விவசாயிகள் எதிர்ப்புக் காரணமாக வேளாண் சட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதுகுறித்துப் பார்ப்போம். Image Credit
வேளாண் சட்டம்
மத்திய அரசு பல்வேறு காரணங்களுக்காக வேளாண் சட்டத்தைக் கொண்டு வந்தது. விவசாயிகள் அதிகமுள்ள பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மற்ற மாநிலங்களில் பெயரளவில் போராட்டங்கள் ஓரிரு நாட்கள் நடந்தன ஆனால், பெரியளவில் எதிர்ப்பில்லை.
GST, ஆதார், CAA, பண மதிப்பிழப்பு போன்றவை செயல்படுத்தப்பட்டபோது இதுகுறித்துக் கட்டுரைகள் எழுதி இருந்தாலும், வேளாண் சட்டம் குறித்து எழுதவில்லை.
காரணம், முழுமையான புரிதல் இல்லை. விவசாயம் சம்பந்தமாக நேரடியாகச் சம்பந்தப்படாததால் இதன் சாதகப் பாதகங்கள் முழுமையாகத் தெரியவில்லை.
தெரியாத விஷயத்தில் கருத்து கூற வேண்டாம் என்பதால், இது பற்றி எதையும் எழுதவில்லை.
விமர்சனங்கள்
விவசாயிகள் போராட்டம் துவங்கிய போது ஓரிரு வாரங்கள் இருக்கும், பின்னர் அமைதியாகி விடுவார்கள் என்று எண்ணப்பட்டது.
ஆனால், நடந்ததோ வேறு.
மாதங்கள் கடந்து வருடமே ஆகும் நிலையிலும் முடியாமல் தொடர்ந்தது. இதற்குப் பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது.
எப்படிச் சமாளித்தார்கள்?
விவசாயிகள் என்றாலே ஏழைகள் என்று கருத வேண்டியதில்லை, அதுவும் பஞ்சாப் ஹரியானா போன்ற மிகப்பெரிய விவசாய மாநிலங்களை ஒப்பிடும் போது.
எனவே, மற்ற மாநில விவசாயிகளுடன் ஒப்பிடும் போது இவர்கள் பெரும்பாலானவர்கள் வசதியானவர்களே.
ஆனால், விவசாயத்தை விட்டு ஒரு வருடம் தாங்கும் அளவுக்குப் பெரிய விவசாயிகளா என்பது சந்தேகம்.
எங்கள் ஊர் (கோபி) பக்கம் விவசாயத்தில் இருப்பவர்கள் இரு நாட்கள் வெளியூர் செல்வது என்றாலே முடியாத செயல். காரணம், தோட்டம், வயல், மாடு பராமரிப்பு.
விவசாயியான என் மாமாவால் சென்னைக்கு இரு நாட்கள் வந்து எங்களுடன் இருக்க முடியவில்லை. காரணம் தோட்டம், மாடு கவனிக்க வேண்டிய நெருக்கடி.
வேறு நபர்களை வைத்துக் கூடுதல் நாட்கள் (ஒரு மாதம்+) பெரிய விவசாயிகள் சமாளிக்க முடியும் என்றாலும், ஒரு வருடம் கடந்தும் சமாளிக்க முடியுமா என்பதை நம்ப முடியவில்லை.
இடைத்தரகர்கள்
இப்போராட்டத்தின் பின்னணியில் இடைத்தரகர்கள் உள்ளனர். இச்சட்டம் உறுதியானால், இவர்களால் சம்பாதிக்க முடியாது என்று கூறப்பட்டது.
‘இடைத்தரகர்களை ஒழிக்க வேண்டும், விவசாயிகளின் உழைப்பை இவர்கள் திருடுகிறார்கள்‘ என்று பிரதமர் மோடி கூறி இருந்தார்.
துவக்கத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாகச் சமூகத்தளங்களில் கருத்திட்டவர்கள், போராட்டம் பல மாதங்களாகத் தொடர்ந்ததால், இடைத்தரகர்கள் தான் போராட்டம் நடத்துகிறார்கள் என்று விமர்சிக்கத் துவங்கினர்.
காலிஸ்தான்
இந்நிலையில் போராட்டக்காரர்கள் பின்னணியில் தனிநாடு கோரும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் உள்ளனர் என்ற விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது.
இதை உண்மையாக்கும் வகையில் காலிஸ்தான் அமைப்புச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட உடைகளை அணிந்தவர்கள் அதில் இருந்தனர்.
இதன் பிறகு செங்கோட்டையில் தேசிய கொடிக்கு அவமரியாதை, போராட்ட களத்தில் நடந்த மிகக்கொடூரமான கொலை ஆகியவை விமர்சனத்துக்குள்ளானது.
கனடா நாட்டில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அதிகளவில் உள்ளனர்.
இவர்கள் இப்போராட்டத்துக்கு நிதி கொடுத்து வருகிறார்கள், போராட்டம் நீர்த்து விடாமல் பார்த்துக்கொள்கிறார்கள் என்று கூறப்பட்டது.
பீட்ஸா, மசாஜ், உணவு, கேளிக்கைகள் போன்றவற்றுக்கு இவ்வளவு ஆயிரம் பேருக்கு ஒரு வருடத்துக்கு எப்படி செலவு செய்ய முடிந்தது என்ற கேள்வி எழுந்தது.
வேளாண் சட்டம் வாபஸ்
இந்நிலையில் பிரதமர் மோடி வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்படுவதாக அறிவித்துக் கூட்டத்தொடரில் அதை அதிகாரப்பூர்வமாகச் செய்தும் விட்டார்கள்.
ஹரியானா, பஞ்சாப் மாநில மக்கள் அளவுக்குப் போராடவில்லையென்றாலும் உத்தரப் பிரதேச விவசாயிகளும் போராட்டம் நடத்தி இருந்தனர்.
எனவே, 2022 மாநிலத்தேர்தல், 2024 பாராளுமன்றத் தேர்தல் காரணமாகவே மோடி வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றார் என்று விமர்சனம் முன் வைக்கப்பட்டது.
உத்தரபிரதேசத்தில் பாஜக வே திரும்ப ஆட்சிக்கு வரும் என்று கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன. எனவே, தேர்தலுக்காக என்பது ஒரு காரணமாக இருக்கலாம் ஆனால், அதுவே காரணமாக இருக்க முடியாது.
மோடி மீது பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டாலும் நாட்டின் மீது அவர் கொண்டுள்ள பற்றை எவராலும் மறுக்க முடியாது.
வேளாண் சட்டம் வாபஸ் தேர்தலுக்காக என்று வைத்துக்கொண்டாலும் பெரும்பான்மை காரணம் நாட்டின் பாதுகாப்பு, ஒற்றுமைக்காக என்றே என்னால் கருதமுடிகிறது.
இப்போராட்டம் தொடர்ந்தால், மதம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு சிக்கலாகி விடும். எனவே, இதில் பிடிவாதம் பிடிப்பது மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
வாபஸ் பெறப்பட்டதால் எழுந்த விமர்சனங்களை விட, போராட்டத்தால் நாளை நாட்டின் இறையாண்மைக்கு பிரச்சனையானால் கூடுதலாக விமர்சனங்கள் வரும்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சித்து பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டுகிறார், பாகிஸ்தானுடன் வர்த்தகம் செய்ய எல்லையைத் திறக்க வலியுறுத்துகிறார்.
பாகிஸ்தானிலிருந்து அதிகளவில் போதை மருந்து, ஆயுதங்கள் பஞ்சாப்புக்கு வருவது தெரிந்தும் சர்ச்சையாகப் பேசிக்கொண்டுள்ளார்.
பயன்பெற்றது யார்?
இப்போராட்டத்தால் விவசாயிகள் பயன்பெற்றார்களோ இல்லையோ இடைத்தரகர்களும், காலிஸ்தான் ஆதரவாளர்களும் பயன்பெற்றனர்.
காலிஸ்தான் ஆதரவாளர்கள் தங்கள் அமைப்பை வலுப்படுத்த இப்போராட்டத்தை மிகச்சரியாகப் பயன்படுத்திக்கொண்டனர்.
மத ரீதியாகத் தூண்டி பிரிவினையை ஏற்படுத்திக் காலிஸ்தானுக்கு ஆதரவு திரட்ட இதைப் பயன்படுத்தினார்கள்.
காலிஸ்தான் நபர்கள் உள்ளே நுழைந்தது தெரிந்தும் ஏன் மத்திய அரசு கடுமையான நடவடிக்கையைத் துவக்கத்திலேயே எடுக்கவில்லை என்று புரியவில்லை.
விவசாயிகள் போராட்டம் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி விடும் என்று உணர்ந்ததாலே மோடி வாபஸ் பெற்றார் என்று கூறப்படுகிறது.
நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும் போது இதை மறுக்கவும் முடியவில்லை.
தேர்தலுக்காக வாபஸ் என்று வைத்துக்கொண்டாலும், தனிநாடு கோரிக்கைக்காகக் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இப்போராட்டத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது.
இடைத்தரகர்கள்
இப்போராட்டத்தை முன்னின்று நடத்தும் ராகேஷ் இடைப்பட்ட காலத்தில் உத்திரபிரதேச தேர்தலில் நின்று தோல்வியடைந்தார். இன்னொரு விவசாயத் தலைவர் கட்சி ஆரம்பிக்கப்போவதாகக் கூறியுள்ளார்.
எனவே, பலரும் தங்கள் சுயநலத்துக்காக விவசாயிகள் போராட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டுள்ளனர்.
வேளாண் சட்டம் வாபஸ் பெறப்பட்ட பிறகும், மேலும் பல கோரிக்கைகளை முன் வைத்துப் போராட்டம் தொடரும், போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று கூறுவது, இவர்களுக்குப் பிரச்சனை வேளாண் சட்டங்கள் அல்ல என்பது புரிகிறது.
தற்போது மழை காரணமாகத் தமிழகத்தில் தக்காளி விலை 140 – 150 ருபாய் வரை விற்பனையானது.
இவ்விலை உயர்வால் விவசாயிகள் ஐந்து ருபாய் கூடக் கூடுதலாகப் பெற்று இருக்க மாட்டார்கள் என்பது உறுதி. இதன் அனைத்து இலாபங்களையும் இடைத் தரகர்களே பெற்றனர்.
விளைவிக்கும் விவசாயி ₹20 பெறுகிறார், இடைத்தரகர்கள் ₹50 கூறுகிறார்கள். விவசாயிகளுக்கும், மக்களுக்கும் ₹30 நட்டம். இது தான் தற்போதைய நிலை.
இடைத்தரகர்களாலே பொருட்கள், சேவைகள் விலையேற்றம் ஏற்படுகிறது. இணையம் பிரபலமான பிறகு வாகன விற்பனை, வாடகை வீடு போன்றவற்றின் சேவை எளிதாகியுள்ளது.
இதற்குக் காரணம், இவை தனி நபர் சார்ந்தது. எனவே, இதற்கென்று உள்ள இணைய தளங்கள் மூலம் பலரும் தங்கள் தேவையை சரி செய்துகொண்டார்கள்.
விவசாயிகளுக்கு இதற்கான வாய்ப்போ அல்லது முன்னெடுக்கவோ யாரும் இல்லாததால், இடைத்தரகர்களை நம்பியே வாழ்க்கையை ஓட்ட வேண்டியுள்ளது.
மற்ற இரு வேளாண் சட்டங்களில் புரிதல் இல்லை ஆனால், இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட சட்டம் வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.
இடைத்தரகர்கள் ஒழியாத வரை விவசாயிகளுக்கு எக்காலத்திலும் இலாபம் கிடைக்காது.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
Well.
my thoughts on this issue,
a) I see farmers from Panjab / haryana and part of UP only were there. No associations / farmers from south / west / east were part of this strike ? Why is it so ? are they not impacted or do they welcome ?
b) few years back farmers from from TN were in Delhi – absolutely no one cared to talk to them – including our own TN and Central governments. No other parties bothered as well. However this time every other party was talking on this !!!
The whole issue is only for a section and that middle mans and traders and not for an actual farmer
மோடி மீது பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டாலும் நாட்டின் மீது அவர் கொண்டுள்ள பற்றை எவராலும் மறுக்க முடியாது.
உண்மை…