கோதாவரி காவிரி இணைப்பு செய்தி புறக்கணிப்பு

4
கோதாவரி காவிரி

கோதாவரி காவிரி இணைப்பு என்ற தமிழக மக்களின் அவசியத்தேவைக்கு இறுதி திட்ட அறிக்கை உறுதிசெய்யப்பட்டுள்ளது ஆனால், தமிழக ஊடகங்களும், அரசியல்வாதிகளும் வாயே திறக்காமல் உள்ளனர்.

கோதாவரி காவிரி

நதிநீர் இணைப்பு மட்டுமே தமிழகத்தைத் தண்ணீர் பஞ்சத்திலிருந்து காப்பாற்றும் வழியாகும். காரணம், தமிழகத்துக்கு என்று ஜீவநதி இல்லை.

எனவே, பல காலமாக நதிநீர் இணைப்புக்குக் குரல் கொடுக்கப்பட்டு வந்தது ஆனால், நடைமுறைக்கு எதுவும் வரவில்லை. Image Credit

தற்போது மத்திய அரசு இதைச் செயல்படுத்த திட்ட அறிக்கை கொடுத்துள்ளனர்.

திட்ட மதிப்பீடு

சுமார் ₹85,000 கோடி திட்ட மதிப்பீடாக உள்ளது. 90% மத்திய அரசின் பங்காகவும் மீதி மாநில அரசின் பங்காகவும் இருக்கும்.

மத்திய ஜல்சக்தி துறையின் கீழ் இயங்கும் தேசிய நதிநீர் மேம்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியதை தொடர்ந்து இதற்கான திட்ட அறிக்கையைச் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது

மகாராஷ்டிர மாநிலம், நாசிக் பகுதியில் உள்ள திரிம்பகேஷ்வரில் உருவாகும் கோதாவரி நதி, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, தெலங்கானா, ஆந்திர மாநிலங்கள் வழியாகப் பயணித்து வங்கக் கடலில் கலக்கிறது.

ஆண்டுதோறும் இந்நதியிலிருந்து 1100 டிஎம்சி தண்ணீர் கடலில் கலக்கிறது

தெலங்கானா மாநிலத்தில் உள்ள நாகார்ஜுனா சாகர் அணையிலிருந்து ஆந்திராவில் உள்ள சோமசீலா அணைக்குக் கொண்டு வரப்படுகிறது.

பின்னர் வேலூர் வழியாகத் தமிழகத்தின் கல்லணையின் மேலணைக்குக் கால்வாய் மற்றும் குழாய் வழியாகக் கோதாவரி நீர் பயணிக்கிறது.

1,211 கி.மீ பயணிக்கும் இத்திட்டத்தில் 19 சுரங்கங்கள் உள்ளன. குழாய், கால்வாயென இரு முறைகளிலும் நீர் பயணிக்கிறது.

ஐந்து ஆண்டுகளில் முடிக்கப்பபடும், தோராயமாக 2021 ஆண்டு இறுதியில் துவங்கப்படலாம்.

ஆந்திரா தெலங்கானா தமிழ்நாடு

இத்திட்டம் மூலம், ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பயன் பெறும் குறிப்பாகத் தமிழகம் மிகப்பெரிய அளவில் பயனடையும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை உள்ள நாட்களில் 247 TMC தண்ணீர் விடுவிக்கப்படும்.

இதில் வீணாகும் நீர் போக மீதமுள்ள 230 TMC நீரில் தெலங்கானாவுக்கு 65.8 TMC யும், ஆந்திராவுக்கு 79.92 TMC யும், தமிழகத்துக்கு 84.28 TMC நீரும் கூடுதலாகக் கிடைக்கும்

சென்னை மட்டும் 25 TMC பெறுகிறது.

மேட்டூர் அணையின் கொள்ளளவு 93.47 TMC என்றால், ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்.

இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகத்துக்கு தண்ணீர் தேவை பெருமளவில் குறையும், விவசாயம் செழிக்கும், குடிநீர் மேலும் பலருக்குக் கிடைக்கும்.

புறக்கணிப்பு ஏன்?

மேற்கூறியதை படித்தாலே கோதாவரி காவேரி இணைப்பு எவ்வளவு பெரிய மகத்தான திட்டம், தமிழகத்துக்கு எவ்வளவு நன்மை பயக்கும் திட்டம் என்பது புரியும்.

இருந்தும் தெலுங்கு ஊடகங்களில் இருந்த பரபரப்பு தமிழகத்தில் இல்லை!

காரணம், இத்திட்டத்துக்காகப் பேசிக்கொண்டு இருந்தது எடப்பாடி பழனிச்சாமி, அதைச் செயல்படுத்தப்போவது மத்திய அரசு.

மற்ற கட்சிக்கு நல்ல பெயர் கிடைக்கிறது என்றால், அதன் போட்டி கட்சி அமைதியாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால், ஊடகங்கள் ஏன் இதைச் செய்தியாக்கவில்லை?!

இச்செய்திக்கு திமுக அரசு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றாலும், நாளை இத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்து முன்னெடுக்கத்தான் போகிறது.

ஆனால், தமிழகமே கொண்டாட வேண்டிய செய்தியை ஊடகங்கள் புறக்கணிப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஊரடங்கு நேரத்தில் காலியாக உள்ள சாலையில் முதல்வர் ஸ்டாலின் ஆம்புலன்ஸ்க்கு வழி விட்டதை மணிக்கொரு செய்தியாக்கிய ஊடகங்களுக்கு இம்முக்கிய நிகழ்வைச் செய்தியாக்க தோன்றவில்லை பார்த்தீர்களா!

வளர்ச்சி திட்டங்களில் ஒற்றுமையாக இருப்போம்

இத்திட்டத்தை நிறைவேற்றும் போது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்புகள் வரலாம்.

இத்திட்ட காலம் ஐந்து ஆண்டுகள் என்பதாலும், அக்காலத்தில் திமுக வே ஆட்சியில் இருக்கும் என்பதாலும் பிரச்சனை செய்ய மாட்டார்கள் என்று நம்புவோமாக.

யார் ஆட்சி செய்தாலும், யார் மூலமாகத் தமிழகத்துக்கு நல்லது நடந்தாலும் அதை முழு மனதோடு வரவேற்போம்.

திமுக அரசு பல திட்டங்களுக்குச் சரியான நபர்களை நியமித்து வருகிறது.

எனவே, கோதாவரி காவேரி இணைப்பு திட்டத்துக்கும் சரியான நபர்களை நியமித்து முன்னெடுக்கும் என்று நம்புவோம்.

அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தமிழ்நாடு முன்னணியில் இருக்க வளர்ச்சி திட்டங்களில் ஒற்றுமையாக இருப்போம்.

கொசுறு

வின்னர் படத்தில் வடிவேலுவை பார்த்து, ரியாஸ் கான் கடுப்பாகி ஒன்றை கூறுவார். தமிழக ஊடகங்களைப் பற்றிப் பேசும் போது, ரியாஸ் கான் நிலைமையில் உள்ளேன்.

4 COMMENTS

 1. நண்பர் கிரி ,தாங்கள் முன்பே கூறியது தான் ஊடகங்கள் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டுள்ளது.

  அரசியல் கட்சிகள் இது போன்ற செய்தி ஊடகங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு மக்களை உளவியல் ரீதியாக அணுகுகிறார்கள்,இவர்கள் எல்லா செய்திகளுக்கும் தனக்கு ஆதரவாகவே மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள்.

  இதை தொடர்ந்து படிக்கும் மக்களும் இவர்கள் நல்ல ஆட்சியைத்தான் கொடுக்கிறார்கள் என்று நம்பி விடுகிறார்கள்.

  ஏனென்றால் மக்கள் நாட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் நேரில் சென்று அறிந்து கொள்ள முடியாது. எனவே, அனைத்திற்கும் இது போன்ற செய்தி ஊடகங்களை நம்பியிருக்கின்றார்கள்.

  எனவே அரசியல் கட்சிகள் இதுபோன்ற ஊடகங்களைப் பயன்படுத்தி மக்களை தனக்கு ஆதரவாக மாற்றுகின்றார்கள்.

  இதனால் நான் பெரும் பான்மையான செய்திதாள்களை வாசிப்பதை நிறுத்தி விட்டேன்.

 2. பிரம்மாண்டமான திட்டம். மூன்று மாநிலமும் இணைந்து செயல் பட வேண்டும். மாநில மற்றும் மத்திய தேர்தல் முடிவுகளால் இந்த திட்டம் தாமதமாகவோ, கிடப்பிலோ போட கூடாது. செயல் படுத்தி முடிக்க 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம். பொறித்திருந்து பார்ப்போம்.

  செய்தி ஊடங்கங்கள் இதை இருட்டடிப்பு செய்யலாம். ஸ்டாலின் ஆம்புலன்ஸ் நியூஸ் ஒரு வாரம் கூட நினைவில் இருக்காது. இந்த மாதிரி அரசியல் நியூஸ் நம்மவர்களுக்கு பழக்கப்பட்டதுதான். டிஜிட்டல் குப்பை. ஆனால் இந்த திட்டத்தை தொடக்கியவர்களும், செய்யப்படுத்தியர்களும் என்றென்றும் மக்கள் மனதிலும் காலத்திலும் இருப்பார்கள்.

  நீண்ட நாட்களுக்கு ஊடங்கள் இதே வேலையை செய்ய முடியாது. வாடிக்கையார்களை அவர்கள் விரைவில் இழப்பார்கள். இதற்கு சிறந்த உதாரணம் Debates viewership. மிக பெரிய வீழ்ச்சி கண்டுஇருக்கிறது.

  ஊடங்கங்களுக்கு எதிர்மறை செய்திகளே தேவை. பிஜேபி வைத்து இப்போது உருவாக்க படுகிறது. DMK மினிஸ்டர்ஸ் மற்றும் தொண்டர்கள் நாளை கொடுத்தால்,அதையும் வெளியிட்டு தான் ஆக வேண்டும். வெளியிடுவார்கள்.அவர்களுக்கு தேவை Publicity, Advertisement, and Profit.

  @ கார்த்திக் – பெரும்பாலான மக்கள் செய்தியோ சித்தாந்தமோ பார்த்து ஓட்டு போட மாட்டார்கள். அவர்களின் வாழ்வாதாரம் ,ஈகோ மற்றும் பொது அமைதியை பாதிக்காமல் ஆட்சி கொடுத்தாலே , அவர்கள் ஆளும் கட்சிக்கு அடுத்த முறையும் வாய்ப்பு கொடுப்பார்கள்.

 3. என்னுடைய சிறு வயது முதலே செய்தித்தாள்களில் அதிகம் படித்தது காவிரி நதி நீர் பிரச்சனை பற்றி தான்.. அந்த வயதில் கூட தோன்றும் என்ன இது சாதாரண தண்ணீரை போய் பக்கத்து மாநிலம் குடுக்க சண்டை போடுது என்று.. ஆனால் இதன் முழு விவரத்தை தெரிந்து கொள்ள பல ஆண்டுகள் ஆனது.. முல்லைப்பெரியார் அணையும் கிட்டத்திட்ட இதே நிலை தான்.. கோதாவரி காவேரி இணைப்பு அருமையான திட்டம்.. மக்களுக்கு காலத்திற்கும் பயன்படுகின்ற திட்டம்.. விரைவில் முடித்தால் அதன் பயனை அதை சார்ந்துள்ள மாநிலங்கள் அனுபவிக்கும்.. எந்த தடையும் இல்லாமல் நடைபெறவேண்டும். இதை பற்றி ஊடகங்கள் கண்டு கொள்ளாததை பற்றி பெரிய ஆச்சரியம் இல்லை.. இவர்கள் நிலை என்று தான் மாறுமோ?? TMC குறித்து நீங்கள் கொடுத்த விளக்கம் அருமை & எளிமை.. கொசுறு : சிரிப்பாக இருந்தது.. பகிர்வுக்கு நன்றி கிரி..

 4. @காரத்திக்

  “அரசியல் கட்சிகள் இது போன்ற செய்தி ஊடகங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு மக்களை உளவியல் ரீதியாக அணுகுகிறார்கள்”

  சிலர் புரிந்து கொள்கிறார்கள், பலர் இதை உண்மையென்று நம்பிவிடுகிறார்கள்.

  “இதனால் நான் பெரும் பான்மையான செய்திதாள்களை வாசிப்பதை நிறுத்தி விட்டேன்”

  தொலைக்காட்சி பார்ப்பதை பல வருடங்களுக்கு முன்பே நிறுத்தி விட்டேன். FB செய்திகளை மட்டும் இத்தளத்துக்காக பின் தொடர்ந்து வருகிறேன்.

  செய்திகளில் Update ஆக இருந்தால் மட்டுமே இங்கேயும் எழுத முடியும் என்பதால், மற்றபடி விருப்பப்பட்டு செய்கிறேன் என்று அல்ல.

  @மணிகண்டன்

  “செயல் படுத்தி முடிக்க 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம். பொறித்திருந்து பார்ப்போம்.”

  ஆமாம், 5 வருட காலம் என்பது குறைவானதே. அரசியல் இடைஞ்சல்கள் இல்லையென்றால், சரியாக செல்லும். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

  “இந்த திட்டத்தை தொடக்கியவர்களும், செய்யப்படுத்தியர்களும் என்றென்றும் மக்கள் மனதிலும் காலத்திலும் இருப்பார்கள்.”

  சந்தேகத்திற்கு இடமில்லாமல்.

  “இதற்கு சிறந்த உதாரணம் Debates viewership. மிக பெரிய வீழ்ச்சி கண்டுஇருக்கிறது.”

  எப்படி மக்கள் இதைப் பார்க்கிறார்கள் என்று புரியவில்லை. ஆளாளுக்கு கத்திக்கொண்டுள்ளார்கள். எனக்கு இதையெல்லாம் சகிக்க பொறுமையில்லை. நிறுத்திப் பல வருடங்கள் ஆகிறது.

  @யாசின்

  “கோதாவரி காவேரி இணைப்பு அருமையான திட்டம்.. மக்களுக்கு காலத்திற்கும் பயன்படுகின்ற திட்டம்.. விரைவில் முடித்தால் அதன் பயனை அதை சார்ந்துள்ள மாநிலங்கள் அனுபவிக்கும்”

  விவசாயத்துக்கும் குடிநீருக்கும் மிகப்பயனுள்ளதாக இருக்கும்.

  “TMC குறித்து நீங்கள் கொடுத்த விளக்கம் அருமை & எளிமை”

  நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here