அமெரிக்காவில் அவ்வப்போது கறுப்பர்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சனைகளில் ஒன்றை மையமாக வைத்து வந்துள்ள சீரீஸ் Seven Seconds. Image Credit
Seven Seconds
ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் போதை தடுப்புப் பிரிவு அதிகாரியின் காரில் அடிபட்டுக் கறுப்பின பையன் இறந்து விடுகிறான்.
இதை அவரது சக ஊழியர்கள் மறைத்து விடுகிறார்கள். இறுதியில் இவர்கள் தண்டிக்கப்பட்டார்களா இல்லையா என்பதே Seven Seconds.
Black Lives Matter
கறுப்பின மக்கள் வெள்ளையின மக்களால் பாதிக்கப்படுவதும், அதே போலக் கறுப்பின மக்களில் பலர் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதும் வழக்கம்.
அமெரிக்காவில் வசிப்பவர்கள் இதை எளிதில் புரிந்து கொள்வார்கள்.
எப்போதுமே சிறுபான்மையினருக்கு ஆதரவு குரல்கள் உலகம் முழுக்க அதிகம் இருக்கும். எனவே, கறுப்பின மக்களுக்கு ஏதாவது பிரச்னையென்றால், உலகம் முழுவதும் கவனம் ஈர்க்கப்படும்.
கடந்த வருடங்களில் வெள்ளையின காவலர் கறுப்பின நபரின் கழுத்தில் காலை வைத்து அமுக்கியதில் அவர் மூச்சு விட முடியாமல் இறந்தது பெரிய சர்ச்சையானது.
Black Lives Matter ட்ரெண்டிங் உலகம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டது. இக்கதையும் இது போன்ற சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
விபத்து
பீட்டர் எதிர்பாராமல் மோதி விடுவார், இவரும் கவனக்குறைவாக இருப்பார் அதோடு அப்பையனும் திடீரென்று நடுவில் வந்து விடுவதால், கட்டுப்படுத்த முடியாது.
பதட்டத்தில் சக ஊழியர்களுக்குத் தொலைபேசியில் அழைத்து விஷயத்தைக் கூறிய பிறகு, அவருடைய மேலாளர், சக ஊழியர்கள் கிளம்பி வந்து பார்த்து இதை மறைத்து விடலாம் என்பார்கள்.
இறந்தது கறுப்பின பையன் என்பதால், எதிர்பாராமல் நடந்து இருந்தாலும், இதைப் பெரிய பிரச்னையாக்குவார்கள் என்று மறைத்து விடுவார்கள்.
பீட்டருக்கு மறைக்க வேண்டும் என்று எண்ணமில்லை, குற்ற உணர்வாகவும் இருக்கும் ஆனாலும், சக ஊழியர்களின் வறுபுறுத்தலால் மறைக்க வேண்டியதாகி இருக்கும்.
அப்பாவைப் போலக் கோழையாக இல்லாமல், பிரச்சனைகளைத் தைரியமாக எதிர்கொள்வேன் என்று கூறி விட்டு இறுதியில் எதற்காக மறைக்கிறார், பொய் சொல்கிறார் என்பது குழப்பமாக உள்ளது.
உளவியல்
சீரீஸ் முழுக்க உளவியல் தாக்கத்தின் அளவு அதிகமாக உள்ளது.
அதாவது பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் எந்த மாதிரி நடந்து கொள்கிறார்கள், கணவன் மனைவிக்குள்ளே ஏற்படும் விவாதங்கள், சண்டைகள், மன அழுத்தங்களால் ஏற்படும் கோபங்கள் இயல்பாகக் கூறப்பட்டுள்ளது.
இதை ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கை சூழ்நிலையில் பொறுத்தி பார்த்துக்கொள்ள முடியும் என்பதே இதன் சிறப்பு. என்னால் உணர்ந்து பார்க்க முடிந்தது.
சிலருக்கு இவை கடந்து செல்லும் நிகழ்வுகளாக இருக்கலாம் ஆனால், எனக்கு இவை பலரின் எண்ணவோட்டங்களைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பாக இருந்தது.
மன அழுத்தம் ஏற்பட்டால், கோபம் அடைந்தால் ஒவ்வொருவரும் எப்படி மாறி விடுகிறார்கள்!
இறந்து போன பையனின் அம்மா கட்டுப்படுத்த முடியாத கோபத்தில், வெறியில் இருப்பார். எதற்கு இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறார்! என்று நமக்கே தோன்றும். ஏனென்றால், இதனால் பிரச்சனைகளே ஏற்படும்.
அதே போல ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு பிரச்சனைகள்.
வழக்கு
இந்தப் பையனின் வழக்கறிஞராக வரும் பெண் எப்படிப்பட்டவர் என்றே புரியவில்லை. மிகப்பெரிய வழக்குக்கு ஆஜராகுபவர் தேர்வு சிறப்பாக அமைந்து இருக்கலாம்.
எனக்கு என்னமோ இவர் சரியான கதாப்பாத்திரமாகத் தோன்றவில்லை. இன்னும் அழுத்தமான, முக்கியத்துவம் நிறைந்தவராக இருந்து இருக்க வேண்டும்.
இவரும் ஒரு கறுப்பின பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு வழக்கில் துணையாக வருபவர் (Fish) சிறப்பான நடிப்பு. துவக்கத்தில் என்னவோ போல வந்தாலும், போகப்போக இவரே முக்கியத்துவம் மற்றும் பொறுப்புள்ளவராக வருகிறார்.
காவல்துறை சார்பில் வாதாடும் வெள்ளையின பெண் வழக்கறிஞர் பதட்டம் இல்லாமல், கெத்தாக நடித்துள்ளார்.
நம்மூர் செய்திகளில் எப்படியோ அதே போலத் தான் அமெரிக்காவிலும் உள்ளது.
அதாவது ஒரு பையன் இறந்தால் சாதாரணச் செய்தி ஆனால், கறுப்பின பையன் வெள்ளையின நபரால் விபத்தில் இறந்தார் என்றால் அது பரபரப்பு செய்தி.
நம்மூரில் ஒரு பையன் இறந்தார் என்றால் செய்தி, ஆனால் பட்டியலின பையன் ஆதிக்கச் சாதி நபரால், விபத்தில் இறந்தார் என்றால் பரபரப்பு செய்தி.
உலகெங்கும் யார் எப்படி இறந்தாலும் யாரால் இறந்தார் என்பதே செய்தியாக உள்ளது. அங்கே வெள்ளையர்கள், இங்கே ஆதிக்கச் சாதியினர்.
வழக்கறிஞர் இதைக் குறிப்பிடும் போது எதிர் கட்சி வழக்கறிஞர் Objection செய்வார், அதற்கு நீதிபதி இவ்வாறு கூறக் கூடாது என்று அறிவுறுத்துவார்.
இறுதி எபிசோடுகள் வழக்கு, நீதிமன்றம் என்று செல்வது பரபரப்பாக இருக்கும். ஒவ்வொரு நாளும் ஒருவர் கை ஓங்கி இருக்கும்.
இதனிடையே கறுப்பர்களைத் தவறான வழிகளில் எப்படிப் பயன்படுத்தித் தூக்கி வீசுகிறார்கள் என்பதையும் போகிற போக்கில் கூறுகிறார்கள்.
இனப்பாகுபாடு
இதில் வசனங்களும், உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளும் அதிகம். எனவே, சிலருக்குச் சலிப்பை ஏற்படுத்தலாம் ஆனால், எனக்கு அப்படித்தோன்றவில்லை.
Black Lives Matter என்பது போல வெள்ளையின காவலர்களுக்கு ஆதரவாக Blue Lives Matter என்று கூறுவார்கள். தற்போது தான் இதைக் கேள்விப்படுகிறேன்.
ஒரு காட்சியில் கறுப்பின இளைஞர்கள் காவலர்களையே கலாய்ப்பார்கள்.
இது போலச் சராசரி வெள்ளையின பொதுமக்களுக்கும் சம்பவங்கள் நடைபெறுகிறது ஆனால், அவர்களின் பிரச்சனைகள் அதிகம் பேசப்படுவதில்லை.
அதாவது கறுப்பின மக்கள் என்றாலே அப்பாவிகள், அவர்கள் பாவம், எந்தத் தவறும் செய்யாதவர்கள் என்று கட்டமைத்து விட்டார்கள். பிரச்சனை இரு பக்கமும் உள்ளது.
இக்கதை எளிதாக நம் ஊருடன் பொருத்திப்பார்க்கலாம்.
ஒரு பட்டியலின நபருடன் சண்டை என்றால், சும்மாவே என்னைச் சாதியைக் கூறி திட்டினார் என்று கூறி வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய முடியும்.
இச்சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் ஏராளம் உள்ளனர். எனவே, உலகம் முழுக்கவே இதுவொரு சிக்கலான பிரச்சனையே.
இப்பிரச்சனையை இந்தச் சீரீஸ் காண்பிக்கிறது. எனவே தான் கூறுகிறேன், இதில் பலவற்றைத் தெரிந்து கொள்ள முடியும்.
Seven Seconds தலைப்புக்கான காரணம் இறுதியில் தெரியவரும்.
யார் பார்க்கலாம்?
இக்கதை செண்டிமெண்ட், அதிக உரையாடல்கள், கோபம், மன அழுத்தம், இனப்பாகுபாடு, உளவியல், போதை மருந்து, இன வெறி என்று கலவையாக உள்ளது.
எனவே, அனைவருக்கும் பிடிக்கும் என்று கூற முடியாது. இறுதியில் நீதி கிடைக்கும் என்றாலும், திருப்தியில்லாத உணர்வு.
அமெரிக்காவில் வசிப்பவர்கள் இப்படத்தை முழுவதும் உள்வாங்கிப் பார்க்க முடியும்.
வெள்ளையின நபருக்குப் பதிலாக ஆதிக்க சாதியினர். கறுப்பின பையனுக்கு பதிலாக பட்டியலின பையன் என்று மாற்றிப்பார்த்தால், நம் ஊர் கதைக்கு அட்டகாசமாக பொருந்தும்.
NETFLIX ல் காணலாம்.
Created by Veena Sud
Starring Regina King, Russell Hornsby, Zackary Momoh, David Lyons
Country of origin United States
Original language English
No. of seasons 1
No. of episodes 10
Producers Jonathan Filley, Shana Fishcer Huber
Running time 54–80 minutes
Release
Original network Netflix
Original release February 23, 2018
கொசுறு
The Watcher
Seven Seconds போல The Watcher என்ற சீரீஸும் நன்றாக இருந்தது.
மிகப்பழமையான, அழகான வீட்டை ஒரு குடும்பத்தினர் விலைக்கு வாங்கிக் குடி வருகிறார்கள். அங்கே யாரோ இவர்களைப் பயமுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.
இதனால் இவ்வளவு கோடி கொடுத்து வீட்டை வாங்கியும் நிம்மதி இல்லாமல் இருப்பார்கள். யார் இதைச் செய்கிறார்கள் என்பதை அறிய முயற்சிப்பார்கள்.
இறுதியில் முடிவு தெளிவு இல்லாமல், துவக்கத்திலிருந்து கொடுக்கப்பட்ட ஹைப்புக்கு ஏற்புடையதாக இல்லாததால், இதற்கு விமர்சனம் எழுதவில்லை.
மேற்கூறியது பரவாயில்லை எண்று நினைத்தால், சுவாரசியமான சீரீஸ் தான்.
NETFLIX ல் காணலாம்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி.. தொடர்ச்சியாக வெப் சீரிஸ் அதிகம் பார்த்து வருவதாக உணர்கிறேன்.. எனக்கு நேரம் இருந்தால் கூட வெப் சீரிஸ் பார்க்க வேண்டும் என்று எண்ணும் போது ஒரு சிறிய தயக்கம் எப்போதும் இருக்கும்.. சரி அப்புறம் பார்த்து கொள்ளலாம் என அப்படியே விட்டு விடுவேன்.. வெகு அரிதாக நீங்க பரிந்துரைக்கும் சிலவற்றை பார்ப்பதுண்டு..
கடந்த வருடங்களில் வெள்ளையின காவலர் கறுப்பின நபரின் கழுத்தில் காலை வைத்து அமுக்கியதில் அவர் மூச்சு விட முடியாமல் இறந்தது பெரிய சர்ச்சையானது. (இந்த நிகழ்வு டிரம்ப் ஆட்சியில் நடந்ததால், தேர்தல் சமயத்தில் அவருக்கு மிக பெரிய பின்னடைவை கொடுத்தது..) மிகவும் காட்டுமிராண்டி தனமான செயல் இது..
வெள்ளையின நபருக்குப் பதிலாக ஆதிக்க சாதியினர். கறுப்பின பையனுக்கு பதிலாக பட்டியலின பையன் என்று மாற்றிப்பார்த்தால், நம் ஊர் கதைக்கு அட்டகாசமாக பொருந்தும். அப்ப கண்டிப்பா கொஞ்ச நாளில் இங்கு படமாக எடுக்கப்பட்டால் ஆச்சரியம் இல்லை.. பகிர்வுக்கு நன்றி கிரி..
@யாசின்
“தொடர்ச்சியாக வெப் சீரிஸ் அதிகம் பார்த்து வருவதாக உணர்கிறேன்”
ஆமாம் யாசின். படங்கள் கிட்டத்தட்ட அனைத்துமே பார்த்து விட்டது போன்று தோன்றுகிறது. எதைப்போட்டாலும் பார்த்ததாக உள்ளது.
பார்க்காதது ஏகப்பட்டது உள்ளது என்றாலும், அந்த நேரத்தில் தோன்றுவதில்லை.
வெப் சீரீஸ் ஆர்வமாக பார்க்க மாட்டேன் காரணம், இது பார்க்கும் நேரத்தில் மூன்று படங்களைப் பார்த்து விடுவேன்.
அதிக நேரம் எடுக்கும்.
ஆனால், வேறு வாய்ப்பு இல்லாததால் இவற்றைப் பார்த்து வருகிறேன். சில சுவாரசியமாகவும் உள்ளது.
தற்போது பையன் ஊரிலிருந்து வந்து விட்டான். எனவே, இனி முன்பு போல அதிகம் பார்க்க முடியாது 🙂 .