இலவசப் பேருந்து | விளைவுகள் என்ன?

2
இலவசப் பேருந்து

லவசப் பேருந்து பல மாற்றங்களைச் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது. அவை என்னவென்று பார்ப்போம். image Credit

இலவசப் பேருந்து

கடந்த சட்டசபை தேர்தல் வாக்குறுதியில் திமுகக் கொடுத்து இருந்த வாக்குறுதிகளில் ஒன்று பெண்களுக்கு நகரப்பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து.

ஆட்சிக்கு வந்தவுடனே நிறைவேற்றி விட்டார்கள். இதற்கு வரவேற்பும் விமர்சனங்களும் இருந்தன. வரவேற்பை விட விமர்சனங்களே அதிகமாக உள்ளது.

வரவேற்பு

முதலில் வரவேற்பு என்னவென்று பார்ப்போம்.

  • பணிக்குச் செல்லும் பெண்களுக்குக் காலை மாலை என்று இரு வேளையும் கட்டணம் இல்லாமல் பயணிக்க முடிகிறது.
  • இதனால், ஒவ்வொரு மாதமும் கணிசமான தொகை சேமிக்க முடிகிறது.
  • பணம் செலவாகுமே என்று போகாமல் இருந்த இடத்துக்குக் கூடச் செல்கிறார்கள்.

விமர்சனங்கள்

  • இலவசத்தால் அரசுக்கு ஏற்படும் நட்டத்தை ஈடு கட்ட பேருந்தின் எண்ணிக்கையைக் குறைத்து விட்டார்கள்.
  • பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிவதால், ஆபத்தான முறையில் பயணிக்கிறார்கள்.
  • ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பேட்டா குறைவதால், சிலர் பெண்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்கள்.
  • தனியார் பேருந்துகளுக்குப் பெருமளவில் நட்டமானதால், பேருந்து வழித்தடத்தைவிடக் கூடாது என்ற காரணத்துக்காகக் குறைந்த எண்ணிக்கையில் பயணத்தைத் தொடர்கிறார்கள். சனி ஞாயிறு இயக்குவதில்லை.
  • குறிப்பாகக் காலை, மாலை மட்டுமே பேருந்தை இயக்குகிறார்கள்.
  • இதனால் பல கிராம மக்கள் தங்கள் பகுதிக்குப் பேருந்தை இழந்து, நீண்ட தூரம் நடந்து இணைப்புச் சாலை வந்த பிறகே பயணிக்க முடிகிறது.
  • எடுத்துக்காட்டுக்கு, எங்கள் பகுதியில் உள்ள கணக்கம்பாளையம் என்ற கிராமம் முதன்மை சாலையிலிருந்து பிரிந்து உள்ளே செல்கிறது.
  • தற்போது இங்கே வந்து கொண்டு இருந்த தனியார் பேருந்தை நிறுத்தி விட்டார்கள். இதை நம்பி கோபிக்குப் பயணிப்பவர்கள் பலர் உள்ளனர்.
  • நகரங்களில் ஷேர் ஆட்டோ ஓட்டுபவர்கள் வருமானத்தை இழந்து உள்ளனர். பல தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டு விட்டன.
  • தமிழகத்தைப் போலக் கர்நாடகாவிலும் செய்ததில், அங்குள்ள ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
  • சமீபத்தில் தனது குழந்தையின் பள்ளி கட்டணத்தைக் கட்ட முடியவில்லை என்று ஒரு ஆட்டோ ஓட்டுநர் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார்.
  • ஏற்கனவே, கோவிட் காலத்தில் பலர் இரு சக்கர வாகனத்தை அதிகம் வாங்கியதால், பேருந்துகளில் செல்வதை தவிர்த்து இருந்த நிலையில், இலவச பேருந்து அந்நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது.

பொருளாதாரம்

இது போன்ற இலவசங்களால் தனிநபர் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும்.

அரசு இலவச பேருந்து வசதிக்குப் பதிலாக மின்சார, ஆவின் கட்டணங்களைக் குறைக்கலாம். எரிவாயு உருளைக்கு மானியமாகக் கொடுக்கலாம். சொத்துவரி ஏற்றத்தைத் தவிர்த்து இருக்கலாம்.

ஆனால், இது போன்ற இலவசங்களால் அது தொடர்பான தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்படும். இவை சமூகத்தில் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

வேலைவாய்ப்பின்மை, வருமானம் போதாதால் ஏற்படும் பிரச்சனைகள் தவிர்க்க முடியாததாக இருக்கும்.

அத்யாவசிய தேவைகளான பால், மின்சார கட்டணம் உயர்ந்தால் அவை சார்ந்துள்ள தொழில்களில் எதிரொலிக்கும், கட்டணங்களை அவர்களும் உயர்த்துவதால், பணவீக்கத்தையே ஏற்படுத்தும்.

இலவசத்தால் ஒரு நாளைக்கு ₹40 ரூபாய் பெண்களுக்கு சேமிக்க முடியலாம் ஆனால், இதைத் சார்ந்து இருப்பவர்களுக்கு ₹400 வரை இழப்பு ஏற்படும்.

இலவசம் ஆபத்தானது

இலவசங்களால் மக்களை ஏமாற்றி மற்ற அனைத்து சேவைகளின் கட்டணத்தையும் கண்டபடி உயர்த்தி விட்டார்கள். தற்போது மின்சாரக் கட்டணம் இரட்டிப்பாகி விட்டது.

இலவச பேருந்துக்காக செலவு செய்யும் நிதியை மின்சார, எரிவாயு, ஆவின் பால் கட்டணத்தைக் குறைக்க பயன்படுத்தியிருந்தால், பாதிப்பு இல்லாமல் அனைவருமே பயன் பெற்று இருப்பார்கள்.

இலவசத்தால் மக்களுக்குக் கூடுதல் செலவாகியுள்ளது என்பதை மக்கள் உணர மாட்டார்கள் என்பது கசப்பான உண்மை.

இதைப்புரிந்து கொள்ளாமல் இலவசத்துக்காக வாக்களிக்கும் மக்கள் இருக்கும் வரை அனைத்தின் விலையும் / கட்டணமும் உயர்ந்து கொண்டே செல்லும்.

பொது போக்குவரத்தால் வாகன நெரிசல் குறையும் ஆனால், பல தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால், அரசுப் பேருந்து குறைக்கப்பட்டதால் இரு சக்கர வாகனங்களை நம்பியுள்ளனர்.

புத்திசாலி அரசாக இருந்தால் பொது போக்குவரத்தை பயன்படுத்த மக்களை ஊக்கப்படுத்த வேண்டும், மாறாக பொது போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைத்து நெரிசலை ஏற்படுத்தக் கூடாது.

உலகில் இலவசம் என்று எதுவுமே கிடையாது. இலவசம் என்றால், அதன் பின்னே ஏராளமான சிக்கல்களும் வரும் என்பது தான் நிதர்சனம்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. கிரி. நான் கல்லுரி படிக்கும் சமயத்திலிருந்தே கேட்டு கொண்டு இருக்கின்ற ஒன்று, பேருந்து துறை நட்டத்தில் இயங்கிறது என்று.. தனியார் ஒரு பேருந்து வைத்து இருந்த முதலாளிகள் தற்போது குறைந்தது 5 / 10 பேருந்தாவது வைத்து இருக்கிறார்கள்? பின்பு அரசின் பேருந்து துறை மட்டும் ஏன் நட்டத்தில் இயங்குகிறது? வேலையில் ஓய்வு பெற்றவர்களுக்கு கூட அவர்களின் செட்டில் மென்ட் தாமதமாகி தான் கிடைப்பதாக நான் செய்திகளில் படித்ததாக நினைவு..

    உண்மையில் இலவசம் ஒன்றுக்கு பின்பு நிச்சயம் வேறு ஓன்று இருப்பது வழங்கும் போது சொல்லாமல் சொல்லப்படும் உண்மை.. இலவசம் என்று ஒன்று முற்றிலும் ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்க வேண்டும்.. தேர்தலில் வாக்குக்காக ஏதோதோ அறிவிப்புகள்.. உண்மையில் சிலவற்றை நினைக்கும் போது மனம் வெம்புகிறது.. யார் வீட்டு பணத்தை யார் வாரி இறைப்பது..??

    எந்த அரசாக இருந்தாலும் மக்களின் அடிப்படை வசதிகளை சரி செய்து, ஏழை மக்களில் கல்விக்கு வழிவகை செய்தாலே, அடுத்த தலைமுறையில் உங்களை இலவசத்தை (பிச்சையை) வாங்க யாரும் கையேந்த மாட்டார்கள்.. தொடர்ச்சியாக இந்த இலவசத்தை கொடுத்து கொடுத்து மக்களின் மனநிலையை முற்றிலும் மாற்றி விட்டனர்.. தேர்தல் சமயத்தில் இலவசம் ஒரு முக்கிய காரணியாக அமைந்து விடுகிறது.

    யாரோ, ஏதோ ஒரு காரணத்துக்காக கள்ள சாராயம் குடித்து விட்டு இறந்ததற்கு அரசின் சார்பில் 10 லட்ச ரூபாய் வழங்கப்படுகிறது.. யாருடைய பணம் அரசின் பணம்.. நல்ல விஷியம் தான்.. வீட்டில் தலைவன் இறந்து போனால் அந்த வீட்டின் மோசமான சூழ்நிலை காரணமாக இழப்பீடு வழங்க படுகிறது. செத்தவன் என்ன நாட்டுக்காக யுத்தத்திற்காக சென்று காஷ்மீர் பார்டரில் இறந்தவனா ? என்ன? எதற்காக இந்த இழப்பீடு?? யாரை சமாதான படுத்துவதற்கு இந்த முயற்சிகள்?? எந்த அரசாக இருந்தாலும் இந்த நிலை தொடர்வது சரியான ஒன்று இல்லை..

    என்று மக்கள் இலவசத்தை புறக்கணிக்க தொடங்குகிறார்களோ? அப்போது தான் நமக்கு நல்ல தலைவர்கள் கிடைப்பார்கள்.. நல்ல ஆட்சி அமையும்.. இது தற்போது சாத்தியமா? என்று எனக்கு தெரியவில்லை.. நாட்கள் செல்ல செல்ல நிலைமை மோசமாகி கொண்டு தான் செல்கிறதே தவிர???? விடியலுக்கான அறிகுறி தெரியவில்லை…

  2. @யாசின்

    “வேலையில் ஓய்வு பெற்றவர்களுக்கு கூட அவர்களின் செட்டில் மென்ட் தாமதமாகி தான் கிடைப்பதாக நான் செய்திகளில் படித்ததாக நினைவு”

    உண்மை தான் யாசின். சிலர் இன்னும் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

    “இலவசம் என்று ஒன்று முற்றிலும் ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்க வேண்டும்..”

    தேவைப்படுபவர்களுக்கு கொடுக்கப்படும் இலவசத்தை, சலுகைகளை யாரும் குறை கூறப்போவதில்லை ஆனால், வாக்குக்காக செய்யப்படும் இது போன்று பலருக்கு இழப்பை ஏற்படுத்தும், தொழிலைப் பாதிக்கும் இலவசங்களே தவறு என்று அனைவரும் கூறுகின்றனர்.

    “தேர்தலில் வாக்குக்காக ஏதோதோ அறிவிப்புகள்.. உண்மையில் சிலவற்றை நினைக்கும் போது மனம் வெம்புகிறது.. யார் வீட்டு பணத்தை யார் வாரி இறைப்பது..??”

    கடுப்பா இருக்கு. இதனாலே கூடுதல் சுமை தான் ஏற்படுகிறது.

    “தொடர்ச்சியாக இந்த இலவசத்தை கொடுத்து கொடுத்து மக்களின் மனநிலையை முற்றிலும் மாற்றி விட்டனர்.. தேர்தல் சமயத்தில் இலவசம் ஒரு முக்கிய காரணியாக அமைந்து விடுகிறது.”

    மறுக்க முடியாத உண்மை. கொடுக்க மாட்டேன் என்பவர்களும் போட்டி காரணமாக, தேர்தலில் தோற்று விடுவோமோ என்று பயந்து அவர்களும் அறிவிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

    உச்சந்தீதிமன்றமாவது கண்டிக்கும் என்று பார்த்தால், அவர்களும் இதில் தலையிட முடியாது என்று கூறி விட்டார்கள்.

    உச்சநீதிமன்றம் மட்டும் இதற்கு தடையிட்டால், இந்தியா பல சிக்கல்களிலிருந்து விடுபடும்.

    “செத்தவன் என்ன நாட்டுக்காக யுத்தத்திற்காக சென்று காஷ்மீர் பார்டரில் இறந்தவனா ? என்ன? எதற்காக இந்த இழப்பீடு?? யாரை சமாதான படுத்துவதற்கு இந்த முயற்சிகள்?? எந்த அரசாக இருந்தாலும் இந்த நிலை தொடர்வது சரியான ஒன்று இல்லை..”

    கோவிட் நேரத்தில் இறந்த மருத்துவர்களுக்கு கொடுக்கப்படுவதாக சொன்ன தொகை கொடுக்கப்படவில்லை, உயிரை பணயம் வைத்து மருத்துவம் பார்த்த செவிலியர்களுக்கு ஒன்றுமில்லை.

    ஆனால், குடித்து விட்டுச் செத்தவனுக்கு 10,00,000

    “நாட்கள் செல்ல செல்ல நிலைமை மோசமாகி கொண்டு தான் செல்கிறதே தவிர???? விடியலுக்கான அறிகுறி தெரியவில்லை…”

    😀

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here