மிகப்பெரிய மனநிறைவை அளித்த படமாக 12th Fail உள்ளது. Image Credit
12th Fail
மத்திய பிரதேச மாநிலத்தில் சிறு கிராமத்தில் IPS என்பதற்கு அர்த்தமே தெரியாத ஒருவன், 12th Fail ஆன ஒருவன், எப்படி IPS தேர்வாகிறான் என்பதே 12th Fail.
1997 ம் ஆண்டில் படம் துவங்குகிறது. இதுவொரு உண்மைக்கதை.
Stop Cheating
பீஹார் மாநிலத்தில் மாணவர்கள் தேர்வைப் பார்த்து எழுதப் பள்ளியே உதவும் காட்சிகள் சில வருடங்களுக்கு முன் சமூகத்தளத்தில் வந்து பரபரப்பாகியது.
அது போன்ற ஒரு பள்ளியில் படிக்கும் மாணவன் மனோஜ். மனோஜ் தந்தையும், பாட்டியும் (அப்பாவின் அம்மா) மிக நேர்மையானவர்கள்.
ஒரு நேர்மையான காவல் அதிகாரி சோதனைக்கு வந்து, அங்குப் பள்ளியே காபி அடிக்க உதவுவதைக் கண்டு நடவடிக்கை எடுக்க, மனோஜ் 12th Fail ஆகி விடுகிறான்.
இந்த நிலையில் நேர்மையான காவல் அதிகாரியிடம் (DSP), உங்களைப் போலக் காவல் அதிகாரியாக என்ன செய்ய வேண்டும்? என்று மனோஜ் கேட்பான்.
‘Stop Cheating’ என்று இரத்தினச் சுருக்கமாகக் கூறும் ஒரு பதில், ஒருவன் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதைப் பார்க்க வியப்பாக உள்ளது.
காவல் அதிகாரியிடம் Knock Out கேள்வி கேட்டு அவரை இரவிலும் காவல் நிலையம் வரவைப்பது சுவாரசியம் 🙂 . கேட்கும் கேள்வி மிக நியாயமாக இருக்கும்.
போராட்டம்
கிடைக்கும் நட்பின் மூலம், IPS என்ற பதவியுள்ளது அதற்கு UPSC தேர்வு எழுதித் தேர்வாக வேண்டும் என்பதைத் தெரிந்து, அதை நோக்கிப் பயணிப்பது தான் படமே!
கதையைக் கேட்க என்னவோ ஆவணப்படம் போல இருக்கும் ஆனால், அப்படியல்ல. கொஞ்சம் கூடச் சலிப்புத்தட்டாத திரைக்கதை.
படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே ஈர்த்து, இது வழக்கமான படமல்ல என்ற புரிதலைக் கொடுத்து விடுகிறது.
UPSC தேர்வு பற்றிக் கேள்விப்பட்டு இருந்தாலும், எப்படியான தேர்வு, எவ்வளவு கடினம் என்பதை அறியும் போது கிறுகிறுத்து விடுகிறது.
கடவுள் நமக்கு உதவுகிறாரா? கட்டுரை நினைவுக்கு வந்து சென்றது. நாம் நேர்மையாக, கடுமையாக முயற்சிக்கும் போது யாராவது உதவுகிறார்கள்.
நேர்மையும் ஊக்கமும்
நேர்மையாக இருப்பவர்கள் இப்படம் பார்த்தால், வாழ்க்கையில் நேர்மையைத் தொடர வேண்டும் என்பதை உறுதியாக்குவார்கள்.
இப்படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய நேர்மறை எண்ணங்கள் தோன்றும். மாணவர்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும்.
இதற்கு முக்கியக்காரணம், இப்படத்தில் மனோஜாக நடித்த விக்ரந்த். கொஞ்சம் கூட மிகை நடிப்பு இல்லாமல், அக்கதாபாத்திரமாகவே மாறியுள்ளார்.
மனோஜ் போல அர்ப்பணிப்புடன் படித்துத் தேர்வாகி வருபவர்களால், அதிகாரியான பிறகு எப்படி லஞ்சம், ஊழல் என்ற குப்பையில் விழ முடிகிறது!
நடித்தவர்கள் அனைவருமே சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர், எங்குமே நாடகத்தன்மை இல்லை. இறுதிக் காட்சிகள் உணர்ச்சிகரமானவை.
நேர்மறை எண்ணங்கள்
ஒளிப்பதிவு அட்டகாசமாக உள்ளது.
காட்சிகள் கிராமமாக இருந்தாலும், நகரமாக இருந்தாலும் உயிரோட்டமாக உள்ளது. படத்தோடு நம்மை ஒன்ற வைப்பது திரைக்கதை, நடிப்பு மற்றும் ஒளிப்பதிவு.
படத்தின் சுவாரசியத்தில் பின்னணி இசையைக் கவனிக்க மறந்து விட்டேன்.
ஒரு ஏழை மாணவன், படிப்பு பற்றிய விழிப்புணர்வு இல்லாத மாணவராக மட்டுமே காட்டப்பட்டு இருக்கும். வேறு எந்தத் திணிப்பும் இல்லை.
இதையே தமிழில் எடுத்தால், சாதியைப் புகுத்தி, கதையின் மையக் கருத்தைச் சிதைத்து அனைவரிடையே வெறுப்புணர்வை கொண்டு வந்து விடுவார்கள்.
எப்படி சாதியைத் திணிக்காமல் டாணாக்காரன் அழகாக கொடுக்கப்பட்டதோ அதே போல இப்படமும் தமிழில் வந்தால், வரவேற்கலாம்.
இந்தியாவின் இன்னொரு பக்கத்தை 12th Fail காண்பிக்கிறது. அதோடு UPSC தேர்வுகள் எவ்வளவு கடினமானது என்பதை ஒவ்வொருவருக்கும் உணர்த்துகிறது.
யார் பார்க்கலாம்?
அனைவரையும் பார்க்கத் தாறுமாறாகப் பரிந்துரைக்கிறேன்.
குறிப்பாக மாணவர்கள் அதிலும் குறிப்பாக NEET, JEE, UPSC போன்ற தேர்வுகளுக்குப் படிப்பவர்கள். தரமான நல்லதொரு சுவாரசியமான திரைக்கதை.
இறுதிக் காட்சிகளில் பலமுறை கண்கலங்கி விட்டேன் 🙂 . சமீப வருடங்களில் அதிகம் ஈர்த்த, நேர்மறையாகப் பாதித்த படமாக 12th Fail உள்ளது.
இயக்குநருக்கே முழுப்பாராட்டுகளும். பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கியுள்ளார், தயாரித்துள்ளார். அதில் ஒன்று 3 Idiots.
இப்படத்தை அனைத்து மாணவர்களும் பார்க்கப் பள்ளிகளில் ஏற்பாடு செய்யலாம். ஊக்கமாக அமைவதோடு இவ்வகை தேர்வுகளுக்கு விழிப்புணர்வாக அமையும்.
பரிந்துரைத்தது சூர்யா. Disney+ Hotstar ல் காணலாம்.
Directed by Vidhu Vinod Chopra
Written by Vidhu Vinod Chopra
Based on 12th Fail by Anurag Pathak
Produced by Vidhu Vinod Chopra, Yogesh Ishwar,
Starring Vikrant Massey, Medha Shankar, Anant V Joshi, Anshumaan Pushkar
Narrated by Anant V Joshi
Cinematography Rangarajan Ramabadran
Edited by Jaskunwar Kohli, Vidhu Vinod Chopra
Music by Shantanu Moitra
Distributed by Zee Studios
Release date 27 October 2023
Running time 146 minutes
Country India
Language Hindi
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
// இறுதிக் காட்சிகளில் பலமுறை கண்கலங்கி விட்டேன் 🙂 . சமீப வருடங்களில் அதிகம் ஈர்த்த, நேர்மறையாகப் பாதித்த படமாக 12th Fail உள்ளது. //
நிறைய காட்சிகளில் பலமுறை கண்கலங்கி விட்டேன். மூன்று முறை பார்த்துவிட்டேன்.
கண்டிப்பாக ஏதாவது ஒரு காட்சியில் “நம்மையே நாம் பார்த்துவிடக்கூடிய ” ஒரு படம்.
ஷ்ரத்தா வீட்டிற்கு சென்ற மனோஜ் தொலை பேசியில் பேசும் அந்த 4.2+ நிமிட ஒரே ஷாட், சினிமாவில் அணைத்து துறையினருக்கும் ஒரு பாடம்.
எழுத சிரமப்படுற நானே இந்த படம் பற்றி ஒரு 3 பக்கம் எழுதுவேன் போல 🙂
ரெம்ப சின்ன ரிவியூ கிரி 🙂
அணைத்து நடிகர்களின் பாத்திரத் தேர்வும், அதற்கான அவர்களின் பங்களிப்பும் 100%
கிரி.. படம் ரிலீஸ் ஆன போது அதை குறித்து விமர்சங்களை படித்தேன்.. பொதுவாக 95% நல்ல ரிவியூ தான் இருந்தது.. டைரக்டரும் தரமான ஒருவர்.. இவர் எடுத்த / எழுதிய / தயாரித்த பெரும்பான்மை படங்கள் வெற்றி படங்களே.. வாய்ப்பு கிடைக்கும் போது படத்தை பார்க்க முயற்சிக்கிறேன்..
இந்த கதை போல என் சொந்த ஊரில் ஒரு கதை உண்டு.. தற்போது அவருக்கு 55 வயதிற்கு மேல் இருக்கும்.. ஏதோ ஒரு வைராக்கியத்தில் வீட்டில் சண்டை போட்டு விட்டு, வீட்டை விட்டு வெளியேறி வட இந்தியா சென்று, சில ஆண்டுகள் குடும்ப தொடர்பே இல்லாமல், ஒரு நாள் உயரதிகாரியாக எங்கள் ஊருக்கு திரும்பினார். தற்போது குஜராத்தில் காவல் துறையில் பணி புரிகிறார் என்று நினைக்கிறேன்.. இது நான் சிறுவனாக இருந்த போது நடந்த நிகழ்வு.. அதனால் எனக்கு கூடுதல் தகவல்கள் ஏதும் தெரியவில்லை.. ஆனால் சம்பவம் உண்மை..
Aspirants (TVF Aspirants) இந்த webseries யும் நன்றாக இருக்கும் என நம்புகிறேன்.. இரண்டு பாகங்கள் உள்ளது. சில காணொளிகளை youtube இல் பார்த்தேன்.. அருமையாக இருந்தது.. கொஞ்சம் அமைதியான சுழலில் பார்க்க வேண்டும் என்பதால் நான் இன்னும் பார்க்கவில்லை. நீங்கள் முயற்சித்து பார்க்கவும்.. நிச்சயம் உங்களை இந்த சீரிஸ் வித்தியாசமான ஒரு அனுபவத்தை கொடுக்கும். PRIME இல் இருக்கிறது என எண்ணுகிறேன்.
கல்லூரி பருவத்தில் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற உத்வேகம் அதிகம் இருந்தது.. இதற்காக நான் நிறைய மெனக்கெடல்கள் எடுத்தேன்.. ஆனால் சூழல் சரியாக அமையாததால், நான் பாதை மாறி பயணிக்க நேரிட்டது.. கோவைக்கு வேலைக்கு சென்ற பின்பும் என் தேடல் தொடர்ந்தது.. ஆனால் ஒரு கட்டத்தில் என் முயற்சியை கை விட்டு விட்டேன்.. என்னுடன் படித்த சில நண்பர்களை தற்போது சந்திக்க நேரிடும் போது, சிலர் அரசு பணியில் உள்ளதை கூறும் போது, சில நேரம் நான் இன்னும் முயற்சித்து இருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து போகும்..
நான் சக்தியுடன் கொண்ட நட்பு இறுக்கமானதற்கு ஒரு சிறு உதாரணம்.. நான் நிறுவனத்தில் பணி புரிந்த போது RRB தேர்வு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விரைவு தபாலில் அனுப்ப வேண்டும். அன்று தான் கடைசி நாள்.. லோக்கல் தபால் நிலையத்துக்கு சென்ற போது விரைவு தபால் வசதி இல்லை என்றனர். பின்பு அறை நண்பன் சக்தியிடம் கொடு. (அப்போது சக்தி எனக்கு பழக்கம் இல்லை) அவர் அண்ணூரில் போஸ்ட் செய்வார் என்றார்.. நானும் தயங்கி செய்தியை கூறி அவரிடம் கொடுத்தேன்.
பின்பு சாயந்தரம் நிறுவனத்தில் சக்தி என்னிடம் போஸ்ட் செய்து விட்டேன். ரசீது / மீதி பணமும் கொடுத்தார்.. ரசீதை பார்க்கும் போது மேட்டுப்பாளையம் தபால் அலுவலகத்தின் ஸ்டாம்ப் இருந்தது. பின்பு விசாரிக்கும் போது அன்னுருக்கு சென்ற போது இந்த சேவை இல்லை, பின்பு காரமடை சென்றேன், அங்கும் இந்த சேவை இல்லை. இறுதியில் மேட்டுப்பாளையம் சென்று போஸ்ட் செய்தேன் என்றார்.. மேட்டுப்பாளையம் சென்று திரும்பி வர பணிக்கு தாமதமும் ஆகி விட்டது.. சக்தியின் இந்த செயல் அவர் மீது ஒரு பெரிய மரியாதையை வர வைத்தது.. இந்த நிகழ்வு தான் எங்கள் நட்பு ஆழமாக காரணமாக அமைந்தது.. சக்தியின் நினைவில் இந்த நிகழ்வு இருக்கிறதா?? என்று எனக்கு தெரியவில்லை.. ஆனால் நான் என்றைக்கும் இதை மறக்க மாட்டேன்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Ragu
“ஷ்ரத்தா வீட்டிற்கு சென்ற மனோஜ் தொலை பேசியில் பேசும் அந்த 4.2+ நிமிட ஒரே ஷாட், சினிமாவில் அணைத்து துறையினருக்கும் ஒரு பாடம்.”
இக்காட்சியில் மனோஜ் ஏமாற்றம் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும்.
பல்வேறு உணர்வுகள் அக்காட்சியில் இருக்கும். எதிர்பார்ப்பு, ஏமாற்றம், அவமானம், அதிர்ச்சி ஆகியவை.
“எழுத சிரமப்படுற நானே இந்த படம் பற்றி ஒரு 3 பக்கம் எழுதுவேன் போல 🙂
ரெம்ப சின்ன ரிவியூ கிரி 🙂”
என்னை விட்டால், இன்னும் இது போல் இரண்டு எழுத சரக்கு உள்ளது ஆனால், படிப்பவர்களுக்கு சலிப்பாகி விடும்.
தற்போதெல்லாம் பெரியதாக எழுதினால் படிப்பவர்கள் குறைந்து விட்டார்கள். எனவே தான், தற்போதெல்லாம் ஒரு சில கட்டுரைகள் தவிர்த்து மற்றவற்றை சுருக்கமாக எழுதுகிறேன்.
அதோடு விமர்சனம் பெரியதாக எழுதும் போது காட்சிகளையும் குறிப்பிட வேண்டியதாகி விடும். அது படம் பார்ப்பவர்களுக்கு சுவாரசியத்தை குறைக்கும் என்பதாலே திரைவிமர்சனத்தை சுருக்கமாக எழுதுகிறேன்.
ஒரு சில கதையைப் பெரியதாக விமர்சனம் எழுதலாம், அதையும் எழுதி இருக்கிறேன்.
இப்படத்தை ரசித்தவர்களுக்கு எவ்வளவு எழுதினாலும் போதாது 🙂 .
“அணைத்து நடிகர்களின் பாத்திரத் தேர்வும், அதற்கான அவர்களின் பங்களிப்பும் 100%”
உண்மை!
அந்த நூலக நபர் எதனால் மனோஜை அவசியமே இல்லாமல், கோபித்துக்கொண்டார் என்பது தான் புரியவில்லை.
ஒருவேளை மனோஜ் தனது அப்பா மீது எவ்வளவு மரியாதை வைத்துள்ளான் என்பதை காட்டுவதற்காக வைத்து இருப்பார்களோ!
@யாசின்
“வாய்ப்பு கிடைக்கும் போது படத்தை பார்க்க முயற்சிக்கிறேன்..”
அவசியம் பாருங்க யாசின். அருமையான படம்.
“சில ஆண்டுகள் குடும்ப தொடர்பே இல்லாமல், ஒரு நாள் உயரதிகாரியாக எங்கள் ஊருக்கு திரும்பினார். ”
செம 🙂
“Aspirants (TVF Aspirants)”
பார்க்க முயற்சிக்கிறேன், ஏற்கனவே ஏகப்பட்டது பட்டியலில் உள்ளது. நேரமில்லை.
“கல்லூரி பருவத்தில் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற உத்வேகம் அதிகம் இருந்தது.. இதற்காக நான் நிறைய மெனக்கெடல்கள் எடுத்தேன்.”
எனக்கெல்லாம் விழிப்புணர்வே இல்லை.
இன்றுவரை ரயில்வே துறையில் முயற்சிக்காமல் விட்டோமே என்று வருத்தமாக உள்ளது. தற்போதும் அந்த ஏக்கம் உள்ளது.
“சக்தியின் இந்த செயல் அவர் மீது ஒரு பெரிய மரியாதையை வர வைத்தது.. இந்த நிகழ்வு தான் எங்கள் நட்பு ஆழமாக காரணமாக அமைந்தது.”
Well deserved reason 🙂
“சக்தியின் நினைவில் இந்த நிகழ்வு இருக்கிறதா?? என்று எனக்கு தெரியவில்லை.. ஆனால் நான் என்றைக்கும் இதை மறக்க மாட்டேன்.”
சக்திக்கும் நினைவு இருப்பதாகக் கூறி விட்டார் 🙂 .
கிரி, இந்த படத்தை பற்றி எழுதுவீர்கள் என்று நினைத்தேன். நம்பிக்கை வீண் போகவில்லை. தன்நம்பிக்கை அளிக்கும் இந்த படத்தில் அதிக மிகை உணர்ச்சி இல்லாமல், இயல்பாக எடுத்த இயக்குனரை பாராட்ட வேண்டும்.
தனித்துவமான இசை இப்படத்தில் உள்ளது. அதனால் தான் பார்ப்பவர்கள் காட்சிக்குள் ஆழ்ந்து செல்ல இசை தடையாக அமையவில்லை. கிராமத்து காட்சிகளில் வரும் இசையை சற்று நோக்கினால் உங்களால் உணர முடியும்.
@மணிகண்டன்
“தனித்துவமான இசை இப்படத்தில் உள்ளது. அதனால் தான் பார்ப்பவர்கள் காட்சிக்குள் ஆழ்ந்து செல்ல இசை தடையாக அமையவில்லை”
இருக்கலாம். தொந்தரவாக இசை இல்லை. உண்மையே!