அறம் சிறு கதைத் தொகுப்பில் 12 கதைகள் எழுதி எழுத்தாளர் ஜெயமோகன் வெளியிட்டதில், அறம் என்ற சிறுகதையின் விமர்சனமே இது.
அறம்
மூத்த எழுத்தாளரைச் சந்திக்கும் ஜெயமோகனிடம், எழுத்தாளராகத் தான் எதிர்கொண்ட இன்னல்களைக் கூறும் உரையாடலாக இக்கதை அமைந்துள்ளது.
தற்போது பெரும்பாலான எழுத்தாளர்கள் தனக்கு கிடைக்க வேண்டிய ராயல்டியை அச்சு நிறுவனங்கள் ஏமாற்றுவதைப் புலம்பிக் கூறி வருவதைக் கேட்க முடியும்.
தற்போதே இப்படியென்றால் 50 – 60 (*2020) வருடங்களுக்கு முன்பு எழுத்தாளனின் நிலை எப்படி இருந்து இருக்கும்?!
உடல் பாவனைகள்
மூத்த எழுத்தாளரின் உடல் பாவனைகள், அவர் வெத்திலை போடும் லாவகம் என அவர் உடல்மொழிகளை விவரிப்பது, எழுத்தாக இல்லாமல் காட்சி போலத் தெரிகிறது.
‘அவரது பாக்குவெட்டி பல்லாண்டுகாலப் பழக்கத்தின் சரளத்துடன் பாக்குத்தோலை நீவி நீவிப் போட்டது. அவல் துணுக்குகள்போல உதிர்ந்த பாக்குத்தோலைச் சேர்த்து ஒரு சின்ன டப்பாவுக்குள் போட்டார்‘
பணத்துக்குச் சிரமப்பட்டு இருந்த போது கிடைத்த வாய்ப்பைப் பற்றி விளக்கும் போது மோசமான நிலையைப் பட்டுன்னு கூறி இருந்தாலும், கெட்ட வார்த்தையைத் தவிர்த்து இருக்கலாம். கேட்டால், இது தான் இலக்கியம்னு சொல்லுவாங்க!
பணம் இல்லாததால், தேச தலைவர்கள் பற்றிய கட்டுரைகளைப் பள்ளி பாடப்புத்தகத்துக்காக எழுதித் தந்ததையும், எப்படி வெறித்தனமாக எழுதினார் என்பதும் இயல்பாகக் கூறப்பட்டுள்ளது.
ஏமாற்றல்
எழுதியதுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைச் செட்டியார் ஏமாற்றியதால், வெட்கம் மானத்தை விட்டு அவரிடம் கெஞ்சுவதும், காத்திருந்து கேட்டும் அவமானப்படுத்தித் துரத்தியடிக்கப்படுகிறார்.
இப்பணத்தை நம்பி பெண் திருமணத்தை வைத்து இருந்ததால், இனி எந்த முகத்தை வைத்து வீட்டில் சமாதானம் சொல்வது என்ற தவிப்பு, இயலாமை அனைத்தும் துரத்த, ஒரு முடிவை எடுக்கிறார்.
இறுதியில் அப்பணம் கிடைத்ததா? செட்டியார் கொடுத்தாரா? என்பதை ரணகளமாகக் கூறியிருக்கிறார்.
புனைவா? உண்மையா?
இச்சிறுகதை புனைவு போலவே இல்லை, ஜெயமோகனும் ஒரு கதாப்பாத்திரமாக இருப்பதால், உண்மை சம்பவம் என்று தோன்றியது. அதோடு அவருடைய விவரிப்புகளும், வர்ணனைகளும் அதை உறுதிப்படுத்தியது.
மூத்த எழுத்தாளருக்கு இருக்கும் உதவியாளரையும் உணர்வுப்பூர்வமாகக் கையாண்டுள்ளார். அந்தக்காலப் பெரிய தலயையும் அவருடைய உதவியாளரையும் இக்கதை கண்முன் நிறுத்தியுள்ளது.
துவக்கத்தில் மூத்த எழுத்தாளருக்குக் காது கேட்காமல் சிரமப்படுவதை வர்ணித்த ஜெயமோகன் பிற்பாடு அவர் கேட்டல் குறைபாடு பிரச்சனை இல்லாமல் சரளமாக உரையாடுவது எப்படி என்பதற்கு எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.
அமேசான்
தற்காலத்தில் அமேசான் போன்ற நிறுவனங்கள் எழுதுபவர்களுக்குப் புதிய வாசலைத் திறந்து விட்டுள்ளன. ராயல்டி பிரச்சனை, ஏமாற்றம் எதுவும் இல்லாமல் ஒப்புக்கொண்டபடி சரியாகப் பணத்தைக் கொடுத்து விடுகிறார்கள்.
சொன்ன தேதியில் சரியாக வங்கியில் பணத்தைச் செலுத்தி விடுகிறார்கள்.
பெரிய எழுத்தாளராக இருக்க வேண்டியதில்லை, சுவாரசியமான எழுத்து நடையால் எவரும் வாசகர்களைக் கவர்ந்து அமேசானில் புத்தகத்தை வாங்க வைக்க முடியும்.
குறிப்பாக Kindle ல் வெளியிட எந்த முதலீடும் அவசியமில்லை.
பல்வேறு வசதிகளை அமேசான் ஏற்படுத்தித் தந்துள்ளது. அமேசானில் பலர் குறைந்தபட்சமே மாதம் ₹2500 வரை சம்பாதிக்கிறார்கள். எனவே, சரியான வழிமுறைகளைக் கையாண்டால் எழுத்திலும் நன்கு சம்பாதிக்கலாம்.
அமேசானில் வாங்க –>அறம் Link
கொசுறு
ஜெயமோகனின் பிரபலமான புத்தகமான ‘விஷ்ணுபுரம்’ எல்லோரும் சிலாகித்துக் கூறுகிறார்களே என்று படித்தேன், இரண்டு பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை. பின்னர் பார்த்துப்போம் என்று விட்டுட்டேன்.
தொடர்புடைய கட்டுரைகள்
அமேசான் Kindle ஏன் வாங்க வேண்டும்?!
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி , எனக்கும் ஜெயமோகனின் அறம் தான் துவக்கம் . நீங்கள் இதிகாச புனைவுகளை விரும்பி படிப்பதால் , எனது பார்வையில் வெண்முரசு ஒரு உச்சம் . முதலில் கொஞ்சம் கடினமாக இருக்கும் . போர் வர்ணனை எல்லாம் உங்களை மஹாபாரத காலத்திற்கே கொண்டு செல்லும் . இது கீதை : https://venmurasu.in/imaikkanam/chapter-1
கர்ணன் போருக்கு நுழையும் தருணம் : https://venmurasu.in/kaarkadal/chapter-19/
Thanks for the review Giri. I would recommend you for Yaanai Doctor, Sottru kannakku and Nooru narkaligal short stories in Aram series. All of them are really good. Jeyamohan also wrote lot about travel, life experience, Politics, spirituality and more in his blog.
If interested, https://www.jeyamohan.in/
யானை டாக்டர் பள்ளி பாடப்புத்தகத்தில் உள்ளது. வாசிக்க மிகவும் சுவாரசியமான குறு நாவல்.
@மோகன் நன்றி
வெண்முரசு Kindle பல்வேறு தலைப்புகளில் உள்ளது. ஒரே புத்தகமாகக் கிடைத்தால் வாங்கலாம் என்றுள்ளேன்.
@Manikandan Madhu உங்கள் பரிந்துரைகளைப் படிக்க முயற்சிக்கிறேன்.
ஜெயமோகன் தளம் நன்கு அறிமுகமானது தான் 🙂 .
இதே போல நாட்டுப்புற கலைஞர்களின் துயரை புலிக் கலைஞன் சிறுகதையை அசோகமித்திரன் எழுதியிருப்பார். வாய்ப்பு இருந்தால் வாசிக்கவும்
பரிந்துரைக்கு நன்றி சுரேந்தர்.