தூர்தர்ஷனின் வறட்சியான செய்திகளையே பார்த்துப் பழகிய மக்களுக்குத் தனியார் தொலைக்காட்சிகள் அனுமதிக்கப்பட்ட பிறகு செய்திகள் சுவாரசியமாகத் தெரிந்தன.
இதனால் எட்டு மணி ‘சன்’ செய்திக்குப் பலத்த வரவேற்பு கிடைத்து, செய்திக்கென்றே தனிச் செய்தி சேனல் துவங்கும் அளவுக்கு அதன் வளர்ச்சி இருந்தது.
இதையொட்டி மேலும் பல தனியார் செய்திச் சேனல்கள் துவங்கப்பட்டன, தற்போது வரை புதிதாக உருவாகிக்கொண்டே உள்ளன.
செய்தித்தளங்கள்
இணையம் பிரபலமாகத் துவங்கிய பிறகு பலரும் செய்தித்தளங்கள் என்று ஆரம்பித்து விட்டார்கள். Image Credit
பெரும்பாலான தளங்கள் மற்ற தளங்களில் இருந்து செய்திகளை எடுத்து, மாற்றம் செய்து இவர்களே செய்தியைக் கொடுப்பது போலக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.
சேனல்கள், செய்தித்தளங்களின் எண்ணிக்கை அதிகரித்து என்ன செய்தி கொடுப்பது என்ற போட்டியில் குப்பைகள் அதிகமாகி விட்டன.
Breaking News
செய்தி என்ற பெயரில் எதையாவது கூற வேண்டிய நிலைக்கு அனைவரும் வந்து உருப்படியில்லாத செய்திகளை Breaking News என்று போடத்துவங்கிவிட்டனர்.
இதனால் மொக்கை பிரச்சனைகள் எல்லாம் செய்திகளில் வர ஆரம்பித்து விட்டது. இதையெல்லாமா செய்தி என்று கூறுவார்கள்?! என்று நினைக்கும் அளவுக்கு ஆனது.
அடுத்தக்கட்டமாக, நடிகர் நடிகைகள் தங்களது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் தளங்களில் போடுவதையெல்லாம் செய்தி என்று வெளியிட்டு வருகிறார்கள்.
ஊடகங்கள் இதையெல்லாம் போடுகிறார்கள் என்று தெரிந்தே விளம்பரத்துக்காகக் கண்டதையும் சமூகத்தளங்களில் பகிரும் செயல் அதிகரித்து விட்டது.
சமீபமாக வந்த செய்திகளைக் கவனித்து இருந்தாலே, புரிந்து கொள்ள முடியும்.
செய்திகளை உருவாக்கும் ஊடகங்கள்
Tomorrow Never Dies என்ற ஜேம்ஸ்பாண்ட் படத்தில், செய்திகளை முந்திக் கொடுக்க, ஊடகம் வைத்துள்ள வில்லன் தானே செய்திகளை உருவாக்குவார்.
அதாவது இவரே சம்பவங்களை உருவாக்கி அதைச் செய்தியாக முதலில் கூறுவார்.
அந்த அளவுக்குச் செல்லாமல் தற்போது தமிழகத்தில், நடக்காத ஒன்றை நடந்ததாகக் கிளப்பி விடுகிறார்கள். சம்பந்தப்பட்டவர் இது தவறான தகவல் என்று மறுப்பு செய்தி வெளியிட்டால், அதையும் செய்தியாக்குகிறார்கள்.
செய்தியே கிடைக்காமல் எதையாவது பரபரப்பாக்க வேண்டும் என்றே யாராவது கூறியதாகச் செய்திகளை வெளியிடுகிறார்கள். சமீபமாக இது அதிகரித்து வருகிறது.
மக்களும் காரணம்
ஊடகங்களை மட்டுமே குறை கூற முடியாது. மக்களும் இவற்றைத் தவிர்க்காமல் அதைப் பற்றிப் பேசி விவாதிப்பதால், முக்கியத்துவம் கொடுப்பதால் ஊடகங்களும் தொடர்ச்சியாக இவற்றைச் செய்து வருகின்றனர்.
எந்த ஊடகமும் மக்களின் ஆதரவு இல்லாமல், குறிப்பிட்ட செய்திகளைத் தொடர்ச்சியாக வெளியிடாது. எனவே, மக்களும் திருந்த வேண்டும்.
போதாததுக்கு ஒவ்வொரு சேனலும் ஒவ்வொரு கட்சி சார்ந்து உள்ளது. எனவே, எந்தச் செய்தியையும் நம்ப முடியவில்லை.
செய்தி திணிப்பு, ஒருதலைப்பட்சமான விவாதங்கள் அதிகரித்து விட்டன.
யாரோ குறிப்பிட்டது போல, தூர்தர்ஷன் இருந்தவரை நிம்மதியாக இருந்தோம்.
என்றைக்குத் தனியார் செய்தி சேனல்கள் வர ஆரம்பித்தனவோ மக்களின் நிம்மதியும் தொலைந்து விட்டது. எப்போதும் எதிர்மறை செய்திகளே உள்ளன.
செய்திகளை உருவாக்கும் ஊடகங்கள், எதிர்காலத்தில் செய்திக்காக என்னவெல்லாம் செய்யப்போகிறார்களோ என்று நினைத்தாலே கிறுகிறுக்கிறது.
தொடர்புடைய கட்டுரைகள்
கிரி, நீங்க குறிப்பிட்டது போல் அன்றைக்கு தூர்தர்ஷன் மட்டும் இருந்தது.. அது வெளியிடும் செய்திகளில் நம்பகத்தன்மை இருந்தது.. இன்று பல செய்தி நிறுவனங்கள் உள்ளது ஆனால் வெளியீடும் செய்திகளில் எந்த அளவிற்கு நம்பகத்தன்மை இருக்கிறது என்பது எல்லோரும் அறிந்ததே!!! நேற்று கூட ஒரு செய்தி பார்த்தேன், நடிகர் சூரிக்கும் , விஷ்ணு விஷாலுக்கும் ஏதோ நிலம் வாங்கியதில் பிரச்சனை என்று, இருவரும் சினிமா துறையில் பிரபலமாக இருப்பதால் இந்த செய்திகளை வெளியிட வேண்டிய கட்டாயத்தில் சேனல்கள் இருக்கிறது.. நாம் பார்க்க வேண்டாம் என்றாலும் கூட நாம் மீது திணிக்கப்படுகிறது..
(கவுண்டமணி சார் சொல்வது போல இது வரைக்கும் தமிழ்நாட்டில் யாரும் நெலம் வாங்கலையோ இல்ல , விக்கலையா, இல்ல எந்த பஞ்சாயத்தும் வரவே இல்லையா????? இது ஒன்னு மட்டும் தான் செய்தி என்பது போல நேற்று எல்லா சேனல்களிலும் இந்த செய்தியை பார்த்ததாக நியாபகம்.. (என் வீட்டில் டிவி இல்லை, நண்பன் வீட்டிற்கு IPL பார்க்க சென்றதின் விளைவு)..சாதாரண செய்திகளையெல்லாம் Breaking News ஆக பார்த்து, பார்த்து தற்போது உண்மையில் Breaking News வந்தால் கூட மிக சாதாரனமாக கடந்து விடுவதாக நினைக்கிறன்.. இதுவும் ஒரு விதமான ஊடக அரசியல்..
(செய்திகளை உருவாக்கும் ஊடகங்கள், எதிர்காலத்தில் செய்திக்காக என்னவெல்லாம் செய்யப்போகிறார்களோ என்று நினைத்தாலே கிறுகிறுக்கிறது.) வேறு எதுவும் செய்ய வேண்டாம்..நாம் முற்றிலும் இவர்களை விட்டு விலகி விடுவது நல்லது.. உங்களுக்கு தீமை செய்தவர்களை பார்க்கும் போது கூட சின்னதா, ஒரு மெல்லிய புன்னகையோடு கடந்து சென்றோம் என்றால், அந்த புன்னகை ஆறாத ரணத்தை அவர்களுக்கு உண்டாகும்.. அதுபோல தான் இவர்களையும் எல்லோரும் கடந்து சென்றோம் என்றால் ஆறாத ஒரு ரணத்தை ஏற்படுத்த முடியும் .. பகிர்வுக்கு நன்றி கிரி ..
“கவுண்டமணி சார் சொல்வது போல இது வரைக்கும் தமிழ்நாட்டில் யாரும் நெலம் வாங்கலையோ இல்ல , விக்கலையா, இல்ல எந்த பஞ்சாயத்தும் வரவே இல்லையா?”
🙂 🙂 மக்கள் இதை ஆர்வமாகக் கேட்பதால் அவர்களும் போட்டுத் தாக்கிக்கொண்டுள்ளார்கள்.
தற்போது Breaking News என்பதற்கான மதிப்பே போய் விட்டது.
தொலைக்காட்சி செய்திகளை முற்றிலும் புறக்கணித்து விட்டேன்.. எதேச்சையாக பார்த்தாலே கடுப்பாகுது.