அமெரிக்கா என்றால் சுதந்திரதேவி சிலை, லாஸ்வேகாஸ், நயாகரா, நியூயார்க் போன்றவை சராசரி நபருக்கு நினைவுக்கு வரும். இதோடு தவிர்க்க முடியாத இன்னொன்று எஃப் பி ஐ (FBI அமெரிக்கப் புலனாய்வுத் துறை).
ஹாலிவுட் படங்களில் ‘FBI… Freeze‘ என்று தப தபன்னு கருப்பு உடை அணிந்து இயந்திர துப்பாக்கியுடன், தலையில் கவசத்துடன் சுற்றி வளைப்பார்கள் 🙂 .
ஹாலிவுட் படங்களால் அமெரிக்காவில் எது பிரபலமானதோ இல்லையோ இந்த எஃப் பி ஐ பட்டிதொட்டி எங்கும் மிகப் பிரபலமாகி விட்டது.
FBI (Federal Bureau of Investigation)
எஃப் பி ஐ எப்படி, என்ன காரணத்துக்காகத் தோன்றியது? துவக்கத்தில் என்ன பெயர் இருந்தது? எப்படி எஃப் பி ஐ என்று பெயர் மாறியது? என்னென்ன சவால்களை எதிர்கொண்டது? ஆகிய அனைத்தையும் சுவாரசியமாக இப்புத்தகம் விளக்கியுள்ளது.
துவக்கத்தில் பலம் குறைந்த, குறுகிய அளவிலேயே இதன் சேவை இருந்துள்ளது ஆனால், நாளடைவில் இதனுடைய தேவை படிப்படியாக அதிகரித்துள்ளது. இதனால், ஒவ்வொரு காலக் கட்டத்திலும் உயர்ந்து மிகப்பெரிய அமைப்பாக உருவாகியுள்ளது.
இவையல்லாமல் சைபர் குற்றங்களைக் கண்டு பிடிப்பதிலும் சிறந்து விளங்கியுள்ளார்கள்.
காவல்துறை துறை வேறு எஃப் பி ஐ வேறு
எஃப் பி ஐ (அமெரிக்கப் புலனாய்வுத் துறை) தனித்து இயங்கும் அதிகாரமிக்க அமைப்பாகும்.
துவக்கத்தில் காவல்துறையை விட அதிக அதிகாரம் எஃப் பி ஐ க்கு இல்லை ஆனால், நாளடைவில் தங்களை நிரூபித்த பிறகு முக்கியத்துவம் பெற்றுள்ளனர்.
துவக்கத்தில் உள்நாட்டு பிரச்சனைகளை மட்டும் கவனித்தவர்கள், பின்னர் இவர்களின் செயல்பாடுகளால் அமெரிக்கா தாண்டியும் துப்பறிய அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்.
நூற்றாண்டுப் பெருமை
எஃப் பி ஐ அமைப்பு துவங்கப்பட்டு நூற்றாண்டு ஆகி விட்டது என்பது மிகப்பெரிய சாதனை.
100 ஆண்டுக் காலத்தில் எவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி முக்கியத்துவம் பெற்றுள்ளார்கள் என்று படிக்கும் போது வியக்காமல் இருக்க முடியவில்லை.
இரட்டைக் கோபுரம்
இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட சமயத்தில் நடந்த பிரச்சனைகளைப் பரபரப்பாக விளக்கியுள்ளார் ஆசிரியர் சொக்கன்.
உளவுத்துறையை மட்டுமே கவனிக்கும் CIA க்கும் எஃப் பி ஐ அமைப்புக்கும் இடையே இருந்த சுய கௌரவ (EGO) பூசல் காரணமாக இணைந்து பணி புரியாததால் இச்சம்பவம் நடந்துள்ளது.
அதாவது இருவரும் ஒருவருக்கொருவர் இணைந்து பணி புரிந்து, தகவல் பரிமாற்றம் செய்து இருந்தால், இத்தீவிரவாத செயலையே தடுத்து இருக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
லேடன் தெரியுமா பின்ன்ன்லேடன்
இவர்களை விடப் பின்லேடன் செயலாற்றிய விதம் பிரம்மிப்பு ஏற்படுத்துகிறது. மிகைத்திறமையாகத் தன் ஆட்களை உள்ளே அனுப்பி, கச்சிதமாக முடித்து உள்ளார்.
மொத்தம் நான்கு விமானங்கள். இரண்டு இரட்டைக் கோபுரங்கள், மூன்றாவது பென்டகன், நான்காவதை செயல்படுத்தும் முன் பயணிகள் தடுத்து விபத்தாகி அனைவரும் இறந்து விட்டனர்.
நான்காவது வெள்ளை மாளிகைக்காக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பின்லாடன் இப்படிச் செய்வார் என்று எவருமே எதிர்பார்க்கவில்லை. சுருக்கமாக, தங்களை எதுவும் செய்ய முடியாது என்ற அதீத நம்பிக்கையில் இருந்து விட்டார்கள்.
பயணிகள் விமானங்களையே கடத்தி அதுவும் நான்கு விமானங்களைக் கடத்தி மோதுவார்கள் என்று கற்பனையிலும் எண்ணவில்லை.
அசாத்தியமான திட்டமிடல்
இதைச் செய்ய எவ்வளவு யோசித்து இருக்க வேண்டும்?! எப்படித் திட்டமிட்டு இருக்க வேண்டும்?! எப்படிச் செயல்பட்டு இருக்க வேண்டும்?! இது நிச்சயம் சாதாரண விசயமில்லை.
அவங்க ஊரிலேயே விமானப் பயிற்சி எடுத்து அவர்களையே தாக்கியுள்ளார்கள். அமெரிக்காவையே அலற விட்டுள்ளார்கள் என்பது தான் உண்மை.
இதில் மிகச் சோகமான சம்பவம் என்னவென்றால், முதல் கோபுரத்தின் மீது மோதியவுடன், அருகிலிருந்த இன்னொரு கோபுரத்தில் இருந்த மக்கள் உச்சு கொட்டி பார்த்துக்கொண்டு இருந்துள்ளனர். சிறிது நேரத்தில் இரண்டாவது கோபுரமும் தகர்க்கப்பட்டது.
இதை எவருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.
காலையில் 9 மணியளவில் நடந்த சம்பவம் என்பதால், அலுவலகத்தில் அதிகமானோர் இல்லை.
இச்சம்பவத்துக்குப் பிறகே FBI மற்றும் CIA (Central Intelligence Agency) இருவரும் இணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
எஃப் பி ஐ பற்றித் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள், அவசியம் படிக்கப் பரிந்துரைக்கிறேன்.
ஆசிரியர் சொக்கன் இப்புத்தகம் எழுத ஏராளமான புத்தகங்களைப் படித்து, குறிப்புகளைப் பயன்படுத்தி மிகச் சுவாரசியமாக எழுதியுள்ளார்.
அமேசானில் வாங்க –> FBI : அமெரிக்கப் புலனாய்வுத் துறை – Link
தொடர்புடைய கட்டுரை
ரத்தன் டாடா – அசரடிக்கும் மேலாண்மை
கொசுறு
எனக்கு அமெரிக்கா மீது தீராக் காதல். அங்கே வாழனும் என்பது என் விருப்பமல்ல ஆனால், நிறைய ஹாலிவுட் படங்களைப் பார்ப்பதால், அங்குள்ள சில இடங்களைப் பார்க்க வேண்டும் என்பது என் பல வருட விருப்பம்.
சிங்கப்பூரில் வசித்த பொழுது அமெரிக்கா செல்ல வாய்ப்புக் கிடைத்தது ஆனால், நண்பர்களுக்கு விசா கிடைக்கவில்லையென்பதால், அப்படியே தடைபட்டு விட்டது.
என் பையன் கிட்ட ‘டேய் வினய்! நீ பெரியவன் ஆனதும் என்னைக் கூட்டிட்டுப்போ‘ என்றேன், ‘₹50,000 இருந்தால் போயிட்டு வந்துடலாமா?!‘ என்றான் ? .
‘கணக்கு அப்புறம் போட்டுக்கலாம்‘ என்றதும்.. அவ்வப்போது விமானக் கட்டணமெல்லாம் விசாரித்துட்டு இருக்கான், கூட்டிட்டுப் போயிடுவான் போல இருக்கு 🙂 .