Sherni (2021 இந்தி) | புலி சிக்கியதா?!

2
Sherni movie review

பெண் புலி ஒன்று காட்டுப்பகுதி மக்களைத் தாக்கிக் கொல்கிறது. புலியை வனத்துறையினர் பிடித்தார்களா இல்லையா என்பதே Sherni. Image Credit

Sherni

வித்யா பாலன் நேர்மையான வனத்துறை அதிகாரி ஆனால், வனத்துறை அதிகாரிகளுக்கு உண்டான வழக்கமான சமாளிப்புகளைச் செய்யாததால் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்.

வனத்துறை அதிகாரிகள் எந்த மாதிரி இருப்பார்கள்? என்ன மாதிரியான சூழ்நிலை நிலவும்? வழக்கமாக நிகழும் அரசியல் என்று அனைத்தையும் கூறியுள்ளார்கள்.

அரசியல் பின்புலமுள்ள தனியார் வேட்டைக்காரர் புலியைக் கொல்ல நுழைவதற்கு வித்யா பாலன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

காரணம், இவர் வேட்டையாடுவதைப் பொழுதுபோக்காகக் கொண்டவர், விலங்குகளின் மீது அக்கறை இல்லாதவர்.

தனது அரசியல் பலத்தால் இதைப் பயன்படுத்தித் தன் வீரத்தை காட்ட முயல்கிறார்.

இறுதியில் புலி என்ன ஆனது? தனியார் வேட்டைக்காரர் என்ன ஆனார்? வித்யா பாலன் நிலை என்ன? என்பது தான் கதை.

வனத்துறை

என் நிறைவேறாத விருப்பங்களில் ஒன்று வனத்துறை அதிகாரியாக வேண்டும் என்பது. எனவே, இப்படம் எனக்கு மிகச் சுவாரசியமாக இருந்தது.

இப்படம் பார்க்கும் முன்பு இருந்த மன நிலைக்கும், பார்த்த பிறகு உள்ள மன நிலைக்கும் ஏராளமான வேறுபாடு.

என்ன தான் சில விஷயங்கள் தெரியும் என்றாலும், அதைக் காட்சிகளாகக் காணும் போது தான் இதில் உள்ள சிக்கல்கள் புரிகிறது.

நாம் செய்திகளில் கண்டு இருப்போம். புலி மக்களைக் கொல்கிறது, அதைப் பிடிக்க வனத்துறை முயற்சி எடுத்து வருகிறது என்று.

ஆனால், அதன் பின்னால் இவ்வளவு வேலை, அரசியல் சிக்கல், மேல் அதிகாரிகளின் குடைச்சல், ஊடகங்களின் அழுத்தங்கள் உள்ளது என்பது தற்போது தான் புரிந்தது.

வரப்போகும் தேர்தலில் புலியை வைத்து இரு கட்சிகளிடையே மிகப்பெரிய அரசியல். புலியைப் பிடிப்பதோடு இதையும் சமாளிக்க வேண்டியதாக உள்ளது.

அரசுத்துறையில் நேர்மையாக இருப்பது எளிதல்ல. நாம் இருக்க முயற்சித்தாலும் இருக்க விட மாட்டார்கள். சுய கவுரவத்தை எல்லாம் விட்டுத்தான் சில சூழ்நிலைகளைக் கடந்து வர வேண்டும்.

வித்யா பாலன் அது போல ஒரு நெருக்கடியில் மிகை நடிப்புச் செய்யாமல் அட்டகாசமாக நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு

மிகச்சிறந்த ஒளிப்பதிவாக உள்ளது. வனத்தை அழகாக எந்தக் கூடுதல் பூச்சும் இல்லாமல், பளிச் என்று கண்ணாடி போலக் காட்டியுள்ளார்கள்.

காட்டைக் காட்டும் கோணங்களும் ரசிக்கும்படியும், புத்துணர்ச்சியைக் கொடுக்கும்படியும் உள்ளது.

நடித்துள்ள மக்களும் மிக இயல்பாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளார்கள், குறிப்பாகப் புலியால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்.

Nayattu படம் போல எதார்த்தத்தைப் பிரதிபலித்துள்ளார்கள்.

அதாவது திரைப்படங்களுக்கு என்றே முடிவு இருக்கும் ஆனால், எதார்த்தம் என்பது வேறாக இருக்கும். இப்படம் எதார்த்த வகையைச் சார்ந்தது.

யார் பார்க்கலாம்?

புலி, காடு என்று த்ரில்லருக்கு உண்டான கதை இருந்தாலும் Sherni ஆவணப்படம் போல உள்ளது. இயக்குநர் எதார்த்தமாக எடுக்க நினைத்துள்ளார்.

காட்டுப் பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கை, வனத்துறை அதிகாரிகளின் நெருக்கடிகள், அதில் உள்ள அரசியல், மூத்த அதிகாரிகளின் கையாலாகாத்தனம் ஆகியவற்றைக் காண்பிக்கிறது.

எனவே, மசாலா, பரபரப்பு, திகில், த்ரில்லர் என்று எதிர்பார்த்து இப்படத்தைப் பார்க்க வேண்டாம், பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.

வனத்துறை பகுதி பிரச்சனைகளைத் தெரிந்து கொள்ள உதவும் ஒரு ஆவணப்படமாக எண்ணி பார்க்கலாம்.

Amazon Prime ல் காணலாம். Sherni நேரடி அமேசான் வெளியீடு. பரிந்துரைத்தது ஸ்ரீனிவாசன்.

Directed by Amit V. Masurkar
Written by Dialogues: Yashaswi Mishra, Amit V. Masurkar
Screenplay by Aastha Tiku
Story by Aastha Tiku
Starring Vidya Balan
Cinematography Rakesh Haridas
Edited by Dipika Karla
Music by Score: Benedict Taylor, Naren Chandavarkar
Songs: Bandish Projekt, Utkarsh Dhotekar
Production companies T-Series Abundantia Entertainment
Distributed by Amazon Prime Video
Release date 18 June 2021
Running time 130 minutes
Country India
Language Hindi

தொடர்புடைய திரை விமர்சனங்கள்

Kala (2021 மலையாளம்) | நாய்க்காக ஒரு பழிவாங்கல்

Nayattu (2021 மலையாளம்) | பரபர த்ரில்லர்

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. முதன்முதலில் வித்யாபாலன் / ஷாஹித் கபூர் நடித்த Kismat Connection ஹிந்தி படம் 2008/09 இல் பார்த்தேன்.. அதன் பின் 2010 இல் Ishqiya படம் பார்த்த அந்த நொடியே வித்யாபாலனின் ரசிகனாகி விட்டேன்.. உண்மையில் மிக சிறந்த நடிகை.. என்னை பொறுத்தவரை பாலிவுட்டில் யாரும் ஏற்காத, நடிக்க தயங்கும் எல்லாவிதமான பாத்திரங்களையும் ஏற்று சிறப்பாக செய்பவர்..கடந்த பல வருடமாக ஹிந்தி படம் பார்ப்பதே இல்லை.. ஆமிர்கான் படங்களை மட்டும் பார்ப்பேன்..

    Sherni படத்தின் கதை களமும் எனக்கு பிடித்த ஒன்று தான்.. இதுவரை பார்க்க வில்லை.. இந்த வாரத்திற்குள் பார்க்க முயற்சிக்கிறேன்.. ஆர்யாவின் சார்பாட்ட பரம்பரை நேற்றிரவு தான் பார்த்தேன்.. படம் செம்ம!!!! எல்லா பாத்திரங்களும் சரியான அளவில் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.. படத்தில் இயக்குனரின் அசுர உழைப்பை கண்டு மிரண்டு விட்டேன்.. உங்களுக்கு படம் பிடித்து, விமர்சனம் எழுத தோன்றினால் எழுதவும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. @யாசின் வித்யா பாலன் மிகச்சிறந்த நடிகை. இவர் படத்தில் Kahaani எனக்குப் பிடித்த படம்.

    சார்பாட்ட பரம்பரை இன்னும் பார்க்கவில்லை. பசங்க ஊரில் வந்த பிறகு படம் பார்ப்பது குறைந்து விட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!