முதல் சமையல் அல்ல சாப்பாடு :-)

12
முதல் சமையல்

வாழ்க்கையிலேயே முதல் முறையா நானே சாப்பாடு வைத்துச் சாப்பிட்டுவிட்டேன் 🙂 🙂 .

முதல் சமையல்

சாப்பாடு என்றதும் எதோ சாம்பார், ரசம், பொறியில் எல்லாம் செய்து சாப்பிட்டேன் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள்.

வெறும் சாப்பாடு வைத்ததுக்குத் தான் இந்த அலப்பறை 🙂 .

நான் இதுவரை சாப்பாடு செய்ய முயற்சி செய்ததே இல்லை. நெருங்கிய நண்பர்களுக்குத் தெரியும், என்னை செம்மையா ஓட்டுவானுக.

சென்னை

சென்னையில் படித்துக்கொண்டு பணிக்குச் சென்று கொண்டு இருந்த போது பசங்க எங்க அறையில் சமைப்பாங்க.. அதை விடச் செம்ம கட்டு கட்டுவாங்க.

யப்பா! இது வயிறா! என்னடா இப்படிச் சாப்பிடுறீங்க!! என்று திகிலாக இருக்கும்.

எரிவாயு அடுப்பு இல்லாததால் மண்ணெண்ணெய் வைத்து “புஸ்க் புஸ்க்” ன்னு அடிப்பாங்களே ஒரு அடுப்பு… அதை என் நண்பன் சதிஷ் செய்தான் பாருங்க…

டேய் போதுண்டா.. எங்கயாவது வெடிச்சுட போகுது“ன்னு பீதியாகிட்டேன்.

அவன் அப்படி செய்வதைப் பார்த்து அழுத்தத்தில் அடுப்பு வெடித்து விடுவது போலத் தோன்றியதால், அடுப்பைக் கண்டாலே எனக்குப் பயமாகி விட்டது.

அதிலிருந்து அடுப்பு என்றாலே தலை தெறிக்க ஓடிடுவேன்.

அடுப்பு விஷயத்தில் “எனக்கு பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் ரொம்ப வீக்” 🙂 .

சிங்கப்பூர்

பின்னர் சிங்கப்பூரில் இருந்த போது மனைவி இல்லையென்றாலும் உணவகத்தில் சாப்பிடுவது எனக்குப் பெரிய பிரச்சனையாக இல்லையென்பதால் சென்னையில் இருந்தது போலவே இங்கேயும் தொடர்ந்து உணவகம் தான்.

சிங்கப்பூரும் நம்ம ஊரு மாதிரி தாங்க.. எந்தப் பெரிய வித்தியாசமும் இல்லை. இங்கே என்னென்ன கிடைக்குமோ அதெல்லாம் அங்கேயும் கிடைக்கும்.

சென்னை கட்டமைப்பு, ஒழுங்கு சிறப்பாக இருந்தால் எப்படி இருக்குமோ அது தான் சிங்கப்பூர்.

என் வாழ்க்கையில் வீட்டில் சாப்பிட்டதை விட வெளியில் சாப்பிட்டதே அதிகம். பள்ளியில் மாணவர் விடுதி, பணிக்கு வந்த போது உணவகம் என்றே சென்று விட்டது.

முத்து சமையல்

சிங்கப்பூரில் நண்பர்கள் முத்து, சுரேஷ் ஆகியோருடன் சில மாதங்கள் இருந்தேன்.

அவர்களில் முத்துச் செமையாகச் சமைப்பார். அவரிடம் “என்னோட மனைவியை விடச் செமையா சமைக்கிறீங்க” என்று கூறுவேன்.

அந்தச் சமயத்தில் மனைவி சமையல் கற்றுக்கொண்டு இருந்த காலம்.

முத்து அப்படி இப்படின்னு ஏதோ பண்ணுவாரு பார்த்தால்.. செம சுவையா இருக்கும்.. “என்னங்க பண்ணுறீங்க.. கலக்குறீங்க போங்க” என்று சாப்பிடுவேன்.

வழக்கம் போலச் சமைப்பது இவர்கள் இருவர் வேலை, பாத்திரம் கழுவது என் வேலை 🙂 .

நண்பர்கள் சமைத்ததில் முத்து சமையல் போல நான் எவர் சமைத்தும் பார்த்தது இல்லை. அட்டகாசமாகச் சமைப்பார்.

இதிலே என்ன வியப்பு என்றால், சும்மா ஒன்றிரண்டு தான் சமைப்பார் ஆனால், அதுவே கலக்கலாக இருக்கும். “கை ராசி” என்று சொல்வார்களே அது போல என்று நினைக்கிறன்.

எங்கள் வீட்டில் அக்கா சமைப்பது அசத்தலாக இருக்கும். எங்கள் குடும்பத்திலேயே இவர் சமையல் ரொம்பப் பிடிக்கும்.

நான் உணவை ரசித்துச் சாப்பிடுபவனல்ல ஆனால், சுவை நன்றாக இருந்தால் விரும்பிச் சாப்பிடுவேன் உடனே பாராட்டியும் விடுவேன்.

சென்னை

சென்னை திரும்ப வந்த பிறகும் சமையல் செய்ய விருப்பம் இருந்தும் எதோ ஒரு தயக்கத்தால் [Gas? 🙂 ] முயற்சிக்கவே இல்லை.

மனைவியும் எப்படி எப்படியோ கூறிப் பார்த்தார் ஒன்றும் நடக்கவில்லை.

ஏங்க! சமைத்துப் பழகறேன்னு சொல்லிட்டு வரவே மாட்டேங்குறீங்க?” என்று கூறுவார்.. “வரேன் வரேன்” என்பேன் ஆனால், போகவே மாட்டேன் 🙂 .

பின்னர் கடுப்பாகி “இவர் சமையலுக்குச் சரிப்பட்டு வரமாட்டார்” என்று விட்டுட்டார்.

மனைவி முதல்ல ரொம்பச் சுமாரா சமைப்பாங்க. இப்ப நல்லா சமைக்கிறாங்க.

சாதித்த வெயில் 🙂

இந்த முறை கோடை விடுமுறைக்கு ஊருக்குச் செல்லும் போது..

ஏங்க! Gas தானே உங்களுக்குப் பிரச்சனை! மின்சார அடுப்புல முயற்சித்துப் பாருங்க.. சாப்பாடு எப்படி வைக்கறதுன்னு சொல்லித் தருகிறேன், பொடி இருக்கு.

எனவே, எண்ணெய் வைத்துட்டு வேற ஏதாவது தொட்டுக்க தொக்கு வாங்கிக்குங்க” என்றார்.

எனக்கும் வார இறுதியில் இந்த வெயிலில் வெளியே சென்று சாப்பிட கடுப்பா இருந்தது, சரி இதை ஒரு முறை முயற்சித்துப் பார்ப்போம் என்று அவர் கூறியதைக் கேட்டுக்கொண்டேன்.

கடந்த வாரம் வெற்றிகரமாகச் சாப்பாடு வைத்தேன் கொஞ்சம் தண்ணீர் அதிகம் வைத்து விட்டேன்.. மோசமில்லை. இரண்டாவது முறை சரியாக வந்தது.

இருந்தாலும் திருப்தியா சாப்பிட்ட மாதிரி இல்லை.

தக்காளி தொக்கு, வத்தக் குழம்பு

நெருங்கிய நண்பர்கள் கணேஷ், சுப்பு இருவரும்,

டேய்! “Grand Sweets” ல தக்காளி தொக்கு, வத்தக் குழம்பு வாங்கிக்க… பொருத்தமா இருக்கும். நாங்க வெளிநாட்டுல இருந்த போது இதை வைத்துத் தான் சமாளித்தோம்” என்றார்கள்.

கொத்தமல்லி தொக்கு கூட நல்லா இருக்கும்னு சொன்னானுக.. நான் தான் முதல்ல இதை முயற்சி செய்வோம் என்று இரண்டோட நிறுத்திட்டேன்.

இவற்றை வாங்கிக் கூடவே தயிரும் வாங்கி இந்த முறை சாப்பாடு வைத்தால், அடடா! அட்டகாசம். வெற்றி வெற்றி!! 🙂 . சாப்பாடே போதவில்லை, அவ்வளவு அசத்தல்.

வத்தக்குழம்பு, தக்காளி தொக்கு இரண்டும் பொடிக்கும் தயிருக்கும் செம்ம பொருத்தம். தூள்!

“வெறும் சாப்பாடை மட்டும் சமைத்து இவ்வளவு சுவையா சாப்பிடலாமா! அடடா இது தெரியாம பலநாள் இருந்துட்டேனப்பா!” என்று கடுப்பாகி விட்டது.

அதனால் என்ன சொல்றேன்னா.. கலக்கிட்டேன்! 🙂 .

“யோவ்! ஒரு சாப்பாட்டை வச்சுட்டு ரொம்பத்தான் அலப்பறைய பண்ணிட்டு இருக்கே”ன்னு நீங்க மனசுக்குள்ள திட்டுறது எனக்குக் கேட்குது.. 😀 😀 .

அதுக்கு என்ன பண்ணுறது.. எனக்கு இதுவே மிகப்பெரிய சாதனை.

இனி பாருங்க.. படிப்படியா கத்துக்கிட்டு அசத்தப் போறேன். இதையெல்லாம் நினைவு வைத்து அப்புறமா கேட்கக் கூடாது.. நானே பண்ணுனா சொல்றேன் 😉 .

தொடர்புடைய கட்டுரைசிங்கப்பூர் உணவகங்கள்

கொசுறு

பாத்திரங்களை உடனே கழுவாமல் ஊற வைத்துக் கழுவினால் தண்ணீர் வீணாவதில்லை. மூன்று நாட்கள் சமையல்!! அனுபவம் 🙂 .

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

12 COMMENTS

 1. என்னோட சமையல இவ்ளோ ரசிச்சு சாப்பிட்டது நீங்கதான் கிரி. என் மனைவிகிட்ட இந்த post ஐ காட்டி வெறுப்பேத்திட்டு இருக்கேன். 🙂

 2. கிரி, வெளிய வாங்கவேண்டாம்… நீங்களா கொஞ்சம் கொஞ்சமா செய்து பழகிப்பாருங்க ..
  YOUTUBE ல நெறய வீடியோ இருக்கு …

  சித்திரமும் கைப்பழக்கம் …

  வாழ்த்துக்கள்

 3. ஒரு வழியா கலக்கிட்டீங்க கில்லாடி 🙂
  உங்களை தண்ணி (சாப்பாடு) இல்லாத காட்டுக்கு அனுப்பிருந்த முன்னாடியே இதை எல்லாம் பண்ணிருப்பீங்க.

  எப்போ பிரியாணி பண்ணுறீங்கன்னு சொன்னிங்கன்னா வந்துருவோம் 🙂

 4. கிரி,

  சாப்பாடு போலத்தான் தக்காளி சோறு சமைப்பதும்.

  தக்காளியுடன் [ வெட்டி அல்லது மிக்ஸியில் அரைத்து] உங்களுக்கு என்ன என்ன தோனுதோ அல்லது தக்காளி சாதத்தில் எதை எதை நீங்கள் பார்த்துள்ளீர்களோ / உணர்ந்துள்ளீர்களோ அவற்றை அளவாக போட்டு , அரிசியை போட்டு மூடிட்டா போச்சு;

  தக்காளி சாதம் ரெடி.

  நான் குண்டக்க மண்டக்க செய்த போதெல்லாம் செம டேஸ்ட்டா வந்திருக்கு.

  பொதுவாக சமையல் அறைக்குள் எனக்கு அனுமதி கிடையாது, நாஸ்தி பண்ணிடுவேன்னு;

  சமயம் சந்தர்ப்பம் வாய்த்து விட்டால், தீவிர ஆராய்ச்சியில் இறங்கிடுவேன்.

  அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் நான் கண்டுபிடிச்சதுதான்,

  முட்டை இட்லி

  🙂 🙂 🙂

 5. கிரி, வாழ்த்துக்கள். என்ன இருந்தாலும் வீட்ல சூடா சாதம் வச்சி தயிர், பொடி, தொக்கோட சாப்பிட்டா அப்படி இருக்கும். முக்கியமா கல்யாணம் ஆன பிரம்மச்சாரிக்கு. இன்னும் முயற்சி பண்ணுங்கள், yummytummyaarthi.com இந்த தளத்துள படிப்படியா புகைப்படத்தோட சுலபமா குடுத்துருக்காங்க. நான் நிறைய இந்த தளத்துள இருந்து முயற்சி பண்ணுக்கேன்.

 6. என்ன அண்ணாச்சி, இனி வரும் காலங்களில் “சமையல் குறிப்பு பதிவு” வரும் போல் தெரிகிறது?
  துவக்கம்தான் கஷ்டம், துவங்கி அதன் பலன் தெரிந்துவிட்டால் தொடர்ந்து பின்பற்ற பழகிவிடும்.

 7. //என்னுடைய மனைவி முதல்ல ரொம்பச் சுமாரா சமைப்பாங்க//
  #நான் இத முதல்ல படிக்கும் பொது “என் முதல் மனைவி நல்லா சமைப்பாங்கன்னு” தப்பா படிச்சிட்டேன்.

  #காத்தவராயன் அண்ணா அந்த முட்ட இட்லி பத்தி கொஞ்சம் சொல்லுங்க அண்ணா நானும் தெரிஞ்சிக்குறேன்

  #நானும் நல்லா சமைப்பேன் லாம் சொல்ல மாட்டேன் ஆனால் என் பசி அடங்கும் அளவுக்கு ருசி யா சமைப்பேன்.

  #தக்காளி சாதம் மாதிரியே பேச்சுலர்ஸ் க்குன்னு ஒரு ஐட்டம் இருக்கு. அதுதான் ரெடிமேட் சாம்பார். செம சுலபம் இத வைக்கிறது. குக்கரில் பருப்பு காய்கறி சாம்பார் பவுடர் பெருங்காயம் மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு அப்புறம் அந்த மசாலா தூள் பாக்கட் என்னென்னலாம் வாங்கி வச்சி இருக்கோமோ அதுல அதுல கொஞ்சம் சேர்த்து பருப்புக்கு இரு மடங்கு தண்ணீர் ஊற்றி மூன்று விசில் விட்டு இறக்கினால் சாம்பார் ரெடி . ருசியா வரத்தும் வராததும் நீங்க சேர்க்கிற ஆச்சி தூளை பொறுத்து அமையும் @கண்டிஷன் அப்லைட்

 8. அப்புறம் இனிமே இப்படி நா ஆக்கிய முதல் சோறு முதல் குழம்பு னு பதிவு போடாதீங்க அப்படி போட்டிங்க நான் லாம் மோசமானவன் சுடுதண்ணி வச்சதுல இருந்து எல்லாத்தையும் சொல்ல ஆரம்பிச்சிடுவேன் அப்புறம் இந்த உலகம் தாங்காது. இருந்தாலும் என்னுடைய முதல் சமையல் சாதம் உருளைக்கிழங்கு காரட் குழம்பு என்பதை இங்கே பதிவு செய்கிறேன் (நானும் வரலாற்றுல முக்கிய இடம் பிடிக்கணும்)
  ஜெய் கார்த்திபலி

 9. கிரி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதை விட மிக அதிகமான காதல் சொந்த சமையலில், அதுவும் நண்பர்களுக்கு சமைத்து போடுவதில் உள்ள சுகமே சுகம். வீட்டில் அம்மா, நான் மட்டும் இருந்ததால் எதை சமைத்தாலும் சாப்பிடுவேன் குறை என்றும் கிடையாது.

  கோவை, திண்டுக்கல் பணி புரிந்த நேரங்களில் கம்பெனியில் இலவசமாக சாப்பாடு கிடைத்ததால் பிரச்சனை இல்லை. வெளிநாடு வந்த புதிதில் நான்பட்ட பாடு கொஞ்சம் நஞ்சம் இல்லை. என்னுடைய ஹிந்தி நண்பர்களுடன் நான்பட்ட பாடு, சமைக்கும் போது இதை எடு, அதை எடு ஹிந்தி தெரியாததால் மிகவும் சிரமப்பட்டேன்.

  கொஞ்ச நாட்களுக்கு பின் ஹிந்தியிலும் / சமையலிலும் கில்லியாகி விட்டேன். அந்த நாட்கள் அழகானவை. மனைவிக்கும் எனக்கும் சில நேரங்களில் நடக்கும் சிறு சண்டை ஒன்று சமையலை வைத்து, இல்லை என் பையனை வைத்து. நமக்கு சமைக்க தெரியாத காலங்களில் சமையல் முடியாத கடினமான ஒன்று. தெரிந்து விட்டால் ஜுஜுபி…

  ஆனால் இந்த பெண்களில் தாங்கமுடியாத அலப்பறை ஒன்று சமையல் / வீட்டை சுத்தம் செய்வது. இன்றும் மனைவி ஊருக்கு செல்லும் நேரங்களில் நண்பர்களை அழைத்து சமைத்து போடுவதுண்டு. இது எனக்கு பிடித்த ஒன்று. நண்பர்களின் பாராட்டு சந்தோசமாக இருக்கும். எதிர்காலத்தில் உணவகம் தொடங்கும் ஆர்வம் உண்டு. நண்பன் சக்தி தற்போது உணவகத்தில் தான் சொந்த ஊரில் பணிபுரிகிறார்.

  ஒரு சின்ன ஜோக் : என் மனைவி இங்கு வந்த புதிதில், என்னை விட ஐந்து வயது மூத்த நண்பரிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது, நீங்கள் உங்கள் மனைவிக்கு வீட்டில் சமைக்கும் நேரத்தில் உதவி புரிவது உண்டா?? என்று கேட்டேன். நண்பரின் பதில் இல்லை. நான் எதற்காக உதவி புரிவது இல்லை செய்யலாம் அல்லவா? என்றேன்.

  அதற்கு நண்பர்: செய்யலாம் ஆனால் செய்தாலும் எப்படியும் இறுதியில் சரியில்லை என்றெ கூறுவார். வேலை செய்து திட்டு வாங்குவதை விட வேலை செய்யாமல் திட்டு வாங்குவது மேல் என்றார். அவர் கூறிய விஷியத்தின் உண்மை சில ஆண்டுகளுக்கு பின் அனுபவப்பூர்வமாக நான் உணர்ந்தேன்.

  என் மனைவியிடம் வெங்காயம் கட் பண்ணவா? இம்ம்ம் .. வெட்டிய பின் என்ன, சின்ன சின்ன தா வெட்டி இருக்கிங்க??? இப்படி போட்ட டேஸ்ட் டே வராது (என்னோட & பையனோட மைன்ட் வாய்ஸ் இல்லனா மட்டும் !!!!!!!?????) பகிர்வுக்கு நன்றி கிரி.

 10. ஆஹா! ஆஹா! சமையலுக்கு!! இவ்வளவு ஆதரவா… 🙂

  @முத்து நீங்க ஒரு பொரியல் செய்வீங்களே (அது ஒரு காய்.. பச்சை வண்ணத்தில் காலிபிளவர் மாதிரி இருக்குமே) அது அசத்தல். இன்னும் நினைவில் உள்ளது :-).

  @சென்னை பித்தன் அடுத்த முறை முயற்சி செய்து விட வேண்டியது தான்

  @செந்தில் அந்த அளவுக்கு இன்னும் முன்னேறவில்லை.. விரைவில் பழகிக் கொள்கிறேன்.

  @விஜய் ஹா ஹா ஹா ஆமாம்.. அனைத்து இடங்களிலும் சிங்கப்பூரிலும் எனக்கு சாப்பாடு பிரச்சினையில்லாமல் கிடைத்தது எனக்கு வசதியாக போய் விட்டது 🙂

  @காத்தவராயன் என் மனைவி என்னை இனி உள்ளேயே விட மாட்டாங்கன்னு நினைக்கிறேன்..

  என்னது முட்டை இட்லியா…!! ரைட்டு

  @விக்னேஷ் உங்கள் பரிந்துரைக்கு நன்றி.. இதை எப்படியோ ஆர்வக்கோளாறுல பண்ணிட்டேன்.. இனி தொடருவேனா என்று பார்க்கணும் 🙂

  @சோமேஸ்வரன் 🙂 🙂 கீழே பாருங்க.. கார்த்திக் ஏற்கனவே பீதியாகிட்டான்.

  @கார்த்திக் ரைட்டு.. இனி இப்படி எழுதமாட்டேன்.. அப்படியே செய்தாலும் கொசுறுவா எங்காவது சொல்லிடுறேன்.. 🙂

  @சிவா நன்றி

  @யாசின் முன்பே தெரிந்தது தான் என்றாலும்… எனக்கு மட்டும் தான் சமையல் தெரியல போல. என்ன கொடுமை சார்,

  “மனைவிக்கும் எனக்கும் சில நேரங்களில் நடக்கும் சிறு சண்டை ஒன்று சமையலை வைத்து, இல்லை என் பையனை வைத்து.”

  🙂 🙂 எனக்கு இரண்டாவது

  “ஆனால் இந்த பெண்களில் தாங்கமுடியாத அலப்பறை ஒன்று சமையல் / வீட்டை சுத்தம் செய்வது. ”

  ஹா ஹா ஹா

  “எதிர்காலத்தில் உணவகம் தொடங்கும் ஆர்வம் உண்டு”

  ஓ! உங்க நிலை எங்கேயோ இருக்கு.. நான் மடு கூட இல்லை.. அதை விட மோசம்.

  “செய்யலாம் ஆனால் செய்தாலும் எப்படியும் இறுதியில் சரியில்லை என்றெ கூறுவார். வேலை செய்து திட்டு வாங்குவதை விட வேலை செய்யாமல் திட்டு வாங்குவது மேல் என்றார்”

  சூப்பர் ஜி சூப்பர் ஜி 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here