ஆளுநர் ரவி கூறியது சரியா?

1
ஆளுநர் ரவி

சுதந்திரப் போராட்ட தலைவர்கள் தமிழக அரசால் கண்டுகொள்ளப்படாதது குறித்து ஆளுநர் ரவி பேசியதற்கு திமுக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். Image Credit

ஆளுநர் ரவி

தமிழக ஆளுநராக ரவி அவர்கள் பொறுப்பேற்றது முதலே திமுக அரசுக்கும் அவருக்கும் பிரச்சனையாக உள்ளது.

முந்தைய ஆளுநர்களைப் போலப் பொம்மையாக இல்லாமல் கேள்வி கேட்பதும், இந்து மதத்தின் மீதான வழக்கங்களில் ஆர்வம் காட்டுவதும் திமுகவினருக்குப் பிடிக்கவில்லை.

ஆளுநராக உள்ளவர் எதற்கு அரசியல் பேச வேண்டும் என்ற கேள்வியை முன் வைக்கிறார்கள். ஆளுநர் அதற்கு நேரடி பதில் கூறவில்லையென்றாலும், நிகழ்ச்சிகளில் பங்கேற்று கருத்தைக் கூறுகிறார்.

சுதந்திரப் போராட்ட தலைவர்கள்

சுதந்திரப் போராட்ட தியாகிகளைச் சாதித் தலைவர்களாக மாற்றி விட்டதாக ஆளுநர் ரவி மருது சகோதரர்களின் விழாவில் மாணவர்கள் முன்னிலையில் பேசினார்.

இதோடு தமிழக சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பட்டியலைத் தமிழக அரசிடம் கேட்டதற்கு 40 பேர் கொண்ட பட்டியலை மட்டுமே வழங்கினார்கள்.

நூற்றுக்கணக்கான தியாகிகளின் பெயர்கள் இல்லை என்று குறிப்பிட்டதே சர்ச்சைக்குக் காரணம்.

ஆளுநர் ரவி கூறியது சரியா?

ஆளுநர் கூறியது சரியா என்பதை விட அவர் கூறியதில் என்ன தவறு?! இதில் விமர்சிக்க என்ன உள்ளது? உண்மையைத்தானே கூறினார்.

தமிழகத்தில் பாரதியார், பாரதிதாசன், தீரன் சின்னமலை, வாஞ்சிநாதன், வ உ சிதம்பரம் பிள்ளை, மருது சகோதரர்கள், வேலுநாச்சியார் போன்ற வெகு சிலர் மட்டுமே முன்னிறுத்தப்படுகிறார்கள்.

மற்றவர்களைப் பற்றிய எந்த விவரங்களும் மாணவர்களுக்குச் சொல்லித்தரப்படுவதில்லை. பலரின் தியாகங்கள் புறக்கணிக்கப்பட்டு விட்டன.

தீரன் சின்னமலை, மருது சகோதரர்கள், அம்பேத்கர், முத்துராமலிங்கத்தேவர் போன்றோர் சாதித்தலைவர்களாக்கப்பட்டு விட்டனர்.

இவர்கள் பிறந்த நாளில் ஒரு மாலையைப் போடுவதைத்தவிர இவர்களுக்கும், புறக்கணிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் தமிழக அரசு என்ன மரியாதை செய்கிறது?

மற்ற தலைவர்களை ஏன் பாடப்புத்தகத்தில் சேர்க்கவில்லை? ஏன் இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தவில்லை?

பள்ளியில் படிக்கும் போது (80s / 90s) இந்திய தேசிய தலைவர்கள், பண்டைய மன்னர்களைப் பற்றி விரிவாகப் படித்ததை விட மொகலாயர்களையும், ஆங்கிலேயர்களையும் படித்ததே அதிகம்.

ராஜ ராஜ சோழன்

இவை எல்லாவற்றையும் விட பெரும் கொடுமையாக, சகிக்கவே முடியாத செயலாக, தமிழர்கள் அனைவரும் போற்றிக்கொண்டாட வேண்டிய ராஜ ராஜ சோழனையும் சாதித்தலைவராக்கி வருகிறார்கள்.

இதைத்தடுக்கத் தமிழக அரசு (திமுக / அதிமுக) எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை.

இவ்வளவு பெருமை வாய்ந்த ராஜ ராஜ சோழனின் சமாதி கேட்பாரற்று உள்ளது.

38 கோடி செலவழித்து கலைஞர் சமாதி கட்ட தெரிந்தவர்களுக்கு உலகம் முழுக்க தமிழர்களின் பெருமையைக் கொண்டு சென்ற ராஜ ராஜ சோழனுக்கு ஒரு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று தோன்றவில்லையே!

மகாராஷ்டிராவில் சிவாஜியைக் கொண்டாடித் தீர்க்கிறார்கள் ஆனால், தமிழகத்தில் அவரை விடப் புகழ் வாய்ந்த, பல நாடுகளை ஆட்சி செய்த ராஜ ராஜ சோழன் கேட்பாரற்று கிடக்கிறார்.

எதோ தஞ்சை பெரிய கோவில் இருப்பதால், அவர் பிறந்தநாள் கவனிக்கப்படுகிறது.

திராவிட தலைவர்கள்

பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, நூலகம் என்று ஒன்றுவிடாமல் அனைத்துக்கும் திராவிட தலைவர்கள் பெயர்கள் தான் வைக்கப்படுகின்றன.

அண்ணா, பெரியார், கலைஞர் போன்றோர் மட்டுமே தமிழர்கள், இவர்களே சுதந்திரத்துக்குப் போராடியவர்கள் எனும் அளவுக்குத் தமிழக மாணவர்களுக்கு மூளைச்சலவை செய்யப்படுகிறது.

ஆங்கிலேயரிடம் மண்டியிட்ட பெரியாரையும் சுதந்திரப் போராட்ட தலைவர் பட்டியலில் இணைத்துக் குடியரசு தின அணிவகுப்பில் சிலையைச் சேர்த்து, உயிரை விட்ட தியாகிகளைத் தமிழக அரசு அசிங்கப்படுத்தியது.

வ உ சி தன் சொத்தை விற்று கப்பல் கட்டி ஆங்கிலேயருக்குக் கடும் போட்டி கொடுத்து, கைதாகி செக்கிழுத்து சிறையில் வாடி வதங்கினார்.

ஆனால், ஆங்கிலேயர்களுக்குச் சொம்பு தூக்கி, சொத்து போய் விடக் கூடாது என்று தன் மகளையே திருமணம் செய்த பெரியார் சுதந்திரப் போராட்ட தியாகியாம்!

இதை விடத் தமிழகத்தில் சுதந்திரப் போராட்ட தலைவர்களை யாரும் அசிங்கப்படுத்தி விட முடியாது.

தப்பித்த தலைவர்கள்

மற்ற எந்த மாநிலத்துக்கும் குறைவில்லாத நூற்றுக்கணக்கான சுதந்திரப் போராட்ட தலைவர்களை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்வது அரசின் கடமை.

எதோ நடிகர் திலகத்தின் அற்புதமான நடிப்பால் இன்னும் பல சுதந்திரப் போராட்ட தலைவர்கள் திரைப்படங்கள் வழியாகப் பலருக்கும் நினைவில் உள்ளார்கள்.

ஆளுநர் ரவி கூறியது போல, காந்தி, நேதாஜி, வல்லபாய் படேல், பகத்சிங் போன்றோர் தமிழ்நாட்டில் பிறந்து இருந்தால், அவர்களும் இந்நேரம் ஏதாவது ஒரு சாதித்தலைவராக்கப்பட்டு இருப்பார்கள்.

நல்லவேளை தப்பித்ததோடு, மங்கா புகழோடு இன்றும் உள்ளார்கள்.

இனிவரும் காலங்களிலும் தமிழக அரசு (திமுக / அதிமுக) எந்த நடவடிக்கையும் உறுதியாக எடுக்காது. எந்தச் சந்தேகமும் வேண்டாம்.

ஆளுநர் ரவி கூறியது 200% சரி.

தொடர்புடைய கட்டுரைகள்

குடியரசுத் தினத்தை அசிங்கப்படுத்திய தமிழக அரசு

பெயர் மாற்ற அடாவடிகள்

ராஜராஜ சோழன் | அரசர்களின் அரசன்

கலைஞர் கருணாநிதி நாடு

1 COMMENT

  1. கிரி.. சுதந்திரத்துக்காக பாடுபட்ட பல தலைவர்கள் இருக்கும் போது, உண்மையில் வெகு சிலரே அறியப்படுகின்றனர்.. இந்தியாவின் ஒவ்வொரு ஊரிலும் மூலை முடுக்கிலும் போராடியவர்களின் வரலாறு அறியப்படாமலே போனது மிகவும் வருத்தமான நிகழ்வு. என்னை சிறிய வயதிலே கவர்ந்த சுதந்திர போராட்ட தலைவர் என்றால் கொடிகாத்த குமரன். ஏனெனில் நான் 6 ஆம் வகுப்பு படித்த போது முதன் முதலில் இவருடைய வரலாற்றை தான் பாட புத்தகத்தில் படித்தேன்.

    அதற்கு பின்பு என்னை கவர்ந்தவர்.. கப்பலோட்டிய தமிழன் ஐயா வா.உ.சிதம்பரனார். ஆங்கிலேயரை எதிர்த்து கப்பல் நிறுவனம் துவங்கி S S காலியோ கப்பலில் வந்து இறங்கிய தருணங்கள்.. இந்திய வரலாற்றில் முக்கியமான ஒன்று.. நிறுவனத்தின் மதிப்பு 10 லட்ச ரூபாயை 40,000 பங்குகளாக ரூபாய் 25 க்கு பிரித்து கொடுத்து ஆசியாவில் உள்ள எல்லோரையும் நிறுவனத்தில் இணைத்தார்..

    கொடுமையானது என்னவென்றால் இவரை ஆங்கிலேயர்கள் சிறையில் அடைத்த பின்பு அந்த கப்பலை பங்குதார்கள் மீண்டும் வெள்ளையர்களுக்கே விற்று, துரோகம் செய்ததை என்றும் மறக்க இயலாது. தன் மரண தருவாயில் வறுமையில் வாடி மடிந்த இவர் தான் என்னை கவர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களில் முதன்மையானவர்.

    கல்லூரி பருவத்தில் நான் பாரதியை குறித்து அதிகம் படிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போதும் படித்து வருகிறேன்.. தன்னுடைய எழுத்தால் சுதந்திர தீயை முட்டியவர்களில் முக்கியமானவர் இவர். இவர்களை தவிர்த்து நான் வேறு சிலரது வாழ்வியலையும் புத்தகம் மூலமாகவும் / காணொளிகள் மூலமாகவும் தெரிந்து வருகிறேன்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here