இவற்றைப் பின்பற்றுங்கள் | சிறப்பான ஆலோசனைகள்

9
இவற்றைப் பின்பற்றுங்கள் People-don-t-listen-they-just-wait-for-their-turn-to-talk

சில நேரங்களில் WhatsApp ல் பல நல்ல தகவல்களும் வரும், அது போல வந்தது தான் இது. இதை எழுதியவர் யார் என்று தெரியவில்லை (வழக்கம் போல பெயரில்லாமல் தான் வந்தது 🙂 ). எழுதியவருக்கு வாழ்த்துகள். இவற்றைப் பின்பற்றுங்கள்

இவற்றைப் பின்பற்றுங்கள்

 

  • ஒருவரோ , பலரோ உறங்கிக் கொண்டிருக்கும் அறையில் நுழையும் போது டமால் டுமீல் தட் புட் தடால் பணால் என்று சத்தம் போடாதீர்கள். Image Credit

வியாக்ர பாதர், தேனீ உட்காராத பூக்களைக் கண்டுபிடிக்கப் புலிப்பாதம் வேண்டிக் கொண்டாராம். அப்படி நீங்களும் புலி / பூனைப் பாதத்துடன் நடந்து சென்று காரியத்தை முடித்துக் கொள்ளுங்கள்.

  • பொது இடங்களில் நிற்கும் போது யாருடைய வழியையேனும் அடைத்துக் கொண்டு நிற்கிறீர்களா?! என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.
  • ரயிலில் பேருந்தில் தேவை இல்லாமல் எழுந்து நிற்காதீர்கள்.
  • மூவர் அமரும் இருக்கைகளில் உங்கள் இடத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். பைகளை இருக்கையில் வைக்காதீர்கள்.
  • ரயிலில் இரவு பயணத்தில் ஏதேனும் காரணத்துக்காக விளக்கைப் போட்டால் மீண்டும் அணைக்க மறக்காதீர்கள்.
  • நண்பர்கள் / உறவினர்கள் வீடுகளுக்குச் செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள் (குளியலறை இங்கே இருந்திருக்கலாம்!), அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள்.
  • (இந்தப் பிரிட்ஜை இங்கே வெச்சுக்கலாமே! – None of your business!). அவர்கள் படுக்கையறைக்குச் செல்லாதீர்கள்.
  • போனைக் கேட்காதீர்கள், வைஃபை பாஸ்வேர்ட் கேட்காதீர்கள்.
  • கடனைத் திருப்பிக் கேட்கும் முன்னர் அதற்குக் குறிப்பிட்ட குறைந்தபட்ச நாட்கள் காத்திருங்கள்.
  • ஒருவர் கைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் அழைப்பது வேண்டாம். அது கொஞ்சம் சைக்கோ தனம். அவர்களையும் தேவை இல்லாமல் பயமுறுத்தும்.
  • ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அவரை விட வயதிலோ, அந்தஸ்திலோ, பதவியிலோ , முக்கியத்துவத்திலோ உயர்ந்த ஒருவர் உங்களை அழைக்கிறார்.

பலர் அந்த முதல் நபரை அப்படியே அம்போ என்று விட்டுவிட்டு பரபரப்புடன் இரண்டாம் நபரிடம் ஓடி விடுவார்கள். அவரிடம் குறைந்தபட்சம் ‘ஒரு நிமிடம், போய் வந்துவிடுகிறேன்‘ என்று சொல்லிச் செல்லவும்.

  • பரபரப்பான சாலைகளில் குழந்தைகளை / குடும்பத்தை நிழற்படம் எடுக்காதீர்கள். கேமெராவுக்கும் நிழற்படம் எடுக்கப்படுபவருக்கும் இடையே நடக்க நிறையப் பேர் தயங்கித் தயங்கி நின்றிருப்பார்கள்.
  • பொதுக் கழிப்பிடங்களை உபயோகித்தபின் நிறையத் தண்ணீர் ஊற்றிவிட்டு வாருங்கள்.
  • பேருந்திலும், ரயிலிலும், லிப்டிலும் முதலில் உள்ளே இருப்பவர்கள் இறங்கிய பின் தான் நீங்கள் ஏற வேண்டும்.
  • பொது இடங்களில் பேசும்போது கத்திப் பேசாதீர்கள். மொபைல் அழைப்பு வந்தால் தனியாகப் போய் ஓரிடத்தில் பேசி விட்டு வாருங்கள்.
  • டாக்சிதான் ஏறிவிட்டோமே என்று டாக்சியில் கத்திப் பேசாதீர்கள். அது ஓட்டுநரைத் தொந்தரவு செய்யும்.
  • ஹெட்செட்டில் பாட்டுக் கேட்டுக்கொண்டே சத்தமாகப் பேசவோ,  பாடவோ, டான்ஸ் ஆடவோ வேண்டாம்.
  • ஓட்டுனராகவோ / சேவை வழங்குநராகவோ (எலக்ட்ரீசியன், பிளம்பர், பெயிண்டர் etc) இருந்தால் வாடிக்கையாளரின் தனிப்பட்ட விஷயங்களை / தகவல்களைக் கேட்காதீர்கள், உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்.
  • சூப்பர் மார்க்கெட்டில் உங்களுக்குப் பின்னே வரிசை நிற்கிறது. அப்போது பில் போடுபவரிடம் தேவையில்லாத தகவல்களைக் கேட்டுக்கொண்டு இருக்காதீர்கள். (இந்த ஸ்கீம் பற்றி டீட்டெயில்ட்டா சொல்றீங்களா?).
  • இருங்க , ப்ரெஷ் வாங்க மறந்துட்டேன்!” என்று ஓடாதீர்கள். consider others !
  • உங்களுக்கு treat தரும் போது இதுதான் சாக்கு என்று விலையுயர்ந்த அயிட்டங்களை ஆர்டர் செய்யாதீர்கள்.
  • ஒருவர் வீட்டுக்குப் போகும் முன்னர் பல மணிநேரங்களுக்கு முன்னரே தகவல் சொல்லுங்கள். No surprises!
  • சர்ப்ரைஸ் விசிட் என்று நினைத்துக் கொண்டு போவது அவர்களை எரிச்சல் படுத்தும். வீட்டை அலங்கோலமாக வைத்து இருக்கலாம்.
  • விருந்தினராக உறவினர் வீட்டுக்குச் சென்றால், உங்களுக்குத் தேவையான மாத்திரை மருந்துகளைக் கொண்டு செல்லுங்கள்.
  • அங்கே போய் ராத்திரி 9 மணிக்கு ‘ரகு, எனக்கு இந்த மாத்திரை வாங்கி வந்திடறியா‘ என்று கடுப்பேற்றாதீர்கள்.
  • முதல் சந்திப்பிலேயே ஒருவரைப் பற்றிய opinion களைத் தவிருங்கள். “நீங்க ரொம்ப shy டைப்பா?’ வந்ததில் இருந்து பத்து வார்த்தை கூடப் பேசி இருக்க மாட்டீங்க“.
  • நீங்கள் சந்திக்கும் நபரைப் பற்றி அதிகம் கேளுங்கள் / பேசுங்கள். உங்களைப் பற்றி அல்ல. (நான் எப்படின்னா, நான் இப்படித்தான், எனக்கு இது பிடிக்காது, ஒருநாள் நான்…etc )
  • யாராக இருந்தாலும் ஒருவர் வாசலை விட்டு நகர்ந்த அடுத்த மைக்ரோ வினாடி கதவை அடைக்காதீர்கள். அவர்கள் கொஞ்ச தூரம் போகும்வரை காத்திருங்கள்.
  • வயது, சம்பளம், விவாகரத்துக் காரணம், இவைகளைக் கேட்காதீர்கள். தம்பதிகளிடம் “எப்போது குழந்தை?” என்று கேட்காதீர்கள்.
  • வயதில் சிறியவர்களிடம் உரையாடும்போது அறிவுரை கூறாதீர்கள். No one likes advices.
  • வீட்டில் உறவினர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு அன்றாடம் தேவையானவற்றை வாங்கி வையுங்கள். அவர்களைப் குளியலறை சென்று என்றோ தீர்ந்து போன பேஸ்டை பிதுக்க வைக்காதீர்கள்.
  • புதுமனைப் புகுவிழாவின் போது வீடு வாங்கியவரை முந்திரிக் கொட்டை போல ‘ஸ்கொயர் பீட் எத்தனை?‘ என்று கேட்காதீர்கள்.
  • எங்க ஏரியாவில் கம்மி ரேட்‘ என்றெல்லாம் சொல்லாதீர்கள். ‘வீடு நல்லா இருக்கு, கங்கிராட்ஸ்‘ என்று முதலில் சொல்லுங்கள்.
  • உங்கள் பிள்ளைகளின் நண்பர்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களைப் பேச விடுங்கள். நடுநாயகமாக உட்கார்ந்து கொண்டிருக்காதீர்கள்.
  • அதே போல இளைஞர்களின் விஷயத்தில் தலையிடாமல் ஒதுங்குங்கள். 70 வயதானாலும் ஜோவியலாகப் பேசுகிறேன் பேர்வழி என்று ‘என்னடா அஷோக், நேத்து ராத்திரி அஜால்ஸ் குஜால்ஸ் தானா?‘ என்றெல்லாம் கேட்காதீர்கள்.
  • ஒருவர் உங்களிடம் அன்பளிப்பை கிஃப்ட் ரேப் செய்து கொடுத்தால் ‘பிரிக்கலாமா?‘ என்று கேட்டுவிட்டுப் பிரியுங்கள். ‘ஓ! சாண்டிவிட்ச் மேக்கரா, ஏற்கனவே என் கிட்ட இருக்கே‘ என்றெல்லாம் சொல்லாதீர்கள். Accept it.
  • பழைய நண்பர்கள் சந்திப்பில் உங்களைப் பற்றி / உங்கள் குழந்தைகள் பற்றி உயர்வாகவோ தாழ்வாகவோ பேசிக் கொள்ளாதீர்கள்.
  • உங்கள் Designation யைக் கேட்டால் மட்டும் குறிப்பிடுங்கள்.
  • ஒருவருடைய மதம் / இனம் / ஜாதி பற்றிக் கேட்கவோ பேசவோ செய்யாதீர்கள்.
  • உறவினர்களுக்குச் சமைக்கும்முன் இந்த அய்ட்டம் உங்களுக்குப் பிடிக்குமா என்று கேட்டுவிட்டுச் சமையுங்கள்.
  • ராத்திரி 8 மணிக்கு மேல் ஒருவருடைய வீட்டுக்குச் செல்ல வேண்டாம். 9 மணிக்கு மேல் போன் செய்ய வேண்டாம். (unless they are your spouse / lovers)
  • விருந்தினராகச் சென்றிருந்தால் காலை சீக்கிரம் எழுந்து கொள்ளுங்கள். 10 மணிவரை குறட்டை விட்டுத் தூங்க வேண்டாம்.
  • வெளியில் போகையில் சில்லறை கொண்டு செல்லுங்கள். 100 ரூபாய் பில்லுக்கு 2000 ரூபாய் நீட்டி சர்ப்ரைஸ் தராதீர்கள். அதே போல முதலிலேயே ரூபாயை எடுத்துப் பாக்கெட்டில் போட்டுக் கொள்ளுங்கள்.
  • சிலர் அவர்கள் முறை வந்த பின்பு தான் நிதானமாக ஹேண்ட் பேக்கை அகழ்வாராய்ச்சி செய்வார்கள்.
  • ஒருவரை 3 வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது offensive. (அந்த ஒருவர் உங்கள் காதலியாகவோ காதலனாகவோ இல்லாத பட்சத்தில்!).
  • அதேபோல் ஒருவர் சமையல் செய்யும்போதோ, கோலம் போடும்போதோ, வரையும்போதோ பின்னால் நின்று கொண்டு உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்காதீர்கள்.
  • கைக்குழந்தைகளைத் திரையரங்குக்கு அழைத்துச் செல்லாதீர்கள்.
  • பாடல்களை எப்போதும் இயர் போனிலேயே கேளுங்கள். சைனா செட்டை இயக்கி மற்றவர்களைக் கதிகலங்க வைக்காதீர்கள்.
  • ஒருவரின் உடல் அமைப்பைப் பற்றிக் கருத்து கூறாதீர்கள். என்ன சார்? தொப்பை பெருசாயிருச்சு போல!
  • டாய்லெட் யூரினலில் ஏற்கனவே ஒருவர் இருந்தால் அவர் பக்கத்தில் இருக்கும் யூரினலைத் தவிருங்கள்.
  • Service industry யில் இருப்பவர்கள் எல்லாரிடமும் அப்படித்தான் பேசுவார்கள். அதைச் சிக்னல் என்று எடுத்துக்கொண்டு வழியாதீர்கள்.
  • மற்றவரின் taste / preference களைக் குறை சொல்லாதீர்கள். “இந்தப் புக்கெல்லாம் எப்படித்தான் படிக்கிறீர்களோ / இந்தப் பாட்டெல்லாம் எப்படிக் கேட்கறீங்களோ!
  • ஒருவர் நிழற்படம் பார்க்க, போனை உங்களிடம் நீட்டினால் அந்த நிழற்படத்தை  மட்டும் பாருங்கள்.
  • அளவுக்கதிகமான பெர்ஃப்யூம் போட்டுகொண்டு போய் எல்லாருக்கும் தலைவலி வரவழைக்காதீர்கள்.
  • முகநூலில் நட்பு கிடைத்தவுடன் அவர் அனுமதி கேட்காமல் video Chat அழைப்பு விடுக்காதீர்கள்
  • குழந்தை இன்னும் இல்லை என்றால் அத்துடன் விட்டு விடுங்கள். ஏன் என்று கேட்டுக் குடையாதீர்கள்.

இவற்றைப் பின்பற்றுங்கள், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருங்கள்.

தொடர்புடைய கட்டுரைகள் 

தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும்

எதிர்மறை எண்ணங்களால் ஏற்படும் இழப்புகள்

கொசுறு

இதில் நான் கிட்டத்தட்ட 95% பின்பற்றுகிறேன், மகிழ்ச்சி 🙂 . நீங்கள் எப்படி?

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

9 COMMENTS

  1. மிகவும் அருமையான பதிவு அண்ணா …உங்கள் அனுமதியுடன் நான் இதை என் கணினியில் சேமித்து வைத்துக் கொள்கிறேன் அண்ணா….

    மேலே சொன்ன பல விஷயங்களில் நான் 50 % கூட பின்பற்றற்றவில்லை என்றுதான் நினைக்கிறேன்….இனிமேல் இதை நான் நூறு சதவிகிதம் பின்பற்றி ஒழுக்கமுள்ள சிறந்த மனிதனாக மாறுவேன்…ஒரு நாள் நானும் உங்களிடம் சொல்லுவேன் ..இதில் நான் நூறு சதவிகிதம் பின்பற்றுகிறேன் என்று…காத்திருங்கள் அண்ணா …

    முன்பு ஒரு முறை சொல்லி இருந்தேன் …இணையதளங்களில் இனி ஆபாச வீடியோக்களை பார்க்க மாட்டேன் என்று …இன்று வரை கடைப்பிடித்து கொண்டு இருக்கிறேன்….

    இந்த பதிவை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா…

  2. உங்கள் பதிவுகளை தவறாமல் படித்து வருபவன்.இந்த பதிவு தி அற்புதம். நன்றி

    விஸ்வநாதன்

  3. சாதாரண விடயங்கள் கூட யாரோ சொல்லித்தான் ஆமா நாங்கள் பிழையாகத்தான் செய்கிறோம்னு தெரிகிறது.

    இப்போது கூடுதலான வேலைத்தளங்களில் வாசனைத்திரவியம் உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வெப்பமண்டல நாடுகளுக்கு வர நீண்டகாலம் எடுக்கும் என்று நினைக்கிறேன்.

    இரவு 9 மணிக்கு பிறகு தலைபேசி அழைப்பு எடுக்கக்கூடாது என்று சொல்லுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. நீங்கள் ஒரு குடும்பஸ்தர் என்ற நிலையில் சொல்லுகிறீர்கள். திருமணமாகாத நண்பர்கள் , தனிமையில் வசிப்பவர்களுக்கு தொலைபேசிதான் ஒரே வழி. ஆனால் எதிர்தரப்பும் இயலுமானால்தான். நான் வீட்டில் இல்லாத நாட்களில் அம்மாவுடன் இரவு 2 மணியானலும் தொலைபேசிவிட்டுத்தான் படுப்பேன். குடும்பஸ்தராய் நீங்கள் சொல்லுவது சரி. குடும்பஸ்தர் இல்லாமல் நான் சொல்லுவதும் சரியாக இருக்கலாம்.

    யாருடய வீட்டிலாவது கழிவறையை பாவிப்பவர்கள், சிறு நீர் கழிப்பதாயின் வோட்டர் குலேசட்டின் இருக்கும் பலகையை எடுத்துவிட்டு பயன்படுத்தவேண்டும். அந்த வீட்டில் பெண்கள் இருந்தால், பயன்படுத்தியபின்னர் கட்டாயமாக மூடியினால் மூடிவிட்டு வரவேண்டும். இது இரண்டும் நிறையபேர்களுக்கு தெரிவதில்லை. யாரும் சொல்லியும் கொடுப்பதில்லை.

    சாலையில் வாகனம் ஒட்டும்போது கட்டயமாக சிக்னல்கலை பயன்படுத்துங்கள். நீங்கள் உங்களின் ஊரில் பயன்படுத்துவதில்லை என்பதற்காக வேறு நாடுகளுக்கு போயும் பயன்படுத்தாமல் மற்றயவர்களின் உயிரை வாங்காதீர்கள்.

    உங்கள் நாடுதான் சிறந்தது என்று என்னேரமும் பிரச்சாரம் செய்யாதீர்கள் . முக்கியமாக இந்தியர்கள் இந்தியாவை புகழ்வது மிக மிக மிக அதிகமாக உள்ளது ( பஞ்சாபிகளை தவிர்த்து ). காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. சிறு வயதில் புத்தகங்கள் படித்து, ரஸ்யா தான் எனக்கு பிடித்தமான நாடாக இருந்தது. பின்ன பள்ளியில் இந்திய நண்பர்களின்கதைகளை கேட்டு இந்தியா பிடித்தமான நாடானது. சுய அறிவு வந்து தற்போதய நடப்புகளை பார்க்கையில் இந்த இரண்டு நாடுகளும் பிடித்த நாடுகளில் கடைசி இரண்டு இடத்திற்கு போய்விட்டது. இருந்தாலும் தமிழ் நாட்டில் வந்து ஒரு மாதம் இருந்து எல்லா பொத்தகசாலைகலையும் அலசி ஆராய வேண்டும் என்பது எனது நெடு நாள் அவா.

    அன்பளிப்பாக தேவையானவற்றை மட்டும் கொடுங்கள். உங்கள் வீட்டில் இரண்டு சாண்விச் மேக்கர் இருக்கு என்பதற்காக 10 வயது சிறுவனைன் பிறந்த நாளிற்கு அதனை கொடுக்காதீர்கள். அன்பளிப்பு அட்டை கொடுப்பது எல்லாவற்றிலும் பார்க்க சாலச்சிறந்தது.

    பாடல்களை இயர் போனில் கேட்பது உங்கள் காதுகளுக்கு சேதத்தை விழைவிக்கும். கேட்காமலே விடுவது மிகவும் நன்று.

  4. நல்ல பதிவு, இதையும் சேர்த்துக் கொள்ளலாம் – ஒரு மீட்டிங்கில் உங்களுக்கு முன் அமர்ந்திருப்பவரின் நாற்காலியில் காலை வைப்பது, அல்லது டொக் டொக்கென்று காலால் தட்டி ஓசை செய்வது போன்றவற்றை அறவே தவிருங்கள்.

    அன்பு கிரி அவர்களே,
    தமிழ் கேள்வி பதில் தளத்தில் இந்தக் கேள்விகளுக்கு பதிலிறுக்க வேண்டுகிறேன்.
    அ) தமிழ் மொழியில் இருக்கும் வலை முகவரி ஏன் %20AF%8D/ என்றெல்லாம் தோன்றுகிறது?

    ஆ) ஆண்ட்ராய்ட் அலைபேசியில் ஒவ்வொரு ஞாபகக்குறிப்பிற்கும் வித்தியாசமான ஒலியைத் தேர்வு செய்ய முடியுமா?

    இ) வயதானவர்கள் அனுதினமும் மாறி வரும் தொழில்நுட்பத்திற்கு எவ்வாறு ஈடு கொடுப்பது? உங்கள் டிப்ஸ் என்ன?

  5. கிரி, இந்த பதிவில் உள்ள அனைத்து அம்சங்களையும் என்னால் ஒத்து கொள்ள இயலவில்லை.. ஆனால் நிறைய நல்ல கருத்துக்களை கூறியுள்ளனர்.. ஆனால் இவைகளை சரியாக பயன்படுத்த முடியுமா???? என்பது என்னளவில் கேள்வி குறியே???

    ஏன்னென்றால் யாரோ போட்ட பாதையில் பயணிப்பதை விட, எனக்கு என்ன சரி??? என்று தோன்றுகிறதோ அதை மட்டும் செய்வேன்… 90 % அடுத்தவர்களுக்கு துன்பத்தை தர மாட்டேன்… சந்தர்ப்பங்களில் தர நேரிடினும் மீண்டும் அந்த தவறை செய்ய மாட்டேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  6. மிகவும் அருமை. 100% மாற்று கருத்தே இல்லை.

    அதேபோல், ரயிலில் எதிர் சீட்டில் மேல் காலை நீட்டி வைக்காதீர்கள்.
    Add this too in your next post. Kindly post this article every 6 months so that our people must memorize.

  7. @கார்த்தி நீ கூறியது நினைவு உள்ளது, அதை பின்பற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து பின்பற்றவும். எப்பாவது என்றால் தவறில்லை, எப்போதுமே என்றால் தான் தவறு.

    @விஸ்வநாதன் நன்றி. இது நான் எழுதியதல்ல, WhatsApp ல் வந்தது.

    @ப்ரியா வாசனை திரவியம்.. ஷப்பா .. சில நேரங்களில் எனக்கு தலைவலியே வந்து விடும்.

    9 மணிக்கு மேல் என்பது அறிமுகம் இல்லாதவர்கள் அல்லது அதிக பழக்கம் இல்லாதவர்களும். நமக்கு நெருங்கியவர்களுக்கு அல்ல. நமக்கு நெருங்கியவர்களிடம் எப்போது வேண்டும் என்றாலும் அழைக்கலாம். அதற்காக ரொம்ப தாமதமாக அழைத்தால், பயந்து விட வாய்ப்புண்டு.

    ஏனென்றால், இரவு நேர அழைப்புகள் நல்ல செய்தியை கொண்டு வராது என்று நினைப்பார்கள்.

    இந்தியர்கள் அவர்கள் நாட்டை அங்கே புகழ்வார்கள் அதே அளவுக்கு இகழ்வார்கள் 🙂 . இது நீ சொன்ன மாதிரி ஒரு சிலர் எரிச்சலடையும் படி ரொம்ப அதிகமாகவே நடந்து கொள்கிறார்கள் என்பது உண்மை தான்.

    மற்றவர்கள் எப்படியோ எனக்கு இந்தியா, சென்னை தான் சொர்க்கம். சிங்கப்பூரிலேயே எனக்கு இருக்க வாய்ப்புக்கிடைத்தும் எனக்கு இங்கே தான் நிம்மதி என்று சென்னைக்கே வந்தவன்.

    இங்கே ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும், இங்கே கிடைக்கும் நிம்மதி திருப்தி எனக்கு சிங்கப்பூரில் கிடைக்கவில்லை. அதே போல சிங்கப்பூரை பிடிக்கவில்லை என்று அர்த்தமல்ல, அதை விட எனக்கு சென்னை பிடித்தது.

    ப்ரியா உனக்கு சுயஅறிவு வந்த பிறகு இந்தியா எப்படி வேண்டும் என்றாலும் தோன்றலாம் ஆனால், என்னைபோன்றவர்களுக்கு சொர்க்கம் தான்.

    வேறு நாட்டில் ஆயிரம் வசதிகள் இருந்தாலும், நான் அந்நியன் / வெளியாள் என்ற உணர்வு என்னை சுதந்திரமாக இருக்க விடுவதில்லை. இது எனக்கு பிடிப்பதில்லை.

    நான் Ear Phone பயன்படுத்துவதில்லை, 9 வருடங்களுக்கு மேலாக.

    @TamilKB நன்றி

    @யாசின் இது யாரோ போட்ட தனிப்பட்ட / தனிநபருக்கான பாதையல்ல, அனைவரும் பின்பற்ற முயற்சிக்கக்கூடிய பொதுவான நல்ல பழக்கங்கள் தான்.

    நீங்க ரொம்ப நல்லவர்னு தான் எனக்கு தெரியுமே 😀 நீங்க யாரையும் வருத்தப்பட வைக்கப்பட மாட்டீங்க என்று எனக்கு உறுதியாக தெரியும் 🙂

    @கருணை உங்கள் பாராட்டு சம்பந்தப்பட்ட நபருக்கு போய் சேரட்டும்.

  8. Priya / Giri,

    Sorry for the irrelevant question here.
    Can you please explain the logical / proven reason to avoid Ear phone? (Not for arguement, Just wants to know). The amount of sound entering into Ears are same whether we hear from outside or from earphone. How does ears can make out that the sound is from outside speaker or earphone?

    Because, I am a regular user of earphone daily, just in order not to disturb others.

  9. @கருணை

    வழக்கமான முறையில் கேட்கும் போது ஒலியின் அழுத்தம், அளவு பிரிந்து விடுகிறது ஆனால், Ear Phone பயன்படுத்தும் போது முழு ஒலி அளவும் சிதறாமல் உங்கள் காது ஜவ்வை அடைகிறது.

    தொடர்ச்சியான அழுத்தம், வேலை பளு காது ஜவ்வுக்கு கொடுக்கப்படுவதால், அதனுடைய திறன் குறைகிறது.

    நம்முடைய காது ஜவ்வு மிக மிக மிக மெல்லியது, இதில் எதிரொலித்து தான் நமக்கு வார்த்தைகள் புரிகிறது. தொடர்ச்சியாக ஒலியை அழுத்தமாக கொடுக்கும் போது அதனுடைய திறனை இழந்து விடும்.

    இதனால் செவி குறைபாடு ஏற்படும். இணையத்தில் உங்கள் செவித்திறனை அளவீடு செய்யும் முறை உள்ளது. அதை பயன்படுத்திப் பார்த்தால், உங்களின் செவித்திறன் அளவு தெரியும்.

    என்னுடைய பரிந்துரை தயவு செய்து Ear Phone பயன்படுத்த வேண்டாம். அவசியம் என்றால் மட்டுமே பயன்படுத்துங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!