ராகுல் வழக்கில் அவருக்கு அளிக்கப்படத் தண்டனை குறித்த விவாதம் பாஜக ராம ஸ்ரீனிவாசன் மற்றும் பாண்டேவுக்கு இடையே நடைபெற்றது. Image Credit
ராம ஸ்ரீனிவாசன்
பேராசிரியரான ராமஸ்ரீனிவாசன் பேசுவதில் வல்லமை பெற்றவர். பாஜகவில் அண்ணாமலைக்குப் பிறகு இவரது பேச்சை விரும்பிக்கேட்பேன்.
காரணம், இவர் பேசுவது தர்க்கரீதியாகவும், தகவலாகவும் சரியானதாக இருக்கும்.
முட்டாள்தனமாகப் பேசாமல், கட்சி பாசத்தில் எதையாவது உளறாமல், தவறுகள் இருந்தாலும் அதையும் எவ்வாறு கூற வேண்டும் என்பதை உணர்ந்து பேசுவார்.
தான் பேசுவது கட்சியைப் பாதிக்கும் அல்லது மற்றவர்கள் கிண்டலடிக்கும்படியாகி விடும் என்பதை சிலர் உணராமல் பேசுவார்கள்.
ஆனால், இதில் ராமஸ்ரீனிவாசன் தெளிவு.
பாண்டே விவாதம்
பாண்டேவின் விவாதத்துக்கு மிகப்பெரிய ரசிகன். யாராக இருந்தாலும், நெருக்கடியான கேள்விகளைக் கேட்டுத் திணறடித்து விடுவார்.
இதனாலே பலரும் இவரை எப்படியாவது திணறடித்து விடவேண்டும் என்ற எண்ணத்தோடே ஆரம்பிப்பார்கள் ஆனால், அசிங்கப்பட்டே நிற்பார்கள்.
‘பாஜகவில் எப்போது இணையப்போறீங்க?‘ என்று ஒரு நிருபர் நக்கலாகக் கேட்டு ஆரம்பிக்க, அதன் பிறகு அவரைப் பாண்டே ‘ஓ! அப்படி வறீங்களா!‘ என்று கேட்டுக் கிறுகிறுக்க வைத்தது இன்றுவரை மறக்க முடியாத விவாதம் 🙂 .
பாண்டேவும் சில விவாதங்களில் தடுமாறியது உண்டு என்றாலும், ராமஸ்ரீனிவாசன் விவாதம் மனதில் நிற்கும்படியாகி விட்டது 🙂 .
தான் கட்சி சார்பற்றவர், நடுநிலையார் என்று பாண்டே கூறினாலும், அனைவருக்கும் தெரியும் வலது சாரி ஆதரவாளர் என்று.
ஒரே வித்யாசம் மற்ற ஊடகவியலாளர்கள் திமுக ஆதரவாக வெளிப்படையாகப் பேசுவார்கள் ஆனால், பாண்டே அது போல மோசமாகப் பேச மாட்டார்.
விவாதத்தில், சரியா சொல்லிட்டீங்க, சரியான இடத்துக்கு வந்துட்டீங்க என்று பாண்டே கூறுவார். சில நேரங்களில் சரியாக இருக்கும் ஆனால், எதிராளியை உளவியல் ரீதியாக குழப்புவதற்கு பயன்படுத்துகிறாரோ என்றும் தோன்றும்.
அதாவது, தான் தவறாக ஏதாவது கூறி விட்டோமோ என எதிராளி தடுமாறி விடுவார்.
வலது சாரி ஆதரவாளன் இல்லை
தான் வலது சாரி ஆதரவாளன் இல்லையென்பதை நிரூபிக்கச் சில நேரங்களில் வலது சாரி ஆதரவாளர்களைத் திமுக ஆதரவாளர்களை விடக் கடுமையாகக் கேட்பார்.
அண்ணாமலையுடனான பேட்டியில் இது போல கேட்டார் ஆனால், அண்ணாமலையும் திறமையாக பதிலளித்ததால் பேட்டியும் சிறப்பாக அமைந்தது.
ராமஸ்ரீனிவாசனுடனும் இதே போல முதல் கேள்வியைக் கேட்ட விதமே பாண்டே எதோ சண்டைக்குத் தயாரானது போலவே இருந்தது.
பாராளுமன்றத்தில் ராகுலுக்குப் பேச அனுமதி கொடுக்கவில்லை என்று கேட்டதுக்கு ராமஸ்ரீனிவாசன் அதற்குப் பதில் அளித்தார்.
பாண்டே கேள்வி சரியானதாக இருந்தாலும், அதற்கு ராமஸ்ரீனிவாசனும் கட்சி சார்பாக மழுப்பலான ஆனால், திணறாத பதிலை அளித்தார்.
எப்படியாவது தான் கூறியதை பேராசிரியர் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று பாண்டேவும் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் பலனளிக்கவில்லை.
தனது ஈகோ ஏற்றுக்கொள்ளாததால், அதை முடிக்காமல் நீட்டித்துக்கொண்டே சென்று பின் வேறு வழி இல்லாமல் அடுத்தக் கேள்விக்குச் சென்றார்.
வெள்ளை கொக்கு
இதன் பிறகு கேட்ட கேள்விகளுக்கும் ராமஸ்ரீனிவாசன் சிறப்பாகப் பதில் அளித்தார். வெள்ளை கொக்கு எடுத்துக்காட்டு வைத்துப் பேசியது அசத்தல் 🙂 .
பாண்டேவால் சமாளிக்க முடியாதது அவரது பதட்டத்தில் தெரிந்தது. சில கேள்விகள் அவருக்கே சிறுபிள்ளைத்தனமாக இருந்து இருக்க வேண்டும்.
குறிப்பாக ராகுலை பார்த்து பாஜகவுக்கு ஏன் பயம்? என்பதைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருந்தார்.
உண்மையில் ராகுல் தான் பாஜக க்கு ஸ்டார் காம்பைனர். ராகுல் இருப்பது பாஜக க்கு பலமே. மமதா கூட இதை மறைமுகமாகக் குறிப்பிட்டு விமர்சித்து இருந்தார்.
ராகுலுக்கு பாஜக பயப்படுகிறது என்பதைக் காங்கிரசாரே நம்ப மாட்டார்கள். அரசியலுக்காக மாற்றிக்கூறலாமே தவிர, உண்மை அவர்களுக்கும் தெரியும்.
இடைமறிப்பு
பாண்டே இந்தப்பேட்டியில் ஏராளமான இடைமறிப்புகள். பேராசிரியரைப் பேச விடாமல் தொடர்ந்து இடைமறித்துப் பேசிக்கொண்டு இருந்தார்.
விவாதம் நடந்தது இணையத்தில் (Video call) என்பதால் குரல் தாமதத்தால் மேலும் மோசமாகக் காரணமாக இருந்தது.
தங்களின் வாதத்தில் நம்பிக்கையிழப்பவர்களே அதிகம் இடைமறித்தலை செய்வார்கள். தாங்கள் கூறுவதை நிரூபிக்க ஏற்படும் பதட்டம்.
பாண்டே பெரும்பாலான நேரம் இதைத்தான் செய்துகொண்டு இருந்தார்.
பாண்டே
எல்லோருமே அனைத்து நேரங்களிலும் வெற்றி பெற முடியாது. ஏதாவது ஒரு கட்டத்தில் தோல்வியடையும் நிலை வரலாம்.
அதற்காகச் சம்பந்தப்பட்டவர் திறமையற்றவர் என்ற அர்த்தமில்லை, அன்றைக்கு அவருக்கான நாளில்லை என்று எடுத்துக்கொள்ளலாம்.
இவ்விவாதத்தில் ராமஸ்ரீனிவாசன் பொறுமையாக, தெளிவாக, பதட்டமாகாமல், கோபப்படாமல் அட்டகாசமாகப் பேசினார்.
இதுவே இவ்விவாதத்தில் பேராசிரியரை ஒருபடி மேலே தூக்கி விட்டது.
வெற்றி பெற்றாக வேண்டும் என்ற பதட்டத்தில் இருந்தால், நெருக்கடியான நிலைக்குச் செல்லும் என்பதற்கு இவ்விவாதம் எடுத்துக்காட்டு.
இவ்விவாதத்தில் இருவருமே சமபங்கில் வெற்றி பெற்று இருக்கலாம் ஆனால், பாண்டே தன் புத்திசாலித்தனத்தைக் காட்ட முயற்சித்ததில் சொதப்பி விட்டது.
ஆரம்பித்திலிருந்தே பேராசிரியரைக் கார்னர் செய்ய வேண்டும் என்று நினைத்துப் பேசியது பாண்டேக்கு Backfire ஆகி விட்டது.
ஒருவேளை எனக்குதான் இப்படித் தோன்றியதோ என்று கருத்துப்பகுதியில் பார்த்தால், 95% மேற்பட்டோர் பாண்டேவின் பேச்சை விமர்சித்து இருந்தனர்.
எனவே, ஈகோவை ஒதுக்கி விரைவில் மீண்டும் சிறப்பான ஒரு விவாதத்தைப் பாண்டே தருவதற்காகக் காத்து இருக்கிறேன்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
‘’ தான் வலது சாரி ஆதரவாளன் இல்லையென்பதை நிரூபிக்கச் சில நேரங்களில் வலது சாரி ஆதரவாளர்களைத் திமுக ஆதரவாளர்களை விடக் கடுமையாகக் கேட்பார்.’’
நீங்கள் பாண்டேவை சரியாக பின்பற்றவில்லை என்று நினைக்கிறேன். அவர் பலமுறை சொல்லிவிட்டார். நான் திமுகவை கேள்விகேட்கும் போது அதிமுக்காரன் பார்வையில் இருந்து கேட்பேன். அதே போலவே அதிமுக. காங்கிரஸ், பிஜேபி பிரமுகர்களை பேட்டி எடுக்கும் போது எதிரே இருப்பவர் மனநிலையில் கேள்விகளை கேட்பேன் என்று. மேலும் அவர் வலதுசாரி ஆதரவாளர் என்பதும் கூறியுள்ளார். நான் வெளிப்படையாக மோடி ஆட்சியை ஆதரிக்கிறேன் எனவும் கூறியுள்ளார். பாண்டே கேள்வி பதில் நிகழ்ச்சி பாருங்கள் அதில் பெரும்பாலான கேள்விகள் அவரின் நிலை பற்றி தான் இருக்கும். அந்த கேள்விகளுக்கு அவர் தெளிவாக வலதுசாரி ஆதரவாளர் என்பதையும் மோடி ஆதரவாளர் என்பதையும் தெளிவாக கூறியுள்ளார். அதை அவர் மறைக்க வேண்டிய அவசியமில்லை
கிரி, இரண்டு மாத விடுமுறையை முடித்து விட்டு தற்போது தான் திரும்பினேன்.. ஊரில் இருந்த சமயத்தில் எந்த பதிவையும் படிக்கவில்லை.. தற்போது ஓய்வு நேரத்தில் தான் பழைய பதிவுகளை படிக்க வேண்டும்..
என்னுடைய கல்லுரி பருவத்தில் இதுபோல அரசியல் விவாதங்களில் அதிக ஆர்வம் இருந்தது.. ஆனால் நாட்கள் செல்ல செல்ல இது போல விவாத நிகழ்ச்சிகளை பார்க்கும் ஆர்வம் முற்றிலும் குறைந்து விட்டது.. மாறாக அதிக அளவிலான தனிப்பட்ட நபர்களின் நேர்காணல் நிகழ்ச்சிகளை நேரம் கிடைக்கும் போது விரும்பி பார்க்கிறேன்.. எந்த துறையில் சாதித்தவர்களின் சாதனைகளை தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் உண்டு..
@ஹரி
நீங்கள் கூறியதை பாண்டே கூறி கேட்டுள்ளேன் அதே போல நான் கூறியதையும் பாண்டே கூறியுள்ளார்.
பாண்டே ஒரு ஊடகவியலாளர். எனவே, அவரிடம் தான் வலது சாரி ஆதரவாளன் என்று வெளிப்படையாக கூற எதிர்பார்க்க முடியாது.
அவ்வாறு எதிர்பார்ப்பது சரியும் அல்ல.
அவரே கூறியது போல
திமுகவை கேள்விகேட்கும் போது அதிமுகாரன் பார்வையிலிருந்து கேட்பேன் என்று கூறினாலும் வழக்கமான நபர் கேட்பதற்கும் தான் நடுநிலை என்ற அழுத்தத்தில் கேட்பதற்கும் வித்யாசம் உள்ளது.
அதற்கு அண்ணாமலை, ராம ஸ்ரீனிவாசன் பேட்டிகள் எடுத்துக்காட்டு. அதிலும் குறிப்பாக ராம ஸ்ரீனிவாசன் பேட்டி.
அதில் நீங்கள் கவனித்தால் வழக்கமான அறிவாளி பாண்டேவாக இருக்க மாட்டார்.
இதில் தன்னை வலது சாரி ஆதரவாளன் இல்லை என்று நிரூபிக்க அவர் மேற்கொண்ட முயற்சி போலவே இருக்கும்.
ஒருவேளை உங்களுக்கு அது போன்று தோன்றாமல் இருக்கலாம் ஆனால், எனக்குத் தோன்றியது. அதனாலே இக்கட்டுரை.
@யாசின்
Welcome Back 🙂
சிலரின் விவாத நிகழ்ச்சிகளை மட்டுமே விரும்பிப் பார்ப்பேன். காரணம், புதிய செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக.
செய்தி சேனல்களில் வரும் விவாதங்கள் எனக்குப் பிடிக்காதது. அது சந்தைக்கடை போன்று கூச்சலும் குழப்பமும் மட்டுமே இருக்கும்.