Ayyappanum Koshiyum (மலையாளம் 2020) | தெறிக்கும் ஈகோ

2
Ayyappanum Koshiyum

ருவருக்கு இடையே நடக்கும் சுயகௌரவ (Ego) போராட்டமே Ayyappanum Koshiyum.

பிரித்விராஜ்

பிரித்விராஜ் ஓய்வுபெற்ற இராணுவ வீரர், மது பழக்கத்துக்கு அடிமையானவர்.

மது கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்ட சாலை வழியாக மது பாட்டில்களுடன் காரில் ஊட்டி சென்றதால், காவல் அதிகாரி பிஜு மேனனால் தடுக்கப்படுகிறார்.

அரசியல் செல்வாக்குள்ள பிரித்விராஜ் அவமானமாகக் கருதி பிரச்சனை செய்ய, பிஜு மேனனால் அடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்படுகிறார்.

கடுப்பான பிரித்விராஜ் வெளியே வந்து பிஜு மேனனை பழி வாங்குகிறார். பாதிக்கப்பட்ட பிஜு மேனன் பதிலடி கொடுக்க, பெரிய பிரச்னையாகிறது.

இறுதியில் என்ன ஆனது என்பதே கதை.

தெறிக்கும் ஈகோ

அடேங்கப்பா! என்ன மாதிரியான படம்!! இது போல ஒரு சுயகௌரவ போட்டி படத்தைப் பார்த்ததாக நினைவில்லை.

படங்களில்  பாதியில் தான் சுயகௌரவ பிரச்சனை துவங்கும், பெரும்பாலும் ஒருவர் இப்படி நடந்து கொள்வார் ஆனால், இதில் இருவருமே துவக்கம் முதல் கடும் போட்டி.

படத்தின் கதை படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே துவங்கி விடும்.

சுயகௌரவ போட்டி என்றால், ‘படையப்பா நீலாம்பரி’ தான் நினைவுக்கு வருகிறார். இவரையெல்லாம் இவர்கள் இருவரும் தாண்டி எங்கேயோ சென்று விட்டார்கள்.

ப்ப்பா! என்ன மாதிரியான முரட்டு சுயகௌரவ சண்டை 🙂 .

என்ன வியப்பென்றால், இருவருமே சளைக்காமல் மோதுவது தான். இருவருக்குமே அவர்களுடைய கதாப்பாத்திரங்கள் அசத்தலாகப் பொருந்தியிருக்கின்றன.

பிரித்விராஜ் ஏற்கனவே இதே கதைக்களமான Driving Licence படத்தில் நடித்து இருந்தார் ஆனால், அதில் இவருக்கு எதிரான RTO கதாப்பாத்திரம் பலம் குறைந்தது.

பிஜு மேனன்

ஆனால், இதில் பிஜு மேனன் மிரட்டியிருக்கிறார் மனுசன். பிஜு மேனனுக்கு என்றே உருவாக்கிய கதாப்பாத்திரம் போல அவ்வளவு அட்டகாசமாகப் பொருந்தியுள்ளது.

அலட்டிக்கொள்ளாமல் அமைதியாக ஆனால், அதிரடியாகப் படம் முழுக்க அசத்தியுள்ளார். காவல்துறையும் ஒத்துழைக்க, பெரும் சிக்கல் உருவாகிறது.

பிரித்விராஜுக்கு பிஜு மேனன் நடிப்பில் கடும் சவால்.

துவக்கத்தில் பிரித்விராஜ் மொபைலை காவலர் சோதிக்கும் காட்சியில், பிரித்விராஜ் Unlock செய்யாமலே, காவலர் எப்படிப்பார்த்தார் என்று புரியவில்லை.

இக்காட்சியை சரியாக அமைத்து இருக்கலாம்.

பிரித்விராஜ் கார் ஓட்டுநராக வருபவர் பாந்தமான நடிப்பு. முதலாளிக்காகப் பரிதவிப்பதும், தவறை சுட்டிக்காட்டுவதும் என மனதில் நிற்கிறார்.

குறிப்பாகப் பயத்தை பற்றி இருவரும் பேசும் காட்சி சுவாரசியம் 🙂 . ப்ரித்திவிராஜ் உடல் மொழி, சமாளிப்பு மிக இயல்பு.

ஒளிப்பதிவு

சமீப மலையாளப்படங்கள் ஒளிப்பதிவுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் காட்சிகளை மிக அழகாகக் கவிதையாகக் கொடுப்பது போலத் தோன்றுகிறது.

இப்படம் முழுக்க அட்டப்பாடி மற்றும் அதன் அருகில் உள்ள பசுமையான பகுதிகளை நம் கண்களுக்கு விருந்தாக்கியுள்ளது. ஒளிப்பதிவு மிகச்சிறப்பு.

பின்னணி இசை

படத்தின் பின்னணி இசையும் பாடலும் படத்துக்கு மிகப்பெரிய பலம். துவக்கத்தில் வரும் ‘கிழக்கால சந்தனமரம்’ பாடல் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது.

இப்பாடலுக்கு கிராமிய இசைக் கலைஞர்களையும். கருவிகளையும், அப்பாட்டியையுமே பயன்படுத்தி பாடலை வேறு எங்கேயோ கொண்டு சென்று விட்டார் இசையமைப்பாளர் Jakes Bejoy.

கிட்டத்தட்ட இது தமிழ்ப்பாடல் தான், YouTube கருத்துப்பகுதியில் பார்த்தால் வியப்படைவீர்கள். ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இப்பாடலுக்கு.

படம் 3 மணி நேரம் என்பது ஒரு குறை ஆனால், நீளம் எந்த இடத்திலும் தடையாக இல்லாமல், விறுவிறுப்பாகச் செல்கிறது.

இயக்குநர் சாச்சிக்கு இரண்டாவது படம் Ayyappanum Koshiyum. முதல் படத்திலும் ப்ரித்திவிராஜ் பிஜு மேனன் நடித்துள்ளார்கள்.

Ayyappanum Koshiyum படத்தை அனைவரும் பார்க்கத் தாறுமாறாகப் பரிந்துரைக்கிறேன் 🙂 .

பரிந்துரைத்த நண்பர் விஸ்வநாத்துக்கு நன்றி.  Amazon Prime ல் உள்ளது.

தொடர்புடைய கட்டுரைகள்

Driving Licence (மலையாளம் 2019)

Virus (மலையாளம் – 2019)

Directed by Sachy
Produced by Ranjith, P. M. Sasidharan
Written by Sachy
Starring Prithviraj Sukumaran, Biju Menon
Music by Jakes Bejoy
Cinematography Sudeep Elamon
Edited by Ranjan Abraham
Release date 7 February 2020 (India)
Running time 185 minutes
Country India
Language Malayalam

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. கிரி, எப்படி இருக்கீங்க ?? நேற்று உங்கள் விமர்சனம் பார்த்த பின் படத்தை பார்க்கலாம் என்றென்னினேன் . ஆனால் பிரதிவிராஜ் படம் என்பது ஒரு உறுத்தல் . பிஜு மேனனை பற்றி தெரியாது. இருப்பினும் மனதை தேற்றிக்கொண்டு படத்தை பார்த்தேன் . படம் தாறுமாறு .. பிரிதிவிராஜ் குறித்த என் எண்ணத்தை மாற்றி கொண்டேன் . ஆனால் படத்தோட உண்மையான ஹீரோ பிஜு மேனன் .

    படம் மூன்று மணி நேரம் என்பது ஒரு குறையே இல்லை !!! படம் ரொம்ப பிடித்து இருந்தது.. யாரோட நடிப்பை படத்தில் பாராட்டுவது என்று தெரியவில்லை .. மனிதனுக்குள் இருக்கும் ஒரு குணத்தை வைத்து ஒரு படம் எடுத்து இருப்பது பிரமிக்க வைக்கிறது.. ஐயப்பன் ,கோஷி ,ஜான் குரியன் ,கண்ணம்மா , காவல் துறை அலுவலர்கள் , கோஷியின் நண்பர்கள், லோக்கல் வில்லன் என ஈகோ ஒவ்வொருத்தற்குள்ளும் புகுந்து கொண்டு.. யப்பா எப்படி இயக்குனர் திரைக்கதை எழுதினார் என்றே தெரியவில்லை.. சின்ன சின்னதா எத்தனை ஷாட்டுகள் ..

    எடிட்டிங்கில் கோர்வையாக கொண்டுவந்து படத்தை எங்கும் சலிப்படைய செய்யாமல் கொண்டு சென்றது இயக்குனரின் தனி திறமை !!! டிரைவர் குமரனின் நடிப்பு தனிரகம்.. அனுபவசாலியா அவருடைய பொறுமை ரொம்ப பிடித்து இருந்தது .. படத்தோட பட்ஜெட் நிச்சயம் குறைவாகத்தான் இருக்கும். வசூல் ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 35 கோடிகள் என இணையத்தில் பார்த்தேன் . .

    படத்தின் சிறப்பு யூகிக்க முடியாத காட்சிகள்.. திருப்புமுனை காட்சிகள் .. தரமான படத்தை பரிந்துரைத்தமைக்கு நன்றி கிரி. எந்த படங்களுடையும் இந்த படத்தை ஒப்பிட முடியாது என்பது என் எண்ணம் ..

  2. உண்மை தான் யாசின்.. செம்ம படம். அனைவரின் கதாப்பாத்திரமும் சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளது.

    துவக்கத்தில் இருந்து இறுதி வரை விறுவிறுப்பாகக் கொண்டு சென்று இருந்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here