“மச்சி! டச்சு (Dutch) போட்டுக்கலாம்” என்றால் செலவைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று அர்த்தம். நண்பர்கள் / நண்பிகள் என்றாலே செலவு, பகிர்தல் இல்லாமல் இருக்காது. இதில் உள்ள சிக்கல்களை எளிதாகத் தீர்க்கும் செயலி தான் Splitwise.
Splitwise
செலவைப் பகிரும் போது ஏற்படும் சிக்கல்கள்
- யார் முதலில் பணம் கொடுப்பது?
- நாம் கொடுத்தால் பணம் எப்படிப் பகிரப்படும்?
- நானே எப்பவும் கொடுத்துட்டு இருக்கிற மாதிரி இருக்கே!
- கொடுத்த பணத்தை எப்படிச் சரியாகக் கணக்கு வைப்பது?
- போன முறை நான் அதிகம் கொடுத்தேன், இந்த முறை இன்னொரு நண்பனுக்குக் குறைவா வருது!!
- ஒருத்தன் மட்டும் பணம் கொடுக்காமலே தப்பித்துட்டு இருக்கான்..!
- எவ்வளவு தான் செலவு செய்தோம் என்று ஒன்றுமே புரியலையே..!
- பசங்க கூடப் போனதில் மாசம் எவ்வளோ செலவு ஆச்சுன்னு கணக்கே தெரியல..
மேற்கூறிய அனைத்துப் பிரச்சனைகளையும் இந்தச் செயலி மூலம் எளிதாகத் தீர்க்கலாம்.
இது தெரியாம பல நாள் இருந்துட்டேனேப்பா..!
இது தெரியாம பல நாள் இருந்துட்டேனேப்பா..! என்று தான் நினைத்தேன். அவ்வளவு சிறப்பாக இருக்கிறது.
இதை மற்ற நண்பர்களுக்கு அறிமுகப்படுத்திய போது முதலில் பயன்படுத்த மறுத்தவர்கள், தொடர் வற்புறுத்தலின் காரணமாகப் பயன்படுத்தித் தற்போது நான் மறந்தாலும் இவர்கள் இதில் சரியாகக் குறிப்பிட்டு விடுகிறார்கள்.
இதைப் பயன்படுத்தத் தேவை Android / iOS இயங்குதளமுள்ள ஒரு திறன் பேசி (Smart phone).
தொலைபேசி இல்லாமல் கணினியில் கூட இதைச் செய்ய முடியும் என்றாலும் திறன் பேசி இருந்தால் எளிது, கட்டாயமல்ல.
இதை எப்படிப் பயன்படுத்துவது?
https://secure.splitwise.com/ தளம் சென்று உங்களுக்கு ஒரு பயனர் கணக்கு உருவாக்க வேண்டும், அவ்வளவு தான்.
இதன் பிறகு உங்கள் நண்பர்கள் மின்னஞ்சல் முகவரிகளைக் கொடுத்து இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Android / iPhone தொலைபேசிகளில் இதற்கான செயலிகள் Google Play Store / Apple Store ல் உள்ளது. கட்டணமில்லை.
இதை நிறுவிக் கொண்டால் நம் கணினியில் மட்டுமல்ல நம் திறன் பேசியிலும் எளிதாகப் பயன்படுத்த முடியும்.
இதனால் என்ன பயன்?
முக்கியமான பயன் நண்பர்களுடன் வெளியே செல்லும் போது அவ்வப்போது ஆகும் செலவை இதன் மூலம் தவறு இல்லாமல் எளிமையாகப் பகிர்ந்து கொள்ளலாம்.
இதற்காக நீங்கள் கணக்கெல்லாம் போட வேண்டியதில்லை.
சம்பந்தப்பட்ட நண்பர்கள் பெயரைத் தேர்வு செய்து மொத்த செலவைக் குறிப்பிட்டால் போதும் அதுவே மொத்த செலவைப் பிரித்துத் தனித் தனியாக அனுப்பி விடும்.
எடுத்துக்காட்டுக்கு மூன்று நண்பர்கள் 100 ₹ செலவு செய்தால் 33.33 ₹ என்று பிரித்து அனுப்பி விடும். மீதி ஒரு பைசா மூவரில் ஒருவருக்குக் கூடுதலாகச் சென்று கணக்கு நேராக்கப்படும்.
ஒருவர் குறைவாகவும் ஒருவர் அதிகமாகவும் கொடுக்க வேண்டி இருந்தாலும் அதற்குத் தகுந்தபடி தொகை பிரிப்பதை நம் விருப்பப்படி மாற்றி அமைக்க முடியும்.
நீங்கள் இதில் எந்தச் செலவு என்பதையும் குறிப்பிடலாம். எனவே எந்தத் தேதி, எந்த இடத்தில் என்ன செலவு செய்தோம் என்று தெளிவாக இருக்கும்.
நீங்கள் வெளிநாடு செல்பவர் என்றால் Currency யை ($ / ₹) நம் தேவைக்கு ஏற்றபடி மாற்றி வைத்துக் கொள்ளலாம்.
நண்பர்களுடன் சுற்றுலா செல்லும் போது மிக மிகப் பயனுள்ளதாக இருக்கும்.
நண்பர்கள் நாங்கள் கடந்த முறை சுற்றுலா சென்ற போது இதை வைத்துத் தான் மொத்தச் செலவையும் செய்தோம்.
மறதி / சங்கடம் என்ற பேச்சே இல்லை
நாம் நண்பருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தையோ அவர்கள் நமக்குக் கொடுக்க வேண்டியதையோ நாளடைவில் மறந்து விடக்கூடிய வாய்ப்பு உள்ளது.
இவ்வளவு நாள் கழித்து எப்படிக் கேட்பது என்ற சங்கடம் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது.
இதில் அந்தப் பிரச்சனையே இல்லை. எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதைத் தெளிவாக வைத்து இருக்கும். எனவே, விடுபட 100% வாய்ப்பே இல்லை.
நமக்கு நண்பன் பணம் கொடுக்க வேண்டி இருந்தால் அடுத்த முறை செலவு செய்யும் போது நண்பனைக் கொடுக்கக் கூறி இதில் சேர்க்கக் கூறி விட்டால், அதுவே தானியங்கியாகக் கழித்துக் கொள்ளும்.
நேரடியாக மீதியைக் கொடுத்தும் “Settle Up” வசதி மூலம் கணக்கை நேராக்கலாம்.
Reminder
நினைவூட்டும் (Reminder) வசதியும் இருக்கிறது.
எடுத்துக்காட்டுக்கு 100₹ / 200₹ என்று பாக்கி இருந்தால் பரவாயில்லை ஆனால், அதே ஆயிரம் இரண்டாயிரம் தர வேண்டி இருந்தால்…. இதில் Reminder Click செய்தால் அவருக்கு மின்னஞ்சல் செய்து விடும்.
பாதுகாப்பு
பணம் விசயம் என்றாலே எச்சரிக்கை அவசியம். நம் திறன் பேசியை வாங்குபவர்கள் கை சும்மா இருக்காது. இதையெல்லாம் ஆராய்ச்சி செய்து பார்த்து விடுவார்கள்.
இதைத் தடுக்க App Password உள்ளது.
மற்றவர்கள் உங்கள் அனுமதி இல்லாமல் இந்தச் செயலியைத் திறக்க முடியாது.
சில சுவாரசியமான நினைவுகள்
சில காலம் கழித்து இதைப் பார்த்தால் அட! நாம இவ்வளோ முறை இவன் கூடப் போய் இருக்கோமா…!
அடப் பாவி.. இவன் கூட இவ்வளவு செலவு செய்து இருக்கோமே ..!
ஆ! இவ்வளவா சாப்பிட்டு இருக்கிறோம்..!
ஓவரா சரக்கடிச்சு இருக்கோம் போல இருக்கே..!
மாசம் இவ்வளவா வெட்டியா செலவு செய்கிறோம்…! என்பது போன்ற சில இன்ப மற்றும் துன்ப அதிர்ச்சிகளைப் பார்க்கலாம் 🙂 .
வருடங்கள் கழித்துப் பார்க்கும் போது நம் நண்பர்களுடன் சுற்றிய இடங்கள் எல்லாம் பசுமையான நினைவுகளாக இருக்கும்.
கணக்கு எல்லாம் சரியா இருக்கு ஆனால், பணம் திருப்பிக் கொடுக்க மாட்டேங்குறானே! என்றால்.. 🙂 அதுக்கு ஒன்றுமே செய்ய முடியாது.
குடும்பச் செலவுகள்
இது நண்பர்களுக்கிடையே மட்டுமல்ல குடும்பத்தில் அனைவருடனும் வரவு செலவை இதன் மூலம் எளிதாகச் செய்யலாம்.
இதன் மூலம் மறந்து விடுதல், எப்பக் கொடுத்தேன்?! என்பது போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
இதில் நான் குறிப்பிடாத பல்வேறு வசதிகள் உள்ளது. அதிகமாகக் கூறினால் குழப்பமாக இருக்கும் என்று தவிர்த்து உள்ளேன்.
தொடர்ச்சியாகப் பயன்படுத்தத் துவங்கிய பிறகு நண்பர்களிடம் ஏதாவது செய்தி பெற வேண்டி இருந்தால் WhatsApp ல அனுப்பிடு என்று கூறுவது போல செலவு செய்தால் “Splitwise ல போட்டுடு” என்று கூறுவது சாதாரணமாகி விடும்.
எனவே, இவ்வளவு பயனுள்ள செயலியைப் பயன்படுத்திப் பயன் பெறுங்கள்.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
பாடலுக்காக[வும்] பயன்படுத்திப் பார்க்கிறேன்… நன்றி…
சிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்
சிறந்த பகிர்வு. போன மாதம் குடும்பத்துடன் திருப்பதி போய் இருந்தோம். அங்கு செய்த செலவை 4 பங்காக பிரிப்பதற்குள் ஒரு வழி ஆகி விட்டோம். இனி இந்த செயலியை உபயோக படுத்த வேண்டியது தான்.
தல
Splitwise
– ரொம்ப நன்றி தல. நீங்க சொன்ன மாதிரி நட்பு மட்டும் இல்லை குடும்பத்துக்கே உபயோகம் உள்ளது.. நிச்சயம் தர்ம சங்கடம் நெறைய தவிர்க்கலாம் இதன் மூலமா பகிர்வுக்கு நன்றி
– அருண் கோவிந்தன்
அண்ணா இது நல்ல செயலி தான் ஆனால் இது தேவைப்படாது நானும் பயன்படுத்தமாட்டேன் . ஏனென்றால் நானும் என் நண்பனும் எங்கள் இருவருக்குள்ளும் பல ஆயிரம் பாக்கி வைத்துள்ளோம் … இது இருவருக்கும் தெரியும் ஆனால் இருவரின் பண சூழ்நிலையும் சரியில்லை அதனால் தான் இதை பயன்படுத்தி இருவருக்குள்ளும் சங்கடத்தை உருவாக்க நான் விரும்ப வில்லை. பாடல் செயலி செமையா இருக்கு நன்றி அண்ணா
தமிழ் இந்துவில் நமது தளம் வந்தது மிக்க மகிழ்சி அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா
அனைவரின் வருகைக்கும் நன்றி
@பிரகாஷ் பயன்படுத்துங்க.. ஏமாற்றமடைய மாட்டீர்கள்..
@கார்த்தி இது ஒரு நண்பருக்கு மட்டுமல்ல 🙂 உன் குடும்பத்து கணக்கு வழக்கைக் கூட இதன் மூலம் செய்யலாம்.
@அருண் குடும்பத்து வரவு செலவுக்கும் இது ரொம்ப பயனுள்ளது. என்னுடைய மனைவியிடம் இதன் மூலம் தான் பணப் பரிமாற்றம் நடத்துகிறேன்.
அருண் ஆமாம் இதன் மூலம் இது மட்டுமல்ல பல பாடல்களைக் கண்டு பிடித்தேன். ஒரு சில பாடல்கள் என்ன முயன்றும் முடியலை.