றுகிறது 🙂 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here