Bhaag Milkha Bhaag / ஓடு மில்கா ஓடு [2013 – Hindi]

7
Bhaag Milkha Bhaag

குறிப்பு : Bhaag Milkha Bhaag படத்தை வெறும் விமர்சனமாக மட்டுமே எழுதவில்லை.

ஒரு இந்தியனாக இந்தப் படத்தை ரசித்துப் பார்த்ததில் என்னுடைய கருத்துக்கள், தகவல்கள் ஆகியவற்றையும் குறிப்பிடப் போகிறேன். Image Credit

எனவே பதிவு பெரியதாக இருக்கும். விருப்பம் இருப்பவர்கள் தொடரலாம்.

Bhaag Milkha Bhaag

ஒரு சில படங்களை படம் வெளியான போது அது பற்றி தெரியாமல் மிக கால தாமதமாக பார்ப்பதுண்டு.

மற்றவர்கள் கூறும் போது ஆர்வம் வந்து பார்க்க நினைக்கும் போது திரையரங்கில் எடுக்கப்பட்டு இருக்கும் ஆதலால், இணையத்தில் தரவிறக்கம் செய்து பார்க்க வேண்டியதாகத் தான் இருக்கும்.

சில படங்களைப் பார்க்கும் போது ச்சே! இதைத் திரையரங்கில் பார்க்காமல் போய் விட்டோமே! என்று வருத்தப்பட்டு இருக்கிறேன். இது போல நிறையப் படங்களைக் கூறலாம்.

எடுத்துக்காட்டாக லகான் [ஹிந்தி] நீர்ப்பறவை [தமிழ் – இதனுடைய ஒளிப்பதிவிற்காக].

தற்போது இது போல நினைத்தது “பாக் மில்கா பாக்” என்ற படம். எப்படி இவ்வளவு அருமையான படத்தை பார்க்காமல் இருந்தேன் என்று வியப்பாக இருந்தது.

இந்தப் படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது.

படத்தில் சில காட்சிகள் புதிதாக சேர்க்கப்பட்டு இருந்தாலும், மிகச் சுவாரசியமான / உணர்ச்சிகரமான படம் என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை.

இந்தப்படத்தை திரையரங்கில் பார்க்காமல் தவறவிட்டு விட்டோமே என்ற வருத்தம், படம் பார்த்த பிறகு ஏற்பட்டது.

இந்தியா பாக் பிரிவினை நடக்கும் முன்பு துவங்கி அதன் பிறகு சில வருடங்களுக்கு இடையே நடக்கும் மில்கா என்ற ஒரு ஓட்டப் பந்தய வீரரைப் பற்றிய கதையே இது.

இதில் Farhan Akhtar என்பவர் மில்கா வாக நடித்து [வாழ்ந்து] இருக்கிறார்.

அந்த அளவிற்கு தன்னுடைய கடுமையான உழைப்பையும் தன்னுடைய பங்களிப்பையும் வழங்கி இருக்கிறார். இவர் Dil Chahta Hai , Lakshya, Don 1,2,3 போன்ற பிரபலமான படங்களை இயக்கியும் இருக்கிறார்.

Non Linear

திரைக்கதை, அலைபாயுதே படத்தில் வருவதைப் போல முன் நடந்தது, தற்போது நடப்பது என்று மாறி மாறி வருகிறது. சில இடங்கள் இது எந்தக் காலத்தில் நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள சிரமமாக இருக்கிறது.

ரொம்பக் குழப்பமாக இல்லை என்றாலும் இது போல வரும் காட்சிகளை குறைத்து இருக்கலாம் என்று தோன்றியது. படத்தில் குறை என்றால் இது மட்டுமே எனக்குத் தோன்றியது.

இராணுவ அதிகாரியாக வரும் பிரகாஷ்ராஜ் நடிப்பு செயற்கையாக இருந்தது ஆனால், பயிற்சியாளர்களாக வருபவர்களின் நடிப்பு அசத்தல்.

இரு பயிற்சியாளர்களில் ஒருவரான யோகராஜ் நம்ம கிரிக்கெட் யுவராஜின் தந்தை.

இந்தியா சுதந்திரம் அடைந்த போது ஜின்னா, முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதியை பாகிஸ்தான் என்று அறிவிக்கக் கூறினார்.

அதோடு நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு இடம் பெயர வேண்டும் மற்றும் பாகிஸ்தானில் முஸ்லிம் அல்லாதவர்கள் இந்தியாவிற்கு இடம் பெயர வேண்டும் என்று கூறினார்.

இதில் உள்ள நடைமுறை சிக்கல்களுக்காக காந்தி, வேண்டாம் என்று கூறினாலும் ஜின்னா ஏற்றுக்கொள்ளவில்லை.

பின் இந்தியாவில் இருக்க விரும்பும் முஸ்லிம்கள் இங்கேயே இருந்து கொள்ளலாம் விருப்பப் படுகிறவர்கள் பாகிஸ்தான் செல்லலாம் என்று காந்தி கூறினார்.

சொத்துக்களோடு வாழ்ந்தவர்கள் பலரும் அகதிகளாக மாறினர்.

நீங்கள் அட்டன் பரோ [Richard Attenborough] இயக்கிய “காந்தி” திரைப்படத்தைப் பார்த்து இருந்தீர்கள் என்றால், இதில் இந்தக் காட்சி அற்புதமாக காட்டப்பட்டு இருக்கும்.

பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை கோபத்தை ரொம்ப உணர்வுப்பூர்வமாக காட்டி இருப்பார்கள்.

இந்த நூற்றாண்டில் உலகளவில் நடந்த மிகப்பெரிய இடம் பெயர்வு இது என்று வர்ணிக்கப்படுகிறது.

ஜின்னா / காந்தி

ஜின்னா சுதந்திரம் பெறும் வரை சிக்கலாக முடிவெடுத்து இறுதியில் சரியான முடிவை எடுத்ததாகவும், காந்தி சுதந்திரம் பெறும் வரை சரியாக முடிவெடுத்து இறுதியில் தவறான முடிவை எடுத்ததாகவும் ஒரு குற்றச்சாட்டு உண்டு.

உணர்ச்சிவசப்படாமல் யோசித்தால் இது சரி என்று தான் தோன்றுகிறது.

ஒருவேளை பிரிக்கப்படாமல் இருந்து இருந்தால் தினமும் மதக் கலவரம் நடந்து கொண்டே இருந்து இருக்கும்.

அந்த சமயத்தில் இடம்பெயர்வு ஒரு மிகக் கடினமான விசயமாக இருந்தாலும் தொலை நோக்கு பார்வையில் சிந்தித்தால் அது சரியான ஒன்றாகவே எனக்குத் தோன்றுகிறது.

இரு நாடுகளாக பிரிக்கப்பட்டும் இன்றும் இந்தியாவில் தொடரும் மத வன்முறைகளை காணும் போது, பிரிக்காமல் இருந்து இருந்தால் இந்தியா என்ன ஆகி இருக்கும் என்று என்னால் கற்பனையே செய்ய முடியவில்லை.

இந்த விசயத்தில் ஜின்னா எடுத்த முடிவு மிகச் சரியானதே என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

ஒருவேளை அவர் தொலைநோக்கு பார்வையில் சிந்திக்காமல் மத ரீதியாக சிந்தித்து எடுத்து இருந்தாலும் கூட. ஏனென்றால் ஜின்னா மீது எனக்கு பெரிய மதிப்பு எதுவும் கிடையாது.

இடம்பெயர்வு

இடம்பெயர்வு என்பது சாதாரண விசயமல்ல.

தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த இடத்தை விட்டு இன்னொரு இடத்திற்கு செல்வது என்பது எவ்வளவு மனக் கஷ்டத்தைத் தரும் என்பதை எவரும் உணர முடியும்.

வளர்ச்சி மேம்பாட்டிற்காக [பாலம் அமைப்பு, நெடுஞ்சாலை விரிவாக்கம்] ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம் இங்கேயே இடம்பெயரக் கூறினாலே அதை நம்மால் எற்றுக்கொள்வது என்பது சிரமம்.

அப்படி இருக்கையில் நாட்டின் இன்னொரு பகுதிக்கே செல்வது என்பது மிகப்பெரிய முடிவு.

இந்த இடம் பெயர்வால் அந்தத் தலைமுறை கஷ்டப்பட்டு இருந்தாலும் அடுத்து வரும் தலைமுறைகள் பிரச்சனைகள் இல்லாமல் இருப்பார்கள் என்பது மறுக்க முடியாது.

இது போல ஒரு இடம்பெயர்வு பிரச்சனையில் தான் மில்கா குடும்பம் பாதிக்கப்படும். இவர்கள் பிரிவினையின் போது பாகிஸ்தான் பகுதியில் இருப்பார்கள்.

சீக்கியர்கள்

சீக்கியக் குடும்பமான மில்கா குடும்பத்தினர் இந்தியா வர விரும்பாமல் அவர்கள் இடத்திலேயே இருக்க விரும்புவார்கள்.

பாக் முஸ்லிம்களால் இவர்களுக்கு இரு வாய்ப்புகள் கொடுக்கப்படும். ஒன்று முஸ்லிமாக மாறுவது இரண்டாவது இந்தியாவிற்கு இடம் பெயருவது.

இந்துக்கள் மதம் மாறிக் கேள்விப்பட்டு இருக்கிறேன் ஆனால், சீக்கியர்கள் மதம் மாறி நான் கேள்விப்பட்டதில்லை.

உண்மையில் என் சிறு வயதில் சீக்கியர்களும் இந்து மதம் என்றே நினைத்து இருந்தேன்.

இவர்கள் இந்து மதம் இல்லை என்றாலும் அவர்கள் கலாச்சாரம் இந்துக்கள் போலத்தான் உள்ளது.

தோராயமாக 6 மில்லியன் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் இந்தப் பிரிவினையின் போது பாக்கிலிருந்து இந்தியாக்கு இடம் பெயர்ந்து இருக்கிறார்கள்.

இதே அளவு முஸ்லிம்கள் இந்தியாவிலிருந்து பாக்கிற்கு இடம் பெயர்ந்து இருக்கிறார்கள்.

இந்துக்கள் சதவீதம்

தற்போது இதை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. பிரிவினையின் போது பாக்கில் இருந்த இந்துக்கள் சதவீதம் 20% க்கு மேல் ஆனால் தற்போது 4% க்கு குறைவு.

பலர் கொல்லப்பட்டு விட்டனர் மீதி மதம் மாற்றம் செய்யப்பட்டு விட்டனர்.

இந்த இந்துக்கள் சதவீதம் தற்போதைய பங்களாதேஷ் யையும் உள்ளடக்கியது. பங்களாதேஷ் 1971 ம் ஆண்டு பாக்கில் இருந்து பிரிந்து விட்டது.

இந்தியாவில், முஸ்லிம்கள் பிரிவினையின் போது இருந்த அளவை விட தற்போது எண்ணிக்கையில் அதிகம் உயர்ந்து இருக்கிறார்கள்.

இந்தியாவில் இருந்து கொண்டு இந்தியாவை பழிப்பவர்கள் பாகிஸ்தானில் இருந்து பார்த்தால் தான், பிரச்சனைகள் இருந்தாலும் இந்தியா எவ்வளவு அருமையான நாடு, சகிப்புத் தன்மை மிக்க நாடு என்பதை உணர்வார்கள்.

மில்காவின் தந்தை இந்தியா செல்ல முடியாது மதமும் மாற முடியாது என்று கூறி பாகிஸ்தான் முஸ்லிம்களை எதிர்க்க முடிவு செய்கிறார்.

வெகு சிலரான இவர்கள் அவ்வளவு பெரிய கூட்டத்தை அதுவும் ஆயுதத்துடன் உள்ளவர்களை என்ன செய்து விட முடியும்? பெண்கள் உட்பட அனைவரும் கொல்லப்படுகிறார்கள்.

மில்காவின் தந்தை, தான் கொல்லப்படும் முன்பு மில்காவைப் பார்த்து அவனிடம் “திரும்பிப் பார்க்காமல் ஓடு மில்கா ஓடு” என்று கத்துகிறார்.

ஆனால், ஓடும் மில்கா தன் தந்தைக்கு என்ன ஆகிறது என்று பார்க்க திரும்பும் போது அவரது தலை பாக் நபர்களால் வெட்டி வீழ்த்தப்படுகிறது.

இது அவனது மனதை பாதிப்புள்ளாக்கி கடைசி வரை இந்த மனப் பிரச்சனை துரத்துகிறது.

இராணுவம்

பின் அகதியாக இந்தியா வரும் மில்கா தன் சகோதரியைக் கண்டுபிடிக்கிறான். திருடத் துவங்கும் மில்கா பெரியவனானதும் இராணுவத்தில் சேர்கிறான்.

அங்கு இவனது ஓட்டப் பந்தய திறமை அதிகாரிகளால் கவரப்பட்டு ஓட்டப் பந்தயத்திற்காக தேசிய அளவில் தயார் செய்யப்படுகிறான்.

காலில் அடிபட்ட நிலையில் தன்னை நிரூபித்துக் காட்ட வெறித்தனமாக ஓடுவது, தன்னுடைய பயிற்சியாளர் மீது வைத்து இருக்கும் மரியாதை, போட்டிக்காக திரும்ப பாக் செல்ல வேண்டிய நிலையில் தான் வாழ்ந்த இடத்திற்கு சென்று கண்ணீர் விடும் காட்சி, தன்னுடைய இந்திய ப்ளேசரை அக்காவிற்கு அணிவித்து சந்தோசப்படுத்தும் காட்சியில் இருவரின் நடிப்பு என்று பார்த்து ரசிக்க கணக்கிலடங்கா காட்சிகள்.

1956 ஒலிம்பிக் போட்டியில் தன் தவறால் தோற்று அவமானப்பட்டு, தன்னையே அடித்து தண்டித்துக் கொள்வது, தவறை உணர்ந்து கடுமையாக பயிற்சி செய்து போராடுவது என்று ஒரு நிஜ விளையாட்டு வீரரை அப்படியே கண்முன் நிறுத்துகிறார்.

இதற்கு முன்பு இது போல ஒரு விளையாட்டுக் கதாபாத்திரமாகவே மாறிய ஒரு நபரை நான் இந்தியப் படங்களில் பார்த்தது இல்லை.

இன்னொரு விசயம் விளையாட்டை முன்னிறுத்தி திரைப்படங்கள் வெளிவருவது இந்தியாவில் மிகக் குறைவு.

ஆங்கிலப் படங்களில் தற்போது டக் என்று நினைவிற்கு வருவது சில்வஸ்டர் ஸ்டாலோன் “ராக்கி” படம்.

Farhan

Farhan நிஜ சீக்கியரை போலவே மாறி இருக்கிறார்.

வழக்கமாக நமது படங்களில் ஒரு பாடலில் உடற்பயிற்சி செய்வது போல காட்டி இறுதிப் போட்டியில் வெற்றி பெறுவதை காட்டி முடித்து விடுவார்கள்.

இதில் ஒரு விளையாட்டு வீரர் எந்த அளவிற்கு பயிற்சி செய்வாரோ அதில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே பங்களிப்பை படம் நெடுக வழங்கி இருக்கிறார்கள்.

துரத்தும் துயரத்தால், வெற்றி பெற வேண்டிய நிலையில் இருந்த மில்கா, ஒலிம்பிக்கில் [1960] நான்காவது இடம் பெறுகிறார் [இந்தத் தகவலில் சர்ச்சை உண்டு].

வாழ்வா சாவா போட்டி

இதன் பிறகு பாகிஸ்தானில் நடைபெறும் நட்புப் போட்டியில் ஓடப் பிரதமர் நேரு அழைக்கிறார்.

ஆனால், பாகிஸ்தானில் நடந்த கசப்பான சம்பவங்களின் நினைவுகளால் அங்கே செல்ல மறுக்கும் மில்கா பின்னர் நேருவின் வேண்டுகோளுக்கிணங்கி அங்கே நடைபெறும் போட்டியில் கலந்து கொள்கிறார்.

பிரச்சனைகள் பல நடந்து கொந்தளிப்பாக இருக்கும் இரு நாடுகளின் இடையே மில்காவிற்க்கும் உள்நாட்டு வீரருக்கும் வாழ்வா சாவா போட்டி.

இரு நாட்டு மக்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

மில்காவின் ஊரில் வானொலி பெட்டியை ஒலிப்பெருக்கியில் இணைத்து நேரடி வர்ணனை கேட்க தயாராக இருக்கிறார்கள். இங்கே மட்டுமல்ல இந்தியா முழுக்க, பிரதமர் நேரு உட்பட.

இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் என்றால் எதோ இன்று நேற்று வந்த பரபரப்பல்ல, சுதந்திரம் அடைந்தது முதல் இரு நாடுகளுக்கும் இருக்கும் தீராப் பகை.

இரு நாட்டு மக்களுக்கும் கவுரவப் பிரச்னை.

இதை எந்த அளவிற்கு மக்கள் எடுத்துக் கொள்கிறார்கள் என்றால், கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோற்றாலும் பரவாயில்லை இந்தியா / பாக்குடன் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற மூர்க்கமான இரு நாட்டு மக்களின் எண்ணத்தை கூறலாம்.

திரைப்படத்தை திரைப்படமாக பாருங்கள், விளையாட்டை விளையாட்டாக பாருங்கள் என்று கூறுகிறார்கள் ஆனால், இது போன்ற படங்கள் நம்மை அந்த கால கட்டத்திற்கே கொண்டு செல்கிறது.

கண்கலங்க வைத்த படம்

இந்தப் படத்தில் எத்தனை காட்சிகளில் கண் கலங்கினேன் என்று கணக்கு கூட எடுக்க முடியாது.

பாக்கில் நடக்கும் போட்டி ஆரம்பிக்கும் போது இரு நாட்டு மக்களின் உணர்ச்சிகள், பயிற்சியாளரின் பரிதவிப்புகள், நம் நாட்டு வீரர் வெற்றி பெற வேண்டும் என்ற இரு நாட்டு மக்களின் இயல்பான எதிர்பார்ப்பு என்று நம்மை தாறுமாறான பரபரப்பின் உச்சத்தில் நிறுத்துகிறார்கள்.

இந்தப் படத்தில் பாகிஸ்தான் மீது வெறுப்பு வரும் படி அதிகம் காட்சிகள் இல்லை ஆனால், இந்தியனாக பெருமிதப்படும்படி ஏகப்பட்ட காட்சிகள் இருக்கிறது.

நான் இறுதிப் போட்டியில் கண் கலங்கவில்லை, அழுதே விட்டேன்.

படத்தில் நிஜ மில்காவும் திரை மில்காவும். Image Credit www.indianexpress.com

நம்மில் தற்போது பிரபலமான விளையாட்டு வீரர் ஒருவரை வைத்து பின்னாளில் ஒரு படம் எடுக்கப்பட்டால் நாம் உணர்ச்சிவசப்பட்டு பார்ப்போம் ஆனால், இதுவரை மில்கா சிங் என்றால் யார் என்று கூட தெரியாத என்னைப் போல பலரை மூன்று மணி நேரம் உணர்ச்சிகரமாக படத்தின் இறுதி வரை பார்க்க வைத்த / திரைக்கதை அமைத்த இவர்கள் பாராட்டுக்குரியவர்களே!

அவசியம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

Directed by Rakeysh Omprakash Mehra
Produced by Viacom 18, Rakeysh Omprakash Mehra
Written by Prasoon Joshi[3]
Starring Farhan Akhtar, Sonam Kapoor, Meesha Shafi, Dev Gill
Music by Shankar-Ehsaan-Loy
Studio Viacom 18 Motion Pictures
Distributed by Reliance Entertainment
Release date(s) 12 July 2013
Running time 189 minutes
Country India
Language Hindi
Budget INR30 crore
Box office INR104 crore (24 days domestic nett.)

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

7 COMMENTS

  1. படங்களை பார்க்கும் போது பார்ப்பவனின் சிந்தனைகளை வேறுபக்கம் நகர விடாமல் காட்சிகள் அவனை கட்டிப்போட்டு சிந்திக்கத் தோன்றாமல் அவன் மூளையை மழுங்கடிக்கின்றது. ஆனால் புத்தகங்களை வாசிக்கும் போது படிப்பவனின் சிந்தனைகள் அவன் விருப்பப்படி பல்வேறு தளத்திற்கு பயணப்பட வைக்கின்றது என்பது போன்ற குற்றச்சாட்டு ஒவ்வொரு முறையும் காந்தி படத்தை பார்க்கும் எனக்குத் தோன்றும்.

  2. Well post 🙂 And People who know about sivakarthikeyan (ethir Neechal) doesn’t know about Milka singh ( Including me ) thats very sad …

  3. கிரி.. இந்த படம் இன்னும் பார்கவில்லை. விரைவில் பார்ப்பேன். தல நானும் ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கியாச்சி (புரியலையா, என் பையனுக்கு பாஸ்போர்ட் விண்ணபிப்சாச்சி, நீங்கள் அளித்த தகவலுக்கு மீண்டும் நன்றி)

  4. “பிரச்சனைகள் இருந்தாலும் இந்தியா எவ்வளவு அருமையான நாடு”

    – மிக சரி

  5. இந்த படம் பாக்கணும் நு ஆர்வம் தூண்டுது இந்த பதிவு தல

    கொஞ்ச நாளா இந்த இந்தியன் feeling எனக்கு போயிடுச்சு தல “everyone is for himself ” நு மக்கள் முக்கியமா அரசியல் வாதிகள் இருக்காங்க நு தெரிஞ்ச அப்புறம் இந்தியன் ந போடா அப்படின்னு முடிவு பண்ணிட்டேன்

    இருந்தாலும் ஸ்போர்ட்ஸ் பத்தி இருக்கு நிச்சயம் பாக்கணும் நு ஆர்வமா இருக்கு

    -அருண்

  6. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @அருண் தூண்டுது தாண்டுது ன்னு சொன்ன போதாது.. படம் பார்க்கணும் 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!