குழந்தைகளைக் கெடுக்கும் பெற்றோர்கள் – 3

5
kids

போலிப் பெருமை

பெற்றோர்களின் வெட்டி பந்தாக்குப் பலியாகும் குழந்தைகள் அதிகம்.

என்னோட பொண்ணு / பையன் மொபைல் எடுத்தான்னா என்னென்னமோ பண்ணுவான்/ள்.. எனக்கே ஒன்றும் தெரியாது!” என்பது போலப் பந்தாக்கள் குழந்தைகளைக் கெடுக்க ஊக்குவிக்கும் வழிகளில் ஒன்று. Image Credit – soulofearth.in

குழந்தைகளை வைத்துப் பந்தா காண்பித்தால் அவர்களே நாளைக்கு உங்களுக்குச் சிக்கலாக உருவெடுப்பார்கள். அப்புறம் ஒப்பாரி வைத்து ஒன்றும் ஆகப்போவதில்லை.

தற்போது பெருமையாக நினைக்கும் விசயம் அவர்கள் வளர்ந்த பிறகு மிகப்பெரிய தலைவலியாக உருவெடுக்கும்.

என்ன கேட்டாலும் கொடுப்பது

பெற்றோரின் மிகக் கொடுமையான செயல் இது. குழந்தைகள் கேட்பதையெல்லாம் கொடுப்பது. வேண்டும் என்று அழுதால் சமானதானப்படுத்த முயற்சிக்காமல் உடனே கொடுப்பது.

கேட்பதை உடனே கொடுத்துப் பழக்காமல், வேறு கதைகள் கூறி, அவர்கள் கவனத்தைத் திசை திருப்பி மறக்க வைக்க வேண்டும்.

குழந்தைகளின் கவனத்தைத் திசை திருப்புவது எளிது.

குழந்தைகள் கேட்டு அழுவதைச் சமாளிக்க முடியாமல் தற்காலிகமாகப் பிரச்சனையில் தப்பிக்க நீங்கள் கொடுக்க ஆரம்பித்தால், பிற்காலத்தில் நீங்கள் அழுது புலம்ப வேண்டி இருக்கும்.

குழந்தைகள் மீதான எதிர்பார்ப்பு

குழந்தைகளிடம் துவக்கத்தில் இருந்தே, பொறுமையாகவும் அமைதியாகவும் அனைத்தையும் கற்றுக்கொடுத்தால், எதிர்காலம் பிரச்சினையில்லாமல் இருக்கும்.

ஆனால், அவர்கள் செய்யும் குறும்புக்கு பொறுமையிழந்து கடுமையாக நடந்து கொண்டால், அதன் பலன் மிக மோசமாக இருக்கும்.

துவக்கத்தில் குழந்தை சாப்பிடவில்லை என்று மிரட்டி, அதட்டி சாப்பிட வைத்துப் பழக்கினால், அதன் பிறகு சாப்பிட வைப்பதே ஒரு கொடுமையான செயலாக மாறி விடும்.

இதற்குப் பதிலாகத் துவக்க சிரமங்களைப் பொறுமையாகக் கடந்து விட்டால், பின்வரும் நாட்கள் எளிமையாக இருக்கும்.

உடனடி எதிர்பார்ப்பு

பொறுமை என்பது, இரண்டு நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு “பாருங்க.. நானும் இரண்டு நாட்களாகப் பொறுமையாக இருக்கிறேன்.. ஆனாலும் எவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறான்/ள்” என்று கூறுவதல்ல.

மூன்று வருடங்களுக்கு மேல் குழந்தையைப் பிடிவாதமாகப் பழக்கி விட்டு, மூன்று நாட்களில் சரியாக நடந்து கொள்ளவேண்டும் என்பது என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?

நாம் மீண்டும் ஓரிரு வருடம் பொறுமையாக நடந்து கொண்டால் தான் குழந்தைகளது குணமும் மாறும். இது நடைபெற வாய்ப்புகள் இல்லை அல்லது மிகக் குறைவு.

பொறுமையே இல்லாத பெற்றோர், குழந்தைகளிடம் பொறுமையை எதிர்பார்ப்பது முரண்.

எனவே, துவக்கத்திலேயே சரியான முறையில் பொறுமையாகக் குழந்தைகள் செய்வதைக் கையாண்டால் பின்வரும் காலம் பிரச்சினையில்லாமல் இருக்கும்.

நீங்கெல்லாம் எப்படி நடந்து கொண்டீர்கள் என்பதை உங்கள் அம்மா அப்பா தாத்தா பாட்டியிடம் கேட்டால் அவர்கள் கூறுவார்கள்.

மரியாதை

குழந்தைகளிடம் ரொம்பவும் இறங்கி சமமாக இருக்கிறேன், இயல்பாக இருக்கிறேன் என்று பெயரில் நடந்து கொண்டால், சில குழந்தைகள் அதை அனுகூலமாக எடுத்துக்கொண்டு, மரியாதை கொடுக்க மாட்டார்கள்.

சுருக்கமாக, மதிக்கவே மாட்டார்கள்.

எனவே உங்களுக்கான மரியாதை நீங்கள் நடந்து கொள்ளும் விதத்திலேயே உள்ளது.

குழந்தைகளிடம் பேசும் வார்த்தைகள்

குழந்தைகளை எருமை, பன்னி, லூசு போன்ற கடுமையான வார்த்தைகளில் திட்டாதீர்கள். இதே வார்த்தைகளைத் தான் பின்னர் அவர்களும் பயன்படுத்துவார்கள்.

குழந்தைகள் கெட்ட வார்த்தைகளை, குழந்தையாக இருக்கும் போது பெற்றோர்களிடமும், உடன் இருப்பவர்களின் செய்கைகளிலும் வளர்ந்த பிறகு பள்ளியிலும் கற்றுக்கொள்கிறார்கள்.

எனவே, குழந்தைகளிடம் அநாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். முக்கியமாகக் குழந்தைகள் முன்னால் பெற்றோர் சண்டை போடாதீர்கள்.

இது அவர்களின் மனநிலையைப் பாதிக்கும், உங்களின் மீதான மரியாதையைக் குறைக்கும்.

மற்றவர்களிடம் நீங்கள் இருவர் போடும் சண்டையைக் கூறி மானத்தை வாங்கி விடுவார்கள்.

முடிவுரை

குழந்தைகளிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் அலுவலக, வீட்டு, துணையின் மீதுள்ள கோபத்தைக் குழந்தைகளிடம் காட்டாதீர்கள்.

குழந்தைகளைச் சரியாகப் புரிந்து கொண்டு செயல்பட்டால், அவர்கள் அற்புதமானவர்கள் என்பது புரியும்.

ஒவ்வொரு குழந்தையும் பெற்றோரைத் தான் பிரதிபலிக்கிறார்கள். எனவே, அவர்களின் நடவடிக்கை என்பது உங்களின் வளர்ப்பு மட்டுமே!

எனவே, குழந்தைகளிடம் துவக்கத்தில் இருந்தே பொறுமையைக் கடைப்பிடித்து, ஒழுக்கத்தை, பொறுப்புகளைக் கற்றுக்கொடுத்து வளர்த்தால், பெற்றோர் வாழ்க்கை மட்டுமல்ல குழந்தைகளின் எதிர்காலமும் சிறப்பாக இருக்கும்.

தொடர்புடைய கட்டுரைகள் 

குழந்தைகளைக் கெடுக்கும் பெற்றோர்கள் – 1

குழந்தைகளைக் கெடுக்கும் பெற்றோர்கள் – 2

5 COMMENTS

 1. கிரி, அனுபவப்பூர்வமாக எழுதி உள்ளீர்கள்.. நீங்கள் கூறிய பல விஷியங்களை உங்களுடன் ஒத்து போகிறேன்.. நாம் என்ன தான் முயற்சிகள் மேற்கொண்டாலும் குழந்தை வளர்ப்பில் சமுதாயத்தின் பங்கும் முக்கியமான ஒன்றாகிறது.. குழந்தைகள் வளர வளர அவர்கள் வீட்டில் இருப்பதை விட வெளியில் இருப்பது தான் அதிகம்… முக்கியமாக நண்பர்களும் ஒரு காரணமாகின்றனர்…

  குழந்தைகளின் நினைவு திறன் கூர்மையானது… சின்ன சின்ன விஷியங்கள் கூட அவர்கள் உள்ளத்தில் எளிதில் பதிந்து விடும்… மிகவும் கவனமாக இருக்க வேண்டும்… குறிப்பாக கணவன் மனைவி சண்டை… மற்றும் நமது உறவுகளுக்கு நாம் எவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கிறோம், என்பது போன்றவை.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  குழந்தை வளர்ப்பை பற்றி கூறி இருப்பதால் ஆமீர் கான் நடித்து, இயக்கிய taare zameen par ஹிந்தி படத்தை பார்க்கவும்.. குழந்தைகளுக்கு பெற்றோரின் அரவணைப்பு எவ்வளவு முக்கியத்துவம் என்பதை ரொம்ப அழகாக சொல்லி இருப்பாங்க!!!

 2. யாசின் இங்கே தாரே சமீன் பார் படம் பற்றி சொன்னதால்., இந்தப்படம் தனியாக பார்க்கவேண்டிய படம். மற்றயவர்க‌ளுக்கு முன் பார்த்தால், அவமானப்படவேண்டும் அழுது. தரவிறக்கிபார்த்தபடத்தினை பணம் குடுத்து குறுவட்டு வாங்கி வைத்துள்ளபடங்களில் இதுவும் ஒன்று . இந்தப்படத்தின் இறுதிக்காட்சியை மாத்திரமே பலத‌டவை பார்த்து அழுதுள்ளேன். அமீர்கான் சிறுவனின் படத்தினை வரையும் காட்சியை எப்போதெல்லாம் பரீட்சையில் குறைவாக புள்ளிகள் வாங்குவேனோ அப்போதெல்லாம் போட்டுபார்த்து என்னை உற்சாகப்படுத்துவேன். பாட்டே கேட்காத நான் இந்திப்பாடல் கேட்டதெல்லாம் இந்தப்பாடத்தினால்தான். ரோசன்= வெளிச்சம் என இந்தி கற்றது கூட இந்தப்படம் பார்த்தபின்னர்தான்.

 3. @பாரதி நன்றி

  @யாசின் அந்தப்படம் பார்த்து விட்டேன். கலங்காதவர்கள் இருக்க முடியாது.

  @pratheeoan ரைட்டு

  @ப்ரியா 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here