நெடுநல்வாடை [2019] கிராமத்துக் கதை

2
நெடுநல்வாடை

பூ (பட) ராமின் மகள் காதலித்துச் சென்றவனோடு சண்டையிட்டு வீட்டுக்கு திரும்ப, ராம் ஏற்றுக்கொண்டாலும் அவரது மகன் மைம் கோபி ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்.

ராம் அவரைக் கட்டுப்படுத்தித் தன் மகளைப் பேரன் பேத்தியுடன் ஏற்றுக்கொள்கிறார்.

பேரனான இளங்கோ தான் ராமுக்கு எல்லாமே! இவன் நன்கு படித்துப் பெரியாளாகி தன்னுடைய மகளையும் பேத்தியையும் காப்பாற்றுவான் என்று நம்புகிறார்.

இளங்கோ நன்கு படித்துப் பொறுப்பாக வந்தாலும் அமுதாவுடனான காதலால் திசை மாறுகிறான். இறுதியில் என்ன ஆனது என்பது தான் கதை.

நெடுநல்வாடை

ராம் ஒரு அற்புதமான நடிகர் ஆனால், இவரைத் தமிழ்த்திரையுலகம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது என் ஆதங்கம். Image Credit

இவர் நடித்த அனைத்து படங்களிலும் தன்னுடைய இயல்பான நடிப்பால் அசத்தியிருப்பார்.

பூ, நீர்ப்பறவை படங்களில் இவருடைய இயல்பான நடிப்பைக்காண முடியும்.

நெடுநல்வாடை கதாப்பாத்திரம் இவருக்காகவே உருவாக்கப்பட்டது போலக் கச்சிதமாகப் பொருந்துகிறார். இவரை மையப்படுத்தியே மொத்தப்படமும்.

இளங்கோ (எல்விஸ் அலெக்ஸ்சாண்டர்) அமுதா (அஞ்சலி நாயர்) இருவருமே முதல் படம் என்று கூற முடியாத அளவுக்குச் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

அமுதா ஒரு படி மேலே தன்னுடைய துடுக்கான நடிப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

கிராமத்துப் படங்கள்

கிராமத்துப் படங்கள் தற்போது வருவது குறைந்து விட்டது, கிராமங்களைத் திரைப்படங்களில் பார்ப்பதே அரிதாகி விட்டது. நான் கூறுவது இயல்பான சினிமாத்தனம் இல்லாத கிராமம்.

இப்படம் அக்குறையைப் போக்கியிருக்கிறது. ரொம்ப நாளாகி விட்டது, இது போலப் பார்த்து. ராம் ஒரு விவசாயியை அப்படியே கண் முன் நிறுத்துகிறார்.

இளங்கோ அமுதா சிறுவர் சிறுமியாக வரும் காலத்தில் நடித்துள்ள இரு பொடிசுகளும் கூட அட்டகாசமாக நடித்து இருப்பது வியப்பாக இருந்தது.

கேம்பஸ் நேர்முகத் தேர்வில் இளங்கோவிடம் “உன்னோட குறிக்கோள்” என்னவென்று கேட்டதும், வேலைக்கு போவது என்று கூறுவதைக் கேட்டு, “வேலைக்கு போவதெல்லாம் ஒரு குறிக்கோளா?” என்று கேட்கும் போது, “எங்களை மாதிரி ஆளுங்களுக்கு வேலைக்கு செல்வதே பெரிய சாதனை சார்” என்று கூறுவது நிதர்சனம்.

அமுதா அண்ணனுக்கு வழக்கமான காதலுக்கு எதிரான அண்ணன் கதாப்பாத்திரம் ஆனால், அதைக் கடுப்படிக்காமல் செய்து இருக்கிறார்.

அவர் செய்வது சரியில்லையென்றாலும், அவர் நிலையில் தன்னுடைய தங்கை நன்றாக இருக்கணும் என்று நினைத்துச் செய்வது நியாயமாகத் தோன்றுகிறது.

முதல் தங்கச்சிக்கு மாப்பிள்ளை சரியாக அமையாததால், இரண்டாவது தங்கச்சிக்காவது சரியான வரனாக அமைய வேண்டும் என்று நினைப்பது எதார்த்தமாக இருந்தது.

இசையும் ஒளிப்பதிவும் நிறைவாக உள்ளது. வைரமுத்து கிராமத்து வரிகளை அழகாகக் கொடுத்துள்ளார். முதல்முறை கேட்டாலும் பாடல்கள் பிடித்தது.

இறுதியில் அமுதா பேசுவது கலக்கல். உண்மையாகக் காதலித்த ஒவ்வொரு பெண்ணின் மனதையும் பிரதிபலித்து இருக்கிறார்.

இயக்குநருக்கு முதல் படம் என்று கூறினால், நம்ப முடியாத அளவுக்குப் படமுள்ளது.

எனக்குப் படத்தின் முடிவில் கேள்விகள் / சந்தேகங்கள் உள்ளது ஆனால், அதை விமர்சனத்தில் கூற முடியாது. சாதிய குறியீடுகளையும் தவிர்த்து இருக்கலாம்.

இவற்றைத் தவிரப் படம் எனக்குப் பிடித்தது.

Directed by Selvakannan
Produced by B-Star Productions
Written by Selvakannan
Screenplay by Selvakannan
Story by Selvakannan
Starring Poo Ramu, Mime Gopi
Music by Jose Franklin
Cinematography Vinoth Rathinasamy
Edited by Kasi Viswanathan
Release date 15 March 2019 (India)
Running time 122 Minutes

கொசுறு 1

இயக்குநர் செல்வக்கண்ணன் படம் எடுக்க முயன்று வாய்ப்புக் கிடைக்காததால், அவரது கல்லூரி நண்பர்களே 50 பேர் தயாரிப்பில் உதவி படத்தை எடுத்து இருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரின் நம்பிக்கையையும் வீணடிக்காமல், தரமான படமாக எடுத்துத் தன்னை நியாயப்படுத்தியிருக்கிறார் செல்வக்கண்ணன். அனைவருக்கும் பெருமையளிக்கும் படமே!

ராமுக்கு கண்டிப்பாக ஏதாவது விருது கிடைக்கும்.

கொசுறு 2

படம் பார்க்கத் தயாரிப்பாளர்களின் நண்பர்களின் குடும்பங்கள் வந்து இருந்தார்கள், அவர்களின் சலசலப்புப் படம் பார்க்கத் தொந்தரவாக இருந்தது.

இப்படத்தை இயக்குநருக்காகவும், அவருக்கு உதவி செய்த 50 நண்பர்களுக்காகவுமே திரையரங்கு சென்று பார்த்தேன். நீங்களும் முடிந்தால் ஆதரவு கொடுங்கள்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. நெடுநெல்வாடை, படத்தோட பெயரிலே வாசம் வீசுது!!! உங்களின் குறிப்பும் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.. படத்தோட பெயருக்காகவே படத்தை கண்டிப்பாக பார்ப்பேன்..

    (இயக்குநர் செல்வக்கண்ணன் படம் எடுக்க முயன்று வாய்ப்புக் கிடைக்காததால், அவரது கல்லூரி நண்பர்களே 50 பேர் தயாரிப்பில் உதவி படத்தை எடுத்து இருக்கிறார்கள்) உதவிய நண்பர்கள் அனைவரும் பாராட்டுகளுக்கு உரியவர்கள்!!! என்னுடைய வாழ்விலும் நண்பர்கள் இல்லையேல் நான் இல்லை!!! பகிர்வுக்கு நன்றி கிரி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here