மூன் லைட்டிங் என்றால் என்ன?

2
மூன் லைட்டிங்

மீபமாக மூன் லைட்டிங் என்ற வார்த்தை பரவலாகச் செய்திகளில் பேசப்படுகிறது. இது என்னவென்று பார்ப்போம். Image Credit

மூன் லைட்டிங் என்றால் என்ன?

ஒரு நபர் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களில் பகுதி நேரமாகவோ, வார இறுதியிலோ பணி புரிவதை தொழில்நுட்பத் துறையில் மூன் லைட்டிங் என்று அழைக்கிறார்கள்.

விமர்சனங்கள் என்ன?

மூன் லைட்டிங் முறைக்குப் பல நிறுவனங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.

  • ஒரு நபர் பல நிறுவனங்களில் வேலை செய்யும் போது முதன்மை நிறுவனத்தின் பணியில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாது.
  • பணியின் முக்கியத்துவம் குறைகிறது.
  • நிறுவன DATA பாதுகாப்பு பிரச்சனைகள்.
  • கவனச்சிதறல்.
  • மற்ற பணிகளின் சுமை காரணமாக, நிறுவனத்தின் பணிகள் தாமதமாகின்றன.
  • ஒருவேளை போட்டி நிறுவனமாக இருந்தால், இரகசியம் பேணப்பட முடியாமை.
  • ஊழியர் முழுத்திறனையும் வெளிப்படுத்துவதில்லை.
  • பணிகளை அவசரமாக முடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனால், பணியின் தரம் குறைகிறது.

செய்தால் என்ன தவறு?

எதிர்ப்பு இருப்பது போல மூன் லைட்டிங் முறைக்கு ஆதரவும் உள்ளது.

  • வேலை முடிந்தால் போதும் தானே! செய்து விட்டால் என்ன பிரச்சனை?
  • ஒருவர் பல நிறுவனங்களில் பணி புரிவது அவர் சுதந்திரம்.
  • சரியாகச் செய்யவில்லையென்றால், அப்ரைசலில் மதிப்பெண் குறையப்போகிறது. அதன் மூலம் நடவடிக்கை எடுக்கலாமே?
  • வேலை நேரம் முடிந்த பிறகு எந்த வேலை செய்தால் நிறுவனத்துக்கு என்ன?
  • கொரோனா காரணமாகப் பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பணவீக்கம் காரணமாகச் செலவினம் அதிகரித்துள்ள நிலையில் இன்னொரு பணியைச் செய்து சம்பாதித்தால் என்ன?

என்ற கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன.

சம்பவம்

ஒரு நிறுவனத்தில் ஊழியர் ஒருவர் பணி விலகுவதாகக் கூறி Notice Period சமயத்தில், வேறு நிறுவனத்தில் இணைந்து இரு நிறுவனங்களிலும் ஊதியம் வாங்கிக்கொண்டு பணி புரிந்துள்ளார்.

அனுபவம் உள்ளவர்களுக்கு மூன்று மாதங்களும், புதிதாக இணைந்தவர்களுக்கு ஒரு மாதமும் Notice Period வழக்கமாக இருக்கும்.

WFH முறையில் பணி புரிந்ததால், இவர் இரு நிறுவனங்களிலும் கூறாமல், 3 மாதங்களாகப் பணி புரிந்து ஊதியத்தை வாங்கியுள்ளார்.

மற்ற நிறுவன HR மறு பரிசோதனைக்கு இந்த HR யிடம் வந்த போது தான், இந்தச் சம்பவம் தெரிய வந்துள்ளது.

தெரிந்த பிறகு இரு நிறுவனங்களும் ஊழியரைப் பணி நீக்கம் செய்து விட்டனர்.

மூன்லைட்டிங் செய்தவர்கள் மாட்டியது எப்படி?

இரு நிறுவனங்களிலும் PF (Provident fund) கணக்கில் பணம் செலுத்தப்பட்டதால் கண்டுபிடித்து விட்டார்கள். ஒரே கணக்கு ஆனால், இரு சம்பளம்.

இதிலிருந்து தப்பிக்க ஒப்பந்த ஊழியராக (contractor staff) இருந்தால், PF வராது. எனவே, மற்ற நிறுவனத்துக்குத் தெரிய வாய்ப்பில்லை.

இது போன்று சிலர் செயல்பட்டு வருகிறார்கள்.

முன்னணி நிறுவனங்கள்

மூன் லைட்டிங் முறையில் பணி புரிந்தால், பணி நீக்கம் செய்யப்படும் என்று விப்ரோ, இன்ஃபோசிஸ், ஐபிஎம் நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்கள்.

இந்த வரிசையில் மேலும் பல நிறுவனங்கள் இணைய வாய்ப்புள்ளது. அதே போல இம்முறைக்கு ஆதரவு அளிக்கும் நிறுவனங்களும் உள்ளன.

ஏற்கனவே, சம்பளத்தை ஏகத்துக்கும் உயர்த்தி விட்டதில் கடுப்பில் உள்ள நிறுவனங்கள் இதில் உறுதியான எதிர்ப்பைக் காட்டி வருகின்றன.

உலகப் பணவீக்கத்தால் ஏற்பட்டுள்ள மந்த நிலை காரணமாக ஆட்குறைப்பு (Lay Off) வாய்ப்புள்ளதால், இதுவரை பல Offers காண்பித்து அதிக ஊதியத்தைக்கேட்டு கதறவிட்ட ஊழியர்களுக்கு நிறுவனங்கள் திருப்பிக்கொடுக்கும் நேரம்.

பார்ப்போம் எப்படிப் போகிறது என்று 🙂 .

தொடர்புடைய கட்டுரைகள்

WFH ஏற்படுத்தப்போகும் சமூக மாற்றங்கள்!

The Great Resignation | திணறும் ஐடி நிறுவனங்கள்

2 COMMENTS

  1. கிரி, நான் மூன் லைட்டிங் என்று தலைப்பை பார்த்தவுடன் ஏதாவது சினிமா போட்டோகிராபி குறித்த பதிவாக இருக்கும் என்று எண்ணினேன். இதுவரை இந்த வார்த்தையை நான் கேள்விப்பட்டதில்லை. பதிவை படித்த பிறகு தான் இதை பற்றி தெரிந்து கொண்டேன். ஐடி துறையில் இருப்பவர்கள் நினைத்த மாதிரி நிறுவனத்தை மாற்றுவது போல் எங்கள் துறையில் நிறுவன மாறுதல் ரொம்ப குறைவு.

    என்னுடன் பட்டம் பெற்று, வேலையில் இருக்கும் என் சக கல்லூரி நண்பர்கள் 80% பெரும்பாலும் ஆரம்பத்தில் கிடைத்த வேலையிலே திருப்தி கொண்டு அதே நிறுவனத்தில் சிறு, சிறு ஊதிய உயர்வு, துறை மாற்றம், பணி உயர்வு பெற்று வேலையை தொடர்ந்து செய்து வருகின்றனர். இங்க மூன் லைட்டிங் கான்சப்ட்க்கே வேலையில்லை.

    என்னுடைய சூழலை எடுத்து கொண்டாலும் கோவை, திண்டுக்கல், பின்பு வெளிநாடு என மாறிப்போனது. திண்டுக்கல்லில் பணியை விட்டு வெளியேறும் போது நல்ல ஊதியம், பணியுர்வு அளிப்பதாக நிறுவன மேலாளர் வாக்களித்தார். பெரிய நிறுவனம் அலுவலகத்தில் பணிபுரியும் நபர்கள் மிக குறைவு.

    ஒரு ஊழியர் குறைந்தது 3 பேரின் பணியினை புரியவேண்டும். அப்போது எனக்கு ரத்தத்தில் சூடு இருந்ததால் நான் 6 பேரின் பணியினை செய்தேன். அந்த சமயத்தில் என்னுடைய ஒரே குறிக்கோள் வெளிநாடு செல்ல வேண்டும் என்று இருந்ததால், வேலையை விடுவதை பற்றி துளியும் யோசிக்கிக்கவே இல்லை. (தற்போது எப்போதாவது யோசிப்பது உண்டு).

    வெளிநாட்டுக்கு வந்த பிறகு வாழ்க்கை முழுவதும் ஏதாவது ஒரு கமிட்மென்டில் ஓடி கொண்டிருப்பது போலவே ஒரு பீலிங். ஒன்று முடிந்த பிறகு மற்றொன்று என ஏதவாது பொறுப்புகள் வந்த வண்ணமே இருக்கிறது.. தற்போது எனக்கு வயது 40 ஐ கடந்து விட்டது.. எதிர்காலம் குறித்த அச்சம் தற்போது ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை.

    நான் திடமாக இருக்கிறேன், தன்னம்பிக்கையுடன் இருக்கிறேன், ஒரு பிரச்சனையும் இல்லை என உள் மனதிற்குள் சமாதானம் சொல்லி கொண்டாலும் இந்த எண்ணம் எப்போதாவது வருவதை தவிர்க்க முடியவில்லை.

  2. @யாசின்

    “ஐடி துறையில் இருப்பவர்கள் நினைத்த மாதிரி நிறுவனத்தை மாற்றுவது போல் எங்கள் துறையில் நிறுவன மாறுதல் ரொம்ப குறைவு.”

    மூன் லைட்டிங் என்பது ஐடி ஊழியர்களுக்கான வார்த்தை தான்.

    இங்கே WFH வாய்ப்பு இருப்பதால், இது சாத்தியமாகிறது. மற்ற துறைகளில் அலுவலகத்தில் இருந்தாக வேண்டிய கட்டாயம் இருப்பதால், இம்முறையில்லை.

    “வெளிநாட்டுக்கு வந்த பிறகு வாழ்க்கை முழுவதும் ஏதாவது ஒரு கமிட்மென்டில் ஓடி கொண்டிருப்பது போலவே ஒரு பீலிங்.”

    பீலிங் எல்லாம் இல்லை அது தான் உண்மை 🙂 .

    வெளிநாட்டில் இருந்தால் கமிட்மெண்ட்ஸ் தொடர்ந்து கொண்டே இருக்கும், புதிய தேவைகள் வந்து கொண்டே இருக்கும்.

    இதனால் தான் பிடிவாதமாக சிங்கப்பூரில் இருந்து கிளம்பி வந்து விட்டேன்.

    நானும் இரு வருடங்களில் கிளம்பி விடுவேன் என்று கூறிய நண்பர்கள் இன்னமும் கமிட்மெண்ட்ஸ் என்றே அங்கேயே தான் உள்ளனர்.

    “தற்போது எனக்கு வயது 40 ஐ கடந்து விட்டது.. எதிர்காலம் குறித்த அச்சம் தற்போது ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை.”

    40 கடக்கும் அனைவருக்கும் வரும் இயல்பான எண்ணமே.

    “சமாதானம் சொல்லி கொண்டாலும் இந்த எண்ணம் எப்போதாவது வருவதை தவிர்க்க முடியவில்லை.”

    இது இயல்பு தான் யாசின். எல்லோருக்குள்ளும் இது இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here