நல்லா இருப்பதை எப்படிச் சொதப்புவது என்று IRCTC அட்ராசிட்டிஸ் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
கடந்த வருடத்தில் IRCTC தனது தளத்தை மேம்படுத்துவதாகக் கூறி வடிவமைப்பைப் புதுப்பித்தது ஆனால், அதனுடைய வடிவமைப்புப் பயனாளருக்கு எளிதாக இல்லை.
உள்ளே நுழையாமலே ‘பயணச்சீட்டு உள்ளதா?’ என்பதைப் பார்ப்பதில் மட்டும் பயனுள்ளதாக இருந்தது ஆனால், மற்றபடி பயனாளர்களின் வெறுப்பையே பெற்று வருகிறது.
எழுத்துக்களுக்கு மிகுந்த இடைவெளி விட்டு, பக்கத்தைப் பெரிதாக்கி அனைத்தையும் இரு வண்ணங்களில் மட்டுமே கொடுத்துப் பார்ப்பவர்களுக்குக் குழப்பத்தையே கொடுத்துள்ளது.
இடையில் இந்தியை நுழைத்து அனைவரிடமும் வாங்கிக்கட்டி, பின்னர் நீக்கியது தனிக் கதை.
நான் இணையப் பயணச்சீட்டு முன்பதிவுக்கு IRCTC இணையதளத்தைப் பயன்படுத்தாமல், பல வருடங்களாக மொபைல் செயலியையே பயன்படுத்தி வருகிறேன்.
சொல்லப்போனால், இணையதளத்தைப் பயன்படுத்துவதே இல்லை. அதனால், இணையதள வடிவமைப்புப் பிரச்சனை என்னைப் பெரியளவில் பாதிக்கவில்லை.
IRCTC App UI (User Interface)
தற்போது ஒழுங்கா இருந்த செயலியை, UI மாற்றம் செய்கிறேன் என்று சொதப்பி வைத்துள்ளார்கள். எழுத்துக்கள் மிகவும் சிறியதாக, படிக்கச் சிரமமாக உள்ளது.
அதோடு options இருப்பதே தெரிவதில்லை, கவனிக்காமல் அடுத்ததுக்குச் சென்றால், தேர்வு செய்யவில்லை என்று திட்டுகிறது.
அதே போல Captcha மிகப்பெரிய தலைவலியாக உள்ளது. சரியாகக் கொடுத்தாலும் சில நேரங்களில் ஏற்றுக்கொள்வதில்லை.
தட்கால் முன்பதிவு நேரங்களில் ரொம்பக் கடினமான Captcha கொடுப்பார்கள். அதை அடித்து முடிப்பதற்குள் காத்திருப்பு பட்டியலே வந்து விடும்.
விளம்பரத்தை OK Button அருகில் வைத்துள்ளார்கள். பார்க்க OK Button போல இருப்பதால், அவசரத்தில் தெரியாமல் க்ளிக் செய்து விட்டால், மொத்தமாகக் காலி.
எவனோ ஒரு கிறுக்கன் தான் இதை வடிமைத்து இருக்க வேண்டும், மக்கள் பயன்பாட்டுக்கு விடும் போது சாதகப் பாதகங்களைப் பரிசீலிக்காமல் அப்படியே பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளார்கள்.
தற்போது IRCTC செயலியைப் பயன்படுத்துவதற்கே கடுப்பாக உள்ளது.
Lower Berth Booking
சமீபத்தில் சென்னையில் இருந்து அம்மாவை அழைத்துச் செல்வதற்காக ரயிலில் முன்பதிவு செய்யும் போது Lower Berth முன்பதிவு செய்ய வேண்டியிருந்தது.
அம்மாக்கு வயது 78. முழங்கால் வலி இருப்பதால், Lower Berth தவிர்த்து வேறு எதிலும் அவரால் ஏறிப் படுக்க முடியாது.
முன்பதிவு செய்யும் போது IRCTC ஒரு வசதி தருகிறது. அதாவது ‘ஒரே ஒரு Lower Berth வது இருந்தால் மட்டுமே, முன்பதிவு செய்யவும்‘ என்று.
இந்த வசதியைத் தேர்வு செய்து முன்பதிவு செய்தால், Lower Berth இல்லையென்றால், முன்பதிவு ஆவதில்லை ஆனால், பணம் எடுக்கப்பட்டு விடுகிறது. இது என்ன கணக்கு?!
திரும்பப் பணம் வந்து விடுகிறது என்றாலும், எதற்குப் பணம் எடுக்கப்பட வேண்டும்?
Paytm வழியாகப் பணம் செலுத்திய போது அதே நாளில் திரும்ப வந்து விட்டது, அமேசான் வழியாகப் பணம் செலுத்திய போது 3 நாட்கள் ஆனது.
ஒரே ஒரு முறை மட்டும் முன்பதிவும் ஆகவில்லை அதே சமயம் பணமும் எடுக்கப்படவில்லை. இது தான் சரி.
இவ்வளவுக்கும் 160 பயணசீட்டுகள் (Available) இருந்தும் ஒரு Lower Berth கூட இல்லை.
‘சரி இப்படியே போனால், பயணச்சீட்டுக் கிடைக்காமல் போய் விடும் என்று, இருவருக்கும் கிடைப்பதில் முன்பதிவு செய்து விடுவோம், பின்னர் அங்கே சென்று எவரிடமாவது கேட்டு மாற்றிக்கொள்வோம்‘ என்று முன்பதிவு செய்து விட்டேன்.
அங்கே சென்று கேட்டால் பெரும்பாலும் Lower Berth கொடுத்து விடுவார்கள். சிலர் முடியவே முடியாது என்று கூறி விடுவார்கள்.
அம்மா கொஞ்சம் பயந்த சுபாவம் எனவே, அவரை வேறு இடத்தில் (கொஞ்சம் தள்ளி) இடம் கிடைத்து அங்கே படுக்கக்கூறினாலும் நிம்மதியாக இருக்க மாட்டார்.
இருந்தவர்கள் எல்லோருக்குமே ஒருவேளை ஏதோ ஒரு நியாயமான காரணத்தால் Lower Berth தேவைப்பட்டால், நெருக்கடியாகி விடுமே! என்று பயணச்சீட்டுக் குறையக் குறையத் திரும்ப முயற்சித்துக்கொண்டு இருந்தேன்.
Read: ரயில் முன்பதிவு அமேசானில் செய்வது எப்படி?
IRCTC Algorithm
ஏனென்றால், IRCTC Algorithm எப்படி வேலை செய்யும் என்று தெரியாது, ஒரு வேளை பயணச்சீட்டு குறையும் போது அதனுடைய Algorithm Lower Berth கொடுக்கலாம் என்று முயற்சி செய்துட்டே இருந்தேன், 45 பயணச்சீட்டுகள் இருக்கும் போது கிடைத்து விட்டது 🙂 .
இதில் ஒருவேளை Lower Berth ல் உள்ளவர் எவரும் தனது பயணசீட்டை ரத்து செய்ததாலும் கிடைத்து இருக்கலாம்.
இப்படியே போனால், IRCTC வைத்து ஏதாவது PHD துவங்கினால், அதில் நான் கலந்து கொண்டு விடலாம் 🙂 .
தொடர்புடைய கட்டுரைகள்
IRCTC யில் விரைவாக முன்பதிவு செய்வது எப்படி?
ரயில்வே துறையில் தனியார் சரியா தவறா?
புதுப்பொலிவுடன் சென்னை சென்ட்ரல்!
முட்டை பிரியாணியும் மீதி ஒரு ரூபாயும்
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.