Sting Operation | The Dark Face Of Media & Politics

2
Sting Operation

YouTubers பணம் வாங்கிக்கொண்டு செயல்படுவதாகச் சிலரை மதன் ரவிச்சந்திரன் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் சில காணொளிகள் வரும் என்று கூறப்படுகிறது.

YouTubers

இணையம் வந்த பிறகு அதிலும் குறிப்பாக YouTube பிரபலமான பிறகு ஆளாளுக்கு ஊடகம் என்ற பெயரில் கண்டதையும் பேசி வருகிறார்கள். Image Credit

இவர்கள் மக்களின் மன நிலையைக் குழப்பும் காரணிகளில் ஒருவராக இருப்பதால், அரசியல் கட்சிகளும் பணம் கொடுத்துத் தங்கள் சார்பாகப் பேச வைக்கிறார்கள்.

இவை தொடர்ந்து பேசப்படும் போது 'ஒருவேளை அப்படி இருக்கலாமோ!' என்ற சந்தேகம் மக்களுக்கு வந்து விடுகிறது.

அரசியல் மட்டுமல்ல திரைத்துறையிலும் இதே நிலை பின்பற்றப்படுகிறது. அதாவது ஓடாத படத்தை ஆஹா ஓஹோன்னு பாராட்டிப் பலரை நம்ப வைப்பது.

ட்விட்டர் ட்ராக்கர்கள் இதே போலப் பணம் வாங்கிச் செயல்படுவது தெரிய வந்ததால், அவர்களையும் விமர்சித்து வருகிறார்கள்.

எனவே, இங்கே YouTubers, ட்ராக்கர்ஸ் எல்லோருமே பணம் வாங்கிக்கொண்டு தான் செயல்படுகிறார்கள் என்பது அனைவருக்குமே தெரிந்து விட்டது.

Sting Operation

மதன் நடத்திய Sting Operation அண்ணாமலைக்காக தான்.

அண்ணாமலை பற்றி எந்தக் குறிப்பிடத் தக்க காட்சியும் இல்லையென்றாலும், தலைப்பே அண்ணாமலையை வைத்துத் தான்.

வேறு பெயரை வைத்தால் பலரை சென்றடையாது என்று அவர்களுக்குத் தெரியும்.

உதயநிதி மான் வேட்டை சம்பவத்தை வெளியிடப்போவதாகக் கூறிய மதன், பல மாதங்கள் ஆளையே காணவில்லை. தற்போது வழக்கு திரும்பப் பெறப்பட்டு விட்டது.

அண்ணாமலை 

திமுக, அதிமுக, விசிக கட்சிகளுக்கு அண்ணாமலை மிகப்பெரிய தலைவலியாக உள்ளார். எனவே, அண்ணாமலையை துரத்தக் கடும் முயற்சிகளை எடுக்கிறார்கள்.

பாஜகவில் உள்ள பழைய ஆட்களுக்கு தற்போது வந்த அண்ணாமலை பெரியாளாவதில் உடன்பாடில்லை. எனவே, அவருக்கு கட்சியிலேயே எதிர்ப்பு.

அண்ணாமலையை எதிர்க்கும் மூத்த பாஜக தலைவர்கள் இதுவரை என்ன சாதித்தார்கள்?! ஏன் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியவில்லை?!

அண்ணாமலையின் Aggressiveness மீது விமர்சனங்கள் இருந்தாலும், அவராலே பாஜக தற்போது எழுச்சியுற்றது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

தற்போது கூட்டணி குறித்த விமர்சனங்கள் எழுந்துள்ளன, இவற்றைத் தாண்டி அண்ணாமலை வெற்றி பெறுவாரா இல்லையா என்பதை காலமே கூற முடியும்.

அண்ணாமலை மட்டும் ஏன்?

காரணம், அண்ணாமலை எதிர்ப்பது சாதாரண நபர்களை அல்ல கடந்த 50+ ஆண்டுகளில் பலமான அஸ்திவாரத்தைப் போட்ட மிகப்பெரிய அரசியல் சக்திகளை.

எவரும் ஏதோ ஒரு வகையில் சிறு தவறாவது செய்து இருக்க வாய்ப்புண்டு. அந்த ஒரு தவறைத் தான் மொத்த அரசியல்வாதிகளும் தேடிக்கொண்டுள்ளார்கள்.

கிடைக்கவில்லையென்றால், ஒன்றை (Sting Operation) உருவாக்க முயல்கிறார்கள்.

மற்ற அரசியல்வாதிகள் செய்த கேவலமான செயல்கள் ஏராளம் ஆனால், அண்ணாமலை சிறு தவறும் தமிழக ஊடகங்களால் ஊதிப்பெருக்கப்படும்.

ஏன்?

அது தான் தமிழக அரசியல்.

ஏற்கனவே உள்ள அரசியல்வாதிகள் செய்த குற்றங்களைப் பற்றிக் கவலைப்படாமல், அண்ணாமலை மீது குற்றம் கிடைக்குமா என்று வலைவீசித் தேடுவதில் உள்ளது மொத்த தமிழக அரசியலும்.

அண்ணாமலை அறிவிக்கப்போவதாக கூறியுள்ள ஏப்ரல் 14 நெருங்க அவருக்கான நெருக்கடிகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது, பலமுனை தாக்குதல்.

ஒருவேளை என்ன தேடியும் அண்ணாமலை மீதான தவறுகள் கிடைக்கவில்லை, சிக்கவும் வைக்க முடியவில்லை அதோடு பாஜக தலைமையும் அண்ணாமலைக்கு முழு சுதந்திரம் கொடுத்து விட்டால், மற்றவர்கள் நிலை ரணகளம் தான்.

அண்ணாமலை சிக்க, அவர்கள் நம்பாத கடவுளை வேண்டுவதே ஒரே வழி.

மாட்டியவர்கள்

பாஜக பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது ஆனால், நான் பார்த்தவரையில் இவர்களில் பெரும்பாலானவர்கள் பாஜக ஆதரவாகப் பேசிப் பார்த்தது இல்லை.

அனைவருமே திமுக ஆதரவாகவும், பாஜக எதிர்ப்பாகவும் (RD, ராஜவேல் தவிர்த்து) பேசி வந்துள்ளார்கள். எனவே, இது என்னவென்பது புரியவில்லை.

இவர்கள் மாட்டிக்கொண்டார்கள் மற்றவர்கள் மாட்டவில்லை அவ்வளவே. அதற்காக மற்றவர்கள் உத்தமர்கள் என்பதாகாது.

இதே போலத் திமுக ஆதரவு முக்கிய ஊடகவியாளர்கள் பலர் சந்தித்துக்கொண்டது சமூகத்தளங்களில் நிழற்படமாக வலம் வந்தது.

இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டை வளர்க்கவா சந்தித்து இருப்பார்கள்!

இங்கே எல்லோருமே ஒருதலைப்பட்சமானவர்கள் தான். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே நேர்மையான ஊடகவியலாளர்கள் உள்ளனர்.

பணத்தை வாங்கிக்கொண்டோ வேறு வகையிலோ அரசியல் கட்சிகளை ஆதரிப்பதால், யோக்கியன் போலப் பேசுவதெல்லாம் நகைப்புக்குரியது.

எங்கள் தொழில்

இக்காணொளி வெளியான பிறகு தன்னிலை விளக்கம் கொடுத்தவர்கள் அனைவருமே ஒரு கருத்தைக் குறிப்பிடுகிறார்கள்.

அதாவது, இதெல்லாம் எங்கள் தொழில் எங்களுக்குப் பணம் கொடுத்து அக்கட்சி ஆதரவு கருத்தை மக்களிடையே கொண்டு சேர்க்க (Narrative) சொன்னால், அதற்காகச் செயல்படுவோம் என்கிறார்கள்.

சரியான ஒன்றே! எனக்கும் இதில் மாற்றுக்கருத்தில்லை.

ஆனால், சமூகத்தளங்களில் நடுநிலை, ஒரு கட்சிக்கு ஆதரவு என்று கூறி, பணத்துக்கு ஒரு கட்சிக்கு வேலை செய்தால், மற்றவர்களை முட்டாளாக்குவது போலத்தானே.

பின்னணியில் இவ்வாறு செய்துகொண்டு பொதுவெளியில் தனிப்பட்ட கருத்து என்ற பெயரில் வேறு ஒன்றை பேசினால் மற்றவர்கள் விமர்சிக்கத் தானே செய்வார்கள்.

எடுத்துக்காட்டுக்கு, ஒருவர் திமுக ஆதரவாக ட்விட்டரில் செயல்படுகிறார் ஆனால், அதிமுக / பாஜக வளர்ச்சிக்காக பணி புரிகிறார் என்றால், இவரை ட்விட்டரில் பின்தொடரும் திமுக ஆதரவாளர்களை முட்டாளாக்குவது போலத்தானே!

இங்கே கட்சி பெயர் திமுக என்றாலும், மற்ற கட்சிகளுக்கும் பொருந்தும்.

நம்பிக்கை

இப்பிரச்சனையில் தெளிவாகத் தெரிவது, எவரையும் நம்ப முடியாது என்று.

தனிப்பட்ட முறையில் நம்பிக்கை வைத்துக் கூறுகிறார் ஆனால், அதைப் பொதுவெளியில் அவர் அப்படிக் கூறினார் என்று கூறி விடுகிறார்கள்.

எதை நம்பி ஒன்றை மற்றவரிடம் கூறுவது?

ஒருவரை அழைக்கிறார்கள் வந்தவர் பணம் வாங்குபவராகவே இருக்கட்டும் ஆனால், சம்பந்தப்பட்ட நிகழ்வில் உடன்பாடு / ஆர்வம் இல்லாதவராக இருந்தாலும், காணொளியில் வந்ததாலேயே அவர் மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட வாய்ப்புள்ளது.

மதனை நம்பி அவர் மனைவி கூட தைரியமாக இருக்க முடியாது காரணம், அவரையும் காணொளி எடுத்து வைத்து விடுவார்.

காணொளி எடுத்தது மதன் இல்லையென்றாலும், எடுக்க வைத்தது மதன்.

இனி இவரை நம்பி யார் பேசுவார்கள்? எங்காவது கேமரா, ஆடியோ வைத்து இருப்பானோ என்ற சந்தேகமே மேலோங்கி இருக்கும்.

காணொளி வெளியிட்ட மதன் இதற்கு முன்னால் பேசியது, நடந்து கொண்டதை வைத்துப்பார்த்தால், இவரே மோசமான நபராக உள்ளார்.

எல்லோருமே குட்டையில் ஊறிய மட்டைகள். இதில் மாட்டாதவர்கள் அதிர்ஷ்டசாலிகள், மாட்டியவர்கள் அதிர்ஷ்டம் இல்லாதவர்கள்.

எல்லோருக்குமே அனைவரையும் தெரியும் என்றாலும், இனி இவர்கள் கருத்தைக் கூறினால் கருத்துப் பகுதியில் இக்காணொளியே காலத்துக்கும் பதிலாக வரும்.

மக்களும் சில வாரங்களில் மறந்து விடுவார்கள் என்றாலும், ஏதாவது பிரச்சனையில் அழுத்தமாகக் கருத்து கூறும் போது நீ யோக்கியமா என்று கருத்துப்பகுதியில் இக்காணொளியொடு வருவார்கள்.

எனவே, அசிங்கப்பட்டதை இனி மாற்ற முடியாது.

கால மாற்றம்

கால மாற்றத்தில் கிடைக்கும் வாய்ப்புகள், நெருக்கடிகள், மிரட்டல்கள், அனுபவங்கள், பொருளாதார வளர்ச்சி ஒவ்வொருவரின் தனிப்பட்ட குணத்தை மாற்றி விடுகிறது.

சமூகத்தளங்கள் பிரபலமான பிறகு பலர் மிகவும் மாறி விட்டார்கள். சிலர் மாற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி விட்டார்கள்.

ஊடகத்தில் உள்ளவர்கள், அரசியல் சார்ந்து இருப்பவர்கள் மட்டுமல்லாமல் ஒரு சாதாரணத் தனிப்பட்ட நபருக்குக் கூட நெருக்கடி உள்ளது.

பார்வைகள் குறைந்தால், அதை உயர்த்த விபரீதமான முயற்சிகளை எடுத்து எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக உள்ளார்கள்.

இங்கே போட்டிகள் அதிகமாகி விட்டது. எனவே, தங்கள் இருப்பை நிலை நிறுத்தத் தர்மத்தை மீறி அனைவருமே நடந்து கொள்கிறார்கள்.

இங்கே யாரையும் யோக்கியன் என்றே கூற முடியவில்லை. ஒவ்வொருவருடைய குணத்தையும் சூழ்நிலைகளே தீர்மானிக்கிறது.

எனவே, மற்றவர்கள் கூறுவதை (என்னையும் சேர்த்தே கூறுகிறேன்) செய்தியாகக் கடந்து செல்லுங்கள் அல்லது கூறுவதை இணையத்தில் தேடி உறுதிப்படுத்துங்கள்.

நாம் நினைப்பதை கூறி விட்டார் என்பதற்காகக் கண்மூடித்தனமாக எவர் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டாம். ஏனென்றால், சம்பந்தப்பட்டவரே பின்னர் அதிர்ச்சியளிக்கும் படி நடக்கலாம்.

அனைவரையும் சந்தேகக்கண்ணோடு அணுகும்படியாகச் சூழ்நிலைகள் மாறுவது கவலையோடு கடுப்பையும் அளிக்கக்கூடியதாக உள்ளது.

தொடர்புடைய கட்டுரை

டிராக்கர்ஸ் அரசியலும் உணராத ரசிகர்களும்!

நடுநிலை என்பது சாத்தியமா இல்லையா?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. கிரி, நடுநிலையான அரசியல் செய்திகளை எதிர்பார்ப்பவர்கள் பெரும்பாலும் you tube காணொளிகளில் நேரத்தை செலவிடுவார்கள் என்பது சந்தேகமே. you tube ல் பேசுபவர்கள் செய்திகளை மட்டும் கூறுபவர்கள் இல்லை.அவர்களின் interpretation அல்லது விருப்பங்களை வெளிப்படுத்துகிறார்கள். Politics narratives செட் செய்கிறார்கள். அற சீற்றத்துடன் பேசும் you tube ஊடகவியலாளர்கள் அரசியல் வாதிகளை நேரில் கண்டால் குழைவதை காணலாம். பெரும்பாலான அரசியல்வாதிகள் இவர்களின் தொடர்பில் இருப்பவர்கள் தான். இவர்கள் சாதகமாகவோ பாதகவமாகவோ பேசினாலும் அரசியல் வாதிகளுக்கு லாபம் தான். அனைத்தும் விளம்பரம் தான்.

    இந்த ஊடகவியலாளர்கள் புகழ் வெளிச்சத்துக்கு வந்ததும் கொஞ்சம் ஓவராக தான் போகிறார்கள்.இதற்க்கு மாதேஷ், ஐயப்பன், கிஷோர் போன்றவர்கள் சிறந்த உதாரணம். காரியம் முடிந்ததும் நிறுவனமும் அரசியல் கட்சிகளும் கழட்டிவிடுவார்கள். தி மு க விற்கு ஆதரவாக பேசிய பல ஊடகவியலாளர்கள் அரசாங்க committee பதவிகளுக்கு காத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆதாயம் கிடைக்க வில்லை என்றால், ஆளும் கட்சிகளுக்கு எதிராக பேச தொடங்குவார்கள். அரசியல் ஊடகங்களில் நேர்மையை எதிர்பார்ப்பது பெரும் தவறு. சுய நலம் மட்டுமே முதல் தகுதி.

    நீங்கள் கூறிய you tube களில் காணொளி காண்பவர்கள் பெரும்பாலும் அரசியல் நிலைப்பாடு எடுத்தவர்கள். தான் எடுத்த நிலைப்பாட்டை ஆதரித்து பேசுபவர்களின் பக்கம் நிற்கிறார்கள். அதன் மூலம் தனது ஆணவத்தை நிரப்பி கொள்கிறார்கள். அதற்கான நேரத்தை செலவிடுகிறார்கள். இவர்கள் ஏமாற்ற படுவதில் நாம் ஒன்றும் பெரிதுபடுத்த தேவையில்லை. இவர்களுக்கு சினிமா போல அரசியலை மசாலா கலந்து கோர்வையாக பேச ஆட்கள் தேவை அவ்வளவே. புரட்சி, சமத்துவம், திராவிடம், சாதி ஒழிப்பு, முற்போக்கு எல்லாமே போலி பிம்பத்தை கட்டமைக்க உதவும் முக கவசங்கள்.

    இந்த நிகழ்வை எளிதாக மறந்து அல்லது மறுத்து தங்களின் ஆதரவு ஊடகங்களை பின்தொடர்வார்கள்.

    கணிசமான நேரத்தை இதில் வீணடித்தவன் என்றவன் முறையில் இதுவே எனது பார்வை. சாதாரண மனிதனுக்கு கொடுக்க பட்ட உச்ச பட்ச அதிகாரம் வாக்குரிமை மட்டுமே. அதை ஒழுங்காக செய்தாலே போதும். செய்திகளுக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சம் அரை மணி நேரம் செலவு செய்தால் போதும்.நாம் காணொளிகளை காண்பதால் தான் அரசியல்வாதிகள் இந்த ஊடகவியலாளர்களுக்கு பணத்தை செளவு செய்கிறார்கள்.

  2. @மணிகண்டன்

    “நடுநிலையான அரசியல் செய்திகளை எதிர்பார்ப்பவர்கள் பெரும்பாலும் you tube காணொளிகளில் நேரத்தை செலவிடுவார்கள் என்பது சந்தேகமே.”

    அனைவருமே என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள பார்க்கிறார்கள்.

    “you tube ல் பேசுபவர்கள் செய்திகளை மட்டும் கூறுபவர்கள் இல்லை.அவர்களின் interpretation அல்லது விருப்பங்களை வெளிப்படுத்துகிறார்கள். Politics narratives செட் செய்கிறார்கள்.”

    உண்மை தான் ஆனால், இதைத்தான் ஊடகங்களும் செய்கிறார்கள்.

    தொலைக்காட்சி ஊடகங்கள் தங்கள் கருத்தைத் தானே திணிக்கிறார்கள். எனவே, எல்லோருமே ஒன்று தான்.

    இங்கே செய்தி செய்தியாகவே கொடுக்கப்படுவதில்லை, தங்கள் கருத்தையும் திணிக்கிறார்கள்.

    “பெரும்பாலான அரசியல்வாதிகள் இவர்களின் தொடர்பில் இருப்பவர்கள் தான்”

    ஆமாம். மாற்றுக்கருத்தில்லை.

    “இந்த ஊடகவியலாளர்கள் புகழ் வெளிச்சத்துக்கு வந்ததும் கொஞ்சம் ஓவராக தான் போகிறார்கள்.இதற்க்கு மாதேஷ், ஐயப்பன், கிஷோர் போன்றவர்கள் சிறந்த உதாரணம். ”

    ட்விட்டரில் YouTube ல் கிடைக்கும் புகழ் வெளிச்சம், இவர்களுக்கு போதையை தருகிறது. தான் மிகப்பெரிய நபர் என்ற கற்பனையைக் கொடுக்கிறது.

    அது இந்த மாதிரி வந்து முடியும் போது புலம்பலாக தொடர்கிறது.

    “தி மு க விற்கு ஆதரவாக பேசிய பல ஊடகவியலாளர்கள் அரசாங்க committee பதவிகளுக்கு காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.”

    மறுக்க முடியாத உண்மை.

    மனுஷ்ய புத்திரன் அது போன்ற வாய்ப்பு கிடைக்காததால், புலம்பிக் கொண்டு இருந்தார். தற்போது எதோ பதவி கொடுத்துள்ளார்கள் என்று நினைக்கிறேன்.

    “இந்த நிகழ்வை எளிதாக மறந்து அல்லது மறுத்துத் தங்களின் ஆதரவு ஊடகங்களை பின்தொடர்வார்கள்.”

    அதே தான். கட்டுரையிலும் இதைக் குறிப்பிட்டுள்ளேன். இவை இரண்டு வாரங்களுக்கு மட்டுமே தாங்கும்.

    இவர்களும் வழக்கம் போலப் பேசிக்கொண்டு இருப்பார்கள். பார்ப்பவர்களும் பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.

    “கணிசமான நேரத்தை இதில் வீணடித்தவன் என்றவன் முறையில் இதுவே எனது பார்வை”

    நீங்கள் மட்டுமல்ல பெரும்பாலானவர்கள் தான்.

    எனக்கு பெரும்பாலும் யாரவது பகிர்ந்தால் சென்று பார்ப்பேன். நானாக பார்ப்பது குறைவு தான்.

    குறிப்பிட்ட சில பேட்டிகள் மட்டுமே நானாக விரும்பி பார்த்துள்ளேன்.

    “நாம் காணொளிகளை காண்பதால் தான் அரசியல்வாதிகள் இந்த ஊடகவியலாளர்களுக்கு பணத்தை செளவு செய்கிறார்கள்.”

    இது உண்மை என்றாலும், இது எப்போதும் நிற்காது என்பதும் கசப்பான உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here