முள்ளும் மலரும் [1978]

14
Mullum Malarum முள்ளும் மலரும்

ஜினியின் நடிப்பு என்றால், இன்றளவும் பலரால் கூறப்படுவது “முள்ளும் மலரும்”. Images Credit

இதில் நடிப்பு மட்டுமல்ல, இயக்கம், இசை, ஒளிப்பதிவு, கதாப்பாத்திரங்கள் என்று அனைத்துமே ஒருங்கே இணைந்து அமைந்த “குறிஞ்சிப் பூ” படம்.

எனக்கு மிக மிகப் பிடித்த படங்களில் ஒன்று முள்ளும் மலரும், அது தலைவர் படம் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி.

இப்படம் ஏற்கனவே, பலர் பலமுறை பார்த்து இருப்பீர்கள். எனவே, படத்தின் விமர்சனமாக இல்லாமல் படம் குறித்த தகவல்களைக் கதாபாத்திரங்களை விவரிக்கும் கட்டுரையாக இதை எடுத்துக்கொள்ளுங்கள்.

1967 ஆம் ஆண்டுக் கல்கி இதழின் வெள்ளி விழாப் போட்டியில் உமா சந்திரன் அவர்கள் எழுதி முதல் பரிசு பெற்ற நாவல் முள்ளும் மலரும்.

இதை இயக்குநர் மகேந்திரன் அடிப்படையாக வைத்து உருவாக்கிய கதை தான் இப்படம்.

இந்நாவல் அப்படியே முழுமையாகப் படமாக்கப்படவில்லை, பல மாற்றங்களுக்குப் பிறகே படமானது.

இயக்குநரை கவர்ந்த விஞ்ச் மற்றும் காளி

இயக்குநர் மகேந்திரன் அவர்களை இந்நாவலில் கவர்ந்தது “விஞ்ச்” பகுதியும் காளியின் கதாப்பாத்திரமும் தான்.

இதை அடிப்படையாக வைத்தே படத்தை உருவாக்கியிருக்கிறார்.

யோசித்துப் பார்த்தால், படம் சிறப்பு, நடிப்பு அசத்தல், இசை ஒளிப்பதிவு அட்டகாசம் என்று இருந்தாலும், மக்களைக் கவர்ந்ததில் அது குறித்து அதிகம் வெளிவராமல் போன “விஞ்ச்” பகுதியும் இருந்து இருக்கணும் என்றே நினைக்கிறேன்.

மற்ற சிறப்புகளின் முன் மக்களின் மறைமுக விஞ்ச் கவர்ச்சி அடிபட்டு போய் விட்டது.

தயாரிப்பாளர் வேணு செட்டியார்

தயாரிப்பாளர் வேணு செட்டியார், இயக்குநர் மகேந்திரனுக்குப் பழக்கம் என்பதால், அவரின் தயாரிப்பில் படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

படத்தை வெளியீட்டுக்கு முன்பு பார்த்த தயாரிப்பாளர் “அடப்பாவி என் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுட்டியே, படத்துல வசனமே இல்ல” என்று புலம்பி உள்ளார்.

ஓடாத படத்துக்கு எதற்கு விளம்பரம் என்று விளம்பரமும் செய்ய மறுத்து விட்டார்.

தயாரிப்பாளர் வேணு செட்டியார் கோபப்பட்டதில் நியாயமில்லாமல் இல்லை. ஏனென்றால், அப்போது வசனங்கள் ஆட்சி செய்து கொண்டு இருந்த காலம்.

சிறு காட்சியாக இருந்தாலும், பக்கம் பக்கமாக வசனம் பேசப்பட்ட காலம்.

சோக காட்சிகள் என்றால், கண்ணீரும் கம்பலையுமாக கதறிய காலம். எனவே, ஒரு தயாரிப்பாளராக அவர் பயப்பட்டதில் நியாயமுண்டு.

ஆனால், வெளியாகி முதல் இரண்டு வாரங்கள் சத்தமில்லாமல் இருந்த படம் மூன்றாவது வாரத்தில் இருந்து மக்களின் வரவேற்பில் செம்ம ஓட்டம் ஓடி இருக்கிறது.

இதன் பிறகு தயாரிப்பாளர் “Blank Cheque” கொடுத்து நிரப்பிக்கச் சொன்னதை “இப்படத்தை இயக்க வாய்ப்புக் கொடுத்ததே பெரிய உதவி” என்று மகேந்திரன் மறுத்து இருக்கிறார்.

கமல்

முள்ளும் மலரும் வெளிவந்ததில் மற்றும் மற்ற விஷயங்களில் கமல் அவர்களின் பெரும்பங்கு இருந்து இருக்கிறது.

அண்ணன் தங்கச்சி பாசத்தைக் கூறிய சிறந்த மூன்று படங்கள்

தமிழில் இதுவரை (*2017) அண்ணன் தங்கச்சி அன்பு குறித்த மூன்று படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று உள்ளது.

அண்ணன் தங்கச்சி படம் என்றால் தவிர்க்க முடியாத படங்கள், பாசமலர், முள்ளும் மலரும், கிழக்குச் சீமையிலே.

இனி முள்ளும் மலரும்

படம் பார்ப்பவர்களைத் தங்கள் நடிப்பால் அசத்தியவர்கள் இருவருக்கு முக்கியப்பங்குண்டு, ஒன்று ரஜினி இன்னொன்று ஷோபா.

இருவரின் இயல்பான நடிப்பே இன்றளவும் இப்படத்தைப் பற்றிப் பேச வைத்து இருக்கிறது.

இயக்குநர் மகேந்திரன் கதாப்பாத்திரங்களை எந்த மாற்றமும் செய்யாமல் அவர்கள் இயல்பிலேயே உலவ விட்டு இருப்பார்.

இப்படத்தில் நடிகர்களைக் காண முடியாது, கதாப்பாத்திரங்களை மட்டுமே காண முடியும்.

காளி கதாப்பத்திரம் நாயகன் என்றாலும் நாயகனுக்குண்டான சமரசங்கள் எதுவுமில்லாமல், அக்கதாப்பாத்திரம் எப்படி நடந்து கொள்ளுமோ அதை அப்படியே உலவவிட்டு இருக்கிறார்.

சுயகவுரவம் (Ego) மிக்க காளி

காளி இப்படத்தில் சுயகவுரவம் அதிகம் இருக்கும் கதாப்பாத்திரம்.

காளிக்கு தகுந்த மாதிரி நடந்து கொண்டால், அவருக்காக எதையும் செய்வான் ஆனால், அவமதித்ததால்  அவனால் பொறுத்துக்கொள்ள முடியாது.

எனவே, சுய கவுரவம் காரணமாகத் தன் தவறை ஏற்றுக்கொள்ளாமல், தான் செய்வது அனைத்தும் சரி என்பது போலவே நினைத்துக் கொள்ளும் முரட்டுச் சுபாவம் உடைய கோபக்காரன் ஆனால், அடிப்படையில் நல்லவன்.

படம் பார்ப்பவர்கள் அனைவருக்கும் தெரியும் பொறியாளர் மீது எந்தத் தவறுமில்லை, அவர் தனது கடமையைத் தான் செய்கிறார் என்று, இருப்பினும் காளி அவர் மீது கோபித்துக்கொள்வான்.

தாய் தந்தை இல்லாமல் வாழ்க்கையில் அடிபட்டு சுயம்புவாகத் தன் ஒருவனின் உழைப்பிலேயே முன்னேறியவன் காளி, உடன் தன் தங்கையையும் வளர்த்தவன்.

எனவே, இயல்பிலேயே சுயகவுரவம், தன்னம்பிக்கை அதிகம் கொண்ட கதாப்பாத்திரமாக காளி கதாப்பாத்திரம் சித்தரிக்கப்பட்டு இருக்கும்.

தன் தங்கை பிச்சை எடுப்பதைப் பார்த்து அதிச்சியாகி பிடுங்குவதும், வளர்ந்த பிறகு ஏழை ஒருவரை அவர் செய்த தவறுக்காகப் பணக்காரர் திட்டுவதைப் பார்த்துக் கார் விளக்கு கண்ணாடியை உடைப்பதும் என்று பணக்காரர்கள் அதிகாரம் மிக்கவர்கள் மீதான காளி வெறுப்பு காட்டப்பட்டு இருக்கும்.

முதல் சந்திப்பே சண்டை

முதல் சந்திப்பே சண்டையோடு துவங்கி விடுவதால், பொறியாளர் (சரத்பாபு) மீது காளிக்கு வெறுப்பு உருவாகி இது அப்படியே இறுதி வரை முடிவில்லாமல் தொடரும்.

சண்டையோடு உறவு துவங்கினாலும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்கள் ஏராளம். வேலைக்காரன், அண்ணாமலை, முத்துப் படங்கள் குறிப்பிடத்தக்கவை.

நித்தம் நித்தம் நெல்லுச் சோறு

மங்கா (படாஃபட் ஜெயலட்சுமி) காளி அறிமுகமே நகைச்சுவையுடன் ஆரம்பிக்கும்.

சாப்பாட்டு பிரியையான மங்கா வாசலில் அலங்கோலமாகப் படுத்து இருப்பதைப் பார்த்துக் காளி இருமி சத்தம் ஏற்படுத்த, ஒவ்வொரு உடையாகச் சரி செய்வார்.

காளி பார்த்துக் கொண்டே இருக்க, “ஏய்யா முன்னபின்ன பொம்பளைய பார்த்ததே இல்லையா” என்று கேட்க, அதற்கு காளி கொடுக்கும் உடல்மொழி… 🙂 .

கைத்தடிகள்

காளியை ஒருவர் பொறியாளரிடம் போட்டுக்கொடுத்தது தெரிந்து காளி அவரைப் புரட்டி எடுத்து விடுவான். கட்டுப்படுத்தவே முடியாத முரடன்.

காளியின் கைத்தடிகள் “அண்ணே பின்னிட்டீங்கண்ணே.. புரட்டி எடுத்துட்டீங்க… நீங்க செஞ்சது தாண்ணே சரி.. இதோட விட்டு இருக்கக்கூடாதுண்ணே” என்று கூறி விட்டு.. “ஆமாண்ணே! அவன் என்னண்ணே பண்ணுனான்” என்று கேட்பது கைத்தடிகள் என்றால் யார் என்பதை காட்டியிருக்கும் 🙂 .

பொண்ணுகளைக் கண்டால் உருகும் காளியின் கைத்தடிகளில் ஒருவர் (சாமிக்கண்ணு) செமையா செய்து இருப்பார்.

வயதான இவருக்கு இளம் மனைவி, மனைவியிடம் இவர் வழியும் காட்சிகளும், சிரிப்பும் அருமையான சித்தரிப்பு.

காளி “ஆமா உனக்குப் பொண்ணுங்கனா அப்படி என்ன இது” என்று கேட்க அதற்கும் அதே அசட்டுச் சிரிப்பு சிரிப்பார்.

பாலுமகேந்திராவும் மான்டேஜ் பாடலும்

படத்துக்கு எவ்வளவு தேவையோ, ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா அதை மட்டும் கொடுத்து இருக்கிறார். படத்தின் இயல்புத் தன்மையைக் கெடுக்காத ஒளிப்பதிவு.

தமிழில் முதன் முறையாக மான்டேஜ் பாடலை அறிமுகப்படுத்தியது “செந்தாழம் பூவில்” பாடலில் தான்.

இப்பாடலை முதலில் சில வரிகள் சரத் பாபு பாடுவதாகத் திட்டமிட்டுப் பின் பாலு மகேந்திரா யோசனையின் படி முழுக்க மான்டேஜ் பாடலாகப் படமாக்கியிருக்கிறார்கள்.

இதற்கு முன் மான்டேஜ் பாடலை, பாலு மகேந்திரா தான் இயக்கிய கமல் நடித்த கன்னட படம் “கோகிலா“வில் வைத்து இருந்து இருக்கிறார்.

காளியின் கோபம்

மங்கா செய்த வேலையாலும் வெளி ஆள் விஞ்ச் இயக்கியதாலும், காளியை பொறியாளர் 10 நாள் தற்காலிக பணி நீக்கம் செய்து விடுவார்.

இதை அவமானமாக நினைக்கும் காளி வெகுண்டெலெழுந்து கோபமாகக் மலைக்குத் தண்ணி அடிக்கச் சென்று விடுவார்.

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்” பாடலில் ஆத்திரமாகப் பெருங்கோபத்துடன் ஆடும் போது காளியைப் பார்க்க நமக்கே பயமாக இருக்கும்.

முகத்திலும் கண்ணிலும் அப்படியொரு வெறித்தனம் இருக்கும்.

அந்த நேரத்தில் பொறியாளர் இருந்தால், பொளந்து விடுவான் போல இருக்கும்.

தமிழ்த் திரைப்படங்களில் கோபத்தை இயல்பாக மிக சிறப்பாக வெளிப்படுத்துபவர் ரஜினி, இவருக்குப் பிறகு தனுஷ்.

படம் பார்ப்பவர்களுக்கே பயத்தைக் கொடுப்பவர்கள்.

கதறித் தான் உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை..

விபத்தில் கை போன பிறகு ஊருக்கு வரும் காளி, அதைத் தூரத்தில் இருந்து பார்த்து ஓடி வரும் வள்ளி, காளியை பார்த்து மகிழ்ச்சியுடன் வர, தன்  கை போனதை எப்படித் தங்கையிடம் சொல்லுவது என்ற கவலையில் காளி கனத்த மனதுடன் நிற்பார்.

தொட்டுப்பார்த்து அதிர்ந்த வள்ளி அதிர்ச்சியாகி கண்ணீர் விடுவார். “ஒண்ணும் இல்லடா” என்று காளி கூறி சில முகப் பாவனைகளுடன் முடிந்து இருக்கும்.

எந்த ஒரு உணர்ச்சி பிழம்பு வசனங்களோ கதறலோ எதுவும் இல்லாத உணர்ச்சிகளை வெளிப்படுத்திய அழகான காட்சி. பின்னணி இசை, இக்காட்சியை மேலும் அழகுபடுத்தியிருக்கும்.

இது போன்ற காட்சிகளைப் பார்த்து தான் தயாரிப்பாளர் பீதி ஆகி இருப்பார் 🙂 .

கெட்ட பய சார் இந்தக் காளி

காளியை இனி வேலைக்கு வரவேண்டாம் என்று பொறியாளர் கூறும் காட்சி தான் இன்று வரை பிரபலம்.

காளி உள்ளே வரும் போது அவரால் அடிவாங்கியவர் “வாய்யா பெரிய மனுஷா” என்று காளி கை போனதை நக்கல் அடிக்கும் போது அதற்கு ஆவேசமாக எதுவும் கூறாமல், தன் நிலையுணர்ந்து கன்னத்தில் தட்டி “நல்லா இரு” என்று கூறி உள்ளே செல்வான்.

பொறியாளர் கூறியதை கேட்டு அதிர்ந்து காளி காட்டும் முகபாவனை, உடல் மொழிகள் அசத்தல். நாற்காலியை “க்ரீச்” சத்தத்துடன் இழுத்துப் போடும் காளி, பொறியாளர் கூறியதைக் கேட்டவுடன் ஒரு பின்னணி இசை வரும்.

சில நொடிகளே வரும் காட்சி இன்றுவரை பலரால் போற்றப்படுகிறது.

கோபம், இயலாமை, வெறுப்பு, எதிர்காலம் குறித்த கவலை, இனி என்ன செய்யப் போகிறோம் என அனைத்தையும் சில நொடிகளில் முகத்தில் பிரதிபலித்து இருப்பார்.

இரண்டு கையும் இரண்டு காலும் போனாக் கூட காளிங்கறவன் பொழைச்சுக்குவான் சார்… கெட்ட்ட்ட பய சார் அவன்” என்ற தன்னம்பிக்கை மிகுந்த வரிகள் இன்றுவரை பிரபலம்.

தமிழ்த் திரையுலகம் அற்புதமான கலைஞனை மசாலாவில் பலி கொடுத்து விட்டதே என்ற வருத்தம் இக்காட்சியைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குத் தோன்றும்.

வள்ளி

வள்ளியின் அப்பாவித்தனம், மிகையில்லாத நடிப்பு, அன்பு, வெகுளித்தனம் என்று படம் பார்க்கும் அனைவரையும் கவர்ந்து இருப்பார்.

அமைதியான முகவெட்டு, பெரிய பொட்டு, களையான முகம் என்று அசத்தலான அழகில் வள்ளி.

நமக்கு இப்படியொரு தங்கச்சி இருந்தால், எவ்வளவு நல்லா இருக்கும் என்று நினைக்க வைக்கும் கதாப்பாத்திரம்.

காளியின் திருமணத்துக்கு வரும் பொறியாளரை காளி மதிக்காததால், வருத்தப்பட்ட வள்ளி பொறியாளரின் வீட்டுக்கே சாப்பாடை கொண்டு வருவார்.

அப்போது அவர் அணிந்து இருக்கும் சிவப்பு புடவை, சிறிய அழகான ஒரு ஆபரணம், பெரிய சிவப்பு பொட்டு என்று ஒரு குட்டி தேவதை போல இருப்பார்.

இதே புடவை தான் இறுதிக்காட்சியிலும் இருக்கும் என்று நினைக்கிறேன்.

காளி பொறியாளரின் மீது இருந்த கோபத்தை, சாப்பாடு கொண்டு வரும் வள்ளியின் மீது காட்டி அதற்காக வருத்தப்பட்டுத் தங்கையிடம் மன்னிப்பு கேட்கும் காட்சிகள் மிகை நடிப்புமில்லாமல் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும்.

ஷோபாகிட்ட உள்ள சிறப்பு என்னவென்றால், அழுது சோகத்தைக் காட்டாமல் கண்களாலேயே சோகத்தைக் காட்ட முடிவது தான். இது ஒரு அழகான மென்சோகம்.

ரஜினிக்கு ஷோபா தங்கச்சியோ! 🙂

சபலமான நபராக முருகேசன் (வெண்ணிறாடை மூர்த்தி) போல ஊருக்கு ஒருத்தராவது இருப்பார், தான் எப்படி இருந்தாலும் வரப்போகும் பெண் சுத்தமானவளாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் சராசரி கதாப்பாத்திரம்.

வள்ளி பற்றித் தவறாகக் கூறியதை கேட்டுக் கொதித்தெழுந்த காளி “டேய்ய்ய்ய்ய்” என்று வெறியாகி முருகேசனை போட்டு புரட்டி எடுக்கும் போது “ஒருவேளை உண்மையாகவே ரஜினிக்கு ஷோபா தங்கச்சியோ!” என்று எண்ண வைக்கும் 😀 .

ரசனையான காட்சி

எனக்குப் படத்தின் இயல்பான காட்சிகளில் காளி, வள்ளி, மங்கா மூவரும் மீனை நெருப்பில் வாட்டிக்கொண்டே பேசிக்கொண்டு இருக்கும் காட்சி மிக ரசித்த காட்சி.

எவ்வளவு அழகான காட்சில்ல.. 🙂 .

குடும்பமாக இருந்தாலும், நண்பர்களோடு என்றாலும் இதுபோல ஒரு தருணத்தை நினைத்தாலே அற்புதமாக இருக்கிறது. ரசனையான காட்சி.

இதில் சாமிகண்ணுவை கிண்டல் செய்ய மட்டுமே இக்காட்சி உதவும் மற்றபடி இது அன்றாட கிராம வாழ்க்கையில் நடக்கும் செயல்களில் ஒன்று.

எனக்கு மிகவும் பிடித்த காட்சி.

இக்கட்டுரைக்கு சம்பந்தமில்லா கேள்வி.

இப்படத்தில் காட்டப்படும் கிராமத்தில் ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கும் ஆனால், பசுமை குறைவாக இருக்கும். ஏன்?

தண்ணீர் உள்ள பகுதி ஏன் வறட்சி பகுதி போல இருக்கிறது?

பய புள்ளைக

பய புள்ளைக” என்று ஆரம்பித்து காளி கைத்தடிகளுடன் பேசுவதும், அப்படி ஒரு சமயத்தில் இசைக் கலைஞர்கள் அந்த வழியே வரும் போது காளியைப் பார்த்து..

இவனா..! பிரச்சனை பண்ணாம விட மாட்டானே!” என்று ஒதுங்க. அவர்களை அழைத்துப் படுத்துவது அசல் கிராமத்து அடாவடி பேர்வழியின் நடவடிக்கை.

முருகேசனை வள்ளிக்கு மணமுடிக்கக் காளி திட்டமிட்டதும், இன்னொருவருக்கு நிச்சயம் செய்த பிறகு எப்படிப் பெண்ணுடன் செல்வது என்று நாகரீகம் கருதி பொறியாளர் தயங்குவார்.

மங்கா பொறியாளரிடம் பேசுவது தேர்ந்த வழக்கறிஞர் வசனங்கள் போல இருக்கும்.

பொறியாளர் நிலையில் இருந்து பார்த்தால், அவர் கூறுவது சரி என்பது போலவும், மங்கா கேள்விகளும் அவர் நிலையில் நியாயமாக இருக்கும்.

திருமண வேலைகளில் காளியின் கைத்தடிகள் ஆர்வமில்லாமல் இருப்பார்கள், காரணம் திருமணத்தில் உடன்பாடு இல்லையாததால்.

இதனால் கடுப்பான காளி “டேய்! ஒரு கை இல்லாததால் உங்களை எல்லாம் எதிர்பார்க்க வேண்டி இருக்கு… கொஞ்சம் உதவி பண்ணுங்கடா” என்று இயலாமை கலந்த கோபத்தில் கூறும் இடம் கனக்க வைக்கும்.

என்னதான் காளி செய்யும் செயல் சரியில்லை என்றாலும், அந்த வசனம் வருத்தப்பட வைக்கும்.

காலம் கடந்தும் நிற்கும் பின்னணி இசையும் காட்சிகளும்

அனைவரும் திருமணத்துக்குச் சென்று விட, காலையில் எழும் காளி, எவரையும் காணாத அதிர்ச்சியில் பதட்டத்துடன் ஓடி விசயம் தெரிந்து அதிர்ச்சியாகி நிற்பான்.

இவ்வளவு காலம் உயிராக நினைத்த வள்ளி, தன்னைக் கைவிட்டு போவதை தாங்காமல், உடல் பலம் முழுவதும் இழந்தது போலத் தளர்ந்து நின்று விடுவான் காளி.

அனைவரின் பேச்சைக் கேட்டு வந்தாலும், மனசாட்சியை உறுத்தும் குற்ற உணர்வும், அண்ணனின் பாசமும் வள்ளியை திரும்ப அண்ணனை நோக்கி ஓட வைக்கும்.

பின்னணி இசையின் பிதாமகன்

இங்கே தான் காலம் கடந்தும் நிற்கும் அந்தப் பின்னணி இசை. இளையராஜா இப்படம் முழுக்க அதகளம் செய்து இருப்பார்.

எங்குத் தேவையோ அங்கு மட்டும் பின்னணி இசை, மற்ற இடங்களில் அமைதி என்று கலக்கி இருப்பார்.

ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு பின்னணி இசை என்று அசத்தி இருப்பார்.

அந்தப் பின்னணி இசை ஒலிக்கும் போதே நாம் அக்காட்சியுடன் ஒன்றி விடுவோம், மற்றது நமக்கு மறந்து முழுக்கவனமும் அக்காட்சியில் சென்று விடும்.

கார்ட்டூன் பார்க்கும் குழந்தைகளை என்ன அழைத்தாலும் அவர்கள் காதில் விழாது, அவர்கள் ஒருங்கிணைந்த முழுக் கவனமும் தொலைக்காட்சியில் இருக்கும்.

அது போல நம் முழுக்கவனமும் அப்பின்னணி இசையில் ஒன்றியிருக்கும்.

மனப்போராட்டம்

காளி அடிப்படையில் நல்லவன் ஆனால், தன்னுடைய சுயகவுரவம் (Ego) காரணமாக, அவசரப்பட்டுக் கோபத்தில் அனைத்து முடிவுகளையும் எடுப்பான்.

இதைத்தான் மங்காவும் “உனக்கு எஞ்சினியரை பிடிக்கலைன்னா, கல்யாணம் வேண்டாம்னு சொல்லு.. அதுக்கு ஏன் இவனுக்கு கல்யாணம் செய்து வைக்கிறே” என்று கேட்பாள்.

தங்கை தன்னை விட்டு சென்று விட்டாள் என்று அறிந்ததும் அனைத்தையும் இழந்தது போல நின்று கொண்டு இருப்பான்.

வள்ளி திரும்ப ஓடி வரும் போது ரொம்ப நேரம் அவள் பக்கம் திரும்பாமல் தலை குனிந்து மனதின் பாரத்தால் நின்று கொண்டு இருப்பான்.

இதே மற்ற படங்கள் என்றால், திரும்ப வரும் தங்கையை உடனே பார்ப்பது போலக் காட்சி இருந்து இருக்கும்.

ஆனால், இங்கே ரொம்ப அருகில் வரும் போது தான் தங்கையைக் காணும் படி காட்சி இருக்கும், திரும்பப் பார்த்தால் கவனித்துப் பாருங்கள்.

எனக்கு ரொம்பப் பிடித்த காட்சி இது.

இறுதியில் தங்கை தன்னுடன் வந்த பிறகு இழந்த பலம் அனைத்தையும் பெற்ற, தன் சுய கவுரவத்தில் வெற்றி பெற்ற, தங்கை மீதான பாசத்தை மற்றவர்கள் முன்பு நிரூபித்த மகிழ்ச்சியில் காளி இருப்பான்.

இந்த நேரத்தில் காளியின் அரவணைப்பில் வள்ளி இருப்பாள். தாய் கோழியின் பாதுகாப்பில் அதன் குஞ்சு இருப்பது போல இருக்கும் அசத்தலான காட்சி.

காளியின் முகத்திலும் உடல்மொழியிலும் அப்படி ஒரு பெருமை, கர்வம் இருக்கும்.

இறுதியிலும், காளியின் கதாப்பாத்திர குணத்தை சிதைக்காமல் “எஞ்சினியர் சார்.. இப்பவும் உங்கள எனக்கு பிடிக்கல சார்” என்று கூறி வள்ளியை சேர்த்து வைப்பது நிறைவான காட்சி.

“முள்ளும் மலரும்” தலைப்புக்கு ஏற்ற கதாப்பாத்திரங்கள் “காளியும் வள்ளியும்” 🙂 .

Directed by J. Mahendran
Produced by Venu Chettiar V. Mohan
Screenplay by J. Mahendran
Based on Mullum Malarum by Umachandran
Starring Rajinikanth, Sarath Babu, Fatafat Jayalaxmi, Shoba
Music by Ilaiyaraaja
Cinematography Balu Mahendra
Edited by D. Vasu
Production company Ananthi Films
Release date 15 August 1978
Running time 143-145 minutes
Country India
Language Tamil

எங்கள் தலைவருக்கு காலத்தால் அழியாத மிகச் சிறப்பான படத்தை கொடுத்த இயக்குநர் மகேந்திரன் அவர்களுக்கு ரஜினி ரசிகர்கள் சார்பாக நன்றி.

ரஜினி இன்றுவரை தனக்கு பிடித்த இயக்குநராக மகேந்திரன் அவர்களையே குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய கட்டுரைகள்

“தளபதி” நினைவுகள் [1991]

மகாநதி [1994] ஒரு ரஜினி ரசிகனின் விமர்சனம்

கொசுறு 1

ரொம்ப நாட்களாக இப்படம் குறித்து எழுத வேண்டும் என்று நினைத்து, தற்போது முடித்து விட்டேன். நினைவு வைத்துக் கேட்ட நண்பர்களுக்கு நன்றி.

முழுதாகப் படித்தவர்களுக்குச் சிறப்பு நன்றி 🙂 .

கொசுறு 2

இன்று பிறந்த நாள் காணும் தலைவர் அவர்கள் நல்ல உடல் நலத்துடன் நீடூழி வாழ ரசிகர்கள் சார்பாக அன்பான வாழ்த்துகள் 🙂 .

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

14 COMMENTS

 1. கிரி, உண்மையை சொல்ல வேண்டுமானால் நான் இதுவரை இந்த படத்தை பார்க்கவில்லை. உண்மையான காரணம் என்னவென்றால் சென்ற வருடம் தான் ஆறிலிருந்து அறுபது வரை படம் பார்த்தேன். உண்மையில் பிரமித்தேன்.. அந்த பிரமிப்பிலிருந்து இன்னும் மீளவில்லை, அதற்குள் முள்ளும் மலரும் படத்தை பற்றிய குறிப்பு.. (இந்த கட்டுரையை நான் படிக்கவில்லை, படத்தை பார்த்த பின்பு படிப்பேன்.)

  என்னை பொறுத்தவரை படங்களை பார்க்கும் போது ஒரு வித உணர்வு, தாக்கம், பாதிப்பு, பிரமிப்பு, கனவு, வலி, சந்தோஷம் etc .. உண்டாகும். இவைகளின் தாக்கம் நீண்ட நாட்களுக்கு என்னுடன் சேர்ந்து பயணிக்கும்.. பெரிய ஹீரோ, சின்ன ஹீரோ, பழைய படம், புதிய படம் என்ற பாகுபாடு கிடையாது..

  நான் என்றும் ரஜினி சாரின் பெரிய விசிறி கிடையாது. வாழ்க்கையில் எந்த துறையிலும் சாதித்த ஒவ்வொரு தனி மனிதனையையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த வரிசையில் ரஜினி சாரை மிகவும் பிடிக்கும். நீங்கள் ரஜினி சாரை சந்திக்க வேண்டும் கனவோடு இருக்கிறீர்கள் அந்த ஆசை நிச்சயம் நிறைவேறும்..

  இன்று காலை tamiloneindia தளத்தில் செய்தியை படிக்கும் போது, ரஜினி சாரை குறித்த ஒரு செய்தி உங்களை போன்ற ரசிகரால் பதியப்பட்டு இருந்தது, படித்த உடன் உங்கள் நியாபகம், உடனே உங்கள் தளத்தில் வந்து பார்த்தால் இந்த கட்டுரை.. ஓய்வு இருக்கும் போது படிக்கவும், இதுபோல் பல நிகழ்வுகள் ரஜினி சாரின் வாழ்வில் கண்டிப்பாக இருக்கும்.. ரஜினி சார் என்ற பெயரை கேட்டாலே நெஞ்சம் சிலிர்க்கிறது.. நீண்ட நாட்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழவேண்டும்..

  https://tamil.filmibeat.com/news/one-only-rajinikanth-journalist-meeran-050568.html

 2. முள்ளும் மலரும் படம் மட்டுமல்ல, புவனா ஒரு கேள்விக்குறி, ஆறிலிருந்து அறுபதுவரை என்று பல படங்கள் சூப்பர்ஸ்டாரின் நடிப்பை பறைசாற்ற இருக்கின்றன. ஒரு நல்ல நடிகரை நம் தமிழ் சினிமா இப்படி வீணடித்துவிட்டதே என்ற ஆதங்கம் எனக்கும் உண்டு

 3. பாலு மகேந்திரா கூறுகிறார்…

  என் இயக்கத்தில் வரும் முதல் தமிழ்ப் படத்தில் எனது பால்யத்தை பதிவு பண்ணுவதென்று முடிவு பண்ணுகிறேன். என் நெஞ்சில் பசுமையாக இருந்த ஞாபகங்கள் என்பதால் எனது முதல் தமிழ் படத்துக்கு“அழியாத கோலங்கள்” என்று பெயர் வைத்து படத்திற்கான ஆரம்ப வேலைகளிலும் இறங்குகிறேன். இந்த சமயத்தில்தான் மகேந்திரன் என்ற இளைஞர் என்னை அணுகி அவர் இயக்க இருக்கும் அவரது முதல் படத்திற்கு நான் ஒளிப்பதிவு செய்யவேண்டும் என்று என்னைக் கேட்கிறார். இந்தப் படத்தை நான் ஒத்துக்கொள்ளவேண்டும் என்று என்னைக் கேட்கிறார். இந்தப் படத்தை நான் ஒத்துக்கொள்ளவேண்டும் என்று எனது நண்பர் கமலும் விரும்பினார். கல்கியில் வெளிவந்த உமா சந்திரனின் முள்ளும் மலரும் என்ற நாவலைத் தான் மகேந்திரன் படமாக்க விரும்புவதாகவும் சொல்கிறார்.

  அந்த நாவலை கல்கியில் வெளியானபோதே நான் படித்திருந்தேன். அண்ணன் தங்கை உறவை உணர்வு பூர்வமாகச் சொன்ன நல்ல நாவல். இந்தக் கதையில் வரும் அண்ணனாக நண்பர் ரஜினிகாந்தும், அவரது தங்கையாக எனது ஷோபாவும் நடிப்பதென்று முடிவாகிறது.

 4. “இப்படத்தில் காட்டப்படும் கிராமத்தில் ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கும் ஆனால், பசுமை குறைவாக இருக்கும். ஏன்? தண்ணீர் உள்ள பகுதி ஏன் வறட்சி பகுதி போல இருக்கிறது?”… என்ன சொல்ல Great !…(மஹேந்திரன் சார் … ஒரு சரியான உதவி இயக்குனர் கிடைச்சிருக்கார் … விட்றாதீங்க)
  ..
  எங்கே மங்கா வை பத்தி பேசாம விட்டு விடுவிங்களோன்னு பயந்தேன் … You didn’t missed it. காளி, மங்கா, வள்ளி மூவருக்குமிடையான பாசமான அன்யோன்யம் மிக எதார்த்தமாக காட்டப்பட்டிருக்கும். (Thanks to Director script & the performance of 3 class artist who done it from their heart )

  “தமிழ்த் திரையுலகம் அற்புதமான கலைஞனை மசாலாவில் பலி கொடுத்து விட்டதே”..
  But still he has shown up glimpses of his class scale in almost all of his mass film as well.
  Even being as mass hero, he raised up the scale to bigger & set bench mark for rest of the so called copycat mass heros…

  “காளியின் அரவணைப்பில் வள்ளி இருப்பாள். தாய் கோழியின் பாதுகாப்பில் அதன் குஞ்சு இருப்பது போல இருக்கும் அசத்தலான காட்சி”.. Director Mahendran sure will love to see this கமெண்ட்..

  Giri, sure you will get a call from Director Mahendran soon, if he get to read out this article

 5. செயற்கை ஜோடனை, மிதமிஞ்சிய வசன – நாடகப் பாணிகள் ஆகியவற்றில் இருந்து மீண்டு, யதார்த்தமான போக்கிற்கும் சினிமாவின் விஷுவல் தன்மைகளுக்கும் தாவ வேன்டும் என்று எத்தனித்துக்கொண்டிருந்தவர். இவர் வேறு யாருமல்ல, முன்னாள் பத்திரிக்கையாளரும், கதைவசனகர்த்தாவுமான அலெக்சாண்டர் என்ற மகேந்திரன்.

  தன் முதல் படத்தை இந்த ஆண்டில் இயக்கினார். படத்தின் பெயர் முள்ளும் மலரும். எழுபதுகளின் “பாசமலர்”. பாசமலரிலே நடிப்புத்துறையிலும் இசை அமைப்பிலும் சில அபூர்வமான சுகந்தங்கள் காற்றில் கமழ்ந்து கதையின் செயற்கைத்தனங்களை மறக்கடித்தன. ஆனால் இந்த முள்ளும் மலரில் அளவான நடிப்பு, நம்பகமான கதாபாத்திரங்கள், அழகான பாடல்கள், அருமையான காட்சியமைப்புகள், அவற்றுக்கு ஏற்ற பின்னணி இசை இவையெல்லாம் படத்தைக் கலாசிருஷ்டியின் உச்சத்திற்குக் கொண்டுபோனது.

  இந்தப் படத்தைப் பற்றி ஒரு சமயம் மகேந்திரன் சொன்னது…

  “பின்னணி இசை சேர்ப்புக்கு முன் தயாரிப்பாளர் வேணு செட்டியார் படத்தை பார்த்துவிட்டு கலை அது இது என்று சொல்லி படத்தை செல்லாக்காசாக்கிவிட்டாரே என்று பயந்து தன் நண்பர்களிடம் சொன்னவர், பின்னணி இசை கொடுக்கப்பட்டபின் தான் அவருடைய பயம் முழுமையாக நீங்கியது.”

  பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்திற்கு இளையராஜா எந்த அளவு முக்கியமாக இருந்தாரோ அதைவிட அதிக அளவு இந்தப்படத்திற்கு இளையராஜா காரணமாக இருந்தார். நான் என்ன எதிர்பார்த்து படத்தை எடுத்தேனே அந்த எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்தது இளையராஜாவின் இசை.

  இப்படிக் காட்சிக்கும், அதை உயிரூட்டிய இசைக்கும் ஒரு தொடர்பு தமிழ் சினிமாவில் ஏற்பட ஆரம்பித்தது இளையராஜாவால் என்றால் அது மிகையாகாது. திரையில் ஒளியும்-ஒலியும் சிவ – சக்தி ஆயின.

  அண்ணன் காளியிடம்(ரஜினி) திருமணமான தங்கை வள்ளி(ஷோபா) திரும்பும் காட்சியில் இந்த விந்தையைக் காணலாம்.

  இந்த படத்தில் பாடல்கள் மிக அற்புதமாக அமைந்தன. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு பாடலை அமைத்திருந்தார் மகேந்திரன்.

 6. நாயகன்(சரத்பாபு) இயற்கையின் வனப்பைக் கண்டு வியந்து பாடுவதுதான் பாடலுக்கான சிட்சுவேஷன். அப்படி ஒன்றும் இதில் புதுமை இல்லை. ஆனால் கண்ணதாசனின் வரிகளும், இளையராஜாவின் இசையும் நம்மை அந்த பாடலில் ஒன்றச்செய்தது. இயற்கையை வியந்து பாடவேண்டும் என்றாலே உடனே நம் மனதில் தோன்றும் ஒரு பாடலாக அமைந்தது இந்த “செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா…”. இயற்கையை விட்டுச் செயற்கையின் எந்திர சூழலில் வாடும் (என்னைப் போன்ற) கோடிக்கணக்கான தமிழர்களுக்கு இதுபோன்ற பாடல்கள்தானே டானிக். அந்த சமூகப் பயன்பாட்டை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறார்கள்? அதை யேசுதாசின் குரலில் அருமையாக நிறைவேற்றினார் இளையராஜா.

  அடங்காப்பிடாரனான காளி(ரஜினி), ஒரு விபத்தில் கையை இழக்கப்போகிறான். அதற்கு முன் அவன் பாடும் “ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே” பாடலில் என்ன ஒரு செருக்கு! இளையராஜாவோடு எஸ்.பி.பிக்கும், கங்கை அமரனுக்கும் சபாஷ் போட்டே ஆகவேண்டும்.

  மண்வாசனையோடு வந்து நித்தம் நித்தம் நம்மை அள்ளிச்செல்லும் ” நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா…” பாடலை என்னென்று சொல்வது. கங்கை அமரன் ரசித்து ரசித்து எழுதியிருப்பார். படாபட் ஜெயலட்சுமிக்கான பாடல் இது.

  இந்தப் படத்தில் இன்னொரு வித்தியாசமான குரல் ஒலித்தது. எம்.எஸ். ராஜேஸ்வரியின் பாப்பா குரலுக்கு தாவணி கட்டும் வயதில் ஜீன்ஸ் போட்டுவிட்டதைப் போல பாடகியின் குரலை “அடி பெண்ணே…. பொன்னூஞ்சல் ஆடும் இளமை….” என்று சிறகடிக்கவிட்டிருப்பார் இளையராஜா. படத்தில் ஷோபா பாடும் இந்த பாடலைப் பாடியவர் பிரபல பாடகி ஜென்சி.

  பாடல்களும் பின்னணி இசையும் இந்தப்படத்திற்கு ஒரு முக்கிய பலமாக இருந்தது.

  • “எம்.எஸ். ராஜேஸ்வரியின் பாப்பா குரலுக்கு தாவணி கட்டும் வயதில் ஜீன்ஸ் போட்டுவிட்டதைப் போல பாடகியின் குரலை “அடி பெண்ணே…. பொன்னூஞ்சல் ஆடும் இளமை….”
   …… ஜென்சி குரலை இப்படி கூட யோசிக்கலாமோ …ம்ம்ம்

 7. இந்த கதையை தற்போது எடுக்க வேண்டும் என்றால் யாரும் தங்கள் கை காசை போட மாட்டார்கள். அதே போல ரஜினி இந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிப்பாரா என்று தெரியாது. கதை என்று பெரிசாக ஒன்றும் இல்லை, ஆனால் பாத்திரப்படைப்பு, காட்சிகள் என்று போகிற போக்கில் கதையைச் சொல்லியுள்ளார்கள். சிவாஜி படங்களில் வருவது போல உதடு துடிக்க அழுவது மாதிரியும், பெரிய பெரிய வசனங்கள் எதுவும் இல்லாமல், அண்ணன் தங்கை பாசம் என்ற ஒரு சின்னக் கருவை படம் முழுக்க சொல்லியுள்ளார்கள். சரத்பாபுவை சுலபமாக வில்லனாக காட்டியிருக்கலாம் ( ரஜினியின் தங்கையை ஏமாற்றுவது மாதிரி ) ஆனால் அப்படி செய்யாமல் விட்டது தான் இந்த சினிமாவிற்கு பிளஸ்.

  ஆரம்பக் காட்சியில் ரஜினியின் தங்கையாக வரும் அந்த சின்னக் குழந்தையின் கண்களில் தெரியும் சோகம் எப்படிக் கிடைத்தது ? அந்த சோகத்தை சாலையில் பிச்சைக்காரர்களின் குழந்தைகளிடம் தான் நான் பார்த்திருக்கிறேன்.

  இன்று டைரக்டர்கள் படத்தில் நுணுக்கமான சில விஷயங்களைச் செய்யும் போது பாராட்டுகிறோம். ஆனால் இந்த படத்தைப் பார்க்கும் போது பல நுணுக்கமான விஷயங்களைக் கவனித்தேன். உதாரணத்துக்கு – ரஜினியைப் பற்றித் தப்பாக சரத்பாபுவிடம் சொல்லும் தன் சக ஊழியரைப் போட்டு அடித்துவிட்டு தன் நண்பர்களுடன் தெருவில் நடந்து வரும் போது அவர் தங்கை(ஷோபா) ஒளிந்துகொண்டு பார்ப்பார். ரஜினி கேஷுவலாக தெருவில் சாதாரணமாக பேசிக்கொண்டு போவார். அதில் வரும் அந்த வசனங்கள், அப்பறம் ரஜினி தூரமாக போகும் போது ஒலி fade out ஆவது எல்லாம் ‘அட’ போட வைக்கிறது. இதை 1978-ல் யாராவது கவனித்தார்களா என்று தெரியாது.

  அடுத்து ரஜினி ரஜினியாக நடிக்காமல், காளி என்ற கதாபாத்திரமாக நடித்தது. தேவை இல்லாமல் சிகரெட்டைத் தூக்கிப் போட்டுப் பிடிப்பது, பஞ்ச் வசனம் என்று எதுவும் இல்லாமல் டைரக்டர் சொல்வதைச் செய்தது இந்தப் படத்துக்கு பலம். இந்த கதாபாத்திரத்தை வேறு யார் செய்திருந்தாலும், படத்துக்கு பாதிப்பு வந்திருக்காது – very well crafted screenplay.

 8. அதே போல எடிட்டிங் என்று பார்த்தால் செந்தாழம் பூவில் பாடலில் ஷோபாவின் முகபாவங்களைப் பொருத்தியது. குறிப்பாக ‘ராஜகுமாரி’ என்று வரும் இடத்தில். பல இடங்களில் பின்னணி இசை இந்தப் படத்தில் கிடையாது ஆனால் வரும் இடங்களில் தனியாகத் தெரியாமல் படத்துடன் கலந்து இருக்கிறது.

  ஒளிப்பதிவு பாலுமகேந்திரா. அவரின் ஒளிப்பதிவு பற்றி சொல்ல வேண்டும் என்றால் உலகம் உருண்டை என்று சொல்வது போல. பல இடங்களில் ஷோபாவை ஸ்பெஷலாக தன்னுடைய கேமராவில் கவர்ந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். செந்தாழம் பூவில் பாடல் கடைசி சரணத்தில் வரும் சில காட்சிகள் ‘அடி பெண்ணே என்ற பாடலில் வரும் காட்சிகளே இதற்கு சாட்சி. கிராமத்து பெண்ணாக வரும் ஷோபா திடீர் என்று ஷாம்பு போட்ட தலையுடன் பூக்களுக்கு முத்தம் கொடுத்து சினிமா கதாநாயகியாக மாறிவிடுகிறார்.

  வெண்ணீர் ஆடை மூர்த்தி வரும் காட்சிகளில் ஒரு படுக்கையும், அடுத்தவன் பெண்டாட்டியும் கூட வந்துவிடுகிறது. அடுத்தவன் பெண்டாட்டியை வைத்திருக்கும் ஒருவருக்கு பாசமிகு அண்ணன் எப்படித் தன் தங்கையைக் கொடுக்க முன் வந்தார் என்பது ஒரு நெருடல்.

  நாவலைப் படம் எடுக்கும் போது கதையை முழுவதும் உள்வாங்கிக்கொண்டு அதை எடுக்க வேண்டும். இந்த நாவலைப் படித்ததில்லை ஆனால் மகேந்திரன் கதையை முழுவதும் உள்வாங்கிக்கொண்டு எடுத்திருக்கிறார் என்பது மட்டும் தெரிந்துகொள்ள முடிகிறது. அதே போல கதையைக் கொஞ்சம் மாற்றியிருக்கிறார் என்றும் தெரிகிறது.

  “முள்ளும் மலரும்” நாவலை நான் படித்த போது கதாபுருஷன் காளி வேலை செய்யும் Winch operator உத்தியோகமும் அவனுடைய வித்தியாச சுயகெளரவமும் என்னைக் கவர்ந்தன. நாவலில் காளியை புலி ஒன்று தாக்கி அவனது ஒரு கை போய் விடும். அந்த அத்தியாயத்தோடு நாவலை மூடி வைத்து விட்டேன். பிறகு காளி அவனது தங்கை வள்ளி இருவரின் குழந்தைப் பருவம் என்று ஒவ்வொன்றாகப் புதிது புதிகாகச் சேர்த்துக் கொண்டே போய் திரைக்கதையின் கடைசிக் காட்சி வரை என் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி திரைக்கதை எழுதி முடித்து விட்டேன். அப்போது நான் இயக்குனராகும் எண்ணத்திலேயே இல்லை.” – என்று மகேந்திரன் சொல்லியுள்ளார் என்ற தகவலைப் பார்த்தேன்.

  வசனங்கள், மேதாவித்தனமாக இல்லாமல் படம் முழுவதும் இயல்பாக இருக்கிறது (மேதாவித்தனம் இருந்தால் சில சமயம் செயற்கைத்தனமும், நாடகத்தன்மையும் கலந்துவிடுகிறது.) அது எதுவும் இந்த படத்தில் இல்லை. நிச்சயம் சினிமா எடுக்கும் மாணவர்களுக்கு ஒரு சிறந்த பாடமாக அமையும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை.

 9. கவர்ந்த மேலும் சில விஷயங்கள்:

  படம் ஆரம்பிக்கும் போது, என்னைக் கவர்ந்தது அதனுடைய டைட்டில் கார்ட். டைட்டில் கார்டில் பலருடைய பேர் இருந்தது என்றால் படம் பார்ப்பவர்களுக்கு அதை முழுவதும் படிக்க அவகாசம் தருகிறார்கள்.

  படம் முடிந்தவுடன் “அண்ணன் தங்கை உறவு… ” என்று ஏதாவது போடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். “நன்றி” என்று போட்டு முடித்துவிட்டார்கள். அவர்களுக்கு என் நன்றி.

  தமிழ் சினிமாவின் உச்சகட்ட காட்சிகளிலேயே வெறும் தாள ஒலியில் இளையராஜா கொடுத்திருக்கும் அற்புதமான இசைப் பின்னணியில் நிகழும் முள்ளும் மலரின் க்ளைமாக்ஸ் காட்சி நிஜமான காவியத்தன்மை கொண்டது.

 10. முள்ளும் மலரும் காலம் தாண்டியும் நிலைத்திருக்க இன்னொரு முக்கிய காரணம், இளையராஜாவின் இசை. இந்த திரைப் படத்தில் நான்கு பாடல்கள் வருகிறது. நான்கிலும், பாடல் வரிகளும், மெட்டும், அதன் பின்னணி இசையும், அதை மகேந்திரன் காட்சி படுத்தி இருக்கும் விதமும் அழகின் உச்சம். எவ்வித தடங்கல்களும் இல்லாமல், மிக பத்திரமாக தாயின் கருப்பையில் இருக்கும்போது நாம் உணரும் கதகதப்பை இந்த பாடல்கள் மனதுக்குள் ஏற்படுத்துகிறது. குறிப்பாக செந்தாழம்பூவில் பாடல் கொடுக்கும் பரவசம் அமைதியின் இழப்பை நமக்கு உணர்த்துகிறது.

  ராமன் ஆண்டாலும், பாடலில் இடையிடையே வரும், கோரஸ் நம்மை அந்த மலை வாழ் இடத்திற்கே அழைத்து செல்கிறது.

 11. “இதில் மகேந்திரன் அவர்கள் பங்கும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.”
  .
  ஒரு பங்கும் இல்லை .. படம் எடுத்துவிட்டு பின்னணி இசை சேர்க்காமல் பார்த்த தயாரிப்பாளர் வேணு செட்டியார் காசை கரியாக்கிடடாயே என்று திட்டிவிட்டு சென்று விட் டார்
  மனம் நொந்த மகேந்திரன்
  படத்தை இளையராஜாவிடம் ரீ ரெகார்டிங் க்காக கொடுத்து விட்டு சென்று விட் டார் . இரண்டு நாள் கழித்து பின் வந்து மீண்டும் பார்த்த போது படம் முற்றாக புதிய அனுபவத்தை தர மீண்டும் தயாரிப்பாளருக்கு போட்டு காட்டியிருக்கார்
  அதன் பின் தான் தயாரிப்பாளர் சமாதானமாகி இருக்கார்

  இதெல்லாம் மகேந்திரன் பேட்டியில் சொன்னது

 12. அனைவரின் வருகைக்கும் நன்றி

  @யாசின் இப்படத்தை அவசியம் பாருங்க. நீங்கள் கொடுத்த லிங்க்கை ஏற்கனவே பார்த்து விட்டேன் 🙂

  @மருதநாயகம் எனக்கும் இந்த வருத்தமுண்டு. ஒருவேளை இப்படி மாறவில்லை என்றால் இவ்வளவு புகழ் பெற்று இருக்க மாட்டாரோ என்று மனதை தேற்றிக்கொள்வதும் உண்டு.

  @ஸ்ரீநிவாசன் வழக்கமான உங்கள் தகவல்களுக்கு நன்றி 🙂

  @Erumbiyur Muthu நீங்கள் கூறியது போல அவர் இப்படிய மாறி பெரும் புகழ் பெற்று விட்டார். முள்ளும் மலரும் படம் போல நடிக்கவில்லை என்றாலும், தற்போதைய நடிப்பில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மாறி விட்டார் என்பது உண்மையே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here