Bro Daddy (2022 மலையாளம்) | A Delicate Position

3
Bro Daddy

னது இயக்கத்தில் முதல் படமான லூசிஃபரை மாஸ் படமாகக் கொடுத்த பிரித்விராஜ் Bro Daddy படத்தைக் குடும்ப நகைச்சுவை படமாகக் கொடுத்துள்ளார். Image Credit

Bro Daddy

பிரித்விராஜ் கல்யாணி லிவிங் டுகெதர் வாழ்க்கையில் கல்யாணி கர்ப்பமாகிறார். இதே நேரத்தில் பிரித்விராஜ் அம்மா மீனாவும் கர்ப்பமாகிறார்.

அப்பா மோகன்லால் தான் அப்பாவாவதை எளிதாக எடுத்துக்கொள்ள மகன் பிரித்விராஜுக்குத் தர்மசங்கடமாகிறது.

இறுதியில் பிரச்சனையை எப்படிக் கடக்கிறார்கள் என்பதே Bro Daddy.

குறைந்த முதலீடு

முதல் படத்தைப் பிரம்மாண்டமாக இயக்கிய பிரித்விராஜ் Bro Daddy படத்தை அதிகச் செலவு இல்லாமல் குறைந்த முதலீட்டில் இயக்கி நேரடி OTT யில் வெளியிட்டுள்ளார்.

இரு குடும்பங்களுக்கிடையே நடக்கும் சம்பவங்கள் என்பதால், வெளியிடப் படப்பிடிப்புகளுக்கான வாய்ப்புகள் குறைவு.

எனவே, திரும்பத்திரும்ப ஒரே இடங்களில் சுற்றிக்கொண்டு இருப்பது போல உள்ளது.

நடிப்பு

மோகன்லால் சிறந்த நடிகர் மட்டுமல்ல அனைத்து வகை முதலீட்டு படங்களுக்கும் தன்னைப் பொருத்திக்கொள்கிறார். லூசிஃபர் போன்ற பெரிய முதலீட்டு படத்துக்கும் பொருந்துகிறார் Bro Daddy படத்துக்கும் பொருந்துகிறார்.

கடந்த படமான மரக்கயர் சரியாகப் போகாத நிலையில் Bro Daddy வெற்றி மோகன்லாலுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்து இருக்கும்.

மீனா கர்ப்பமாக உள்ளதை மோகன்லால் அம்மா கண்டறிவது சுவாரசியம், அதற்கு அவர் கொடுக்கும் விளக்கமும் அவரின் அனுபவத்தைக் காட்டும்.

மோகன்லாலிடம் மோகன்லால் அம்மா கேட்கும் கேள்விக்கு அவர் வெட்கப்படுவது நகைச்சுவை. அதே போல மீனா வெட்கப்படுவதும் அழகு.

மோகன்லாலிடம் அனைவருக்கும் பிடித்ததே அவருடைய மிகை நடிப்பில்லா இயல்பான நடிப்புத்தான்.

பிரித்விராஜ் இப்படத்துக்காகக் கொஞ்சம் எடை குறைத்துத் தோற்றத்தை மாற்றி இளமையாக வந்துள்ளார்.

அப்பாவிடம் விஷயத்தைச் சொல்ல ஒவ்வொரு முறையும் திணறுவது நகைச்சுவை.

அப்பா மகன் இருவரும் அண்ணன் தம்பி போலவே உள்ளார்கள், காட்சியும் வசனங்களும் அதை உறுதிப்படுத்துவது போல உள்ளது. எனவே இத்தலைப்பு.

பிரித்விராஜ் ஜோடியாகக் கல்யாணி பொருத்தமாக உள்ளார். சார்லியும் சில காட்சிகளில் வந்து செல்கிறார் தமிழராகவே.

ஒளிப்பதிவு & இசை பற்றிக் குறிப்பிட்டு கூற எதுவுமில்லை.

Badhaai Ho படத்தில் பெற்றோர் கர்ப்பமானதால் எழும் உளவியல் பிரச்சனைகளைக் கூறுவார்கள் இதில் பெற்றோர், மகன் இருவருக்கும் இதே நிலை ஆனால், நகைச்சுவையாகக் கூறியுள்ளார்கள்.

இரண்டு படமுமே சிறப்பு ஆனால், Badhaai Ho கூற வரும் கருத்து அனைவர் மனதிலும் பதியும் ஆனால், இதில் நகைச்சுவையாகக் கடந்து சென்று விடுவார்கள்.

பிரித்விராஜின் உண்மையான அம்மா இப்படத்தில் இவருக்குப் பாட்டியாக, மோகன்லாலுக்கு அம்மாவாக நடித்துள்ளார்.

பிரித்விராஜ் தனது மாமாவைச் சம்மதிக்க வைக்கும் இடமும், இருவரும் கர்ப்பமாக உள்ளதை அறிவிக்கும் இடமும் மிகப்பொருத்தமாகவும், சரியானதாகவும் இருந்தது.

திருப்பங்கள் இல்லாத நேர்கோட்டு கதை Bro Daddy.

படம் தொடரும் போதே முடிவு என்னவாக இருக்கும் என்று தெரிந்து விடுவது குறை ஆனால், திரைக்கதையால் சலிப்பு இல்லாமல் செல்கிறது.

யார் பார்க்கலாம்?

அனைவரையும் இப்படம் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.

Disney+ Hotstar ல் காணலாம்.

Directed by Prithviraj Sukumaran
Written by Sreejith N., Bibin Maliekal
Produced by Antony Perumbavoor
Starring Mohanlal, Prithviraj, Meena, Lalu Alex, Kanika, Kalyani,
Cinematography Abinandhan Ramanujam
Edited by Akhilesh Mohan
Music by Deepak Dev
Distributed by Disney+ Hotstar
Release date 26 January 2022
Running time 160 minutes
Country India
Language Malayalam

தொடர்புடைய திரை விமர்சனம்

Badhaai Ho (2018 இந்தி) ஆமா.. இப்ப என்னங்குற?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. நேற்று ஒரு அலுவலக நண்பனிடம் (கேரளா) பேசி கொண்டிருக்கும் போது இந்த படத்தை பற்றி சொன்னார்.. படம் நன்றாக இருப்பதாகவும், நான் தற்போது அதிகம் மலையாள படம் பார்ப்பதால் என்னை பார்க்குமாறு கூறினார்.. ஆரம்பத்தில் நான் பார்த்த சில படங்களில் மோகன்லாலை எனக்கு பிடிக்காது.. ஆனால் சில படங்களை பார்த்த பின்பு தான் அவரின் நடிப்பு மிகவும் பிடித்து போனது.. தற்போது வரை இருவர் படம் எனக்கு மிகவும் பிடித்த படம்.. லூசிபர் படம், கதைக்களம் எனக்கு விருப்பம் இல்லாமல் இருந்தாலும் படத்தின் மேக்கிங் தருமாறு.. ஒளிப்பதிவும், காட்சி அமைப்பும் அற்புதம்.. டேவினோ தாமஸின் அறிமுக அரசியல் கூட்டம்.. செம்ம சீன்.. Bro Daddy படத்தை பார்த்து விட்டு என் கருத்தை பின்பு பகிர்கிறேன்.. என்னுடைய லேப்டாப் ஊரில் இருந்த போது மனைவி கீழே போட்டு விட்டதால் தற்போது வேளை செய்யவில்லை.. அதை சரி செய்த பின் தான் படங்களை பார்க்க வேண்டும்..பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. @யாசின்

    ‘ஆரம்பத்தில் நான் பார்த்த சில படங்களில் மோகன்லாலை எனக்கு பிடிக்காது”

    ஆம். ஏற்கனவே கூறியுள்ளீர்கள். இந்தப்படம் பாருங்கள்.. ரொம்ப நன்றாக இருக்கும்.

    லேப்டாஸ் போச்சா 🙂 .. ரைட்டு.

    @ஸ்ரீனிவாசன் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here