5 முதலாளிகளின் கதை

3
5 Muthalaaligalin kathai 5 முதலாளிகளின் கதை

திருப்பூரைச் சேர்ந்த வலைப்பதிவர் (Blogger) ஜோதிஜியை பற்றிப் பலருக்கு தெரிந்து இருக்கும் அவர் எழுதிய புத்தகம் 5 முதலாளிகளின் கதை.

இத்தளத்தை Blog சாராத பொது வாசகர்கள் தான் அதிகம் படிக்கிறார்கள் என்பதாலே இந்த அறிமுகம், மற்றபடி வலைத்தளத்தைத் தொடரும் அனைவருக்கும் ஜோதிஜியைத் தெரியும்.

ஏராளமான புத்தகங்கள் சரமாரியாக எழுதித்தள்ளுவார். அதாவது ஒரு கட்டுரை எழுதுற மாதிரி ஒரு புத்தகத்தையே எழுதி விடுவார். எப்படிடா இத்தனையை எழுதித் தள்ளுறாரு! நம்ம ஒரு புத்தகத்தையே எழுத முடியலையே என்று நினைப்பேன் 🙂 .

சிலருக்கு தெரிந்து இருக்கலாம், தற்போது ‘Amazon Kindle’, எழுத்தாளர்களுக்கான புத்தகப் போட்டியை அறிவித்துள்ளது, பரிசு ஐந்து லட்சம்!

புத்தகம் கூட எழுதி விடலாம் ஆனால், போட்டிக்கான விதிமுறைகளில் உள்ள ஓட்டைகளை மீறிப் பிரபலம் இல்லாத திறமையானவர் வெற்றி பெறுவது கடினம்.

இப்போட்டிக்காக நண்பர் ஜோதிஜி எழுதிய புத்தகமே –> 5 முதலாளிகளின் கதை.

புத்தகத்தின் சுருக்கம்

1992 ல் திருப்பூருக்கு வரும் ஜோதிஜி, பின்னலாடை துறையில் எவ்வாறு தனது பாதையை, பல்வேறு வகையான மக்களை, பிரச்னைகளைக் கடந்து, தொழில்நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு எப்படி முன்னேறி வந்தார் என்பதே!

உங்களுக்குத் திருப்பூர் பின்னலாடை பற்றிய தகவல்கள் பற்றி எதுவுமே தெரியாது என்றாலும், இப்புத்தகத்தைப் படித்தால் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும். ஓ! இவ்வளோ விஷயம் இருக்கா! என்று வியப்படையலாம்.

புதிதாக அதுவும் இளம்வயதில், அனுபவம் இல்லாமல் ஒரு துறைக்கு வரும் போது ஏற்படும் இன்னல்கள், ஏமாற்றங்கள், பலரின் ஒடுக்குதல்கள், விமர்சனங்கள், அவமானங்கள் என்று ஒரு சராசரி நபர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை விளக்கமாகக் கூறியுள்ளார்.

நானும் 21 வயதிலேயே பணிக்கு வந்து விட்டதால் (நான் கல்லூரி செல்லவில்லை) இவரது அனுபவங்களை என்னால் முழுக்க உணர முடிந்தது.

இன்னொன்று, என்னுடைய பெரியப்பா மகனும், இதே பின்னலாடை துறையில் தான் சிறு நிறுவனம் நடத்தி வருகிறார் என்பதால், ஜோதிஜி கூறியதை என்னால் என் அண்ணன் கூறியதோடு ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது.

இதில் உள்ள சில பிரச்சனைகளையும் முன்பே அறிந்து இருக்கிறேன் என்பதால், புத்தகத்தோடு என்னால் பொருந்த முடிந்தது.

பாலியல் தொந்தரவுகள்

பின்னலாடை துறையில் உள்ள பாலியல் தொந்தரவுகளையும் அவற்றைத் தான் எவ்வாறு எதிர்கொண்டேன் என்பதையும் விளக்கமாகவே கூறியுள்ளார்.

இவற்றை ரொம்ப விளக்கமாகக் கூறாமல், மேலோட்டமாகக் கூறி இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும்.

பாலியல் பிரச்சனைகள் எங்கே தான் இல்லை! அனைத்து துறைகளிலும் அந்தந்த துறைக்கேற்ப நடந்துகொண்டு தான் உள்ளது.

எனவே, என்னதான் மற்ற தகவல்கள் பல இருந்தாலும், படித்து முடித்தவர்களுக்கு மற்றவற்றை விட இவையே மனதில் அழுத்தமாக நிலைத்து நிற்கும்.

சிறு முதலீட்டில் இலாபம்

அனுபவம் இல்லாமல் தொழிலை ஆரம்பிக்கும் சிலர் துவக்கத்தில் இருந்த வரவேற்பு காரணமாக, சிறு முதலீட்டிலேயே அதிக இலாபத்தைப் போட்டியில்லாததால் பெற்று உள்ளார்கள்.

எளிமையாகப் புரியும் படி கூற வேண்டும் என்றால், முன்பு (90’s) 100% க்கு 40% இலாபம் பெற்றால், தற்போது (2019) 5% இலாபம் பெறுவதே சிரமம் என்று கூறுகிறார். உங்களால் தற்போது வித்யாசத்தை உணர முடியும்.

இதனால் அப்போது கிடைத்த அபரிமிதமான இலாபத்தால் பலர் அதை முறையாகப் பயன்படுத்தாமல், தவறான வழிகளில் பணத்தைச் செலவு செய்து, ஆடம்பரத்துக்குப் பயன்படுத்திச் சில ஆண்டுகளிலேயே நட்டம் அடைந்து காணாமல் போய் இருக்கின்றனர்.

தொழில் நேர்மை

ஜோதிஜி கூற வருவது, எவரொருவர் தன்னுடைய தொழிலில் நேர்மையாகவும், ஒழுக்கத்துடனும், கடுமையான உழைப்புடனும், பேராசைப்படாமல் தொழில் செய்கிறார்களோ அவர்களே நிலைத்து நிற்கிறார்கள் என்பதை ஆணித்தரமாகக் கூறி இருக்கிறார்.

அதற்கு எடுத்துக்காட்டாக இறுதியில் ஒரு தொழிலதிபர் பற்றித் தரவுகளுடன் கூறி இருக்கிறார்.

ஒன்றுமே இல்லாத பின்னலாடை தொழிற்சாலையில் பணிக்குச் சேர்ந்து, ஒவ்வொரு பிரச்சனைகளையும் எப்படிக் களைந்து, முன்னேற்றத்தைக் கொண்டு வந்தார் என்று படிக்கும் போது வியப்பாக இருந்தது.

துவக்கத்திலேயே 10 கோடி பரிமாற்றம் அளவுக்குப் பொறுப்பை ஏற்று இருக்கிறார் என்பது மலைக்க வைத்தது.

ஜோதிஜி கூறும் பின்வரும் வார்த்தைகள் என்னை ரொம்பக் கவர்ந்தது.

ஒருவரிடம் பணி புரிந்தால், சுய பாதுகாப்பு என்பது நம்மைச் சுகமாகத்தான் வைத்திருக்கும் ஆனால், நம் எல்லைகள் வரையறைக்குள் இருக்கும். ஆசைகள் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்கும்.

காயம்படக் கூடாது ஆனால், நான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கே எதுவுமே இல்லை ஆனால், நாம் சுயமாக ஒன்றை செய்யும் போது அளவில்லாத எல்லைகளும், நம்மிடம் உள்ள அனைத்து விதமான திறமைகளையும் வாழ்நாளுக்குள் சோதித்துப் பார்த்து விட முடியும்.

துன்பங்களை மட்டுமல்ல மனித வாழ்க்கையில் எத்தனை வசதிகள் உள்ளது அத்தனையையும் அனுபவித்து விட முடியும். இவற்றையெல்லாம் விட உங்களுக்குக் கிடைக்கும் சுதந்திரமென்பதற்கு விலையே கிடையாது‘.

சுய தொழில்

இதனாலயே எனக்குச் சுய தொழில் செய்பவர்கள் மீது அபரிமிதமான மரியாதை உண்டு. நம்மால் முடியாததைத் தன்னம்பிக்கையுடன் சாதிக்கிறார்கள் என்பதில், பொறாமை படக் கூடாது என்பதையும் தாண்டிச் சிறு பொறாமை வருகிறது 🙂 .

ஜோதிஜியின் இப்புத்தகம் கூறும் மையக்கருத்து என்னவென்றால், ‘கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது, கஷ்டப்படாம கிடைக்கிறது என்னைக்குமே நிலைக்காது‘ 🙂 .

புத்தகத்தில் எழுத்துப்பிழைகளும், ஒரே வார்த்தை இரு முறை தொடர்ச்சியாக வருவதும் உள்ளது. அதோடு போட்டிக்குத் திடீர் என்று எழுதி இருப்பதால் (என்று நினைக்கிறேன்), எழுத்தில், சொல்ல வந்த கருத்தில் அவசரம் தெரிகிறது.

இதை வரும் இடைப்பட்ட நாட்களில் திருத்திப் புதுப்பிக்கலாம். ஏனென்றால், அமேசானில் எத்தனை முறை வேண்டும் என்றாலும் எழுதியதை திருத்தி வெளியிடலாம்.

நண்பர் ஜோதிஜி இப்போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள். இதைப்படிப்பவர்களும் பின்வரும் இணைப்பில் சென்று புத்தகத்தை வாங்கலாம் அல்லது Kindle Unlimited ல் இலவசமாகப் படிக்கலாம்.

Amazon E-Book –> 5 முதலாளிகளின் கதை Link

கொசுறு

Kindle ல் புத்தகம் படிப்பது செமையா இருக்கு, திறன்பேசி பயன்பாடு வெகுவாகக் குறைந்து விட்டது. ஒரு வருடத்தில் படிக்கும் புத்தகங்களின் எண்ணிக்கையை 30 நாட்களிலேயே முடித்து விட்டேன் 🙂 .

தற்போது கூட ‘Sita – The Warrior of Mithila’ படித்துக்கொண்டு இருக்கிறேன். இப்புத்தக விமர்சனத்தோடு இன்னும் சில பயனுள்ள Kindle தகவல்களையும் கூறுகிறேன், உங்களுக்கு Kindle வாங்க தோன்ற வைக்கலாம் 🙂 .

ஆங்கிலம் இந்தி தமிழ்

இப்போட்டி ‘ஆங்கிலம் இந்தி தமிழ்’ மொழிகளுக்கு மட்டுமே என்பது வியப்பளிக்கிறது.

தமிழில் புத்தகம் விற்பனையாவதில்லை என்று பலர் புலம்புகிறார்கள் ஆனால், அமேசான் பிராந்திய மொழிகளுள் தமிழை மட்டும் இணைத்து இருப்பது, தமிழுக்கான வரவேற்பை கூறுகிறது.

பலருக்கு Kindle அறிமுகம் இல்லாத இப்பவே இப்படின்னா, இன்னும் 3 – 5 வருடங்களில் தமிழ் மிக முக்கிய, தவிர்க்க முடியாத இடத்தை Kindle ல் பெற்று இருக்கும்.

எனவே, எழுதுபவர்கள் அனைவரும் இதில் தற்போது இருந்தே புத்தகம் வெளியிடுவது நல்லது.

ஏனென்றால், பின்னர் கூட்டம் அதிகமாகி விடும், தனித்துத் தெரிவது என்பது கடினம், வருடங்கள் எடுக்கும். ஜோதிஜி புத்தகத்தில் கூறியபடி துவக்கத்தில் என்றால் 40% வாய்ப்பு பின்னர் என்றால், 5% தான் வாய்ப்பு 🙂 .

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

 1. இத்தளத்தை Blog சாராத பொது வாசகர்கள் தான் அதிகம் படிக்கிறார்கள் என்பதாலே இந்த அறிமுகம், மற்றபடி வலைத்தளத்தைத் தொடரும் அனைவருக்கும் ஜோதிஜியைத் தெரியும்.

  வடிவேல் சொன்னது தான் இப்போது என் நினைவுக்கு வருகிறது கிரி. இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி. உங்க மூலம் எனக்கு அறிமுகமான யாசின் தம்பிக்கு சில வாரங்களுக்கு முன்பு தான் என்னை அடையாளம் தெரிந்து சமீப காலமாக உள்ளே வந்து வாசித்துக் கொண்டு இருக்கிறார். நாம் பச்சக்குழந்தை. படா படா ஆட்கள் இருக்கின்றார்கள் கிரி. என் புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி.

 2. கிரி.. Kindle பற்றி உங்களுடைய சமீபத்திய பதிவுகள், என்னை வெகுவாக கவர்ந்து இருக்கிறது.. இன்னும் கொஞ்ச நாளில் வாங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. சமீபத்தில் தான் ஜோதிஜியின் பதிவுகள் சிலதை படித்தேன்.. அவரின் திறனை கண்டு வியந்தேன் என்பதை விட அந்த மிரட்சியிலிருந்து இன்னும் மீளவில்லை!!!

  இந்த புத்தகத்தை இன்னும் படிக்கவில்லை.. ஆனால் படிக்க ஆர்வம் இருக்கிறது.. முதல் காரணம் சாதாரண ஒரு தனி மனிதன் கீழிருந்து மேல் செல்லும் போது, தான் கடந்து வந்த பாதையில் மிதித்த முட்களையும், பூக்களையும் பற்றிய அலங்காரமில்லாத அனுபவம்!!!

  அடுத்தது, நான் இரண்டு ஆண்டுகள் மட்டும் இரும்பு உருக்கு ஆலையில் பணிபுரிந்து விட்டு, ஒரு ஆண்டு மட்டும் நூற்பாலையில் பணிபுரிந்தேன்.. ஆனால் இரண்டு நிறுவனங்களுக்கான வேறுபாடுகள் மிக அதிகம்!!! சொல்லப்போனால் இரண்டு திசையும் வேறு வேறு!!!

  அவருக்கு நூற்பாலை துறையில் அனுபவம் அதிகம் இருப்பதால் நிறைய தெரியாத தகவல்கள் குறித்து கூறி இருக்கலாம்.. அதை தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கிறது.. எல்லாவற்றிக்கும் மேலாக இன்னும் அந்த துறையில் பணிபுரிந்து கொண்டே, அதை பற்றி எழுதியிருப்பது கூடுதல் சிறப்பு!!!

  புத்தகத்தை இன்னும் கொஞ்சம் நாட்களில் படித்து விட்டு நான் என்கருத்தை பகிர்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

 3. @ஜோதிஜி ரொம்ப தன்னடக்கமா பேசுறீங்க.. 🙂

  @யாசின் படித்துப் பாருங்க.. நல்லா இருக்கு. நீங்க சொன்ன மாதிரி உங்களுடைய அனுபவங்கள் கூட இதில் இருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here