தமிழ் வளர்ச்சித்துறை சாதித்தது என்ன?

6
தமிழ் வளர்ச்சித்துறை

மிழை வைத்துப் பிழைப்பு நடத்தும் திராவிடக் கட்சிகள் தமிழை வளர்க்க தமிழ் வளர்ச்சித்துறை மூலமாக என்ன முயற்சிகள் எடுத்தன? என்னவென்று பாப்போம்.

தமிழ் வளர்ச்சித்துறை

தமிழகத்தில் தமிழை வளர்க்க தமிழ் வளர்ச்சித்துறை என்ற துறை உள்ளது ஆனால், இத்துறை தமிழை வளர்க்க என்ன முயற்சிகள் எடுத்துள்ளது?! Image Credit

ஆக்கப்பூர்வமாக எதையும் இதுவரை செய்ததாக எந்தப் புள்ளி விவரங்களும் இல்லை.

அவ்வப்போது நிறுவனங்களின் பெயர்களைத் தமிழில் வைக்க வேண்டும் என்று அறிவிப்பு வரும் ஆனால், அது என்னவானது என்று யாருக்கும் தெரியாது.

அவ்வப்போது இது போல வரும் பின்னர் எந்த நடவடிக்கையும் இருக்காது.

தமிழ்

1965 மொழிப்போராட்டத்தில் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட போராட்டத்தில் தங்களையும் இணைத்துக்கொண்ட திமுக அதற்கு உரிமையை எடுத்துக்கொண்டு விட்டது.

மொழிப்போராட்டத்தில் பல தியாகிகள் உயிரிழந்தனர் அவர்களை எல்லாம் ஒதுக்கி விட்டுத் திமுக தன் இருப்பை மக்களிடையே திணித்து அதை உண்மையாக்கி விட்டது.

இவ்வளவு காலமாகத் தமிழுக்காகப் போராடியவர்கள் அனைவரது தியாகங்களும் மறைக்கப்பட்டுத் திராவிடக் கட்சிகள் பெயரே முன்னெடுக்கப்படுகிறது.

வாரத்துக்கு ஒரு சிலை திறப்பு செய்யும் திமுக இதுவரை தமிழுக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு எத்தனை சிலை வைத்துள்ளது?

சிலையை விடுங்கள், தற்காலத் தலைமுறை எத்தனை பேருக்குத் தமிழுக்காக உயிர் நீத்த தியாகிகளைப் பற்றித்தெரியும்?

லாட்டரி சீட்டைப் பற்றிப் பாடத்தில் சேர்க்க தெரிந்த பாட அமைப்புக்குத் தமிழுக்காக உயிர் நீத்தவர்களின் போராட்டங்களை, எதற்காகப் போராட்டங்களைச் செய்தார்கள் என்பதைக் கொண்டு செல்லத் தோன்றவில்லையே!

தமிழ் முக்கியத்துவம்

தியாகிகளின் போராட்டங்களாலே தமிழ் இன்னும் மறையாமல் இருக்கிறது ஆனால், அதன் பிறகு தமிழ் வளர்ந்ததா என்றால்.. இல்லையென்பதே பதில்.

தமிழ் வளர்ச்சிக்காக முயற்சிகளை எடுத்ததை விட இதை வைத்து அரசியல் செய்யவே திராவிடக் கட்சிகள் பயன்படுத்திக்கொண்டது குறிப்பாகத் திமுக.

தமிழ் படிக்கத் தெரியாத, படிக்கத் திணறும், தமிழ் தெரியாது என்று பெருமையாகக் கூறும் தலைமுறையை உருவாக்கியதே திராவிடத்தின் சாதனை.

பள்ளிகளில் தமிழ் கட்டாயம் என்ற உத்தரவே ஜெ அறிவித்த (2015) பிறகே வந்தது. இதை 30 வருடங்களுக்கு முன்பே செயல்படுத்தியிருந்தால், தமிழ் படிக்கத் தெரியாத தலைமுறையைத் தவிர்த்து இருக்கலாமே.

அரசுப் பணிகளுக்கு தமிழ் கட்டாயம் என்ற அறிவிப்பே தற்போது தானே வருகிறது.

தமிழ்ச்சொற்கள்

பல ஆங்கில, வட மொழிச் சொற்களுக்குச் அதிகாரப்பூர்வமான தமிழ் வார்த்தையை உருவாக்கத் தவறி விட்டார்கள். இதனால் ஆளாளுக்கு ஒரு வார்த்தையை உருவாக்கிச் சிதைத்து வருகிறார்கள்.

ஊடகம், பரப்புரை போன்ற வார்த்தைகளே சமீப சில வருடங்களாகத் தான் பயன்படுத்தப்படுகின்றன.

சொற்கள் திரும்பத்திரும்பப் பயன்படுத்தப்படும் போதே அச்சொற்கள் மக்கள் மனதில் பதியும், அவர்களும் கூச்சம் இல்லாமல் பயன்படுத்தத் துவங்குவார்கள்.

ஏராளமான ஆங்கில வார்த்தைகளுக்குச் சரியான தமிழ் வார்த்தை இல்லாததால், ஆங்கில வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

தமிழ் மொழி மாநாடு நடத்துகிறார்கள் ஆனால், அம்மாநாடுகளில் ஏன் இது போன்ற பிரச்சனைகள் விவாதிக்கப்படுவதில்லை, விவாதிக்கப்பட்டால், எதனால் செயல்படுத்தப்படுவதில்லை என்று புரிவதில்லை.

50 வருடங்களில் செய்தது என்ன?

தமிழ் தமிழ் என்று உருகும் திமுக கடந்த 50 வருடங்களில் தமிழ் வளர்ச்சிக்காகச் செய்தது என்ன? தமிழை ஊக்கப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?

எதனால், நம் மொழி அடுத்தக் கட்டத்துக்கு வளர்ச்சியடையாமல் தேங்கியுள்ளது! என்ற மன உளைச்சலை தவிர்க்க முடியவில்லை. மிகப்பெரிய ஆதங்கமாக உள்ளது.

இந்தியை ஆயிரம் குறை கூறினாலும், தமிழ் மொழி அவர்கள் மொழியாக இருந்தால் இந்நேரம் அவர்கள் கொண்டாடி தீர்த்து இருப்பார்கள்.

தமிழின் பெருமை எங்கோ சென்று இருக்கும்.

ஆனால், தமிழ் மொழியின் சிறப்பை உணராமல், அதை மேலும் வளர்க்காமல் அரசியலுக்காக மட்டுமே தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இணையத்தில் தமிழ் பல பரிணாமங்களைப் பெறுவது, முழுக்க இணைய பயனாளர்களின் முயற்சியால் மட்டுமே! அரசின் பங்கு இதில் எதுவுமில்லை.

இந்தி

மோடி ஆட்சிக்கு வந்த போது இந்தித்திணிப்பு அதிகமாக இருந்தது.

தற்போது இந்தித்திணிப்புப் பெரியளவில் குறைந்து விட்டது. மோடி தமிழ் மொழியின் சிறப்பை அதிகம் பேசி வருகிறார். இது பற்றித் தனிக்கட்டுரையாக எழுதுகிறேன்.

இந்தியை பற்றிய பேச்சு வந்தால், ஸ்டாலின், கனிமொழி, வெங்கடேசன் போன்றோர் இதற்காகவே காத்திருப்பது போலப் பொங்க ஆரம்பித்து விடுவார்கள்.

இதை வைத்து ஒரு மீம் வந்தது.

உனக்கு எப்போதெல்லாம் ஒரு பிரச்சனையைச் சமாளிக்க முடியாத நிலை வருகிறதோ அப்போதெல்லாம் இந்தப்பெட்டியை திறந்து பார் என்று இருக்கும். திறந்தால், தமிழ் என்று இருக்கும்.

அதாவது, ஏதாவது பிரச்சனை வந்தால், தமிழை வைத்து அப்பிரச்சனையைத் திசை திருப்பப் பயன்படுத்திக்கொள் என்கிற அர்த்தத்தில்.

ஆனால், ஆறுதல் அளிக்கும் படி தற்போது இவர்களின் தமிழ் கொந்தளிப்புகளுக்கு மக்களின் ஆதரவு தொடர்ச்சியாகக் குறைந்து வருவதைக் காண முடிகிறது.

குறிப்பாகச் சமூகத்தளங்களில் எதிர்மறை கருத்துகளே காணப்படுகின்றன. அதாவது, இவர்களின் போலித்தனத்தை மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள்.

மாணவர்கள்

மாணவர்களே எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடியவர்கள் ஆனால், அவர்களும், பெற்றோர்களும் தமிழ் தெரியாது என்பதைப் பெருமையாகக் கூறுகிறார்கள்.

ஈயத்தைக் காய்ச்சி காதில் ஊற்றுவது போல உள்ளது.

தமிழைக் கற்பது பெருமை, அதனால் பயனுள்ளது என்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்காமல், இந்தியை எதிர்த்தால் தமிழ் வளர்ந்து விடுமா?

இந்தியை இனி தவிர்க்க முடியாது காரணம், தமிழக அரசின் பின்தங்கிய பாடத்திட்டங்களால் CBSE பள்ளிகளுக்கு வரவேற்பு அதிகரித்து விட்டது. அதிகரிக்கும் CBSE பள்ளிகளின் எண்ணிக்கையே இதற்குச்சான்று.

எனவே, அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டும் இந்தியை கற்க முடியாத நிலையாகி விட்டது.

ஆனால், அரசியல்வாதிகள் பிள்ளைகள் மட்டும் பல மொழிகளைக் கற்க, அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டும் இவர்களின் அரசியலால் முடங்கி இருக்கிறார்கள்.

இந்தியை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் அனைத்துப்பள்ளிகளும் (ஸ்டாலின் அவர்களின் மகள் பள்ளி உட்பட) இந்தியை கொடுக்கும் CBSE பள்ளிகள்.

ஆனால், வெளியில் இந்தி எதிர்ப்பு. இதையும் நம்பி குரல் கொடுக்கும் கூட்டம்!

தமிழ் வளர்ச்சி

தமிழை வளர்க்க, பெருமைப்படுத்த, ஊக்குவிக்க ஏராளமான வழிமுறைகள் உள்ளது ஆனால், அதில் ஒன்றைக்கூடச் செயல்படுத்தாமல் உள்ளார்கள்.

முழுமையாகத் தமிழைப் பயன்படுத்தும் ஊடகங்களுக்குப் பரிசை அறிவிக்கலாம். காரணம், தமிழை அழிப்பதில் மிக முக்கியத்துவம் பெறுபவர்கள் ஊடகத்தினரே!

இவர்களின் மொழி சிதைப்பே தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. குறிப்பாக இணைய ஊடகங்கள் மிக மோசமாகத் தமிழைச் சிதைத்து வருகின்றன.

தினமணி மட்டுமே ஓரளவு ஆறுதளிக்கும் படியாக எழுதி வருகிறார்கள். மற்ற ஊடகத்தினர் அனைவருமே ஆங்கிலத்தைக் கலந்து தமிழைச் சிதைக்கிறார்கள்.

தொடர்ந்து படிக்கும், கேட்கும் மக்களும் பழகி விடுகிறார்கள். மருத்துவனை என்ற அழகான சொல் இருக்கையில் ‘ஆஸ்பத்திரி‘ என்று நாரசமாக எழுதுகிறார்கள்.

இதற்கெல்லாம் அரசு தான் நடவடிக்கை எடுக்கணும். தமிழைச் சரியாகப் பயன்படுத்துபவர்களுக்கு ஊக்கம் அளித்தால், சிதைப்பது தவிர்க்கப்படும்.

தமிழை முழுவதுமாகப் பயன்படுத்தும் ஊடகங்களுக்கு மட்டுமே அரசு விளம்பரங்கள் என்று அறிவிப்பு வந்தால் போதும், அனைவரும் அலறியடித்துத் தமிழுக்கு முழுமையாக மாறி விடுவார்கள்.

இந்தியை எதிர்ப்பதால் தமிழ் வளராது

தமிழை வளர்க்கும் முன், சிதைப்பது தடுக்கப்பட வேண்டும்.

தமிழ் வளர்ச்சித்துறை அதன் பணிகளைச் செய்தால் மட்டுமே தமிழ் வளரும் மாறாக, இந்தியை எதிர்த்துக்கொண்டு இருப்பதாலும், தமிழ் இருக்கைக்குத் தொகை ஒதுக்குவதாலும், தமிழ் வளராது.

உருவாக்கியுள்ள தளங்கள் பெரும்பான்மை மக்களைச் சென்றடையவில்லை.

கசப்பான உண்மை என்னவென்றால், திராவிட அரசியல்வாதிகளுக்கு இந்தியை எதிர்த்து அரசியல் செய்ய மட்டுமே தமிழ் தேவை. மற்றபடி தமிழை வளர்ப்பதில் இவர்களுக்கு அக்கறையில்லை.

உலகச்சிறப்பு வாய்ந்த தமிழ் மொழி, பொறுப்பில் உள்ள பொறுப்பற்றவர்களால் சீரழிவதை பார்க்கையில் ஆத்திரமாக உள்ளது.

கொசுறு

இக்கட்டுரையில் ஒரு இடத்தில் கூட ஆங்கிலக்கலப்பை பயன்படுத்தவில்லை. உங்களுக்குப் படிக்கக் கடினமாக உள்ளதா? இருக்காது என்றே கருதுகிறேன்.

பின்னர் ஏன் மக்கள் ஆங்கிலக்கலப்பை விரும்புகிறார்கள் என்று தமிழக ஊடகங்களாக கற்பனை செய்து கொண்டு சிதைக்கிறார்கள்?!

தொடர்புடைய கட்டுரைகள்

தமிழ் முக்கியத்துவம் குறைய நீங்களும் ஒரு காரணம்!

தமிழ் ஊடகங்களின் தமிழ் அழிப்பு

இந்தித் திணிப்பு அழிக்கும் தமிழ் அடையாளம்! [FAQ]

இரு மொழிக் கொள்கை சரியா தவறா?

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

6 COMMENTS

  1. கிரி.. ஒரு மொழி என்பது ஒரு தலைமுறையின் அடையாளம். நிச்சயம்அதை முறையாக அடுத்த சந்ததிகளுக்கு கடத்துவது நமது பொறுப்பு. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு சரியாக தமிழ் பேசவும் / எழுதவும் / படிக்கவும் தெரியாமல் இருக்கும் (இதை பெருமையாக) நினைத்து கொண்டிருக்கும் இளைய சமுதாயத்தை எண்ணினால் வெட்கமாக இருக்கிறது.. உன் தாய்மொழி உனக்கு தெரியவில்லை என்றால் இதை விட ஒரு அவமானம் வேறு ஏதும் இல்லை.

    நான் அதிகம் நேசிக்கும் வெகு சில எழுத்தாளர்களில் அ.முத்துலிங்கம் ஐயா முதன்மையானவர்.. நான் முன்பே சில நேரங்களில் இவரை பற்றி குறிப்பிட்டதுண்டு.. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு கடுமையான முயற்சியை மேற்கொண்ட சிலரில் இவரும் முக்கியமானவர். அதன் அனுபவங்களை சில சமயம் அவரது தளத்தில் பகிர்ந்து இருக்கிறார் .

    ரொறொன்ரோவிலும் தமிழ் இருக்கை அமைய முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்.. என் வாழ்நாள் முழுக்க இவரின் புத்தகங்கள் எல்லாவற்றையும் படித்து, மீண்டும் படித்து, மீண்டும் படித்து, மீண்டும் படித்து அந்த மன நிலையே இருக்க வேண்டும் என எண்ணுகிறேன்..

    தமிழ் இருக்கை வேண்டி அவரின் போராட்டத்தில் சில சுவையான அனுபவங்களை பகிர்ந்து உள்ளார்.. அதை பின்வரும் சுட்டியில் பார்க்கவும்.. படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கும்.. நேரம் இருக்கும் போது கீழ் உள்ள பதிவை படிக்கவும்..

    https://shorturl.at/tVY24

    https://shorturl.at/stQ04

    ===================================

    உங்களின் பிழையில்லாத தமிழுக்கு நான் எப்போதும் காதலன்.. மிகவும் நேர்த்தியாக அழகாக எழுதுறீங்க!!! உங்கள் எழுத்தில் பிழைகளை / குறைகளை கண்டறிவது கடலில் கொட்டிய உப்பை தேடுவதை போன்றது.. நாட்கள் செல்ல, செல்ல எழுத்தில் ஒரு அனுபவமும் / முதிர்ச்சியும் நன்றாக தெரிகிறது…

    நான் எப்போதாவது வெகு அரிதாக உங்களின் பழைய பதிவுகளை 2008/2009 இல் எழுதியதை படிப்பது உண்டு.. அதனால் என்னால் வித்தியாசத்தை உணர முடிகிறது..

  2. திராவிட மாடல் என்று பெருமை கூறி மாடல் என்ற வார்த்தையை தமிழாகவே மாற்றிவிட்டார்கள். இந்த திராவிட மாடல் என்பதையாவது குறைந்தபட்சம் தமிழில் அவர்கள் கூறினால் நன்றாக இருக்கும்.

  3. @பாஸ்கர் நன்றி

    @லோகன்

    உண்மை. மாடலை விடுங்கள் திராவிடம் என்பதே தமிழ்ச் சொல் அல்ல 🙂 .

  4. @யாசின்

    “தமிழ் இருக்கை வேண்டி அவரின் போராட்டத்தில் சில சுவையான அனுபவங்களை பகிர்ந்து உள்ளார்.”

    படித்துப்பார்த்தேன், சுவாரசியமாக இருந்தது 🙂 .

    ஆனால், தமிழ் இருக்கையால் உலகளவில் பயன் இருக்கலாம் ஆனால், மாநில அளவில் எந்தப்பயனும் இருப்பதாக தோன்றவில்லை.

    இதனால் தமிழ் வளரும் என்று நம்பிக்கையில்லை. முதலில் சராசரி மக்களிடம் தமிழின் சிறப்பு செல்ல வேண்டும், அவர்கள் அதை உணர வேண்டும்.

    அதன் பிறகு இந்த இருக்கை முயற்சியெல்லாம் பயனளிக்கும் என்பதாக கருதுகிறேன்.

    ஆனால், இவர் ரொம்ப சிரமங்களை எதிர்கொண்டுள்ளார். இவர் வந்தாலே எல்லோரும் ஓடி விடுவார்கள் என்று நினைக்கிறேன் 🙂 🙂 .

    முடிந்தவரை பிழை இல்லாமல் எழுத முயற்சிக்கிறேன் யாசின். அதே போலப் பலர், நான் எழுத்துப் பிழையுடன் எழுதினால் சுட்டிக்காட்ட தயாராக உள்ளார்கள் 🙂 .

    மற்றதுக்கு வருகிறார்களோ இல்லையோ இதைக் கூறவாவது தொடர்புக்கு வருகிறார்கள். இதற்காகவாது அவ்வப்போது பிழை வேண்டும் போல 🙂 .

    “நாட்கள் செல்ல, செல்ல எழுத்தில் ஒரு அனுபவமும் / முதிர்ச்சியும் நன்றாக தெரிகிறது”

    எனக்கும் உணர முடிகிறது ஆனால், மேலும் மேம்படுத்த முயற்சித்துக்கொண்டே உள்ளேன்.

    கற்பதற்கு எல்லையே இல்லையே! 🙂 . தினமும் ஏதாவது கற்றுக்கொண்டே இருக்கிறேன். அதைச் செயல்படுத்தவும் செய்கிறேன்.

    “உங்களின் பழைய பதிவுகளை 2008/2009 இல் எழுதியதை படிப்பது உண்டு”

    எனக்கு படித்தாலும் சில சிரிப்பாக இருக்கும்.. அட! இவ்வளோ பக்குவம் இல்லாமல் எழுதி இருக்கோமே என்று தோன்றும்.

    சுஜாதா கூறி இருக்கிறார்.

    உங்கள் பழைய எழுத்துகளில் மாற்று கருத்து இருந்தால், நீங்கள் எழுத்தில் முன்னேறி வருவதாக அர்த்தம் என்று.

    எனவே, இதை அனுபவமாக நேர்மறையாக எடுத்துக்கொள்கிறேன்.

    தவறுகளைத் திருத்தி வருகிறேன், பக்குவம் அடைகிறேன் என்று உணர முடிகிறது. விமர்சனங்களை எளிதாக கடக்க முடிகிறது.

  5. தமிழக அரசு நினைத்தால் தமிழ் வளர்ச்சியில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வரலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!