தமிழகத்தில் லாட்டரி சீட்டுத் தடைக்கு முன்பு எழுதப்பட்ட கதை குபேரசாமி.
இதில் கூறப்பட்ட சூழ்நிலை பழையதாக இருந்தாலும், இதில் உள்ள சம்பவங்கள் தினமும் பலருக்கும் அலுவலகப் பயணத்தில் கிடைக்கும் அனுபவங்களே!
குபேரசாமி
அலுவலகம் செல்லும் போது ரயிலில், பேருந்தில் வரும் சாமானியர்கள் பற்றித் தினமும் ஏராளமான கதைகள் கிடைக்கும். சில சுவாரசியமாக, சில சோகமாக.
அவ்வாறு வரும் மனிதர்களில் அளந்து விடும் நபர் நிச்சயம் ஒருவர் இருப்பார் 🙂 . நான் அதைச் செய்தேன் இதைச் செய்தேன், எனக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என்று கதையளப்பார்கள்.
இவர் கூறுவது பொய் என்று கேட்பவர்களுக்குத் தெரியும் ஆனாலும், பேச்சு சுவாரசியத்துக்காகக் கேட்பார்கள்.
இது போல ஒரு கதாப்பாத்திரம் டாவ் தமிழ்மணி. தான் கூறுவதை மற்றவர்கள் நம்புவார்களா என்பதைப் பற்றி எந்தக்கவலையும் இல்லாமல், கதை அளப்பவன்.
தினமும் பேருந்து பயணத்தில் அனைவரையும் பேச்சு திறமையால் கவரும் லாட்டரி சீட்டு விற்கும் பையன், டாவ் தமிழ்மணியிடமே வழக்கம் போலப் பேசி ஒரு லாட்டரி சீட்டை விற்க, அதற்கு 1 லட்சம் விழுந்து விடுகிறது.
ஒரு லட்சம்
சும்மாவே அலப்பறை செய்யும் டாவ் தமிழ்மணிக்கு ஒரு லட்சம் கிடைத்தால்! தற்போதைய (2020) ஒரு லட்சம் அல்ல, கிட்டத்தட்ட 15 – 20 வருடங்களுக்கு முந்தைய ஒரு லட்சம். அப்போது ஒரு லட்சம் என்பது அதிக மதிப்புக் கொண்டது.
டாவ் தமிழ்மணி ஒரு லட்சத்தை வாங்கினானா? என்ன நடந்தது? மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறான்? இறுதியில் என்ன ஆகிறது என்பதே கதை.
சுவாரசியமான மனிதர்கள்
தினமும் அலுவலகத்துக்குச் செல்லக் காத்திருக்க நேரும் போது பல்வேறு கலவையான மனிதர்களைச் சந்திப்போம். அப்படிப்பட்ட சாமானியர்களைப் பற்றிய வர்ணனை மிகச்சிறப்பாக உள்ளது.
பலரும் இச்சூழ்நிலையைக் கடக்காமல் இருக்க வாய்ப்பில்லை.
சிறுகதை என்பதால், அரை மணி நேரத்திலேயே படித்து முடித்து விட்டேன்.
பழைய கதை, சம்பவங்கள் என்பதால், இலவசமாகப் படிக்க வாய்ப்புக்கிடைத்தால் படிக்கக்கூடிய புத்தகம். Amazon Prime உறுப்பினர் இலவசமாகப் படிக்கலாம்.
அமேசானில் படிக்க –> குபேரசாமி – Link
Read – பல நேரங்களில் பல மனிதர்கள்
கிரி , கோவையில் பணி புரிந்த நாட்களில் அடிக்கடி பேருந்து பயணம் மேற்கொள்ளவேண்டி வரும் . அது போல பல சந்தர்பங்களில் நீங்கள் கூறியது போல் பல வித்தியாசமான மனிதர்களை சந்தித்துள்ளேன் .. அது எந்த பல்கலைக்கழகத்திலும் கிடைக்காத அனுபவம் ..
பல நேரங்களில் சக பயணிகளிடம் அதிகம் பேசுவேன் .. இல்லையென்றால் அவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு அவர்கள் சொல்வதை கேட்டு கொண்டு வருவேன் .. நிச்சயம் இந்த இந்த சிறுகதை சுவாரசியமாக இருக்கும் என்று நினைக்கிறேன் .. கண்டிப்பாக படிக்கிறேன் .. பகிர்வுக்கு நன்றி கிரி .
@யாசின் பயணம் செய்பவர்கள் அனைவருக்கும் இந்த அனுபவம் இருக்கும் 🙂 .
பெரும்பாலும் நான் அமைதியாகக் கேட்டுக்கொள்வேன்.