கரகாட்டக்காரன் (1989)

8
கரகாட்டக்காரன் (1989) karagattakaran

ரகாட்டக்காரன் கதையை விமர்சனம் செய்யப்போவதில்லை. அதில் நான் மிக ரசித்த காட்சிகளை மட்டும் குறிப்பாக நம்ம கவுண்டர் செந்தில் நகைச்சுவை.

கரகாட்டக்காரன் 

ராமராஜன் கூட்டணியினர் கரகாட்டம் ஆடிக்கொண்டு இருக்கும் போது ஒருத்தர் செந்திலையும் கோவை சரளாவையும் பார்த்து..

அட! அட!! இவங்களைப் பார்த்தால் தில்லானா மோகனாம்பாள் சிவாஜி பத்மினி மாதிரியே இருக்கு‘ என்றவுடன் கவுண்டர் கோபமாகி ‘டேய்! நீ எதை வைத்து இந்த மூஞ்சியைப் பார்த்து அப்படிச் சொன்னே‘ என்று கடுப்பாக

அவர் ‘ஐயா! இவர் தான் 10 ருபாய் கொடுத்துச் சொல்லச் சொன்னாரு, தவில் காரனுக்கு கேட்கிற மாதிரி சொல்லுன்னு‘ என்றவுடன் ‘டேய் ஏன்டா இப்படி?‘ என்றவுடன் செந்தில் “ஒரு விளம்பரம்ம்ம்ம்‘ என்பார். Image Credit

ஏன்டா! அந்தச் சினிமாக்காரங்க தான் இப்படி அவங்களே போஸ்டர் அடித்து ஒட்டிக் கொள்கிற மாதிரி ஏன்டா பண்ணுறேன்‘னு சொன்னதும் செந்தில் பாவமாக முகத்தை வைத்துக் கொள்வார்.

உடனே கவுண்டர் ‘பாரு! திருவிழாவில காணாம போனவன் மாதிரி முழிக்கிறத‘ன்னு கலாய்க்க செம காமெடி 🙂 .

ரொம்ப நல்லா ஆடுனிங்க தம்பி

இவர்கள் அனைவரும் சிறப்பாக ஆடுவதைப் பார்த்துக் கனகாவின் அப்பா “ரொம்ப நல்லா ஆடுனிங்க தம்பி” னு அடி மனதில் இருந்து கூறுவார்.

அது மனதார கூறுவது போலச் சிறப்பாக இருக்கும். என் மனதில் அவருடைய நடிப்பு பதிந்து விட்டது.

காலைக்கடனை முடிக்க ஊர்பக்கம் ஒதுங்கும் போது செந்தில் எங்கேன்ன போறோம் என்றதும் ம்ம்ம் கம்ப்யூட்டர் கத்துக்கன்னு கலாய்ப்பதும், தோட்டக்காரர் ‘டேய்! யாருடா அது.. அங்கே அசிங்கம் பண்ணுறது‘ன்னு திட்டியவுடன்..

கவுண்டர், ‘விவசாயம் பண்ணினால் போதுமா? யாரு உரம் போடுவது‘ என்று நக்கலடிக்க, செந்தில் ‘ஐயா! ஆனது ஆச்சு இன்னும் கொஞ்சம்..‘ என்று இழுத்ததும் அவர் அடிக்க ஓடி வரச் சிரித்துக் கண் கலங்கி விட்டது.

ஐயா! அந்த மாலை..

கனகாவின் அப்பா ராமராஜனை பாராட்டி மாலை போட்டு விட்டுச் செல்ல, கவுண்டர் உடன் வைத்து இருப்பவர் வைத்து இருக்கும் மாலை தனக்கு என்று எண்ணி அவரிடம் ‘ஐயா! அந்த மாலை..‘ என்று இழுக்க, அவர் ‘இது சாமிக்குங்க‘ என்று கூறியவுடன் மூக்குடைப்பட்ட கவுண்டர் சரி சரி சாமிக்கே போடுங்க என்று சமாளிப்பார் 🙂 🙂 .

எது பிடிக்கலையோ தூங்கிடுவேன்

கவுண்டர் மிகவும் ரசித்து வாசித்துக் கொண்டு இருக்கும் போது அருகில் செந்தில் குறட்டை விட்டுத் தூங்கி கொண்டு இருப்பார், கவுண்டர் கோபமாகி ‘டேய்! இங்க ஒருத்தன் கஷ்டப்பட்டு வாசிக்கிறேன் நீ தூங்கிட்டு இருக்கியா‘ன்னு திட்டுவார்.

அண்ணே! எனக்கு எது பிடிக்கலையோ நான் உடனே தூங்கிடுவேன்‘ என்று செந்தில் கூற கவுண்டர் கோபமாகி விடுவார்.

செந்தில் அதைக் கண்டு கொள்ளாமல் ‘அண்ணே! தூக்கம் வருது வாசிங்கண்ணே‘ என்று இன்னும் வெறுப்பேத்த, கவுண்டர் கோபத்தின் உச்சிக்கே செல்வது எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காதது.

சூடான மோர்

ராமராஜன் கவுண்டர் செந்தில் ஆகியோர் கனகாவின் வீட்டுக்குச் செல்ல அங்கே கனகா ராமராஜனுக்கு மோர் கொடுக்க, கனகா கோபத்தில் இருப்பதைப் பார்த்து ராமராஜன் ‘என்ன மோர் சூடா இருக்கு?‘ என்று இரட்டை அர்த்தத்தில் கூற அதுக்குப் பதிலடியாகக் கனகா ‘ஆங்! நேத்து முழுவதும் மாடு வெய்யில் நின்னுட்டு இருந்தது‘ என்று கிராமத்து நக்கலாகக் கூறுவது ரசிக்கும் படி இருக்கும்.

ராமராஜன் குழுவினர் அனைவரும் ஊருக்கு அவங்க டப்பா காரில் கிளம்பக் கனகாவின் அப்பா, ‘தம்பி! பார்த்து மெதுவா போங்க..‘ என்று கூற, செந்தில் ‘நீங்க சொல்லலைனாலும் கார் மெதுவாகத் தான் போகும் ஏன்னா….’. என்று ஆரம்பிக்கக் கவுண்டர் அவரை அடித்து அடக்க, என் சிரிப்பை அடக்க முடியவில்லை.

ஒரு சந்தர்ப்பம் கொடுக்கக் கூடாதா

வாழைப்பழம் அனுபவத்தால் கவுண்டர் எதையும் செந்திலிடம் கூறாமல் இருப்பார், செந்தில் அவரிடம் வெத்தலை பாக்கு வாங்க கேட்க, ‘யப்பா! ஒருமுறை பட்டதே போதும் இனி வேண்டாம்டா சாமி‘ என்று ஒதுங்க,

செந்தில் கவுண்டரிடம் ‘அண்ணே! நான் திருந்த ஒரு சந்தர்ப்பம் கொடுக்கக் கூடாதா‘ என்று அப்பாவியாய்! கேட்கும் இடம் ரசிக்கும் படி இருக்கும்.

இவர்களின் காரைப் பார்க்கும் போதெல்லாம் ஒருவர் ஈயம் பித்தளைக்குப் பேரிச்சம் பழம் என்று அருகில் வர, கோபமான கவுண்டர் ‘இனி இந்தப் பக்கம் வந்தே தொலைந்தே‘ என்று மிரட்டுவார்.

அதுக்கு அவர் ‘அண்ணே! நான் வியாபாரிண்ணே!‘  என்று கூற ‘ஆமாம்! இவர் பெரிய கப்பல் வியாபாரி‘ என்றதும், செந்தில் ‘அண்ணே! அண்ணே! பேரிச்சம் பழம் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சுண்ணே‘  என்று சப்பு கொட்ட கோபத்தின் உச்சிக்கே செல்வது நம்மைச் சிரிப்பின் உச்சிக்கே அழைத்துச் சென்று விடுகிறது.

இளையராஜா

இந்தப் படத்தின் வெற்றிக்கு இளையராஜாவின் இசை முக்கியக் காரணம்.

இந்த மான் பாடலும் குடகு மலை பாடலும் நம்மை எங்கோ கொண்டு சென்று விடுகிறது. மாங்குயிலே பாடல் அனைவரையும் கட்டி போட்டு விடுகிறது.

ராமராஜன் தன் பங்குக்கு அட்டகாசமாகக் கரகாட்டம் ஆடி நம்மை ஆச்சர்யபடுத்துகிறார்.

கனகாவின் நடிப்பும் சிறப்பான நடிப்பு.

எந்த ஒரு ஆடம்பரம் மற்றும் பிரம்மாண்டமும் இல்லாமல் இயல்பான நடிப்பு, நகைச்சுவையின் மூலம் வெளிவந்த ஒரு சிறப்பான படம் கரகாட்டக்காரன்.

எந்தக் காலத்திலும் ரசிக்கும் படி உள்ளதே இதன் பெருமைக்குச் சான்று.

Read : “ரத்தக்கண்ணீர்” காலத்தால் அழியாத காவியம்

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

8 COMMENTS

  1. நானும் அன்னிக்கு தான் சன் தொலைக்காட்சியில் அந்த படத்த பார்த்தேன். உங்களை போலவே மிகவும் ரசித்தேன் நான்! பாடல்கள் தான் சூப்ப்ப்ர்ர்ர்!நம்ம கவுண்டமணிய அடிச்சிக்க ஆள் இருக்கா என்ன?? :)))

  2. வாங்க தமிழ்மாங்கனி. நீங்க சொல்றது ரொம்ப சரி :)))

    கவுண்டர் பாணில சொல்றதுன்னா ..டேய் புண்ணாக்கு மண்டயா! படம் வந்து 15 வருஷம் ஆச்சு, இப்ப போய் விமர்சனம் பண்ணுரானாம்…ந்கொக்க மக்கா ..ஜனங்களே இந்த மாதிரி பல பேரு இப்படி தான் திரியறானுக.. எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.. ஹா ஹா ஹா ஹா ..

    ஒரு வேளை கவுண்டர் என்னை திட்டினா இப்படி தான் திட்டி இருப்பாரு…:))))) ..இது கவுண்டருக்கு தாங்க நீங்க எதுவும் இப்படி என்னை திட்டிடாதீங்க :)))

  3. நல்ல ரசனைதாங்க.

    மாட்டுக்காரன் ஆட்டுக்காரன்னு கிராமா வேசம் ராமராஜனுக்குப் பொருந்திதான் வருது.

    என்னமோ போங்க அவர் நேரம் சரியில்லை……

    இப்ப முன்னணி ஹீரோன்னு சொல்லிக்கீறவங்க நடிப்பு………

    என்னமோ போங்க.

    சரி. அடுத்த பட விமரிசனம் எப்போ?

  4. ராமராஜன் சாதாரணமாக நடித்து கொண்டு இருந்த வரை அவருடன் வெற்றி இருந்தது. எப்போது அவர் வெற்றியால் பாதிக்கபட்டாரோ மற்றும் கட்சியில் இணைந்தாரோ அப்போது இருந்து அவருக்கு அடி தான்.

    இப்ப நடிக்கிறவங்க பல பேர் ஒரு படம் வெற்றி அடைந்து விட்டாலே, அவர்கள் நிலத்தில் நடப்பது இல்லை, அப்புறம் என்னத்தைங்க சொல்றது. அடக்கம் தான் தன்னை உயர்த்தும் என்பதை அறியாத விட்டில் பூச்சிகள் அவர்கள். (ஒரு சிலருக்கு நேரம் சரியாக இருப்பதால் அவ்வாறு இருந்தும் உயரத்தில் இருக்கிறார்கள், ஆனால் எவ்வளோ நாள் என்று தெரியவில்லை.

    என்னோட விமர்சனத்தையும் மதிச்சு அடுத்த விமர்சனம் எப்போ என்று கேட்டு விட்டீர்கள்!!! (ஒரு வேளை மொக்கையா இருந்தது அடுத்தது எப்போ என்று கேட்டீர்களா? 😀 ), அதுக்கு உங்களுக்கு என்னோட மனமார்ந்த நன்றி. நான் அடுத்து என்னை பயமுறுத்திய ஒரு “ஹாரர்” படத்தை பற்றி எழுத போறேன். ஆனா அது உங்களுக்கு பிடிக்காது என்று நினைக்கிறேன்? இருந்தாலும் தொடர்ந்து மற்ற தமிழ் படங்களின் விமர்சனமும் எழுத போறேன் (பாவம் எல்லோரும்:D) தொடர்ந்து படிங்க, உங்க கருத்த சொல்லுங்க.

    உங்க வருகைக்கு நன்றிங்க

  5. இந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பதேயில்லை.அதிலும் மாங்குயிலே பூங்குயிலே பாட்டில் (ராமராஜன் கரகத்துடன் பாடுவது)எத்தனை shots, எத்தனை closeup கனகாவுக்கு. பார்க்க பார்க்க பரவசம் தான்.குறிப்பாக ராமராஜன் கனகா வீட்டிற்கு வந்து விடை பெற்று செல்லும் காட்சியில் கண்ணாலேயே போய் வருகிறேன் என்று ஜாடை காட்டுவது இன்னும் பிரமாதம்.கங்கை அமரன் எடுத்ததிலேயே சிறந்தது இது தான்.படத்தில் கொஞ்சம் கூட சோகம் இல்லாமல் இருப்பதினால் ரொம்பவும் பிடிக்கும்

  6. //இந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பதேயில்லை//

    சத்யமான உண்மை.

    //அதிலும் மாங்குயிலே பூங்குயிலே பாட்டில் (ராமராஜன் கரகத்துடன் பாடுவது)எத்தனை shots, எத்தனை closeup கனகாவுக்கு. பார்க்க பார்க்க பரவசம் தான்//

    உண்மையிலேயே அதில் இருவரும் அருமையாக கரகம் ஆடி இருப்பார்கள். ராமராஜன் கலக்கி இருப்பார்.

    //குறிப்பாக ராமராஜன் கனகா வீட்டிற்கு வந்து விடை பெற்று செல்லும் காட்சியில் கண்ணாலேயே போய் வருகிறேன் என்று ஜாடை காட்டுவது இன்னும் பிரமாதம்//

    ரொம்ப எளிமையா போலித்தனம் இல்லாம அருமையா இருக்கும்.

    உங்கள் வரவுக்கு ரொம்ப நன்றி செல்வராஜ்.

  7. கிரி நீங்கள் கரகாட்டக்காரன் படத்தை தாமதமாக விமர்சனம்
    செய்தது போலவே நானும் தாமதமாக பின்னூட்டம் செய்கிறேன்

    இந்த படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்
    காரணம் பாடல்கள் ,நகைச்சுவை , எங்கும் போரடிக்காமல் செல்லும் படம் எப்பொழுது போட்டாலும் கண்டிப்பாக வீட்டில் பார்ப்போம்

  8. அட அட அட என்ன இது என்ன இது என்ன இது – கோவை சரளா ஸ்டைலில் சொல்லிப் பார்த்தேன்!
    //கனகாவை எங்க ஊர் கோபிசெட்டிபாளையத்தில் கோவில் காளை படத்திற்காக வந்த போது ஒப்பனை இல்லாமல் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்த தருணங்கள் உண்டு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!