பல நேரங்களில் பல மனிதர்கள்

15
Pala nerngalil pala manithargal book பல நேரங்களில் பல மனிதர்கள்

மீபத்தில் பாரதி மணி அவர்கள் எழுதிய “பல நேரங்களில் பல மனிதர்கள்” பற்றி அறிந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது.

தில்லி மணி

தில்லியில் S.K.S மணி என்று அறியப்பட்டவர், சென்னை வந்த பிறகு தில்லி மணி என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

பின்னர் தில்லி கணேஷ் போன்றவர்கள் அதே அடைமொழியுடன் இருந்ததால் பாரதி திரைப்படம் நடித்ததற்கு பிறகு அடையாளத்திற்காகப் பாரதி மணி என்று மாற்றிக்கொண்டார்.

இவர் மேடை நடிகர், எழுத்தாளர், திரைப்படக் கலைஞர் என்று பல்வேறு திறமைகளைக் கொண்டவர்.

புதுப்பேட்டை

இவரது படத்தைப் பார்த்து, சார்! நீங்க புதுப்பேட்டை படத்தில் நடித்து இருக்கீங்களா! என்று கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டேன் 🙂 அதில் முதல்வராக நடித்து இருப்பார்.

இது மட்டுமல்லாமல் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சென்னை ஆனந்த் திரையரங்கம் உரிமையாளர் உமாபதி பெரிய திரையரங்கம் வைத்து இருந்தும், மக்களுக்கு அறிமுகம் ஆகாமல் இருந்தார்.

ஆனால், அக்னி நட்சத்திரம் படத்தில் வில்லனாக நடித்த பிறகு  அனைவரும் அறிந்த நபராகி விட்டார்.

பேட்டியில் “ இவ்வளவு பெரிய திரையரங்கத்தை நடத்தியும் அறியப்படாத நான், இந்த ஒரே படத்தின் மூலம் அனைவருக்கும் தெரிந்தவனாகி விட்டேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

சினிமா அந்த அளவிற்கு மக்களைச் சென்றடையக்கூடியது.

பாரதி மணி அவர்கள் உயிர்மை, தீராத நதி, அமுதசுரபி மற்றும் பல்வேறு இதழ்களில் எழுதி இருந்தாலும் என்னைப் போன்றவர்களுக்கு ‘சார்! நீங்க புதுப்பேட்டை படத்தில் நடித்தவர் தானே!‘ என்று தான் அடையாளப்படுத்த முடிகிறது.

தேசிய விருது

இவர் நடித்த பல படங்களில் யாராவது ஒருவருக்கு தேசிய விருது பெரும்பாலும் கிடைத்து விடுகிறது இதை தனது புத்தகத்தில் நகைச்சுவையாக “இதை இயக்குனர்கள் கவனிப்பார்களாக!” என்று குறிப்பிட்டு இருக்கிறார் 🙂 .

இவருடைய பலமே எளிமையான எழுத்தும் நகைச்சுவையாகச் சம்பவங்களைக் கூறுவது. எழுத்தாளர் கடுகு இவரது நகைச்சுவையை மனம் திறந்து பாராட்டி உள்ளார்.

தில்லியில் ஐம்பது வருடங்கள்

“பல நேரங்களில் பல மனிதர்கள்” தலைப்பே கூறி விடும் புத்தகத்தில் என்ன உள்ளது என்று 🙂 பாரதி மணி அவர்கள் தில்லியில் ஐம்பது வருடங்கள் வாழ்ந்து இருக்கிறார்.

அங்கே தனக்கு கிடைத்த அனுபவங்கள், சந்தித்த மனிதர்கள், அரசியல் மற்றும் நாடக வாழ்க்கை என்று கலவையான அனைத்து விசயங்களையும் பகிர்ந்து இருக்கிறார்.

எனக்கு ரொம்பப் பிடித்த தலைப்புகள். அதோடு படிக்க மிக மிக எளிமையாக இருந்தது.

அலங்கார வார்த்தைகள் எதுவும் இல்லாமல் கஷ்டமான வார்த்தைகளைப் போட்டுக் குழப்பாமல் எழுதி இருந்தார் இதுவும் என்னைப் படிக்கத் தூண்டியதற்கு ஒரு காரணம்.

பல விஷயங்கள் எனக்கு ரொம்ப ஆச்சர்யமாகவும் இதுவரை கேள்விப்படாததாகவும் இருந்தது.

இதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அட! இப்படி எல்லாம் நடந்து இருக்கிறதா! இவ்வளவு விஷயம் இருக்கிறதா!! என்று தோன்றச் செய்பவைகளாக இருந்தது.

பிரபலங்களின் நட்பு

இவர் சந்திக்காத பிரபலங்களே இல்லையா என்று நினைக்கும் அளவிற்கு ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது.

இதில் குறிப்பிடத் தக்க விஷயம் இவர் சந்தித்த பிரபலங்கள் பெரும்பாலும் அவர்கள் பதவியை அடைவதற்கு முன்பே என்பது.

காமராஜர், அண்ணா [ஹசாரே அல்ல :-)], ஜவஹர்லால் நேரு, எம் ஜி ஆர், சிவாஜி, அன்னை தெரசா, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, என்று பெரிய பட்டியலே உள்ளது.

இதில் எம் ஜி ஆர், அண்ணா, ஷேக் ஹசீனா பற்றிக்குறிப்பிடும் போது இவர்கள் மூவரும் நாட்டுக்குத் தலைவர்களாக வருவார்கள் என்று கணிக்கக்கூடிய தீர்க்கத் தரிசனம் தனக்கு இல்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

அண்ணாவுடன் திரைப்படம் பார்த்த போது ஏற்பட்ட ஒரு அவஸ்தையை நகைச்சுவையாகக் குறிப்பிட்டு இருக்கிறார் 🙂 .

அன்னை தெரசா

விமானப்பயணத்தில் அன்னை தெரசாவுடன் ஏற்பட்ட சம்பவங்களை விவரித்தது என்னை ரொம்பக் கவர்ந்தது.

அதற்கு மற்ற விஷயங்கள் நபர்கள் பற்றி அதிகம் கேள்விப்படாததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அன்னை தெரசா எனும் போது கூடுதல் ஆர்வம் எனக்கு வந்தது உண்மை தான்.

இதில் பாரதி மணி அவர்களுக்கு அன்னை தெரசா பைபிளையும் ஜெப மாலையையும் பரிசாகக் கொடுத்தார்களாம் இதைப்படித்தவுடன் செம பொறாமையாகி விட்டது 🙂 .

இன்று வரை பொக்கிஷமாகப் பாதுகாத்து வருவதாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.

மனக்குறையாக குறிப்பிட்ட ஒரு விஷயம் “வாழ்நாள் முதுவதும் மக்களுக்காகவே உழைத்தவருக்கு தன் மரண நேரத்தைத் தேர்ந்தெடுக்கத் தெரியவில்லை‘.

ஆம்! அன்னை இறந்த நாளில் தான் இளவரசி டயானாவும் கார் விபத்தில் உயிரிழந்தார் இதனால் ஊடகங்கள் டயானா இறப்பை முக்கியத்துவம் கொடுத்து இவரது இறப்பை இரண்டாம் செய்தியாக்கி விட்டன” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

சுஜாதா / சுப்புடு

சுஜாதா ரங்கராஜனாக இருக்கும் போது இருந்து அவரை நன்கு தெரிந்து வைத்து இருக்கிறார்.

பேசும் போது “அது வந்திற்று…” என்ற சொல்லை அதிகம் பயன்படுத்துவார்.

அதை இவர் கவனித்து கூறியதையும் சுஜாதா அவர்கள் இறந்த பிறகு அதற்கு அந்தச் சமயத்தில் இவர் இது குறித்து கூறியதும் ரொம்ப டச்சிங்காக இருந்தது.

விமர்சகர் சுப்புடுவிற்கும் இவருக்கும் உள்ள நட்பை விவரித்துள்ளார்.

இதில் சுப்புடு அவர்கள் பற்றி பல விசயங்களை முன்பு தெரிந்து இராத செய்திகளை இதன் மூலம் தெரிந்து கொண்டேன்.

செம்மீன்

செம்மீன் என்ற மலையாளப்படம் பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். தென்னிந்தியாவிற்கு கிடைத்த முதல் தேசிய விருதுத் திரைப்படம்.

இதைத் தென்னிந்தியாவிற்கு போராடிப் பெற்றுத் தந்ததில் பாரதி மணி அவர்கள் பங்கு மிக முக்கியமாக உள்ளது.

இவரை நேரில் சந்தித்தால் சார்! நீங்க உண்மையாகவே இவ்வளவு முயற்சித்தீர்களா! உண்மையச் சொல்லுங்க 🙂 என்று கேட்க வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன்.

உண்மையிலேயே செம்மீன் இயக்குநர் இதற்காக இவரைப் பாராட்டியதற்கு மிகப் பொருத்தமானவராகவே இருக்கிறார்.

தில்லியில் திரைப்படவிழாக்கள் நடக்கும் போது அவர் கூறிய சம்பவங்கள் பல சுவாரசியமாக இருந்தது.

தென்னிந்தியாவில் இருந்து வரும் பிரபல நடிகர்கள் பலரை அங்குள்ளவர்களுக்கு தெரிவதில்லையாம்.

நடிகர் திலகம் சிவாஜி அவர்களையே யார் என்று ஹோட்டல் நபர் கேட்டது குறித்து நடிகர் திலகம் நொந்து போய்க் கூறியதைப் பார்த்தால் வருத்தமாக இருந்தது.

அரசியல்வாதிகள் சலுகைகள்

இதைவிட தில்லியில் உள்ள அரசியல்வாதிகள் தொடர்பு அவர்களுக்கு அங்கே கிடைக்கும் சலுகைகள் பலவற்றை கேட்டதும் வயித்தெரிச்சலாக இருந்தது.

இத்தனை சலுகைகள் வசதிகள் வாய்ப்புகள் கிடைத்தும் மக்களுக்கு எதுவுமே செய்யமாட்டேன் என்கிறார்களே என்று ஆத்திரமாக வந்தது.

ஒருசில விசயங்களை ரொம்ப வெளிப்படையாக விமர்சித்து இருக்கிறார் இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் என்ன நினைத்து இருப்பார்கள் என்று தெரியவில்லை.

நமது நடைமுறை வாழ்க்கையை ஒட்டிய பல சம்பவங்களை விவரித்து இருக்கிறார். இதைப்போலக் காரணங்களால் எனக்கு இந்தப் புத்தகம் ரொம்பப் பிடித்து இருந்தது.

இப்புத்தகம் படிக்க முழுக்காரணமும் நண்பர் ஸ்ரீநிவாசன் அவர்கள் அவரது தளத்தில் படிக்கக் கொடுத்த சில பகுதிகளே ஆகும்.

பல புத்தகங்கள் பற்றி மட்டுமல்ல பல்வேறு விசயங்களையும் தெரிந்து கொள்ள ஒரு அருமையான தளம் இவரது Balhanuman’s Blog என்பதையும் இந்தச் சமயத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.

புத்தகம் பற்றிய தகவல்கள்

தலைப்பு: பல நேரங்களில் பல மனிதர்கள்
ஆசிரியர்: பாரதி மணி
மின்னஞ்சல்: bharatimani90 [at] gmail.com
விலை : Rs 100
பதிப்பகம் : உயிர்மை
முதல் பதிப்பு : டிசம்பர் 2008

கொசுறு

எழுபதுகளில் தில்லியிலிருந்து நான்கு நாடகம் போடுவதற்காகப் பம்பாய் போயிருந்தோம்.

காலையில் நான் ஷேவ் செய்துகொண்டிருந்ததைப் பார்த்த சகநடிகன் பாலு, ‘மணி! எனக்கும் ஷேவ் செய்துவிடுவியா? சோம்பலா இருக்கு!’ என்றான்.

நானும் சீரியஸாக,’நிச்சயமாக… ஆனால் எங்கிட்டே ரேட் கொஞ்சம் அதிகம். நூறு ரூபா ஆகும். ஆனால் தொழில் சுத்தமா இருக்கும்! வசதி எப்படி?’ என்றேன்.

அப்போதெல்லாம், சலூனில் ஒரு ரூபாய்க்கும் குறைவான ரேட்.

சம்மதித்து எதிரில் உட்கார்ந்தவனுக்கு, கழுவிய பிரஷ்ஷில் புதிதாகச் சோப் எடுத்து அழகாக முகத்தில் தடவ ஆரம்பித்தேன். சுற்றி நண்பர்கள் கூடி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.

நான் பாலுவிடம், ‘ஒரு வெட்டு, ரத்தம் இருக்காது. என்னிடம் தொழில் சுத்தம்!’ என்று ரேஸரால் வழிக்கவும், பாலுவுக்கு ‘இவன் ஜகா வாங்கமாட்டான். நமக்குப் பணம் பழுத்துவிடுமே’யென்ற பயம். பின் வாங்கியவனை மற்றவர்கள் உட்காரவைத்தனர்.

இரண்டாவது தடவையும், சோப் தடவி, அவன் முகத்தை வழுவழுவென்று ஆக்கினேன். அழுதுகொண்டே நூறு ரூபாயைத் தந்தான்.

இந்தத்தொழிலில், என் முதல் கூலி மற்றவர்களைவிட நூறு மடங்கு அதிகம்! ஒரு வேலை கைவசம் உண்டு!

இவையெல்லாம் என் வாழ்வில் மகிழ்ச்சியான தருணங்கள்!’ என்று கூறியுள்ளார்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

15 COMMENTS

 1. மிக அருமையான விமர்சனம். ரசித்ததை ரசிக்கும்படி பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்:)!

  பாரதி மணி அவர்களை தேனம்மை பேட்டி எடுத்து பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையை வாசித்திருக்கிறேன். இந்தப் புத்தகம் குறித்தும் பகிர்ந்து கொண்டிருந்தார்.

  Balhanuman’s ப்ளாக் சுவாரஸ்யமான பதிவுகளுடன் உள்ளன. பகிர்வுக்கு நன்றி.

 2. புதிய செய்திகள், புதிய அறிமுகங்கள், புதிய எழுத்துகள் அனைத்துமே புதியதாக மற்றும் மனம் நிறைவாக உள்ளது. புதிய நபர்களை சந்திப்பதிலும், புதிய எழுத்துகளை வாசிப்பதிலும் என்றுமே ஒரு அலாதி இன்பம். புத்தகங்கள் என்றுமே நல்ல நண்பர்கள்.. அவைகளுக்கு கர்வம், திமிர், ஆணவம், வஞ்சம் கிடையாது. புத்தக வாசனையை அதன் ருசியை அறிந்தவர் நம்மில் சிலரே.. பதிவுக்கு நன்றி…

 3. கிரி! முதல் நன்றி என் புத்தகத்தை வாங்கிப்படித்ததற்கு……இரண்டாவது நன்றி அதை ஆழ்ந்து படித்து, உங்கள் கருத்துக்களோடு, என்னை தாராளமாக பாராட்டியதற்கும். சந்தோஷமாக இருக்கிறது.

  இந்தப்புத்தகத்தில் பொய் சொல்லவேண்டிய அவசியம் இருக்கவே இல்லை. தெரியாததை ’தெரியாது’ என்று சொல்வதில் எனக்கு எந்த கூச்சமுமில்லை!

  ஆனந்த் தியேட்டர் அதிபர் பெயர் ஜி. உமாபதி. தியேட்டருக்குள் அக்கால ஓவியர் ஆர். நடராஜன் வரைந்த அத்தனை படங்களும் வரிசையாக வைத்திருப்பார். கொஞ்சகாலம் ‘உமா’ என்ற பத்திரிகையும் நடத்தினார்.

  நட்புடன்,
  பாரதி மணி

 4. நல்லதொரு பகிர்வு கிரி. பகிர்வுக்கு நன்றி

  //இதன் உரிமையாளர் (பெயர் சிதம்பரம் என்று நினைக்கிறேன்)//

  இல்லை, அவர் பெயர் உமாபதி.

 5. இவ‌ரு பாபா ப‌ட‌த்துல‌ ந‌டிச்சிருக்காருல்ல‌, ர‌ஜினி சார் இவ‌ரைதானே முத‌ல் அமைச்ச‌ரா ஆக்க‌ணும்னு சொல்லுவார். (க‌க்க‌ன் அய்யான்னு நினைக்கிரேன் அந்த‌ க‌தாபாத்திர‌ம்)!!!

 6. க‌ம‌லா தியேட்ட‌ர் உரிமையாள‌ர்தான் சித‌ம்ப‌ர‌ம்.

 7. இந்த புத்தகத்தை பற்றி சமீபத்தில்தான் கேள்விப்பட்டேன். இப்போது நீங்களும் சொல்லி இருக்கிறீர்கள். என் போன்ற புத்தக பிரியர்களுக்கு தேவையான தகவல். நன்றி நண்பரே,,,

 8. @பாரதி மணி சார்! உமாபதி அவர்கள் பெயர் படத்தில் சிதம்பரம் மாற்றி கூறி விட்டேன் 🙂

  @சதீஷ் ஆமாம். பாபாவில் நடித்து இருக்கிறார்.

 9. அன்புள்ள கிரி,

  என்னுடைய தளத்தை சிறப்பான முறையில் அறிமுகப்படுத்தியதற்கு என் மனமார்ந்த நன்றி. உங்கள் அறிமுகத்தின் மூலம் என் தளத்திற்கு வருகை தந்த உங்கள் வாசகர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு தினங்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேலே…

 10. மிகவும் அருமையான பதிவு கிரி. இந்த புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும் என்ற ஆவல் வந்துவிட்டது.
  (ஹாய்) மதன் பல வருடங்களா விகடனில் ஹாய் மதன் கேள்வி பதில்(கார்ட்டூன்) எழுதுனாலும் அவர் பிரபலம் ஆனது என்னவோ தொலைகாட்சியில் சினிமா விமர்சனம் செய்ய ஆரம்பிச்ச உடன் தான். உண்மை தான் சினிமா/ தொலைகாட்சியில் வந்தாலே பிரபலம் அடைந்து விடுகிறார்கள்.

 11. கிரி…விமர்சகர் சுப்புடு …யார் இவர் ? எனக்கு தெரிந்த சுப்புடுவோ என்று நினைத்தேன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here