குழந்தைகளைக் கெடுக்கும் பெற்றோர்கள் – 2

6
Kids

ந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் இந்த மண்ணில் பிறக்கையிலேயே! நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே” என்று பாடலில் முன்பு கூறினார்கள்.

அக்காலத்தில் அம்மாக்கள் மட்டுமே குழந்தைகளைக் கவனித்துக்கொள்வார்கள்.

அப்பாக்கள் பெரும்பாலும் குழந்தைகள் பற்றிய பொறுப்புகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பார்கள். எனவே இப்படி எழுதப்பட்டது.

தற்போதும் அப்பாவை விட அம்மாவே குழந்தைகள் வளர்ப்பில் பெரும்பங்கை வகிக்கிறார்கள் என்றாலும், அப்பாக்கும் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. Image Credit

பெற்றோர் வளர்ப்பும் மரபணுவும்

குழந்தை குணங்கள் நம் எதிர்பார்ப்புக்கு மாறாக மாறுகிறது என்றால், அதற்குப் பெற்றோர் வளர்ப்பும் குழந்தையின் மரபணுவும் காரணங்களாக இருக்கலாம்.

மரபணு

குழந்தை அவங்க தாத்தா மாதிரியே, அப்பா / அம்மா மாதிரியே! குணம் கூட அதே மாதிரி கோபம், பாசம், பொறுப்பு” என்று கூறக்கேட்டு இருப்பீர்கள்.

அதன் காரணம் மரபணுவின் ஆதிக்கம்.

ஒரே வீட்டில் ஒரு குழந்தை ஒரு மாதிரியும் இன்னொரு குழந்தை வேறு மாதிரியும் வளர்வதற்குக் காரணங்கள் மரபணுவும், வளர்ப்பும்.

ஒரு குழந்தையை எப்படி வளர்த்தாலும், வளர்ப்பையும் மீறி சில குணங்கள் தவிர்க்க முடியாதது. இதன் காரணம் முன்னோர்களின் மரபணு தொடர்வது தான்.

இது இயல்பிலேயே வருவது, அதை என்ன செய்தாலும் போக்க முடியாது ஆனால், குறைக்கலாம், அவர்கள் ஒத்துழைத்தால்.

இது குழந்தைகளிடம் குறைந்தபட்ச % இருக்கும். அனைத்து குழந்தைகளிடமும் இருக்கும் என்று நினைக்கத் தேவையில்லை ஆனால், பெரும்பாலான குழந்தைகளிடம் இருக்கும்.

சில குழந்தைகள் இந்த குறைந்தபட்ச % மற்ற பெரும்பான்மை % பாதிக்கக்கூடிய அளவிலும் இருக்கும், அவர்கள் விதிவிலக்கானவர்கள்.

ஒரு எளிய உதாரணம் கூறுகிறேன்…

என்னுடைய பையன் வினய் குணத்தில் என்னைப்போலவே இருப்பான். கலாய்த்தல், கோபம், கிண்டல், எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் இருப்பது போன்றவை.

எனக்கு நாய் ரொம்பப் பிடிக்கும் ஆனால், நான் எதுவும் சொல்லாமலே, நாயும் இல்லாமலே இவனுக்கு நாய் என்றால் ரொம்பப் பிடிக்கும்.

இது தான் மரபணு. இது என் தாத்தா காலத்தில் இருந்து தொடர்கிறது. தாத்தா, அப்பா, நான் தற்போது என் பையன்.

நான் உதாரணத்துக்குக் கூறினேன், இது போலச் சில குணங்கள் யாரும் சொல்லித்தராமலே குழந்தைகளுக்குத் தொடரும், என்ன செய்தும் மாற்ற முடியாது.

பெற்றோர் வளர்ப்பு

ஒரு குழந்தை பிடிவாதமாக, அன்பாக, பொறுப்பாக, கோபமாக, மரியாதையற்றவராக வளரக் காரணம் பெற்றோரின் வளர்ப்பு முறை தான்.

உங்கள் (கணவன் & மனைவி) குழந்தை இப்படி இருக்க மரபணு தவிர்த்து முழுக்காரணம் உங்கள் வளர்ப்பு தான். உங்கள் வளர்ப்பையே குழந்தைகள்  பிரதிபலிக்கிறார்கள். 

எனவே, குழந்தையைத் திட்டினால் அது உங்களையே திட்டிக் கொள்வது போலத்தான்.

திருமணம் ஆனதும் குழந்தை பிறந்து விட்டால், அக்குழந்தையைக் கவனித்துக்கொள்ளும் பக்குவம் இளம் பெற்றோருக்கு இருக்காது.

இந்தச் சமயத்தில் தான் பெரியவர்களின் தேவை உணரப்படும்.

திடீரென்று வேலைகள், பொறுப்புகள் அதிகரிக்கும் போது அதன் கோபம் குழந்தையிடம் திரும்பும். துணையின் மீதுள்ள கோபத்தைப் பலர் குழந்தையிடம் காட்டுவார்கள்.

இது ஒரு கேவலமான செயல், இருப்பினும் இதைப் பலர் செய்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.

தங்கள் வீட்டு, அலுவலக அவசரத்தை எல்லாம் குழந்தைகளிடம் தான் காட்டுவார்கள். சில புன்னகையில், பொறுமையான விளக்கத்தில் எளிதாக முடிந்து விடக்கூடிய விஷயத்தைக் களேபரமாக்கி விடுவார்கள்.

பொறுமையின்மை

நான் கவனித்தவரை தற்காலப் பெற்றோர்களுக்குக் குறிப்பாகப் பெண்கள் சிலருக்கு அதிகளவில் கோபமும் பொறுமையின்மையும் உள்ளது.

முந்தைய காலங்களில் பெண்களுக்கு இருந்த பொறுப்புகளை விடத் தற்போது கூடுதல் பொறுப்புகள், சுமைகள் உள்ளன. எனவே, அதனால் இப்படி நடந்து கொள்கிறார்களா? என்பது புரியவில்லை.

பொது இடங்களில் நான் அதிகம் காண்கிறேன். தயவு செய்து பொது இடத்தில் குழந்தைகளை அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொள்ளாதீர்கள்.

குழந்தைகளிடம் இரண்டு வயது முதல் 10 வயது வரை நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்களோ அதுவே அவர்களின் பிற்காலமும் தொடரும்.

எனவே, இக்காலத்தில் பெற்றோர் வளர்ப்பின் பங்கு அதிமுக்கியம். துவக்கத்தில் சிரமப்பட்டால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.

பதட்டம், கோபம்

வெளியிடங்களில் என்னுடைய மனைவி உட்படப் பலரையும் கவனித்ததில் பெண்கள் எப்போதும் ஒரு பதட்டத்தோடு, அதீத அக்கறையோடு நடந்து கொள்கிறார்கள், Restless ஆக உள்ளார்கள்.

இதன் உளவியல் காரணம் என்னவென்று என்ன முயன்றும் என்னால் அறியமுடியவில்லை.

உதாரணத்துக்குப் பசங்க என்கூட வெளியே வந்தால், அவனுக பாட்டுக்கு இருப்பானுக, சாப்பிடுவானுக, பேசிட்டு இருப்பானுக, ஒரு அதட்டல் சத்தம் இருக்காது.

என் மனைவியுடன் சென்றால், பதட்டமாக, கோபமாகவே இருப்பார். இது போலப் பலரை நான் பொது இடங்களில் கவனித்து இருக்கிறேன். ஏன் இந்த பதட்டம்?

நமக்கான எல்லை தெரியும் அதை மீறினாலே கண்டிக்க வேண்டும்.

கத்தி பிரச்னையை சரி செய்ய முடியாது

குழந்தைகள் என்றால் சிறு குறும்புகள் இருக்கத்தான் செய்யும், அப்படி இருந்தால் தானே குழந்தை.

அதற்கெல்லாம் கோபப்பட்டால் எத்தனைக்குக் கோபப்படுவது. நாம் ரொம்பக் கோபப்பட்டால், நிலைமை இன்னும் மோசமாகும்.

குழந்தைகளை மென்மையான அதட்டலில், சிறு முக அசைவில் கட்டுப்படுத்த பழக வேண்டும். முரட்டுத்தனமான அதட்டல், மிரட்டல் பிரச்னையைப் பெரிதாக்கவே உதவும்.

குழந்தை உங்கள் கண்டிப்பை மதிக்காமல் இருந்தால், நீங்கள் அனைத்துக்கும் திட்டிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

ஆமா! அம்மா / அப்பா எப்ப பாரு.. இப்படித்தான் கத்திட்டு இருப்பாங்க!” என்று குழந்தை கண்டுக்காமல் இருப்பது நல்லது அல்ல.

எந்தெந்த விசயங்களுக்கு கண்டிக்கணுமோ, அதட்டணுமோ அதற்கு மட்டுமே செய்ய வேண்டும். அனைத்துக்கும் கத்திக்கொண்டு திட்டிக்கொண்டு இருந்தால், அதற்கு மதிப்பே இருக்காது.

ஒன்று குழந்தைகளை அதட்டி மிரட்டி பயமுறுத்துகிறார்கள்.. இல்லையா.. எதையுமே கண்டுகொள்ளாமல் அவர்கள் போக்கில் விட்டு பிடிவாதமாக்குகிறார்கள்.

இரண்டு எல்லைகளுமே தவறு. அதீத செல்லமும், அதீத கண்டிப்பும் பிரச்னையை அதிகப்படுத்த மட்டுமே உதவும். என்றுமே தீர்வு கிடைக்காது.

இரண்டுக்கும் இடைப்பட்ட இடத்தை நீங்கள் கண்டுகொண்டால், குழந்தைகளைச் சமாளிப்பது எளிது. நீங்கள் சொன்னபடி கேட்பார்கள், நன்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.

எனவே, குழந்தைகளிடம் கொஞ்சம் பொறுமையாக, இயல்பாக நடந்து கொள்ளுங்கள்.

தொடர்புடைய கட்டுரைகள்

குழந்தைகளைக் கெடுக்கும் பெற்றோர்கள் – 1

குழந்தைகளைக் கெடுக்கும் பெற்றோர்கள் – 3

கொசுறு

அடுத்தக் கட்டுரையில் போலி பெருமை, என்ன கேட்டாலும் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பது, குழந்தைகள் மீதான அதீத எதிர்பார்ப்பு போன்றவற்றைப் பார்க்கலாம்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

6 COMMENTS

 1. //நான் கவனித்தவரை தற்காலப் பெற்றோர்களுக்குக் குறிப்பாகப் பெண்கள் சிலருக்கு அதிகளவில் கோபமும் பொறுமையின்மையும் உள்ளது.// இது ஒரு தலைப்பட்ட முடிவு. அம்மா அல்லது அப்பா பிள்ளைகளுடன் சிறிதள‌வாவது கண்டிப்பாக இருக்கவேண்டும். முன்னர் அப்பாக்கள் பிள்ளைகளை கணக்கிலேயே எடுப்பதில்லை. அப்போதுதான் உலகமயமாக்களினால், அம்மாக்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்தபின்னர், பிள்ளைகளை அப்பாக்கள் கணக்கில் எடுக்கிறார்கள். உங்களை முற்றிலுமாக உங்களின் அம்மாவும் அவரின் அம்மாவுமே வள‌ர்த்திருப்பார்கள். இப்போது நீங்கள் உங்களின் பிள்ளைகளை கவனத்தில் கொள்கிறீர்கள். உங்களை பொறுத்தமட்டில் அதுவே பெரிய செயல். ஆனால் உங்களின் மனைவி உங்களைவிட உங்களின் பிள்ளைகளில் மிகுந்த கவனமாயிருப்பார். உதாரணமாக உங்களின் மகன்களின் வீட்டுபாடத்திற் நீங்கள் 3 நாட்களிற்கு முன்னர் உதவி செய்திருப்பீர்கள். ஆனால் இன்றைக்கு கேட்டால் என்ன உதவி செய்தீர்கள் என்று தெரியாது. ஆனால் உங்களின் மனைவியிடம் கேட்டீர்களானால் அவர் கடந்த மாத வீட்டுப்பாடத்தை கூட‌ சொல்லுவார்.

  முதல் பகுதியில் நீங்கள் சொல்லியிருந்த விடயம் மதிப்பு தெரியாமல் தேவையானவற்றை வாங்கிகொடுக்காதீர்கள் என்று. அது மிகவும் சரி. என்னுடய 14 வது வயதில் நான் விளம்பரம் போடும் வேலைக்கு அனுப்பப்பட்டேன். கிட்டத்தட்ட 200 வீடுகளுக்கு போடவேண்டும். திங்கள் இரவு விளம்பர துண்டுகள் வரும். பலவகை வருமென்பதால் அடுக்கவேண்டும் . அதற்கு ஒரு 1-1.5 மணி நேரம் .செவ்வாய் பாடசாலையால் வந்தபின்னர் 2-2.5 மணி நேரம் விளம்பரம் போடவேண்டும். மீண்டும் வெள்ளிகிழமை வார பத்திரிகை வரும். ஞாயிறிற்கு முன்னர் வீடுகளில் போட‌வேண்டும். மழை, வெள்ளம், பனி.. என்னவென்றாலும் கொண்டுபோய் போட்வேண்டும். சில தினங்களில் ஒரே தடவையில் கொண்டு செல்ல முடியாவிட்டால், திரும்பி வந்து எடுத்துகொண்டு போகவேண்டும். அவ்வளவும் செய்தால் வாரம் 30$ கிடைக்கும். இரவில் தனியே அனுப்ப பயமென்பதால் எல்லா நாட்களிலும் அப்பாவோ இல்லை அம்மாவோ வருவார்கள். அதனால் அவர்களுக்கு இழப்பு, வருமான‌த்திலும் பார்க்க . இருந்தாலும் பணத்தின் மதிப்பினை கற்றுக்கொடுப்பதற்காக வருவார்கள். பணத்திலும் பார்க்க ஒரு விடயத்தை கட்டயமாக‌ முடிக்கவேண்டும் என்பதை இங்கேதான் கற்றேன். அத்துடன் 2 வருட முடிவில் அதுவரை சேர்த்த‌ காசில் Macbook வாங்கினேன். கஷ்டப்பட்டு உழைத்து வாங்கியதால், 5 வருடங்கள் கடந்தும் இப்போது பாவிக்கிறேன். இதுவெல்லாம், என்னுடய வரலாற்று புத்தகத்தில் இடம்பெறும். 🙂

 2. நல்ல புரிதலோடு எழுதப்பட்டுள்ள பதிவு கிரி அவர்களே.

  குழந்தைகளை குழந்தைகளாக பார்ப்பதை தவிர்த்து எதிர்கால மனிதனாக பார்க்க வேண்டும். அவர்கள் வளர்ந்து சமுதாய வாழ்வில் நுழையும் போது தங்களை தாங்களே நிர்வகிக்கும் படியான அடித்தளத்தை குழந்தை பருவத்தில் ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது பெற்றோர் கடமை. மூன்று விஷயங்களை குழந்தைகளிடம் வளர்த்தால் போதும்
  1 அவர்களிடம் பொறுப்புகளை கொடுப்பது (பொறுப்பு)
  2 நிறைய பேரிடம் பழக வைப்பது (நட்பு, உறவு, மனிதர்களை புரிந்துகொள்ளுதல்)
  3 அவர்களின் நல்ல செயல்களை பாராட்டுவது மற்றும் தவுறுகளை தனிமையில் இருக்கும் போதுஎடுத்து கூறுவது. (நல்லது கெட்டதுகளை எடுத்து கூறும் அறிவு)

  என்னுடைய முதல் பதிவே இந்த குழந்தை வளர்ப்பு பற்றிய பதிவுதான், அந்த வகையில் இந்த பதிவை பார்த்ததில் மகிழ்ச்சி.

 3. @ப்ரியா நீ கூறுவதை ஏற்றுக்கொள்கிறேன் ஆனால், சிறு திருத்தத்துடன்.

  கண்டிப்பு என்பது குழந்தைகளுக்கு மரியாதை கலந்த கட்டுப்பாடு இருக்க வேண்டும். நாம் கூறுவதையே குழந்தைகள் மதிக்கவில்லை என்றால், சிக்கல் நம்மிடம் தான்.

  சில பெண்கள் குழந்தைகளிடம் கண்டிப்புடன் நடந்து கொள்கிறார்கள் ஆனால், அவர்களை குழந்தைகள் கண்டு கொள்வதே இல்லை. அட அம்மா எப்பவும் இப்படி தான் கத்திட்டு இருப்பாங்க என்று டிவி பார்த்துட்டு இருப்பாங்க.

  கண்டிப்பு அவசியம் ஆனால், அதை செயல்படுத்தும் முறை சிக்கலானது. அதை புரிந்து கொண்டால் எளிதானது.

  நான் பசங்களை அதிகம் திட்டமாட்டேன் ஆனால், என்னுடைய வார்த்தைக்கு கட்டுப்படுவார்கள்.

  என்னுடைய குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுப்பது மனைவி தான். அதுவுமில்லாமல் அவருடன் என்னை ஒப்பீடே செய்ய முடியாது. அவர் லெவல் வேற. இது குறித்து பின்னர் தனிக்கட்டுரை எழுதுகிறேன்.

  என்னுடைய மனைவிக்கும் கோபம் தான் பெரிய மைனஸ். இது தவிர்த்து இவர் திறமை அபரிமிதமானது.

  உன்னுடைய பெற்றோருக்கு நீ மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளாய்.

  ஏன் கூறுகிறேன் என்றால், அவர்கள் பணத்தின் மதிப்பை மட்டும் உனக்கு கற்றுத்தரவில்லை. சிறு வயதிலேயே ஓரளவு வாழ்க்கையையும் பக்குவத்தையும் கற்று தந்து இருக்கிறார்கள்.

  இதைத்தான் நான் முன்பே ஒரு கட்டுரையில் கூறினேன். சிறு வயதிலேயே உனக்கு பெரியவர்கள் அளவுக்கு விசயமும் பேசவும் தெரிந்துள்ளது என்று.

  உன்னுடைய சில கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், உன்னுடைய பேச்சு முதிர்ச்சியின் மீது எப்பவும் எனக்கு வியப்புண்டு.

  எப்படி சிறு வயதிலேயே நீ இந்த அளவுக்கு விஷயம் தெரிந்தோ / அனுபவம் பெற்றோ இருந்தாய் என்ற குழப்பத்துக்கு இன்று விடை கிடைத்தது 🙂 .

  இதற்கு உன்னுடைய பெற்றோருக்கு தான் நன்றி கூற வேண்டும்.

  உன்னை பொறுத்தவரை உன்னுடைய உழைப்பில் நீ Mac Book வாங்கி இருப்பதாக பெருமைப்படலாம் ஆனால், கூடவே பல அனுபவங்களையும் உன்னையறியாமலே கற்றுக்கொண்டு இருக்கிறாய்.

  அப்புறம் நீ கஷ்டப்பட்டு உழைத்து Mac Book வாங்கவில்லை என்றாலும், அது எளிதாக ஐந்து வருடங்கள் வரும். ஏனென்றால், அதன் தரம் அப்படி 🙂 . இருப்பினும் இது உனக்கு ஒரு மகிழ்ச்சி.. ஏனென்றால் நம் சேமிப்பில் வாங்கியது என்று.

  உன் அப்பா வாங்கி கொடுத்து இருந்தால், அதன் மதிப்பு தெரியாது ஆனால், தற்போது அதன் மதிப்பு உனக்கு புரியும்.

  என்றுமே எளிதாக கிடைப்பதன் மதிப்பு எவருக்கும் புரியாது. அப்படி புரிந்தால், அதற்கு முன் கிடைத்தவை எளிதாக இருந்து இருக்காது.

 4. @சோமேஸ்வரன் “குழந்தைகளை குழந்தைகளாக பார்ப்பதை தவிர்த்து எதிர்கால மனிதனாக பார்க்க வேண்டும். அவர்கள் வளர்ந்து சமுதாய வாழ்வில் நுழையும் போது தங்களை தாங்களே நிர்வகிக்கும் படியான அடித்தளத்தை குழந்தை பருவத்தில் ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது பெற்றோர் கடமை. ”

  செம்ம.. அசத்தலா சொன்னீங்க 🙂 . மிக மிக முக்கியம். மேலே ப்ரியாக்கு அவரது பெற்றோர் செய்தது போல.

  நீங்க கூறியுள்ளதை வைத்துத்தான் அடுத்த மாதம் ஒரு கட்டுரை எழுத திட்டமிட்டு இருந்தேன். கிட்டத்தட்ட இதே தான் நான் கூறப்போவதும். கூடுதலாக சில சேர்த்து கூறுவேன் அவ்வளவு தான்.

  நீங்க Blog எழுதறீங்களா? ஆமாம் என்றால் முகவரி தரவும்.

 5. கிரி, குழந்தை வளர்ப்பு என்பது ஒரு அரிய கலை… நம்முடைய பருவத்தில் நாம் தானாகவே வளர்ந்தது போல் ஒரு எண்ணம் என்றும் உண்டு.. நம்முடைய காலங்களில் பெற்றோர்கள் அவ்வளவு அக்கறை எடுத்து இருப்பார்களா என்று தெரியவில்லை.. என்னை பொறுத்தவரை தற்போது தான் அதிக கவனம், கூடுதல் அக்கறை, மற்றும் கண்டிப்பு… ஆனால் இவைகள் எல்லாம் குழந்தைகளுக்கு வளர்ச்சிக்கு உதவுகின்றனவா என்றால், இல்லை என்று தான் நான் கூறுவேன்..

  நான் என்பையனை அடிப்பது கிடையாது.. கூடியமட்டும் சொல்லி புரிய வைப்பேன்.. மனைவி எதிர்மறை, அடித்தால் தான் பையன் அடங்குவான் என்பது அவரது எண்ணம்… சில நேரம் முரண்டு பண்ணும்போது செல்லம் குடுத்து நீங்கள் தான் கெடுத்து விட்டிங்க என்பார்.. நீங்கள் சொன்ன மரபணு குறித்த ஒரு விஷியம்.. என் அப்பாவின் அப்பா ரயில் ஓட்டுநர்.. அப்பா கூட பிறந்த 4 சகோதர்களும் ரயில்வேயில் பணி.. (அப்பாவும் 8 ஆண்டுகள் பணி புரிந்து பின்பு சென்னை நீதிமன்றத்தில் பணி) தற்போது யாரும் உயிருடன் இல்லை… ஆனால் என் பையனின் முழுமையான விருப்பம் ரயில்.. ரயிலை காண்பது, அதனுடன் பயணிப்பது… அது குறித்த காணொளிகளை பார்ப்பது, விளையாட்டு பொருட்களாக இருந்தாலும் அவனின் முதல் விருப்பம் ரயில் தான்…( ஒரு நாள் கூட நான் என் குடும்ப கதையை சொன்னது கிடையாது…) ரயில்வே துறைக்கும் எங்கள் குடும்பத்திற்குமான உறவு இன்னும் என் பையன் மூலமாக தொடர்கிறது.. பகிர்வுக்கு நன்றி கிரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here