மகாத்மா காந்தி கொலை வழக்கு

2
Gandhi murder case மகாத்மா காந்தி கொலை வழக்கு

ந்தியாவின் சுதந்திரத்துக்காகப் போராடிய மகாத்மா காந்தி ஏன்? எப்படிக் கொல்லப்பட்டார்? என்பதை விளக்கும் புத்தகமே மகாத்மா காந்தி கொலை வழக்கு.

இந்து முஸ்லீம் கலவரம்

சுதந்திரத்துக்கு முன்பு இருந்தே இந்து முஸ்லீம் பிரச்னை மிகப்பெரியளவில் இருந்தது. இந்தியா சுதந்திரம் அடையப்போவதை நோக்கிச் சென்ற போது இப்பிரச்சனை உச்சகட்டத்தை அடைந்தது.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் (பாகிஸ்தான்) பகுதியைப் பிரித்து முஸ்லிம்கள் நாடாக அறிவிக்க வேண்டும் என்று ஜின்னா அறிவித்தார்.

காந்தி இப்பிரிவினைக்கு ஒத்துக்கொள்ளாமல், “ஜின்னாவே தலைவராக இருக்கட்டும் ஆனால், பிரிவினை வேண்டாம்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்து முஸ்லீம் பிரச்னை உச்சக்கட்டத்தில் இருந்ததால், காந்தியின் கோரிக்கை நடைமுறைக்குச் சரியாக வராது என்று எவரும் கருத்துக்கு மதிப்பளிக்கவில்லை.

எனவே, வேறு வழி இல்லாமல் பிரிவினை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் எல்லாம் இந்தியாவுக்கும் இடம்பெயரவும் அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் விருப்பப்பட்டால் இங்கேயே இருந்து கொள்ளலாம் என்றும் அவர்களை வெளியேறக் கட்டாயப்படுத்துக் கூடாது என்றும் காந்தி உறுதியாகக் கூறி விட்டார்.

இருப்பினும் இந்து முஸ்லீம் கலவரம் மிகப்பெரிய அளவில் வெடித்தது. கலவரத்தைக் கட்டுப்படுத்த காந்தி உண்ணாவிரதம் இருந்து, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

இடம்பெயர்வு

உலகிலேயே மிகப்பெரிய இடம்பெயர்வாக இந்த இடம்பெயர்வே கருதப்படுகிறது. பல இலட்சக்கணக்கான மக்கள் இரு நாடுகளிலும் இருந்து இடம் பெயர்ந்தார்கள்.

காந்தி படத்தில் இக்காட்சி தத்ரூபமாகக் காட்டப்பட்டு இருக்கும்.

இச்சம்பவத்தில் கொள்ளை, கொலை, வன்புணர்வு, கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை என்று அனைத்துமே கொடூரமாக இருந்தது.

இந்து முஸ்லீம் இருவருமே கடுமையான அளவில் பாதிக்கப்பட்டனர்.

பணக்காரராக இருந்தவர்கள், பணியாட்கள், ஏராளமான சொத்து என்று வசதியாக வாழ்ந்தவர்கள் இக்கட்டாய இடம் பெயர்வால் ஒரே நாளில் தெருவுக்கு வந்தனர்.

மாற்று மதத்தினரால் அந்தந்த நாட்டில் கடைகள் சூறையாடப்பட்டு அவர்கள் விரட்டியடிக்கப்பட்டுக் கடைகளை உரிமையாக்கி கொண்டனர்.

கேள்வி கேட்பாரே இல்லாத நிலையும், கட்டுப்படுத்த முடியாத நிலையும் இருந்தது.

இந்து ராஜ்ஜியம்

இந்து ராஜ்ஜியம் அமைக்க வேண்டும் என்பதே இந்து அமைப்புகள் விருப்பம்.

ஆனால், இதற்குப் பெரும்பான்மை இந்துக்கள் மத்தியிலேயே பெரியளவில் ஆதரவு இல்லை இருப்பினும் இச்சிறு அமைப்பினர் தீவிரமாக இருந்தனர்.

காந்தி சிறுபான்மையினர் என்று கூறி முஸ்லிம்களை ஆதரித்து இந்துக்களுக்கு நெருக்கடி கொடுத்ததாக, தீவிர இந்துக்களின் வெறுப்புக்கு ஆளானார்.

பிரிவினையின் போது காந்தியின் கோரிக்கைகள் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவே இருந்தது, இந்துக்கள் குறித்து அவர் அக்கறை கொள்ளவில்லை என்பது இவர்களுக்குக் கூடுதல் கோபத்தையும் வெறுப்பையும் கொடுத்தது.

காந்தி இருக்கும் வரை, இந்து ராஜ்ஜியம் அமைக்க முடியாது, இந்துக்களுக்கான முக்கியத்துவம் கிடைக்காது என்ற எண்ணம் இவர்களிடையே வலுப்பெற்றது.

இதில் காந்தியை கொல்ல தீவிரமாக முயன்றவர்களில் நாதுராம் கோட்ஸேவும் ஒருவர்.

இவரும் இவருடைய நண்பர் ஆப்தே இருவரும் இணைந்தே காந்தியை கொல்ல தங்களது சகாக்களுடன் திட்டமிட்டுச் செயல்திட்டம் தீட்டியிருக்கிறார்கள்.

இதில் ஆப்தே பற்றித் தற்போது தான் கேள்விப்படுகிறேன்.

அதோடு இவர்களது சாகாக்களுடன் இணைந்து இவர்கள் காந்தியை கொலை செய்ய முயற்சித்த செயல்கள் மிகவும் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.

சொதப்பலாகத் திட்டங்களைச் செயல்படுத்தினாலும் இறுதியில் கோட்ஸே தான் நினைத்ததைச் செய்து விட்டார், அதற்காக வருத்தப்படவும் பயப்படவும் இல்லை.

காந்தியின் முடிவுக்கு எதிர்ப்பு

காந்தி அனைவரும் ஒற்றுமையாக இருக்கலாம் என்ற கூறிய வாதத்தை யாரும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை.

மூளையில் இருந்து யோசிக்காமல் காந்தி சொல்வது போல மனதில் இருந்து யோசித்து இப்பிரிவினை நடக்காமல் இருந்து இருந்தால், இந்நேரம் தினமும் மதக்கலவரம் நடக்கும் நாடாக இந்தியா இருந்து இருக்கும் என்பதே பலரின் கருத்து.

காந்தி முஸ்லிம்களுக்கு ஆதரவாகப் பேசி இந்துக்கள் நாடாக இந்தியா உருவாகாமல் தடுத்து விட்டார் என்பதே இந்து அமைப்புகளின் கோபத்துக்குக் காரணம்.

அதோடு பேசிய அனைத்திலும் முஸ்லிம்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார், இந்துக்களைப் பற்றி யோசிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு.

கோட்ஸே

கோட்ஸே துவக்கத்தில் எதற்கும் சரிப்பட்டு வராத நபராக இருந்தாலும், சாவர்க்கர் அறிமுகத்துக்குப் பிறகே இவரின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

துப்பாக்கி பெற இந்து அமைப்புகளைத் தொடர்பு கொள்வதும், வாங்கிய துப்பாக்கியை எப்படிப் பயன்படுத்துவது எனத் தெரியாமல், சோதித்து அது ஏமாற்றம் தருவதும் எனப் பல சம்பவங்கள்.

தற்போது பல பாதுகாப்பு ஏற்பாடுகள், தொழில்நுட்பம் உள்ளது அதனால் அரசியல் தலைவரைக் கொல்வதோ, குண்டு வெடிப்போ நடத்துவது அவ்வளவு எளிதல்ல.

ஆனால், தொழில்நுட்பம், பாதுகாப்பு மேம்படாத அக்காலத்திலும், இவர்கள் காந்தியை கொலை செய்வது எளிதாக இல்லை.

இவ்வளவுக்கும் காந்தி தனக்குப் பாதுகாப்பு வேண்டாம் என்று கூறியும் இவர்கள் திட்டம் சொதப்புவதும், மாட்டிக்கொள்வதும் எனக் கடினமான செயலாகவே இருந்துள்ளது.

ஆசிரியர் என்.சொக்கன்

தெரிந்த கொலை குற்ற வழக்கைப் பற்றி மேலதிக தகவல்களுடன் படிப்பது வித்யாசமான அனுபவமாக இருக்கும்.

இக்கொலை, திட்டங்கள், எதனால் கொலை செய்யப்பட்டார் என்பதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ள விரும்புவர்களுக்குச் சரியான புத்தகம்.

ஆசிரியர் சொக்கன் அவர்களை ஃபேஸ்புக் பயன்படுத்தும் பலருக்கு தெரிந்து இருக்க வாய்ப்புள்ளது. தமிழ் குறித்து மற்றும் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார்.

இப்புத்தகத்தில் தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தவிர்த்து முடிந்த வரை நடுநிலையாக எழுதியுள்ளார் குறிப்பாக இடம்பெயர்வு சம்பவங்கள்.

‘மகாத்மா காந்தி கொலை வழக்கு’ பரிந்துரைத்து வாங்கிக்கொடுத்த நண்பர் சூர்யாக்கு நன்றி.

அமேசானில் வாங்க –> Link

கொசுறு

இதுவரை நீங்கள் காந்தி படம் பார்க்கவில்லையென்றால், அவசியம் பாருங்கள். 1982 ல் எடுக்கப்பட்ட படம் போல இனியொரு படம் வரவே வராது.

Ben Kingsley யின் அற்புதமான நடிப்பில் Richard Attenborough இயக்கத்தில் வந்த அட்டகாசமான திரைப்படம்.

மக்கள் கூடும் காட்சிகளை எப்படி எடுத்தார்கள் என்று இன்றும் வியப்புண்டு. காந்தி மீது மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

Read : பெரியார் | ஈ. வெ. இராமசாமி

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. ஆசிரியர் என்.சொக்கனின் சில புத்தகங்களை ரொம்ம நாட்களுக்கு முன் படித்துளேன்.. சரித்திர புத்தகங்களின் மீது கொள்ளை ஆர்வம் எனக்கு.. ஆனால் ஒரே ஒரு பயம்.. நாம் படிக்கும் புத்தகத்தின் ஆசிரியரின் மீதான நம்பிக்கை.. அதனால் சரியான ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும்..

    முதுகலை கல்லூரி பருவத்தில் புத்தகங்களின் மீது மூழ்கி கிடந்தேன்.. இதை படிக்க வேண்டும், இதை படிக்க கூடாது என்ற வரையறை இல்லாமல், கையில் கிடைத்ததை எல்லாம் படித்தேன்.. உலகவரலாறு, உலகப்போர், சுதந்திர இந்தியாவின் நிலைப்பாடு, சேர, சோழ,பாண்டிய வரலாறு, ஹிட்லர், ஸ்ட்டாலின், நிறைய நிறைய தகவல்கள்.. கிட்டத்திட்ட ஒரு நாடோடியை போல் அலைந்தேன்.. அது ஒரு வசந்த காலம்.. இரைப்பையை பட்டினி போட்டு, மூளைக்கு திணியிட்டேன்.. ஆனால் இன்று என் நாட்கள் வெறுமையாக செல்கிறது….

    எப்போதாவது படிக்கலாம் என்று, புத்தகத்தின் முதல் தாளை திருப்பும் முன் என்மனைவி, இப்பதானே வேலையிலிருந்து வந்திங்க!!! கொஞ்சம் நேரம் சும்மா உட்காருங்க!!! புத்தங்கங்களின் மீதான காதல் சுற்றி நிகழும் நிகழ்வுகளை மறக்கடிக்க வைக்கிறது.. அதுவும் ஒரு இனிமையான போதை தான்!!! காரல் மார்க்ஸின் வரலாற்றையும், கண்ணதாசன் வரலாற்றையும் எப்போதும் விரும்பி படிப்பேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. “எப்போதாவது படிக்கலாம் என்று, புத்தகத்தின் முதல் தாளை திருப்பும் முன் என்மனைவி, இப்பதானே வேலையிலிருந்து வந்திங்க!!! கொஞ்சம் நேரம் சும்மா உட்காருங்க!!! ”

    😀 😀

    புத்தகம் அவ்வளவு எளிதில் படிக்க மாட்டேன்… ஆரம்பித்தால் முடிக்காமல் விட மாட்டேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here