நூடுல்ஸ் (2023) | பதட்டமோ பதட்டம்

11
நூடுல்ஸ்

சில நேரங்களில் சில படங்கள் நம்மைத் திகைக்க வைக்கும், அப்படியொரு படம் நூடுல்ஸ். Image Credit

நூடுல்ஸ்

வார இறுதியில் இரு குடும்பத்தினர் மொட்டைமாடியில் அந்தாக்ஷரி பாடிக்கொண்டு இருந்ததால் ஏற்பட்ட சத்தத்துக்குப் புகார் வருகிறது.

இதை விசாரிக்க அதே இரவில் காவல்துறை வர, அவர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம் பிரச்சனையில் சென்று முடிகிறது.

இதைத்தொடர்ந்து அடுத்த நாள் எதிர்பாராத கொலையில் முடிய, பிரச்சனை இடியாப்ப சிக்கலாகி, இறுதியில் என்ன ஆகிறது என்பதே நூடுல்ஸ்.

நேரடிக்கதை

தமிழில் நேரடியாகக் கதைக்கு வரும் திரைப்படங்கள் மிகக்குறைவு. தேவையில்லாததெல்லாம் பேசி, இடைவேளையில் தான் கதையே ஆரம்பிக்கும்.

ஆனால், நூடுல்ஸ் படத்தில் கிட்டத்தட்ட 10 வது நிமிடத்தில் துவங்கி நம் இதயத்துடிப்பை எகிற வைத்து விட்டது.

அந்தாக்ஷரி பாடுவதைக் கேட்கும் போது என்னடா இது! படத்தை ஆரம்பிக்காமல் இப்படி பாடிட்டே இருக்கிறார்களே என்று எரிச்சலானது.

ஆனால், அதன் பிறகு ஆரம்பித்த கதை புயல் வேகத்தில் சென்று எப்படா முடியும் என்று நினைக்கும் அளவு பதட்டத்துக்கு மேல் பதட்டமாக செல்கிறது.

சிறிய படம் என்பதால், விரைவிலேயே இடைவேளை வந்து விட்டது. இடைவேளை வந்த பிறகே ‘அப்பாடா! படம் விரைவில் முடிந்து விடும்‘ என்று நிம்மதியானேன்.

Prison Break, Fauda போன்ற சீரீஸ்கள் நமக்கு நெஞ்சு வலி வரவைத்து விடும். அது போல இல்லையென்றாலும், இப்படமும் பதட்டத்தை கொண்டு வந்து விட்டது.

அதாவது மூச்சு விடாமல், ஒவ்வொரு காட்சியிலும் திணறத் திணறப் புரட்டி எடுத்து விட்டார்கள். ‘யப்பா டேய்! போதுன்டா முடியல!‘ என்றாகி விட்டது.

ஒவ்வொரு காட்சியிலும் பதட்டமாக இருந்தால் எப்படி?!

அதிலும் ஹரிஷ் உத்தமன் மனைவி, ‘ஐயையோ என்னங்க! இப்படி ஆகிடுச்சு‘ என்று அவரைப் பதட்டமாக்கி, படம் பார்க்கும் நம்மை அதுக்கு மேல் பதட்டமாக்கி… ஷப்பா!

கதாப்பாத்திரங்கள்

ஹரிஷ் உத்தமன் ஏற்கனவே பல நல்ல படங்களில் நடித்து இருந்தாலும், இதில் பொருத்தமான, அம்சமான கதாப்பாத்திரம். மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.

அவரது மனைவியாக வருபவர் (திரௌபதி படத்தில் வந்தவர்) ஹரிஷ் உத்தமனைப் பதட்டமாக்கினாரோ இல்லையோ படம் பார்க்கும் நம்மை ஒருவழியாக்கி விட்டார்.

இவர்களை விசாரிக்க வரும் காவல் அதிகாரி இளங்கோ (படத்தின் இயக்குநர்), காவல்துறையைப் பகைத்துக்கொண்டால் என்ன ஆகும் என்பதைக் காண்பிப்பார்.

இவர் நடிப்பைக் கொஞ்சக் காலத்துக்கு மறக்க முடியாது. எங்குமே மிகை நடிப்பு செய்யாமல், ‘இப்ப காட்டுறேன் பார் என் கெத்தை‘ என்று அனைவரையும் வச்சு செய்வது ரணகளம். உண்மையான காவல் அதிகாரி போலவே உள்ளார்.

இடைவேளைக்குப் பிறகு நம்மை மூச்சு விட வைப்பதே வழக்கறிஞராக வருபவர் தான். இதன் பிறகே கொஞ்சம் பதட்டம் குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்புவோம்.

ஆனால், அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் மறுபடியும் வழக்கறிஞரோடு சேர்ந்து உச்சத்துக்கே கொண்டு சென்று வைத்து விடும்.

ஒளிப்பதிவு பின்னணி இசை

ஒரு நாளுக்கும் குறைவான நேரத்தில் நடக்கும் கதை. ஒரு இரவு, அரை பகல் அவ்வளவோ தான் மொத்த படமே!

சம்பவங்களும் வெகு குறைவான இடங்களே! அதோடு சிறு வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்களை வைத்துக்கொண்டு ஒளிப்பதிவு செய்வது கடினம்.

காட்சிகளை வெகு இயல்பாக எங்குமே உறுத்தாமல் காட்சிப்படுத்தியுள்ளார்கள். குறைந்த முதலீட்டுப் படம் என்றாலும், அது எங்கேயும் தெரியவில்லை.

பாடல்கள் எதுவும் இல்லாமல், பின்னணி இசையிலேயே பதட்டமாக்கி விட்டார்கள்.

படம் இவ்வளவு கச்சிதமாக இருக்கப் படத்தொகுப்பு (editing) மிக முக்கியக்காரணம். தேவையில்லாத பகுதி என்று எதுவுமே இல்லை.

அதுவும் எப்படா முடியும்! என்று நினைக்கும் அளவுக்குக் கலவரமாகி விட்டது. பொறியாளன் படம் கூட இது போலக் கச்சிதமாக இருக்கும்.

இயக்குநருக்கு முதல் படம். முதல் படத்துக்கு எடுத்த கதை, அதை எடுத்த விதம் என்று அனைத்துமே சிறப்பு. வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி.

கதை இடியாப்ப சிக்கலாக இருப்பதால், நூடுல்ஸ் என்று பெயர் வைத்தார்களோ!

ஒவ்வொரு சாதாரண நபரின் வாழ்க்கையை நூடுல்ஸ் பிரதிபலிக்கிறது. அதிகாரத்துடன் சண்டையிட்டால் என்ன ஆகும் என்பதை காட்டியுள்ளார்கள் ஆனால், அதே அதிகாரத்துக்கு இறுதியில் வரும் ட்விஸ்ட் செம.

யார் பார்க்கலாம்?

அனைவரையும் பார்க்கத் தாறுமாறாகப் பரிந்துரைக்கிறேன்.

என்னவொரு சோகம் என்றால், இப்படம் வந்தது கூடத் தெரியவில்லை. எவ்வளவோ குப்பை படங்கள் எல்லாம் கண்ணில் பட இது எப்படி கண்ணில் படாமல் போனது என்று தெரியவில்லை! ஒருவகையில் வருத்தமாகவும் இருந்தது.

தமிழில் இது போன்ற கதைக்கு முக்கியத்துவம் தரும் குறைந்த முதலீட்டுப் படங்கள் அதிகம் வர வேண்டும். குறைந்த பட்சம் OTT லியாவது.

இது போன்ற படங்கள் மலையாளத்தில் தான் வரும் ஆனால், தமிழிலும் பார்ப்பது மகிழ்ச்சி.

பரிந்துரைத்தது விஸ்வநாத்.

Directed by Madhankumar Dakshinamoorthy
Written by Madhankumar Dakshinamoorthy
Produced by Pragna Arun Prakesh
Starring Harish Uthaman, Sheela Rajkumar, Madhankumar Dakshinamoorthy, Thirunavukkarasu
Cinematography Vinoth Raja
Edited by Sarathkumar Kaleeswaran
Music by Robert Sargunam
Production company Rolling Sound Pictures
Distributed by V House Productions
Running time 106 minutes (1:46)
Release date 8 September 2023
Language Tamil
Country India

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

11 COMMENTS

 1. மழை பற்றி ஒன்னும் காணோம்

  என்ன ஆச்சு

  அது குறித்து போஸ்ட் போடுங்கள்

 2. இந்த படத்தை இதுவரை பார்க்கவில்லை. ஹரிஷ் உத்தமன் என் பார்வையில் ஒரு சிறந்த நடிகர். நான் பார்த்த வெகு சில படங்களிலே இவரது நடிப்பு என்னை கவர்ந்து.. வாய்ப்பு கிடைக்கும் போது பார்க்க முயற்சிக்கிறேன்.

  அது போல மைனா படத்தில் சிறைத்துறை அதிகாரியாக வருபவர் (படத்தில் பாஸ்கர்) முதல் முறை அவரது நடிப்பை அந்த படத்தில் பார்க்கும் போது மிக சிறப்பாக நடித்து இருந்தார். ஆனால் அவர் மீண்டும் படங்களில் நடித்தாரா என்று தெரியவில்லை.

 3. @சதீஷ் & ஹரிஷ் இன்னும் எந்த OTT யிலும் வரவில்லை. BS Value என்ற OTT தளத்தில் வரப்போவதாக கூறப்படுகிறது, உறுதியாக தெரியவில்லை.

  எனக்கு நண்பர் கொடுத்தார்.

  @ஜமுனா தேவி

  மழை பற்றிக் கடந்த ஒரு வாரமாக அனைவருமே எழுதி வருகிறார்கள். நான் புதிதாக கூற எதுவுமே இல்லை, அதனாலயே அமைதியாக இருந்து விட்டேன்.

  ஆனால், இது தொடர்பாக, முக்கியமாக சென்னை உட்கட்டமைப்பு பற்றி எழுதி வெளியிடுகிறேன். அதைப்படித்து உங்கள் கருத்தைக் கூறுங்கள்.

 4. @யாசின்

  “ஹரிஷ் உத்தமன் என் பார்வையில் ஒரு சிறந்த நடிகர்.”

  உண்மையே! இப்படத்தில் மிக அழகாக, மிகைநடிப்பு செய்யாமல் சிறப்பாக நடித்துள்ளார்.

  “மைனா படத்தில் சிறைத்துறை அதிகாரியாக வருபவர்”

  அவர் பெயர் சேது. எனக்கும் இவரது நடிப்பு ரொம்பப் பிடித்தது.

  “வர் மீண்டும் படங்களில் நடித்தாரா என்று தெரியவில்லை.”

  நடித்தார் ஆனால், கவனம் பெறவில்லை.

  @ஸ்ரீனிவாசன்

  “Available in Zee5 now from Dec 1”

  ஒருவேளை அமெரிக்காவில் வெளியாகி இருக்கலாம், இங்கே இன்னும் வெளியாகவில்லை. நீங்கள் பார்த்தாச்சா? எப்படியுள்ளது?

 5. நீங்கள் படம் எப்படா முடியும் என்று குறிப்பிடுகிறீர்கள். அப்படியென்றால்
  படம் எப்பொழுது முடிந்து தொலையும் , நாம் வீட்டிற்கு செல்லலாம் என்று தானே பொருள். ஆனால் படம் நன்றாக இருக்கிறது என்றும் கூறுகிறீர்கள்.

  வடிவேல் மாமன்னன் வசனம் போல், அய்யா ஒரே குழப்பமா இருக்குயா !!

 6. @unmai vilambi

  வாங்க எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளா ஆளைக் காணோம் 🙂 .

  அது என்னென்னா.. அவ்வளவு பதட்டமாக இருந்தது. ரொம்ப பதட்டமாக இருந்தால், பார்வேர்ட் செய்து பார்த்து விடுவோம் இல்லையா.. அது மாதிரி.

  சீக்கிரம் முடிவு தெரிந்தால் போதும் என்றாகி விட்டது 🙂 .

 7. @Unmai vilambi

  ஹலோ! அப்படின்னா என்னோட தொடர்பிலிருந்து கொண்டே அனானிமஸா கருத்திட்டுக்கொண்டு இருக்கிறீர்களா?

  என்ன ஒரு வில்லத்தனம்!

  நான் தான் ஸ்டேட்டஸ்ல போட்டு இருந்தேனே! இனிமேல் இங்கே எதையும் blog தொடர்பாக பகிர மாட்டேன் அதனால், WhatsApp Channel https://whatsapp.com/channel/0029Va5S6Q3HLHQQ7Kzamk1v . இணைந்து கொள்ளுங்கள் என்று.

  இதுல இணைந்து கொள்ளுங்கள், அனைத்து கட்டுரைகளும் வரும்.

  இனியொரு முறை ஸ்டேட்டஸ் வைக்கணும் போலையே! 🙂 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here