“6” [2013] | குழந்தைக் கடத்தல்

6
6

ண்ணனுடன் இணைந்து நானே படத்தைத் தயாரிக்கலாம் என்று முடிவு செய்த போது இயக்குனர் துரை கூறிய கதை நன்றாக இருந்ததால் இந்த “6” படத்தில் நடித்தேன் ஷாம் என்றார். Image Credit

6

இந்த “6” படத்திற்காக வந்த ஷாம் நிழல் படங்கள் எல்லாம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு நடிகனாக மிகப்பெரிய ரிஸ்க் எடுத்து இருந்தார்.

மூன்று நாள் தொடர்ந்து தூங்காமல் கண் பகுதி அருகே எல்லாம் வீங்க வைத்து நடித்து இருந்தார்.

பலரும் இது போலச் செய்யாதீர்கள் நடிகனுக்கு முதலீடே முகம் தான் என்று கூறி இருந்தார்கள். நல்லவேளையாக எதுவும் ஆகாமல் முகம் பழைய படி வந்து விட்டது.

இது போல பில்டப் கொடுத்த படங்கள் சொதப்பலாகவே இருந்து இருக்கின்றன ஆனால், இந்தப் படம் குறைகள் இருந்தாலும் ஒரு குழந்தையின் அப்பாவாக என்னைப் படம் முழுக்க பதட்டமாகவே வைத்து இருந்தது.

குழந்தையை வைத்து இருப்பவர்கள் எவர் இந்தப்படத்தைப் பார்த்தாலும் உடல் சில்லிடாமல் இருக்க முடியாது. படத்தின் பாதிப்பு சில நாட்களுக்காவது இருக்கும் என்று நிச்சயம் கூற முடியும்.

கதை

படத்தின் கதை, ஷாம் தம்பதியினர் தங்கள் குழந்தை மீது அளவு கடந்த பாசம் வைத்து இருப்பவர்கள். அதிலும் ஷாம்க்கு மகன் மீது கூடுதல் பாசம்.

தன்னுடைய மகனின் “6” வது பிறந்தநாளில் மெரினா கடற்கரை சென்று அங்கே கூட்டத்தில் தன் குழந்தையைத் தவற விடுகிறார்கள்.

இதன் பிறகு ஷாமின் குழந்தையைத் தேடும் படலம் துவங்குகிறது. கடைசியில் மகன் கிடைத்தானா என்பது தான் படம்.

பெற்றோர் உணர்வுகள்

இந்தப் படத்தைப் பெற்றோராக இருப்பவர்கள் மட்டுமே உணர்வுப்பூர்வமாக பார்க்க முடியும். மற்றவர்களுக்கு இது ஒரு சோக / அழுகைப் படம்.

இளசுகளுக்கு இந்தப் படத்தில் ஷாமின் உணர்வுகள் புரியுமா என்று தெரியவில்லை.

படத்தில் ஷாம் ஒரு தந்தையாகப் படும் பாடு படம் பார்க்கும் எவரையும் கலங்க வைத்து விடும்.

மெரினா கடற்கரையில் பையன் காணாமல் போக அதைப் பதட்டத்துடன் அவர் தேடும் போது பார்க்கும் நமக்கு கலக்கமாக இருக்கும்.

படம் பார்க்கும் எவருக்கும் தங்கள் குழந்தைகள் நினைவு வந்து செல்லாமல் இருக்க வாய்ப்பே கிடையாது.

இந்தப்படத்தில் நிழல் உலக [Under World] பகுதிகள் காட்டப்படுகிறது. இதில் காட்டப்படுவதில் அனைத்துமே உண்மை என்றாலும் உண்மையில் இதை விட மோசமாகவே உள்ளது என்று பல தகவல்களைப் படித்து இருக்கிறேன்.

புதிதாகக் கேள்விப்படுகிறவர்களுக்கு இந்தக் காட்சிகள் பயமாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். ஷாம் இந்த இடங்களுக்குச் செல்வதெல்லாம் சாத்தியப்படும் என்று தோன்றவில்லை.

ஷாம்க்கு அழுகை சோகம் சரியாக வரவில்லை.

நல்ல கதையில் நடிக்கணும் என்ற ஆர்வம் இருந்தாலும் ஒரு ரொமாண்டிக் கதாநாயகனாக பொருந்தும் அளவிற்கு இதில் அவருக்கு பொருந்தி வரவில்லை.

இருந்தாலும் ஒரு சில காட்சிகளில் சிறப்பாக செய்து இருக்கிறார் குறிப்பாக இறுதிக் காட்சி.

இறுதியில், குழந்தைகளைக் கடத்துபவர்களைப் பற்றி நான் என்னவெல்லாம் கூற நினைத்தேனோ அத்தனையையும் ஷாம் கூறுகிறார்.

திரைக்கதை

படத்தின் திரைக்கதை பற்றிக் குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.

எந்த இடமுமே அவசியமற்றதாக தோன்றவில்லை அப்படியே தோன்றினாலும் திரைக்கதையின் பலத்தால் உறுத்தலாக இல்லை.

படம் 2.10 மணி நேரம் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

எனவே, படம் க்ரிஸ்பாக இருந்தது. எந்த இடத்திலும் கொட்டாவி விடும் படி இல்லை.

புதுப்பேட்டை படத்தில் தனுஷ் அப்பாவாக வருவாரே! [அதில் சிறப்பாக நடித்து இருப்பார்] அவருக்கு இதில் சொல்லிக்கொள்ளும்படியான கதாப்பாத்திரம்.

அடிதடி கதாப்பாத்திரத்திலேயே பார்த்துப் பழகிய இவரெல்லாம் என்னைக் கண் கலங்க வைப்பார் என்று நிச்சயம் நினைத்ததில்லை.

எவருமே வாய்ப்பு கிடைத்தால் அசத்தத் தான் செய்கிறார்கள். இவர் ஷாமுடன் சேர்ந்து குழந்தையைத் தேட உதவி செய்வார்.

உண்மையாகவே நடிப்பில் கலக்கி இருக்கிறார். இவருக்கு என்னுடைய பாராட்டுகள்.

ஷாம் இயல்பான கதையைத் தேர்ந்தெடுத்து எதற்கு வழக்கமான கதாநாயகன் செய்யும் சண்டைக் காட்சிகள் / கொலைகள் போன்றவற்றை வைத்தார் என்பது எனக்குப் புரியவில்லை.

எந்த ஒரு சாதாரண / சராசரி அப்பாவிற்கும் இது போன்ற நடவடிக்கைகள் கனவில் கூடச் சாத்தியப்படாதது. இது மட்டுமே உறுத்தலாக இருந்தது.

குழந்தை காணாமல் போனவர் எவரேனும் இந்தப்படத்தைப் பார்த்தால் கதறி விடுவார்கள்.

அந்த அளவிற்கு ஷாமின் நடிப்பு / வசனங்கள் உணர்வுப்பூர்வமாக இருக்கிறது.

ஒரு சராசரி பெற்றோர் நினைக்கும் அனைத்து வசனங்களையும் ஷாம் கூறுவதே படத்தோடு நம்மை ஒன்ற வைக்கிறது.

அனுபவம்

ஒருமுறை லிட்டில் இந்தியா முஸ்தபா வில் நான், என் மனைவி, மகன் வினய் மூவரும் சென்று இருந்தோம். பொருட்கள் வாங்கிக்கொண்டு இருந்த போது உடன் இருந்த இவனைக் காணவில்லை.

நான் எப்போதுமே ஒரு கண் வைத்து இருப்பேன்.

நான் தான் முதலில் கவனித்து மனைவியிடம் இருப்பான் என்று நினைத்து அவரிடம் கேட்க அங்கும் இல்லை. அருகில் தேடித் பார்க்க எங்குமே இல்லை.

அந்தச் சம்பவத்தை இப்போது நினைத்தாலும் பயமாக இருக்கிறது.

தேடிப் பார்த்து இல்லை என்றவுடன் உடலே சில்லிட்டு விட்டது. பதட்டத்துடன் அந்தப் பகுதி முழுக்கத் தேட எங்குமே இல்லை.

கொஞ்சம் தள்ளி ஒவ்வொருவராகக் கேட்க வேறொரு பக்கம் இருந்து வந்து கொண்டு இருந்தவர் என் பதட்டத்தைப் பார்த்து அவன் இருக்கும் இடத்தைக் கூற, அங்கே சென்றால் முஸ்தபா ஊழியர் அருகே அமைதியாக நின்று கொண்டு இருந்தான்.

அப்போது எனக்கு இருந்த மனநிலையை எழுத்தில் கூற முடியாது.

பரிதவிப்பு

ஷாம் கூறுவது போல எதிரிக்குக் கூட இந்நிலை வரக்கூடாது. எனவே, ஷாமின் பரிதவிப்பு ஒவ்வொரு நொடியும் புரிந்து கொள்ள முடிந்தது.

பெற்றோர்கள் குழந்தைகளைக் கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு அழைத்துச் சென்றால் கவனமுடன் பார்த்துக்கொள்ளுங்கள். சிறு அலட்சியம் கூட நம் வாழ் நாள் சோகம் ஆகி விடும்.

இந்தப் படம் அதன் முக்கியத்துவத்தை 100% உணர்த்துகிறது. இதற்காவது பெற்றோர்கள் அவசியம் இந்தப் படத்தைக் காண வேண்டும்.

இசை ஸ்ரீகாந்த். முடிந்தவரை அடக்கி வாசித்து இருக்கிறார். ஒளிப்பதிவு கிருஷ்ணசாமி ஓகே. இதில் ஷாம் மனைவியாக பூனம் கவுர் நடித்துள்ளார்.

ஒரு தந்தையாக படம் ரொம்பப் பிடித்து இருக்கிறது. ஒரு அப்பாவின் மனநிலையை ஷாம் நன்கு பிரதிபலித்து இருக்கிறார் குறிப்பாக வசனங்கள்.

சொல்ல மறந்து விட்டேன் வசனம் “ஜெயமோகன்“. வாழ்த்துகள் சார், ரொம்ப நன்றாக இருந்தது.

காலங்கள் பல எடுத்தாலும் தரமான படம் கொடுத்த ஷாமிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் உடன் இயக்குனர் துரைக்கும்.

 

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel .

6 COMMENTS

  1. கிரி.. நான் இன்னும் 6 படம் பார்க்கவில்லை. ஆனால் படத்தை உடனே பார்க்க வேண்டும் என்று உங்களின் வார்த்தைகள் தூண்டுகின்றன.

  2. நல்ல விமர்சனம். கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது, உங்கள் விமர்சனத்தை படித்த பிறகு.

  3. ஹாய் கிரி,

    உங்கள் விமர்சனத்தை படித்த பிறகு கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.

    மூடர் கூடம் படத்தை பார்த்து விட்டு ப்ளீஸ் விமர்சனம் எழுதுங்களேன். ரொம்ப விரும்பி பார்க்கவேண்டிய படம்… படத்தில் உள்ள அனைத்து வாசங்களும் அள்ளுது. ப்ளீஸ்!!! ப்ளீஸ்!!!

  4. ஹாய் கிரி,

    உங்கள் விமர்சனத்தை படித்த பிறகு கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.

    மூடர் கூடம் படத்தை பார்த்து விட்டு ப்ளீஸ் விமர்சனம் எழுதுங்களேன். ரொம்ப விரும்பி பார்க்கவேண்டிய படம்… படத்தில் உள்ள அனைத்து வசனம்களும் அள்ளுது. ப்ளீஸ்!!! ப்ளீஸ்!!! கலக்கல் காமெடி படம்.

  5. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @யாசின், கௌரிஷங்கர் & சுரேஷ் படம் பார்க்கிறேன்னு சொல்லிட்டு அப்படியே விட்டுடாதீங்க! கண்டிப்பாக பாருங்க.

    மூடர் கூடம் இங்கே எடுத்து விட்டார்கள் சுரேஷ். இணையத்தில் தான் பார்க்க வேண்டும்.

  6. படம் ரொம்ப emotional அதனால பாக்கல தல
    பதிவு நல்லா இருக்கு

    – அருண்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!