அத்திவரதர்

3
Athi-Varadar அத்திவரதர்

 

48 நாட்களாகக் காஞ்சிபுரத்தை கலக்கிய அத்திவரதர், தற்போது சயன நிலையில் திரும்பக் குளத்திற்கே சென்று விட்டார். Image Credit

அத்திவரதர்

எனக்குக் கூட்டம் பிடிக்காது அதோடு அடித்துப் பிடித்துச் செல்வதெல்லாம் எனக்கு உடன்பாடில்லை என்பதால், அத்திவரதரை பார்ப்பதில் ஆர்வமில்லை.

அதோடு முருகன் தான் என்னுடைய விருப்பக்கடவுள் என்பதும் ஒரு காரணம்.

உண்மையில் முதல் ஒரு வாரம் கூட்டம் இருக்கும் அதன் பிறகு கூட்டம் குறைந்தவுடன், கோவிலுக்குச் சென்று வரலாம் என்று நினைத்தேன்.

ஆனால், தினமும் லட்சணக்கணக்கில் வருவார்கள் என்று நினைக்கவில்லை. தினமும் ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் பேர், கூட்டம் குறையவே இல்லை.

ஊடகங்கள் தந்த பரபரப்பால் வந்த கூட்டம் என்கிறார்கள். எனக்கு அவ்வாறு தோன்றவில்லை.

40 வருடங்களுக்கு ஒரு முறை

காரணம், எப்போதும் 40 வருடங்களுக்கு ஒரு முறை என்பது சிறப்பு தான்.

அது கடவுள் எனும்போது கூடுதல் சிறப்பைப் பெறுகிறது. எனவே, ஊடகத்தால் மட்டுமே வந்த கூட்டம் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, இதுவும் ஒரு காரணம்.

இதே அத்திவரதரை தினமும் தரிசிக்கலாம் என்றால், இவ்வளவு கூட்டம் தினமும் வரப்போவதில்லை, ஊடகங்களும் கண்டுகொள்ளப்போவதில்லை.

40 வருடங்களுக்கு ஒரு முறை என்பதே இங்கே மக்களிடையே ஒரு எதிர்பார்ப்பை, பரவசத்தை ஏற்படுத்துகிறது. இது இயல்பு.

ஒரு கோடி பேர் பார்த்தாலும், எனக்கு அத்திவரதரை பார்க்கவில்லை என்பது இழப்பாகத் தெரியவில்லை.

ஆனால், நண்பர் வினோ அத்திவரதரை பார்த்ததை விவரித்ததை படித்ததும், “ஒருவேளை வாய்ப்பைத் தவற விட்டு விட்டோமோ!” என்று நினைத்தேன்.

இவர் கிறித்துவராக இருந்தாலும், இந்துக் கடவுள்களை இணையாக வணங்குவார்.

இதன் பிறகு சரி அப்புறமா நேரம் கிடைக்கும்போது குளத்தையாவது பார்த்து வருவோம் என்று மனதை தேத்திக்கொண்டேன். இதுவரையிலும் எனக்கு இக்கட்டுரை எழுதும் எண்ணம் இல்லை.

முனைவர் வேங்கடகிருஷ்ணன்

நண்பர்கள் யாரோ பகிர்ந்து இருந்த, முனைவர் வேங்கடகிருஷ்ணன் அவர்கள் அத்திவரதரைப் பற்றி விளக்கிய காணொளியைப் பார்த்ததும் தான், தற்போது இதை எழுத வேண்டும் என்றே எனக்குத் தோன்றியது.

சும்மா சொல்லாக்கூடாதுங்க, செமையா பேசி இருக்காரு. இதுபோலப் பிரசங்கம் மாதிரியான காணொளிகளைப் பார்த்ததும் இல்லை, பார்க்கப் பிடிப்பதும் இல்லை.

அதில் ஒரு அந்நியத்தன்மை இருக்கும். எனக்கு ஒத்து வராது.

ஆனால், ரொம்ப எளிமையா, அதே சமயம் நடைமுறை எதார்த்தமாக அத்திவரதர் பற்றிய நமக்குள்ள கேள்விகளுக்கு எல்லாம் தெளிவாகப் பதில் அளித்துள்ளார்.

எந்தத் தடங்கலும் இல்லாமல், ஒரே சீராகச் சிறப்பான பேச்சு. வாழ்க்கையிலேயே முதல் முறையாகக் கடவுள் பற்றிய இதுபோல ஒரு பேச்சைச் சுவாரசியமாகக் கேட்டு இருக்கிறேன்.

இவர் பேசியது பிடித்ததற்கு காரணமே, தான் கூறுவது தான் சரி என்று இல்லாமல், பொதுவான கருத்தாக, இப்படி இருந்து இருக்கலாம் என்று எதார்த்தமாகக் கூறியதே!

25+ நிமிடங்களுள்ள காணொளி. உங்களுக்கு நேரம் இருக்கும்போது தவறாமல் பாருங்கள்.

நிச்சயம் உங்களை ஏமாற்ற மாட்டார். நம்பிப் பார்க்கலாம் 🙂 .

3 COMMENTS

  1. அத்திவரதரை தரிசித்த எனது அனுபவம் கிரி.

    அத்திவரதர் தரிசனம் ஆரம்பமான போது, குடும்பத்துடன் சென்று
    தரிசித்து வர வேண்டும் என்று நினைத்திருந்தேன். அலுவலக நண்பர்களும் எல்லாருமா சேர்ந்து ஒரு ஞாயிற்றுகிழமை செல்வோம் என்று முடிவெடுத்தார்கள்.

    நாட்கள் செல்ல செல்ல கூட்டம் அதிகமாக தொடங்கிய பின், குடும்பத்துடன் செல்லும் ஆசையை விட்டு விட வேண்டியதாயிற்று. என் மனைவியும் அம்மாவும் நான் மட்டுமாவது சென்று பாரத்து விட்டு வர வேண்டுமென்று விருப்பபட்டார்கள். குடும்பத்தை விட்டு நான் மட்டும் செல்ல எனக்கு தயக்கமாகவே இருந்ததால் நான் இதற்கு முதலில் ஆர்வம் காட்டவில்லை. பிறகு நான் மட்டுமாவது சென்று வரலாம் என்று ஆன் லைனில் டிக்கெட்டுக்கு முயற்சிக்க ஆரம்பித்தேன். பதினைந்து நாட்களுக்கு மேலாக (தினமும் இருபது முறைக்கு மேல்) முயற்சித்தும் கூட சோர்வானது தான் மிச்சம். நாளுக்கு நாள் பெருகி வரும் கூட்டம் என்னை மேலும் பயமுறுத்தியது.

    இப்படியான சூழ்நிலையில் நேற்று தரிசன நிறைவு நாள் வரவே நேற்று காலை திருவிளையாடல் தருமி போல் எனக்கில்லை எனக்கில்லை என்ற பொருமலுடன் அலுவலகம் வந்த போது , எல்லாரும் சேர்ந்து போவோம் என்று சொன்ன நண்பர்கள் தனியாகவும் குடும்பத்துடனும் சென்று வந்ததை பற்றி தொடர்ந்து பேச ஆரம்பிக்கவும் டென்ஷனாகி விட்டேன்.

    உடனே நண்பர் முரளி சொன்னார் “வாங்க சார் நாம இப்ப உடனே கிளம்பி போயிட்டு வரலாம்”

    “மணி 12 ஆக போகிறது. இதற்கு மேல் எப்படி முடியும் ?”என்று நான் தயங்க, இன்னொரு நண்பர் “அத்திவரதர் மேல பாரத்தை போட்டுட்டு நீ கிளம்பு” என்றார். சரி என்று உடனே கிளம்பி விட்டோம்.

    நாங்கள் இருவரும் ரயிலில் தாம்பரம் வந்து காஞ்சிபுரம் பஸ் பிடித்த போது மணி 1 .45. படப்பை ஒரகடம் வழியாக முத்தியால்பேட்டை வந்து இறங்கிய போது மணி 2 .45 . அங்கு மினி பஸ் ரெடியாக நிற்கவே அதில் ஏறி கொண்டோம். கிழக்கு கோபுரத்திற்கு செல்லும் வழியில் வந்து இறங்கினோம். நடக்க ஆரம்பித்து கோகுல் வீதியில் நாங்கள் வரிசையில் சேர்ந்த போது மணி 3 .15 .

    மூன்று மணி நேரத்திற்குள் சாமியை பார்த்துடலாம் என்று போலீஸ்காரர் நம்பிக்கையூட்டினார். பட்டாள தெரு கடந்து சன்னதி தெரு வந்து போது 6 .00 மணி. அது வரையில் கூட கூட்டத்தில் பிரச்னையில்லை. சன்னதி தெருவில் இருந்த இரும்பு கம்பி தடுப்புகள் ஒவ்வொன்றையும் கடக்க கூட்டம் முண்டியடிக்கவே அங்கே தான் சிரமப்படவேண்டி வந்தது. இப்படியாக கோவில் வாசலுக்கு வந்து சேரும் போது சரியாக 7 .௦௦ மணி ஆகி விட்டது. வெளியே மழை தூறல் ஆரம்பித்திருக்க அத்திவரதரை வசந்த மண்டபத்தில் தரிசித்த போது நேரம் சரியாக 8 .00 மணி.

    வெளியில் வந்தவுடன்
    சூடாக பிரசாதம் கொடுத்து கொண்டிருந்தார்கள். பிரசாதம் சாப்பிட்டு முடித்து மேற்கு கோபுரத்திலிருந்து கிழக்கு கோபுரம் வந்து சேர்ந்த போது கூட்டம் தரிசனத்திற்கு காத்து கொண்டிருந்தது. முத்தியால் பேட்டையில் புதிதாக வருபவர்களை தடுத்து திருப்பி அனுப்பி கொண்டிருந்தார்கள் காவல் துறையினர். தூறலாய் ஆரம்பித்திருந்த மழை சென்னை வந்து சேர்ந்த போது கொட்டி தீர்க்க ஆரம்பிக்க, நண்பர் முரளிக்கு நன்றி சொல்லி விட்டு மழையோடு வீடு வந்து சேர்ந்தேன்.

    “கூட்டத்தை பார்த்து பயந்துகிட்டு வராமல் டிமிக்கி கொடுத்துகிட்டிருந்த உன்னை எப்படி வரவழைத்து கூட்டத்தில் நிற்க வைத்து தரிசனம் கொடுத்தேன் பார் “என்று அத்திவரதர் சொன்னதாகவே இதை எடுத்து கொள்ள தோன்றுகிறது.

    அத்திவரதர் முன் 20 நொடிகள் தான் நின்றிருப்பேன். அதனாலென்ன. அந்த நொடிகள் கொடுத்திருக்கும் மனநிறைவு வார்த்தைகளில் அடங்கா.

    ஓம் நமோ நாராயணா.

  2. அத்திவரதர் குறித்த செய்திகள், தினசரி செய்தித்தாள்களில் வருகின்ற போது கூட பணி புரியும் நண்பர்களிடமும், சக்தியிடமும் இதை குறித்து கேட்டேன்.. யாருக்கும் சரியான தகவல் தெரியவில்லை.. பின்பு தான் தெரிந்து கொண்டேன்.. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் தரிசனம் என்று..

    (ஊடகங்கள் தந்த பரபரப்பால் வந்த கூட்டம் என்கிறார்கள். எனக்கு அவ்வாறு தோன்றவில்லை) என்னை பொறுத்தவரை ஊடகங்கள் ஒரு காரணம் என்றாலும், மக்களின் நம்பிக்கை, வழிபாடுகளும் தற்போது அதிகரித்து உள்ளதாகவே எண்ணுகிறேன்… இதை ஒரு கருவியாக பயன்படுத்தி தான் எல்லா மதத்திலும் போலி சாமியார்களின் எண்ணிக்கையும், மதகுருமார்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே போகிறது.. நான் தொடர்ந்து போலிகளை கண்டுவருவதால், அசலை காணும் போதும் இயல்பாகவே சந்தேகம் வருகிறது.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  3. @சரவணன் எப்படியோ போயிட்டு வந்துட்டீங்க 🙂

    @யாசின்

    “மக்களின் நம்பிக்கை, வழிபாடுகளும் தற்போது அதிகரித்து உள்ளதாகவே எண்ணுகிறேன்”

    உண்மை தான். தற்போது அதிகரித்து வருகிறது. எங்கும் கூட்டமாக உள்ளது.

    இதைப் பயன்படுத்தி ஏமாற்றுபவர்களும் அதிகரித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here