API என்றால் என்ன?

5
What is API

ற்போது அவ்வப்போது API என்ற வார்த்தையைக் கேட்டு இருப்பீர்கள் ஆனால், அதன் பயன் என்னவென்று தெரியாமல் இருக்கலாம். அது என்னவென்று பார்ப்போம்.

API (Application Programming Interface)

இரு Applications இடையே தொடர்பை ஏற்படுத்தும், தகவல்களைப் பரிமாறிக்கொள்ள உதவும் தொழில்நுட்பமே API என அழைக்கப்படுகிறது. Image Credit

எடுத்துக்காட்டுடன் கூறுங்கள்

MakeMyTrip தளம்பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதில் பல விமான நிறுவனங்களின் விமானப் புறப்பாடுகள் தகவல்கள் இருக்கும்.

இதன் மூலம் தனித் தனியாக ஒவ்வொரு விமான நிறுவனத்தின் தளத்துக்கும் சென்று பார்க்காமல், ஒரே இடத்திலேயே அனைத்தையும் பார்த்து, அதில் பொருந்தி வரும் கட்டணத்தில் முன்பதிவு செய்வோம்.

சரி.. இவ்வாறு நமக்குக் காண்பிக்கப்படும் பல்வேறு நிறுவனங்களின் விமானத் தகவல்கள் எப்படி இங்கே வருகிறது?

இங்கே தான் API வருகிறது.

JetAirways எடுத்துக்காட்டாகக் கொள்வோம்.

MakeMyTrip தளத்துக்கும் JetAirways நிறுவனத்துக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்த உதவ வருவதே A P I.

அதாவது JetAirways தனது தளத்தின் Live விவரங்களைத் தன் API வழியாக Expose செய்து இருக்கும், இதை MakeMyTrip எடுத்துக்கொண்டு JetAirways விவரங்களை நமக்குக் காண்பிக்கிறது.

UBER, OLA, Swiggy, Zomato

இந்நிறுவனங்களில் நாம் வாகனத்தையோ, உணவையோ பதிவு செய்தால், அவர்கள் வரும் போது Google Map ல் நமக்கு வருபவர் இடத்தைக் காண்பிக்கும்.

இவ்வாறு Google Map க்கும் மேற்கூறிய நிறுவனங்களின் App க்கும் இடையே தொடர்பை ஏற்படுத்த, தகவல்களைப் பரிமாற உதவுவதே API.

Google Map நிறுவனம் தனது Map சேவையை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிப்பதால், இவர்கள் அதை A P I வழியாக எடுத்து அவர்கள் App (செயலியில்) இணைத்து நமக்குச் சேவையை வழங்குகிறார்கள்.

எனவே, API என்ற ஒன்றில்லை என்றால், இங்கே எதுவுமே இயங்க முடியாது.

இதன் மூலம் Map வசதிக்காக ஒரு நிறுவனத்தையோ, அது தொடர்பான கட்டமைப்பையோ உருவாக்க வேண்டியதில்லை. இவ்வாறு மற்றவர்களின் சேவையை எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

API பயன்படுத்தக் கட்டணங்கள் இருக்கும், சில தளங்களுக்கு இலவசமாகப் பயன்படுத்தலாம்.

Paytm, PhonePe, Google Pay

அமேசான் போன்ற நிறுவனத்தில் பொருட்களை வாங்கிய பிறகு அதற்கான கட்டணத்தைச் செலுத்தும் போது நமக்கு Paytm, PhonePe, Google Pay, Credit Card போன்ற வசதிகளைக் காண்பிக்கிறது.

இவ்வாறு வரும் அனைத்துமே API வழியாகத் தகவல்களைப் பரிமாற்றம் செய்யும். எனவே, ஒரே இடத்தில் நமக்குப் பல சேவைகளைப் பயன்படுத்த வாய்ப்புக் கிடைக்கிறது.

தொடர்பு துண்டிக்கப்படும் போதோ அல்லது API யில் தொழில்நுட்ப பிரச்சனை ஏற்படும் போதோ தான் நாம் கட்டணம் செலுத்தும் போது பிரச்சனையாகிறது.

UPI வழியாகப் பணம் செலுத்தும் போது, API வங்கியைத் தொடர்பு கொள்வதில் பிரச்சனையாகும் போது பணம் செலுத்துவது தடை படுகிறது.

Login

சில தளங்களில் நுழையும் போது மின்னஞ்சல், OTP அல்லாமல் facebook, Google வழியாக நுழையவும் வசதி இருக்கும்.

இவ்வாறு இத்தளங்களின் கணக்கு வழியாக நுழைய A P I யையே உதவுகிறது.

இரு தளங்களை இணைக்க, தகவல்களைப் பரிமாற்றம் செய்ய உதவும் வசதியே API என்று அழைக்கப்படும் Application Programming Interface ஆகும்.

இன்னும் எளிமையாகக் கூறுங்களேன்!

நீங்கள் உணவகத்துக்குச் செல்கிறீர்கள்.

அங்கே உள்ள Menu Card ல் உள்ள உணவுகளைத் தேர்வு செய்து, சர்வரிடம் கூறுகிறீர்கள். அவர் அதைச் சமையலறையில் உள்ள Chef இடம் கூறுகிறார்.

சர்வர் சொன்னதை Chef சமைத்து கொடுக்கிறார், அதைச் சர்வர் நமக்குக் கொண்டு வந்து கொடுக்கிறார்.

இங்கே சர்வர் தான் A P I.

அதாவது நமக்குச் சமையலறையில் என்ன நடந்தது என்று தெரியாது, எப்படிச் சமைத்தார்கள், என்ன பயன்படுத்தினார்கள் என்று தெரியாது ஆனால், நமக்குத் தேவையான உணவு API என்ற சர்வர் மூலமாகக் கிடைத்து விடுகிறது.

இதுவே A P I பணி.

இதற்கு மேலான தகவல்களை விவரித்தால், புதிதாகத் தெரிந்து கொள்பவர்களுக்குக் குழப்பமாக இருக்கும் என்பதால், இதுவே போதுமானது.

கொசுறு

கட்டுரையின் தலைப்பைப் பார்த்தே 95% பேர் க்ளிக் செய்யாமல் புறக்கணித்து இருப்பார்கள்.

ஒருவேளை நீங்கள் இதைப்படித்துக்கொண்டு இருந்தால், உங்களுக்குப் புதியவற்றை , தொழில்நுட்பத்தைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருப்பதாகக் கொள்ளலாம் 🙂 .

நமக்கு ஒரு விஷயம் புரிகிறதோ இல்லையோ, அதைப் படித்துப்பார்ப்பதில் தவறில்லை. அவ்வாறு படிக்கும் போது புரியவில்லையென்றாலும், இது தொடர்பாக என்றாவது ஒரு சம்பவத்தைச் சந்திக்க நேரிடும்.

அப்போது இங்கே படித்தது நினைவுக்கு வந்து புரிந்து கொள்ள எளிதாக இருக்கும்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

  1. எனக்கு எப்போதும் புதிய தகவல்களை தெரிந்து கொள்வதில் அலாதி ஆர்வம்.. தெரிந்து கொண்டு எல்லாவற்றையும் பயன்படுத்தியது இல்லை.. ஆனால் அது குறித்த செய்திகளை தெரிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் எப்போதும் உண்டு..

    நான் உங்கள் தளத்தில் வாயிலாக தான் 99% தொழில்நுட்பம் குறித்த தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறேன்.. நீங்கள் எழுதுவதில் 80% எனக்கு தெரியாத, புதிய செய்திகள்.. அதனால் இவற்றை தெரிந்து கொள்வதில் மேலும், மேலும் ஆர்வமாக இருக்கிறேன்..

    குறிப்பாக உங்களின் பொருளாதாரம் சார்ந்து நீங்கள் எழுதும் பதிவுகள் என்னை என்றும் வியப்பில் ஆழ்த்தும்.. காரணம் அடிப்படையில் நீங்கள் இருப்பது வேறு துறையில்.. பொதுவாக அரசியல், சினிமா மற்றும் வேறு துறைகளை பற்றி வேண்டுமானால் குறைவான தகவலோடு எழுதி விட்டு போகலாம்.. ஆனால் பொருளாதாரம் அவ்வாறாக இல்லை.. சரியான தரவுகளை கொண்டு எழுத வேண்டும்..அதில் நீங்கள் கிரி அல்ல கில்லி!!!!

    இந்த பதிவில் இதை விட தெளிவாக, விளக்கமாக, அழகாக சொல்லவே முடியாது.. தொழில்நுட்பம் குறித்து அதிகம் தெரியாத எளியவர்கள் கூட இந்த பதிவின் ஆழத்தை உணர்ந்து கொள்ளலாம்.. அதிலும் உதாரணம்.. செம்ம!!!! பகிர்வுக்கு நன்றி..

  2. @நன்றி Suki

    @யாசின்

    “குறிப்பாக உங்களின் பொருளாதாரம் சார்ந்து நீங்கள் எழுதும் பதிவுகள் என்னை என்றும் வியப்பில் ஆழ்த்தும்.. காரணம் அடிப்படையில் நீங்கள் இருப்பது வேறு துறையில்.”

    எனக்கு பொருளாதாரம் குறித்து அதிகம் தெரியாது ஆனால், நிறைய படித்து அது தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகம்.

    எனக்கு மின்னணு தொழில்நுட்பத்தில் ஆர்வம் என்பதாலும், தற்போது பொருளாதாரம் மின்னணு சார்ந்து வளர்ந்து வருவதாலும் எனக்கு ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது.

    எனவே, பலவற்றை படித்து எனக்கு திருப்தி அளித்தால் எழுதுவேன், சந்தேகமாக இருந்தால் தவிர்த்து விடுவேன்.

    பொருளாதாரம் சார்ந்து, மின்னணு பரிவர்த்தனைபற்றி எழுத வேண்டியது தள்ளிச்சென்று கொண்டுள்ளது.

    UPI பரிவர்த்தனைகள் 10 பில்லியனை எட்டியதும் எழுத நினைத்துள்ளேன். தற்போது 9.5+ வந்து விட்டது.

    உங்கள் பாராட்டுக்கு நன்றி யாசின்.

  3. நான் 2010 ல் தீவிர பிளாக் எழுத்தாளனாக இருந்தேன் . இன்று பழைய மின்னஞ்சல்களை அழித்து கொண்டிருக்கும் போது எதேச்சையாக பிளாக் உலகம் இன்னும் இயங்குகிறதா என்று பார்க்க வந்தேன். நானறிந்த பெரும்பாலானவர்கள் எழுதவில்லை. தங்கள் வலைத்தளம் பார்த்தது ஒரு மகிழ்ச்சி

  4. @முகிலன்

    நீங்கள் கூறுவது போல 2010 Bloggers பொற்காலம் 🙂 . அப்போது பரபரப்பாக இருக்கும், பலரும் எழுதுவதால் உற்சாகமாக இருக்கும்.

    அப்போது தமிழ்மணம் இருந்ததால், யார் எழுதினார்கள் என்று அறிமுகம் இருந்தது. தற்போது இணைக்கத் தமிழ்மணமும் இல்லை, எழுதுவதற்கு நபர்களும் மிகக் குறைந்து விட்டார்கள்.

    சமூகத்தளங்கள் 2010 ல் பிரபலமான பிறகு பலரும் இதற்கு நகர்ந்து விட்டார்கள்.

    முன்பு ஒரு போட்டியிருந்தது எனவே, சுவாரசியமாக இருந்தது. தற்போது பலர் இல்லாததால், ஒரு வெறுமை உள்ளது.

    எழுதுவது எனக்கு பிடித்தமானதாக உள்ளதால், தொடர்ந்து வருகிறேன். நீங்கள் எட்டிப் பார்த்தது மகிழ்ச்சி 🙂 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here